Thursday, June 25, 2026
Home Blog Page 11

பாஜக தேர்தல் பொறுப்பாளர் பணியில் இருந்து அண்ணாமலை திடீர் விலகல்..!

0

2026 சட்டமன்ற தேர்தலில் தந்தையின் உடல் நிலை காரணமாக தேர்தல் பொறுப்பில் இருந்து விலகுவதாக அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் அடுத்த சில மாதங்களில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் மும்முரமாக ஈடுபட்டுள்ளன. அந்த வகையில், தமிழ்நாட்டில் நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலை ஒட்டி பாஜகவில் அமைக்கப்பட்ட தேர்தல் பொறுப்பாளர்களில் அண்ணாமலையும் ஒருவர். ஆறு தொகுதிகளுக்கு அண்ணாமலையை தேர்தல் பொறுப்பாளராக பாஜக நியமித்திருந்தது.இந்நிலையில், கட்சியின் தேர்தல் பொறுப்பில் இருந்து விலக விரும்புவதாக அண்ணாமலை தெரிவித்துள்ளார்.இது குறித்து இன்று (பிப்ரவரி 3) கோவையில் செய்தியாளர்களிடம் பேசிய அண்ணாமலை கூறுகையில்,“சிங்காநல்லூர் தொகுதியில் போட்டியிடுவேனா என்பது குறித்து யோசிக்க வேண்டும். எனது தந்தையின் உடல்நிலை குறித்து நான் பார்த்துக் கொள்ள வேண்டும். எனவே அடிப்படை வேலைகள் பார்ப்பதற்கான சாத்தியக்கூறுகள் இல்லை. பாரதிய ஜனதா கட்சி பிரச்சாரத்திற்கு தயாராக உள்ளேன்.

நான் இதுகுறித்து மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் மற்றும் மூத்த நிர்வாகிகளுடன் பேசியுள்ளேன். இப்போதைக்கு அதிகம் என்னால் பயணம் செய்ய முடியாத நிலை உள்ளது.இதனால் கட்சிக்கு, கூட்டணி கட்சிகளுக்கு, போட்டியிடும் பாஜக வேட்பாளர்களுக்கு என்ன வேலை செய்ய வேண்டும் என கட்சி சொல்லும் வேலையை செய்வோம். சம்பந்தப்பட்ட நேரத்தில் தேர்தலில் போட்டியிடுவதா இல்லையா என்பதை கட்சி சொன்ன பிறகு பேசுகிறேன்.சிங்காநல்லூர் தொகுதிக்கு வேறு ஒரு பொறுப்பாளரை கட்சித் தலைமை நியமிக்கும்.தேர்தலில் போட்டியிடுவீர்களா என்ற கேள்விக்கு, அதற்கான காலமும் சூழ்நிலையும் நிறைய உள்ளது. கட்சி என்ன சொல்கிறது என்பதைத் தெரிந்துகொண்டு உங்களிடம் பேசுகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

திமுகவிடம் எத்தனை தொகுதிகளை கேட்பீர்கள்..?சென்னையில் வைகோ பதில்

0

சென்னையில் இருந்து விமானம் மூலம் கோவை வந்த வைகோ, விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது பேசிய அவர், “மத்திய பட்ஜெட் மிகுந்த ஏமாற்றம் அளிக்கிறது. 5 மாநில சட்டமன்ற தேர்தல் வருவதால், தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களுக்கு பல நல்ல திட்டங்கள் அறிவிக்கப்படும் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் பட்ஜெட்டில் எந்த அறிவிப்பும் இல்லாதது, பெரும் ஏமாற்றத்தை தந்தது. அமெரிக்காவின் வரி கொடுமையிலிருந்து தப்பிக்க, ஐரோப்பிய யூனியன் ஒப்பந்தம் ஈடு கொடுக்கும் என தெரிவித்தார்கள். ஐரோப்பிய யூனியன் வர்த்தக ஒப்பந்தம் 2027 ஏப்ரலுக்குப் பின்புதான் வரும். அதுவரை பொருளாதார மந்த நிலையை மத்திய அரசு எப்படிச் சமாளிக்கும்? பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்படவில்லை; கோவை, கரூர், திருப்பூர் நூற்பாலைகளுக்கு ஊக்கம் அளிக்கும் திட்டங்கள் இல்லை.
ரூ. 11.7 லட்சம் கோடி கடன் வாங்க போகிறோம் என்கிறார்கள். அதே சமயத்தில், 7 சதவீத வளர்ச்சியையும் அடைவோம் என்கிறார்கள். இதை எப்படி ஏற்க முடியும்? கோவை, மதுரை மெட்ரோ திட்டங்கள் தொடர்பான அறிவிப்பு, பட்ஜெட்டில் இல்லை. ஏற்கனவே இருக்கும் திட்டங்களுக்கு கூட நிதி ஒதுக்கப்படவில்லை. மத்திய பட்ஜெட்டில் தமிழகம் வஞ்சிக்கப்பட்டுள்ளது” என வைகோ கூறினார்.

ஆட்சியில் பங்கு கேட்பீர்களா? என கேட்டதற்கு பதிலளித்த வைகோ, “ஆட்சியில் பங்கு, அதிகாரத்தில் பங்கு போன்ற கோஷங்களை நாங்கள் என்றைக்குமே வைத்தது இல்லை. அப்படி கோரிக்கை வைக்கின்ற நோக்கமும் எங்களுக்கு இல்லை. திமுக நிச்சயம் தனிப் பெரும்பான்மை பெறும். மீண்டும் 2026-ல் ஸ்டாலின் முதல்வராக அமர்வார், திராவிட மாடல் ஆட்சி தொடரும்” எனக் கூறினார். தொடர்ந்து பேசிய அவர், “பாலத்தீனம் தனி நாடாக உருவெடுக்க இந்தியா ஆதரவு அளித்திருப்பது நல்ல விஷயம். பாலஸ்தீனத்தை நேரு காலத்தில் இருந்தே இந்தியா ஆதரித்தது. இடைக்காலத்தில் நரேந்திர மோடி பொறுப்புக்கு வந்த பின்னர், இஸ்ரேல் உடனான உறவை நெருக்கமாக்கிக் கொண்டனர். பாலஸ்தீனத்திற்காக ஐ.நாவிலோ, மற்ற இடங்களிலோ இந்தியா குரல் கொடுக்காமல் இருந்தது. பாலஸ்தீனம் தனி நாடாக வேண்டும் என்ற கோரிக்கையை ஆரம்பத்திலிருந்து நாங்கள் ஆதரித்து வந்திருக்கிறோம்” என்றார்.

பின்னர், தொகுதி பங்கீடு தொடர்பான கேள்விக்கு பதிலளித்த வைகோ, “தொகுதி பங்கீடு தொடர்பாக திமுக பேச்சுவார்த்தை நடத்த குழு அமைத்த 3 மணிநேரத்திற்குள் மதிமுக சார்பில் குழு அமைக்கப்படும். எத்தனை இடங்களை கேட்போம் என்பதை இப்போது சொல்ல முடியாது. சிலர் தங்கள் வாய்க்கு வரும் எண்களை எல்லாம் சொல்கிறார்கள். நாங்கள் அப்படி சொல்ல மாட்டோம்” எனத் தெரிவித்தார்.

தவெகவின் 3-ஆம் ஆண்டு தொடக்க விழா: விசில் சத்தத்திற்கு மத்தியில் விஜய் வருகை…

0

தமிழக வெற்றிக் கழகத்தின் மூன்றாம் ஆண்டு தொடக்க விழா, பனையூரில் இன்று நடைபெறுகிறது.

2023ஆம் ஆண்டு தொடக்கத்திலிருந்தே அவர் கட்சித் தொடங்கப்போவதாக தகவல்கள் வெளியான நிலையில், 2024ஆம் ஆண்டு பிப்ரவரி 2ஆம் தேதி தமிழக வெற்றிக் கழகம் என்ற பெயரில் கட்சி தொடங்கி இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். அதனைத் தொடர்ந்து, அடுத்தடுத்த மாதங்களில் கட்சிக் கொடி, கொள்கைகள் குறித்த அறிவிப்புகள் வெளியாகின.
தவெகவின் முதல் மாநாடானது விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியிலும், கிட்டத்தட்ட ஓராண்டு கழித்து இரண்டாவது மாநாடானது மதுரை பாரபத்தியிலும் பிரம்மாண்டாமாக நடைபெற்றது. ஒவ்வொரு மாநாட்டிலும் லட்சக்கணக்கான தொண்டர்கள் கலந்து
கொண்டு விஜய்க்கு ஆதரவு அளித்தனர். முதல் மாநாட்டிலேயே சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு கட்சி செயல்பட்டு வருவதாக விஜய் தெரிவித்திருந்த நிலையில், கடந்த சில மாதங்களாக தவெகவினர் அதற்கான வேலைகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
கரூர் சம்பவம் போன்ற நெருக்கடிகளுக்கு மத்தியிலும் தேர்தலை சந்தித்த தயாராகி வரும் தவெக, இன்று மூன்றாம் ஆண்டுக்குள் அடியெடுத்து வைக்கிறது. இந்நிலையில், இரண்டு ஆண்டுகளை இயல்பாகவும், இயல்பு தாண்டியும் நிறைவு செய்து, நீள்கிறது நம் அரசியல் பெரும்பயணம் என்று குறிப்பிட்டுள்ளார். மேலும், 2026 சட்டமன்றத் தேர்தல் களம், இதுவரை இல்லாத புதிய சூழலைச் சுமந்து நிற்கிறது. இதற்கு ஒரே காரணம் நமது அரசியல் வருகை மட்டுமே என எல்லோரும் சொல்கின்றனர். எனவே இந்த சூழலில், களத்தை நமதாக்கி, தேர்ந்த தெளிவுடனும் திறன்மிக்க நுட்பத்துடனும் தேர்தல் அரசியல் வெற்றியின் வாயிலாக, அதிகார அரசியல் அங்கீகாரம் நோக்கிச் செல்வோம் என்று பதிவிட்டுள்ளார்.

இந்நிலையில், இன்று பனையூரில் உள்ள தவெக அலுவலகத்தில் 3ஆம் ஆண்டு தொடக்க விழா நடைபெறுகிறது. இதில், கட்சியின் தலைவர் விஜய் கலந்துகொண்டு தவெக கொடியை ஏற்றிவைத்து, தங்களது கொள்கைத் தலைவர்களுக்கு மரியாதை செலுத்துகிறார்.

இந்தியாவின் வளர்ச்சிக்கு வழி வகுக்கும் பட்ஜெட் – எடப்பாடி பழனிசாமி

0

மத்திய அரசின் 2026-2027-ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை நாட்டின் வளர்ச்சிக்கு வழிவகுக்கும் என அதிமுக பொதுச் செயலாளரும், தமிழ்நாடு சட்டப் பேரவை எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில்;

இந்திய நாட்டின் 2025-2026-ஆம் ஆண்டிற்கான பொருளாதார அறிக்கை கடந்த 29.1.2026 அன்று வெளியிடப்பட்டுள்ள நிலையில், 2026-2027-ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கை, பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசால் இன்று (1.2.2026 ஞாயிற்றுக் கிழமை) நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து 9-ஆவது முறையாக நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்து புதிய வரலாற்றுச் சாதனையை படைத்துள்ள மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
2025-2026-ஆம் ஆண்டுக்கான பொருளாதார அறிக்கை, உலக அளவில் போர் போன்ற பதற்றத்தால் உள்ள உறுதியற்ற சூழ்நிலையிலும், இந்திய பொருளாதார வளர்ச்சி 2025-2026-க்கு 6.5 சதவீதத்தில் இருந்து 7 சதவீதமாக உயரும் என்றும், 2026-2027-ல் 6.8 முதல் 7.2 சதவீதமாக இருக்கும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. இது பொருளாதார நிலையில் இந்தியா வலுவான நிலையில் உள்ளதைக் காட்டுகிறது.

இந்த சூழ்நிலையில் 2026-2027-ஆம் ஆண்டு நிதிநிலை அறிக்கை, நிதிநிலை மேலாண்மையை வலுப்படுத்தும் வகையில் நிதிப் பற்றாக்குறையையும், பொருளாதார உற்பத்தி மதிப்பில் கடன் அளவைக் குறைக்க எடுத்துள்ள முயற்சிகள் வரவேற்கத்தக்கது. இது வருங்கால பொருளாதார வளர்ச்சியை மேலும் வலுப்படுத்தும். இறக்குமதியை குறைக்க, உள்நாட்டு உற்பத்தியை அதிகரிக்க, ஆராய்ச்சி, உற்பத்தி, உயர் தொழில்நுட்பம் சார்ந்த கட்டமைப்புகள் மேம்பாடு, செயற்கை நுண்ணறிவு, மின்னணுசார் உற்பத்தி, மருந்துகள், ஜவுளி, கண்டெய்னர் உற்பத்தி போன்ற துறைகளில் உற்பத்தியை ஊக்குவிக்க பூங்காக்கள், உயிரி மருத்துவ பூங்கா, உற்பத்தி மண்டலங்கள் போன்ற பல முயற்சிகளை இந்த நிதிநிலை அறிக்கையில் முன்மொழிந்துள்ளதை பாராட்டுகிறேன். இதற்கான நிதி ஆதாரங்களும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன. குறிப்பாக, ஜவுளி மேம்பாடு திட்டம் திருப்பூர், கரூர் போன்ற பகுதிகளுக்கு பயனளிக்கும். சரக்கு வேக வழித்தடப் பாதைகள், வேக ரயில் பாதைகள், நீர் வழிப் பாதைகள் மேம்பாடு போன்றவை, போக்குவரத்துத் துறையில் ஒரு பெரும் மாற்றத்தை ஏற்படுத்தும். ஆயுர்வேதம், கால்நடை துறை முதலியவற்றுக்கு முன்னுரிமை வழங்கியுள்ளதைப் பாராட்டுகிறேன்.சிறு, குறு தொழில் மேம்பாட்டுக்கு பல திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக, நிதி ஆதாரம் பெறுவதை உறுதி செய்ய ரூபாய் 2000 கோடி, மற்றும் சிறு, குறு தொழில் வளர்ச்சி நிதியாக ரூபாய் 10,000 கோடி ஒதுக்கீடு போன்றவை மிக உதவியாக இருக்கும். சிறு, குறு தொழில் அதிக அளவில் உள்ள தமிழ் நாடு இதனால் பயன்பெறும்.

இந்த நிதிநிலை அறிக்கை இந்தியாவின் வளர்ச்சிக்கு வழி வகுப்பதோடு, உலக அளவில் இந்தியா பொருளாதார நிலையில் வலுவான நாடாக உயர்வதற்கு வழிவகுக்கும் என்பதால், பிரதமருக்கும், நிதி அமைச்சருக்கும் எனது மனமார்ந்த பாராட்டுகளை தெரிவித்துக்கொள்கிறேன்.

என அதில் குறிப்பிட்டுள்ளார்.

ஏமாற்றம்! ஏமாற்றம்! – மத்திய பட்ஜெட்டை கண்டித்த முதல்வர் ஸ்டாலின்

0

எதிர்பார்த்திருந்த ஒன்றிய அரசின் நிதிநிலை அறிக்கை, வழக்கத்தைவிடப் பெரும் ஏமாற்றத்தை வழங்கியிருக்கிறது என்று தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘தமிழ்நாட்டுக்கான சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் வேளையில், இந்த ஆண்டாவது, ஒன்றிய பாஜக அரசின் கண்களுக்குத் தமிழ்நாடு தெரியும்; அவர்களது காதுகளில் நமது உரிமைக்குரல் விழும் என்று எதிர்பார்த்திருந்தோம். அந்த எதிர்பார்ப்பைப் பொய்க்கச் செய்து, ஏமாற்றத்தை வழங்கியிருக்கிறது ஒன்றிய பாஜக அரசு.
ஒன்றிய நிதி அமைச்சர் இன்று, நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்த 2026-27-ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையில், தமிழ்நாட்டின் நலன் முற்றிலுமாகப் புறகணிக்கப்பட்டுள்ளதோடு, ஏழைகள் – பெண்கள் – விவசாயிகள்- விளிம்பு நிலை மக்கள் என எந்தப் பிரிவினருக்கும் நன்மை பயக்கும் முக்கியத் திட்டங்கள் இதில் இடம்பெறவில்லை.
மாநிலங்களுக்கான வரிப்பகிர்வு முறையில், தமிழ்நாடு உள்ளிட்ட வளர்ச்சியடைந்த மாநிலங்களை ஒன்றிய அரசு தொடர்ந்து புறக்கணித்து வருகிறது என்ற கருத்தை, நாம் வலுவாக முன்வைத்து வருகிறோம். மொத்த வரி வருவாயில் மாநிலங்களுக்கு பகிர்ந்தளிக்கப்படும் பங்கு 41 விழுக்காட்டிலிருந்து 50 விழுக்காடாக உயர்த்தப்பட்ட வேண்டும் எனத் தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களின் கோரிக்கை இம்முறையும் புறக்கணிக்கப்பட்டு, மாநிலங்களுக்கான வரிப்பகிர்வு தொடர்ந்து 41 விழுக்காடு என்ற அளவிலேயே தொடரும் என்று அறிவிக்கப்பட்டிருப்பது மிகுந்த ஏமாற்றத்தையே தருகிறது. அதுமட்டுமின்றி, இந்தியப் பொருளாதார வளர்ச்சியில், மாநிலங்களின் பங்களிப்பை உரிய முறையில் 16-ஆவது நிதிக்குழு அங்கீகரிக்க முற்பட்டபோதும், நாட்டின் இரண்டாவது பெரிய பொருளாதாரத்தைக் கொண்டு, நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்குப் பெரும் பங்களிப்பைச் செலுத்தி வரும் தமிழ்நாட்டிற்கு நிதிப்பகிர்வு சதவீதம் இதர வளர்ச்சியடைந்த மாநிலங்களைக் காட்டிலும் குறைவாகவே அளிக்கப்பட்டிருப்பது மிகவும் வருந்தத்தக்கது. தமிழ்நாட்டிற்கான வரிப்பகிர்வு 4.097 விழுக்காடு என்ற மிகச்சொற்ப அளவிலேயே அடுத்த ஐந்தாண்டுகளுக்கு இருக்கும் எனத் தெரியவருகிறது. இதன் மூலம் முதற்கட்ட மதிப்பீடுகளின்படி இதர ஒப்பிடத்தக்க மாநிலங்களைக் காட்டிலும் ஆண்டிற்குச் சுமார் 5000 கோடி ரூபாய் நிதி இழப்பு ஏற்படும். கடந்த பல ஆண்டுகளாகவே நிதிப்பகிர்வில் தமிழ்நாடு தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வரும் நிலை, இன்று 16-ஆவது நிதிக்குழுவிலும் சரிசெய்யப்படவில்லை என்பது மிகுந்த கவலை அளிக்கிறது,’ என்று ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

மேலும், ‘அண்மையில், சரக்கு மற்றும் சேவை வரி விதிப்புச் சீரமைப்பில் மாநிலங்களுக்கான நிதி வருவாய் பாதிக்கப்பட்டிருக்கும் நிலையில் இந்த ஆண்டு தமிழ்நாட்டிற்கான ஒன்றிய வரிகளின் பங்கு சுமார் 1,200 கோடி ரூபாய் அளவில் குறைக்கப்பட்டுள்ளது என்பதும் கண்டிக்கத்தக்கது. ஜல்ஜீவன் குடிநீர்த் திட்டத்தில் தமிழ்நாடு கோரியிருந்த 3,112 கோடி ரூபாய் ஒன்றிய அரசால் வழங்கப்படவில்லை என்று தொடர்ந்து நாம் வலியுறுத்தி வந்த வேளையில், 2025-26-ஆம் ஆண்டு நிதிநிலை அறிக்கை மதிப்பீட்டில் 67 ஆயிரம் கோடி ரூபாயாக இருந்த இந்தத் திட்டத்திற்கான நிதி ஒதுக்கீடு, தற்போது திருத்திய மதிப்பீட்டில் வெறும் 17 ஆயிரம் கோடி ரூபாய் என ஒதுக்கப்பட்டிருப்பது இந்தத் திட்டத்தையே முழுவதுமாக முடக்குவதற்கான முயற்சி என்றே தோன்றுகிறது. அதேபோன்று, பிரதம மந்திரியின் கிராம சாலை மேம்பாட்டுத் திட்டத்தைச் செயல்படுத்துவதற்காகக் கடந்த நிதிநிலை அறிக்கையில் 19 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்குவதாக அறிவித்துவிட்டு, தற்போது திருத்திய மதிப்பீட்டில் வெறும் 11 ஆயிரம் கோடி ரூபாய் மட்டும் ஒதுக்கி இருக்கிறார்கள். அதேபோல், ஊரகப் பகுதிகளுக்கான பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டத்திற்கு 35,832 கோடி நிதி ஒதுக்குவதாக அறிவித்து, தற்போது 32,500 கோடி ரூபாய் என்ற அளவில் நிதி குறைக்கப்பட்டிருக்கிறது. இதைவிட மிகப்பெரிய ஏமாற்றம் என்னவெனில், மிகுந்த ஆரவாரத்துடன் அறிவிக்கப்பட்ட PM Internship Scheme திட்டத்திற்கென 10,831 கோடி ரூபாயைச் சென்ற ஆண்டு நிதிநிலை அறிக்கையில் அறிவித்து, ஆனால் தற்போது 2025-2026-ஆம் ஆண்டில் திருத்திய மதிப்பீட்டில், வெறும் 526 கோடி என்ற சொற்ப அளவிலேயே நிதி ஒதுக்கி இருப்பதன் மூலம், இந்தத் திட்டம் மிகப்பெரிய தோல்வியைத் தழுவி இருக்கிறது என்றுதான் கருத வேண்டி இருக்கிறது.

இந்த நிதிநிலை அறிக்கையில் தமிழ்நாட்டில் நலன் குறித்த திட்டங்கள் இடம்பெறும் என்று நாம் ஆவலோடு எதிர்பார்த்து கொண்டிருந்த வேளையில், புதிய திட்டங்கள் ஏதும் இடம்பெறவில்லை. மும்மொழிக் கொள்கையைக் கடைப்பிடிக்காததன் காரணமாக அனைவருக்கும் கல்வி திட்டத்திற்கான 3,548 கோடி ரூபாய், ஜல் ஜீவன் திட்டத்தை நாட்டிலேயே நாம் சிறப்பாகச் செயல்படுத்திய போதிலும் ஒன்றிய அரசு இன்னும் விடுவிக்காத நிதி 3,112 கோடி ரூபாய் நிதி குறித்து எந்த அறிவிப்பும் இல்லை. இதுமட்டுமின்றி தமிழ்நாட்டிற்கு எனப் புதிய திட்டங்கள் எதுவும் இந்த நிதிநிலை அறிக்கையில் இல்லை என்பது தமிழ்நாட்டை ஒன்றிய அரசு தொடர்ந்து மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் நடத்திவருகிறது என்பதை வெட்ட வெளிச்சமாக்கியிருக்கிறது. வழக்கமாக ஒன்றிய நிதியமைச்சர் வழங்கும் நிதிநிலை அறிக்கையில் இடம்பெறும் திருக்குறளும் இந்த முறை இடம்பெறவில்லை. தமிழ்நாட்டிற்கான எந்த முக்கியத் திட்டங்களும் இடம்பெறவில்லை. மொத்தத்தில் ஏமாற்றம்! ஏமாற்றம்! ஏமாற்றம்! ‘ என்று மத்திய பட்ஜெட் குறித்த தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஏமாற்றம் தெரிவித்துள்ளார்.

மத்திய பட்ஜெட் 2026: விலை உயரப் போகும் – குறையப் போகும் பொருட்கள் என்னென்ன?

0

2026-27-ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், நாடாளுமன்றத்தில் இன்று தாக்கல் செய்தார். இந்திய வரலாற்றிலேயே முதன்முறையாக, இந்த பட்ஜெட்டானது ஞாயிற்றுக்கிழமை தாக்கல் செய்யப்பட்டது. மேலும், இந்த பட்ஜெட்டை தாக்கல் செய்ததன் மூலமாக, தொடர்ச்சியாக 9 ஆண்டுகள் மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்த முதல் பெண் நிதியமைச்சர் என்ற பெருமையை நிர்மலா சீதாராமன் பெற்றுள்ளார்.
இந்த பட்ஜெட்டில் பல முக்கிய அறிவிப்புகள் வெளியாகியுள்ளன. செமி கண்டக்டர் உற்பத்தியை ஊக்குவிக்க ரூ.40,000 கோடி ஒதுக்கீடு, அரிய வகை கனிமம் எடுப்பதற்காக தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களில் புதிய வழித்தடம், சென்னை – ஹைதராபாத், சென்னை – பெங்களூரு இடையே அதிவேக ரயில் பாதை உள்ளிட்ட பல அறிவிப்புகள் வெளியாகியுள்ளன.

இந்நிலையில், இந்த மத்திய பட்ஜெட்டில் துறை ரீதியாக ஒதுக்கப்பட்ட நிதி, ஏற்றுமதி – இறக்குமதி தொடர்பாக அறிவிக்கப்பட்ட திட்டங்கள் ஆகியவற்றின் காரணமாக பல பொருட்கள் விலை உயர்வையும், விலை வீழ்ச்சியையும் சந்திக்கவுள்ளன.அந்த வகையில், எந்தெந்த பொருட்கள் விலை குறையும் என்பதை முதலில் பார்ப்போம். இந்த பட்ஜெட்டில் அத்யாவசிய மருந்துகளுக்கான சுங்க வரி கணிசமாக குறைக்கப்பட்டுள்ளது. இதனால் சர்க்கரை நோய், புற்றுநோய் ஆகியவற்றுக்கான மருந்துகளின் விலை குறையவுள்ளது.

அதேபோல, பேட்டரி பொருட்கள் மீதான வரியும் குறைக்கப்பட்டுள்ளதால் மின்சார வாகனங்களின் விலை கணிசமாக குறையவுள்ளது. மேலும், செல்போன், டிவி ஆகியவற்றின் விலையும் குறைகிறது. இவற்றை தவிர, தோல் பொருட்கள், காலணி, வெளிநாட்டு கல்வி செலவு, வெளிநாட்டு பயண செலவு, மைக்ரோவேவ், வீடியோ கேம் பொருட்கள், விமான பாகங்கள், பீடி தயாரிக்க பயன்படும் தெண்டு இலைகள் ஆகியவற்றின் விலை குறையவுள்ளது.

ஆடம்பர மற்றும் இறக்குமதி பொருட்கள்
மீதான சுங்க வரி, இந்த பட்ஜெட்டில் அதிகரிக்கப்பட்டுள்ளது. எனவே, வெளிநாட்டு கைக்கடிகாரங்கள், இறக்குமதி கார்கள், சிகரெட், பான் மசாலா உள்ளிட்ட புகைப்பொருட்களின் விலை கடுமையாக உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இவற்றை தவிர, மதுபானங்கள், நிலக்கரி, இரும்பு பொருட்கள், எலெக்ட்ரானிக் பொருட்கள் விலை உயர்வை சந்திக்கவுள்ளன.

மயங்கி விழுந்த எச்.ராஜா.. அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதி..!

0

சென்னையில் இன்று என்டிடிவி ஊடகத்தின் தமிழ்நாடு சம்மிட் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. தமிழக சட்டசபை தேர்தல் நெருங்கியுள்ள சூழலில், இன்று சென்னை கிண்டியில் நடைபெற்று நடைபெற்று வரும் இந்த ஊடக நிகழ்வில் அரசியல் பிரமுகர்கள் பலரும் பங்கேற்று தங்களின் கருத்துக்களை அதில் பகிர்ந்து கொண்டு வருகின்றனர்.தமிழக முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைந்த இந்த நிகழ்ச்சியில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர்கள் டிஆர்பி ராஜா, அன்பில் மகேஷ், காங்கிரஸ் எம்.பி கார்த்தி சிதம்பரம், பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா, தவெக தேர்தல் பரப்புரை செயலாளர் அருண்ராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.இந்நிலையில் இன்று இரவு நடந்த விவாதத்தில் பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா பங்கேற்றார். விவாதத்தின் போது எச். ராஜா திடீரென மயங்கி விழுந்தார். அவர் கீழே விழப்போன மேடையில் இருந்தவர்கள் சுதாரித்துப் பிடித்தனர். சர்க்கரை அளவு குறைவாக இருப்பதாக கருதப்பட்டு அவருக்கு இனிப்பு வழங்கப்பட்டது. எனினும், அவரால் நிற்க முடியவில்லை.

மூளை பக்கவாதம் ஏற்பட்டதாக சந்தேகிக்கப்பட்டதால், உடனே அவரை அருகிலுள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று முதலுதவி கொடுத்தனர். MRI மற்றும் CT ஸ்கேன்களை எடுத்தனர். பின்னர் அவர் சென்னை ஆயிரம் விளக்கு கிரீம்ஸ் ரோட்டில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சொந்த பணத்தில் கட்சி நடத்துகிறோம்…’ – பிரேமலதா விஜயகாந்த்

0

திருநெல்வேலி தச்சநல்லூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தேமுதிக பூத் கமிட்டி உறுப்பினர்கள் ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் பிரேமலதா கலந்து கொண்டு நிர்வாகிகளிடம் உரையாடினார்.
அதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், ”தமிழ்நாட்டில் பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் அதிகரித்துள்ளன. பிற மாநிலத்திலிருந்து இங்கு வந்து பணியாற்றிக் கொண்டிருந்த குடும்பம் கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளது. மதுரையில் எல்ஐசி அதிகாரி கொடூரமாக எரித்துக் கொலை செய்யப்பட்டுள்ளார். இதில் ஈடுபட்ட குற்றவாளிகளுக்கு மரண தண்டனை வழங்க வேண்டும். இது போன்ற சம்பவங்களில், காவல்துறை எடுத்து வரும் நடவடிக்கைகளை இன்னும் தீவிர படுத்த வேண்டும். தேமுதிக சார்பாக அனைத்து முக்கிய நிர்வாகிகளும் தேர்தலில் போட்டியிடுவார்கள். நானும் களத்தில் இறங்கி கண்டிப்பாக விளையாடுவேன். உரிய நேரத்தில் அதற்கான அறிவிப்பை வெளியிடுவோம். தேமுதிக-விற்கு ஆட்சியில் பங்கு, அதிகாரத்தில் பங்கு கிடைத்தால் தமிழ்நாட்டிற்கு நல்லது. வரும் சட்டமன்றத் தேர்தலில் நான்கு முனை போட்டி உள்ளது. அதிமுக, திமுக களத்தில் உள்ள நிலையில், சீமான் வேட்பாளர்களை அறிவித்து வருகிறார். விஜய்யும் போட்டியில் உள்ள நிலையில் நான்கு முனை போட்டி உள்ளது.
2011 தேர்தலுக்குப் பிறகு தேமுதிக தனித்துப் போட்டியிடவில்லை. தேமுதிக யாருடன் கூட்டணி என்பது தான் தமிழ்நாட்டில் தற்போதைய தலைப்புச் செய்தியாக உள்ளது. ஒரு முடிவு எடுத்தால், அதில் நாங்கள் தீர்க்கமாக இருப்போம். யாருடனும் தேமுதிக பேரம் பேசவில்லை, எங்களுக்கான அங்கீகாரம் கிடைக்கும் இடத்தில் அந்த கட்சியோடு கூட்டணி அமைத்து போட்டியிடுவோம். தேமுதிக கூட்டணி அமைக்கும் கட்சி வெற்றி பெற்று ஆட்சியில் அமரும். தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கட்சிகளும் தோழமைக் கட்சிகள் தான். யாருடனும் நாங்கள் தற்போது வரை கூட்டணி குறித்து பேசவில்லை. இன்னும் தேர்தல் அறிவிக்கப்படவில்லை. பிப்ரவரி 3 ஆம் தேதி வரை சுற்றுப்பயணம் மேற்கொள்கிறேன். அதற்கு பிறகு பேச்சுவார்த்தை நடத்தி முடிவை அறிவிப்போம்.” என்றார்.

தேமுதிக நிதி கேட்பதால் கூட்டணிப் பேச்சு வார்த்தையில் முடிவு ஏற்படாமல் உள்ளதா? என செய்தியாளர்கள் கேட்டதற்கு, ”சொந்த பணத்தில் கட்சி நடத்தி வருகிறோம். ஸ்டெர்லைட் ஆலையில் லஞ்சம் மற்றும் கையூட்டு பெற்ற நபர்கள் பட்டியலில் தேமுதிக இருக்கிறதா? தவறான கேள்விகளை கேட்க வேண்டாம்” என ஆவேசம் அடைந்தார்.

தமிழ்நாடு அமைச்சரவைக் கூட்டம் பிப்.5-ல் பட்ஜெட் அறிவிப்புகள் தொடர்பாக ஆலோசனை

0

தமிழ்நாடு அமைச்சரவைக் கூட்டம் வரும் பிப்ரவரி 5-ஆம் தேதி முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் நடைபெறவுள்ளது. இடைக்கால பட்ஜெட்டில் என்னென்ன அறிவிப்புகளை வெளியிடலாம் என்பது தொடர்பாக இந்தக் கூட்டத்தில் ஆலோசிக்கப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

சட்டப் பேரவை தேர்தலுக்கு இன்னும் ஓரிரு மாதங்களே உள்ள நிலையில், கூட்டணி, தொகுதிப் பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தைகளில் ஆளும் திமுக தீவிரம் காட்டி வருகிறது. ஆட்சியில் பங்கு என்ற கோஷத்தை காங்கிரஸ் கையில் எடுத்துள்ள போதிலும், அது திமுக கூட்டணியில் இருந்து விலகாது என நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. எனவே, தேமுதிக, ராமதாஸ் தலைமையிலான பாமக உள்ளிட்ட கட்சிகளை தங்கள் கூட்டணியில் சேர்க்க திமுக மும்முரம் காட்டி வருகிறது.

அதே போல, எதிரணியில் இருக்கும் அதிமுகவும் பாஜக, பாமக (அன்புமணி), அமமுக மற்றும் பல சிறிய கட்சிகளின் ஆதரவோடு கூட்டணி அமைத்துள்ளது. இது தவிர, தற்போதைய தேர்தல் களத்தில் விஜய்யின் தவெகவும், சீமான் தலைையிலான நாம் தமிழர் கட்சியும் உள்ளன.

இந்த சூழலில், தமிழ்நாடு சட்டப் பேரவை பிப்ரவரி மாதம் கூடவுள்ளது. இந்த சட்டப் பேரவைக்கு மே மாதம் வரை மட்டுமே அவகாசம் இருப்பதால், முழுமையான பட்ஜெட்டை தாக்கல் செய்ய முடியாது. இதனால், இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்படவுள்ளது. பிப்ரவரி 13 அல்லது 14ஆம் தேதியன்று இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்படலாம் எனக் கூறப்படுகிறது.சட்டப் பேரவை தேர்தல் நெருங்கியுள்ளதால், இந்த பட்ஜெட்டில் பல தரப்பு மக்களை கவரும் வகையிலான கவர்ச்சிகரமான அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக, பெண்கள், மாணவர்கள், மாற்றுத்திறனாளிகள், நடுத்தர மக்கள் ஆகியோரை கவரும் வகையிலான அறிவிப்புகள் வெளியாகும் எனக் கூறப்படுகிறது.

தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டால், எந்த அறிவிப்பையும் தமிழக அரசால் அறிவிக்க முடியாது. எனவே, இந்த இடைக்கால பட்ஜெட் தாக்கலை, இதற்கான வாய்ப்பாக அரசு பயன்படுத்திக் கொள்ளும் எனத் தெரிகிறது. இருந்த போதிலும், இது முழுமையான பட்ஜெட் கிடையாது. 2026 ஜூன் மாதம் பதவியேற்கும் புதிய அரசே, ஜூலையில் முழுமையான பட்ஜெட்டை தாக்கல் செய்யும்.

இந்த நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் வரும் பிப்ரவரி 5ஆம் தேதி பிற்பகல் 12 மணிக்கு அமைச்சரவைக் கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இடைக்கால பட்ஜெட்டில் என்னென்ன அறிவிப்புகளை வெளியிடுவது, மக்களுக்கு சலுகைகளை அறிவிக்கலாமா? என்பது உள்ளிட்ட முக்கிய அம்சங்கள் குறித்து இந்த அமைச்சரவைக் கூட்டத்தில் ஆலோசிக்கப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

மகாராஷ்டிரா துணை முதலமைச்சர் அஜித் பவார் விமான விபத்தில் மரணம்

0

தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவரான அஜித் பவார், மகாராஷ்டிரா மாநிலத்தின் துணை முதலமைச்சராக பதவி வகித்தார். இவர் இன்று காலை தனது சொந்த தொகுதியான பாராமதியில் நடைபெற்ற கட்சி நிகழ்ச்சியில் பங்கேற்க தனி விமானத்தில் பயணித்துள்ளார். 8 இருக்கைகள் கொண்ட லியார்ஜி என்ற சிறிய ரக விமானத்தில் அஜித் பவாருடன் விமானிகளான சுமித் கபூரும், சாம்பவி பதக்கும் இருந்துள்ளனர். இவர்களுடன் 2 உதவியாளர்கள் மற்றும் ஒரு நிர்வாகி பயணித்துள்ளனர்.காலை 8.45 மணியளவில் பாராமதி விமான நிலையம் அருகே சென்றபோது விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது கண்டறியப்பட்டதால், விமானிகள் உடனடியாக தரையிறக்க முயன்றுள்ளனர். ஆனால் விமான நிலையத்தின் ஓடுபாதை நுழைவு பகுதியிலேயே விமானம் கீழே விழுந்து நொறுங்கி தீப்பற்றி எரிந்தது. உடனடியாக சம்பவ இடத்திற்குச் சென்ற தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்து விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணிகளில் ஈடுபட்டனர்.

இந்த விபத்தில் பலத்த காயமடைந்த 6 பேரையும் உடனடியாக மீட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்த நிலையில், சிகிச்சை பலனின்றி அவர்கள் உயிரிழந்தனர். இதனையடுத்து அஜித் பவார் உட்பட 6 பேரின் உடல் பாராமதியில் உள்ள அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.மகாராஷ்டிராவில் 6 முறை துணை முதலமைச்சராக பணியாற்றி, அதிக முறை துணை முதலமைச்சராக இருந்தவர் என்ற பெருமையை பெற்றவர் அஜித் பவார். இவர் பலமுறை பாராமதி தொகுதியில் வெற்றி பெற்றுள்ளார். மேலும் இவர் மூத்த அரசியல்வாதியான சரத் பவாரின் மருமகன் ஆவார்.

அதிர்ச்சியாக உள்ளது – பிரதமர் மோடி

இதனிடையே, மகாராஷ்டிரா துணை முதலமைச்சர் அஜித் பவார் மரணத்துக்கு பிரதமர் நரேந்திர மோடி ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து தனது எக்ஸ் தளத்தில் அவர் வெளியிட்ட பதிவில், “அஜித்பவார் ஒரு மக்கள் தலைவர். மக்களிடம் நேரடி தொடர்பு வைத்திருந்தவர். மகாராஷ்டிரா மக்கள் நலனுக்காக கடுமையாக உழைக்கக்கூடியவர் என்ற பெயரை அவர் பெற்றிருந்தார். நிர்வாகத்தில் அவருக்கு இருந்த புரிதலும், ஏழைகளுக்கு அதிகாரம் அளிப்பதில் அவருக்கு இருந்த வேட்கையும் குறிப்பிடத்தக்கவை.

அவரது திடீர் மரணம் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் தந்துள்ளது. இந்த தருணத்தில் அவரது குடும்பத்தினருக்கும், அவருடன் உயிழந்த மற்றவர்களின் குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த இழப்பை தாங்கிக் கொள்ளும் மன உறுதி அவர்களுக்கு கிடைக்க இறைவனை வேண்டிக் கொள்கிறேன்” என மோடி தனது பதிவில் தெரிவித்துள்ளார்.

கருப்பு பெட்டி மீட்பு

இதனிடையே, விபத்துக்குள்ளான விமானத்தின் கருப்புப் பெட்டியை போலீசார் மீட்டுள்ளனர். இந்த கருப்புப் பெட்டியில்தான் விமானத்தில் பயணம் செய்தவர்களின் பேச்சு பதிவாகியிருக்கும். இதனை ஆய்வு செய்தால், விபத்து நிகழ்வதற்கு முன்பு விமானிகள் என்ன பேசினார்கள், விபத்துக்கான காரணம் என்ன என்பன உள்ளிட்ட விவரங்கள் தெரியவரும் என போலீசார் தெரிவித்தனர்.