Wednesday, September 23, 2026
Home Blog Page 10

பாரதிய ஜனதா கட்சி வேட்பாளர்களுக்கு கோவை மற்றும் திருப்பூர் மாவட்ட பா.ஜ.க வினர் சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

0

கோவை மாவட்ட பாரதிய ஜனதா கட்சி வேட்பாளர்களாக கோவை வடக்கு மற்றும் அவிநாசி தொகுதிக்கு அறிவிக்கப்பட்ட தேசிய மகளிர் அணி தலைவி வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ மற்றும் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் ஆகியோருக்கு கோவை மற்றும் திருப்பூர் மாவட்ட பா.ஜ.க வினர் சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த பா.ஜ.க தேசிய மகளிர் அணி தலை வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ பேசும்போது ;-

தமிழகத்திலே வரக் கூடிய சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்கான பாரதிய ஜனதா கட்சி வேட்பாளர்களாக மத்திய அமைச்சர் எல்.முருகன் அவர்கள், நானும் கோவை மாவட்டத்தில் இரண்டு தொகுதிகளுக்கு வேட்பாளராக அறிவிக்கப்பட்டு உள்ளதாகவும், இன்று காலை மரியாதைக்குரிய பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் கூட்டத்தை முடித்துவிட்டு கொண்டு இருவரும் இன்று முதல் தங்களுடைய தேர்தல் பணிகளை தொடங்கியதாகவும் கூறியவர்,

தமிழகத்தினுடைய அரசியல் சூழல் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு மிக, மிக சாதகமாக சென்று கொண்டு உள்ளதாகவும், ஒவ்வொரு நாளும் நாடகங்களை அரங்கேற்றிக் கொண்டு இருக்க கூடிய திராவிடம் மாடல் அரசு மக்கள் முன்பாக தங்களுடைய தோல்வி பயத்தால், ஒவ்வொரு நாளும் நாடகத்தை நடத்திக் கொண்டு இருப்பதாகவும், பெண்களுடைய பாதுகாப்பு, சட்டம் – ஒழுங்கு, போதைப்பொருள் பயன்பாடு தமிழகத்தினுடைய இளைஞர்களுக்கான சரியான வழிகாட்டுதல் இல்லாமல், நம்முடைய தொகுதிகள் குறிப்பாக கொங்கு மண்டலத்தில் சிறு, குறு தொழில் நிறுவனங்களுக்கு இவர்களால் உயர்த்தப்பட்ட மின்சார கட்டணம் மற்றும் சொத்து வரி தொடர்பான பிரச்சனைகள் என்று ஒவ்வொரு தரப்பு மக்களும் இந்த அரசாங்கம் எப்பொழுது வீட்டுக்கு செல்லும், வீட்டுக்கு அனுப்பவும் என்று காத்துக் கொண்டு உள்ளதாகவும், தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளதாகவும், தங்களுடைய கூட்டணியை பற்றி பேசி கொண்டு உள்ளதாகவும், இப்பொழுது இண்டி அலையன்ஸில் இருக்கக் கூடிய கூட்டணி ஒவ்வொரு கட்சிகளும் அவர்களுக்குள் இருக்கின்ற அதிருப்திகள், வெளிச்சத்திற்கு வந்து கொண்டு உள்ளதாக கூறியவர், எங்களுடைய பிரச்சாரத்தில் தேசிய தலைவர்கள், மத்திய அமைச்சர்கள், மாற்று பல்வேறு மட்டத்தில் இருக்கக் கூடிய அத்தனை தலைவர்களாலும், ஒவ்வொரு இடங்களிலும் அதற்கென்று கூட்டங்கள், பிரச்சாரங்கள் மேற்கொள்ளப்பட இருக்கிறது. இது தொடர்பாக கட்சி அறிவிப்புகளை வெளியிடும் என பார்த்துக் கொண்டு உள்ளதாக கூறினார்.

இந்தப் பகுதியில் நீலகிரி பாராளுமன்ற தொகுதியிலே கடந்த 2024 நின்றதில் இந்தப் பகுதி மக்களுக்கு சிறப்பாக உழைத்துக் கொண்டு இருக்க கூடிய மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் அவர்கள் சட்டமன்ற தொகுதி அவிநாசிக்கு வேட்பாளராக அறிவிக்கப்பட்டு இருக்கிறார். இந்தப் பகுதி என்பது பாரதிய ஜனதா கட்சிக்கு மிகுந்த முக்கியத்துவம் கொடுக்கக் கூடிய பகுதி மட்டுமல்ல, மக்களுடைய ஆதரவையும் இருக்கக் கூடிய பகுதி அதனால் இங்கு போட்டியிடக் கூடிய தேசிய ஜனநாயக கூட்டணி கட்சியின் வேட்பாளர்கள் அனைவரும் கடந்த முறை தேர்தலில் பத்துக்கு பத்து 10/10 என்ற முறையில் எடுத்தோம், இந்த முறை கோவை – அவிநாசி தொகுதியும் சேர்த்து கோவை மாவட்டத்தில் 11 க்கு 11 என்று வெற்றி பெற போவதாக கூறினார்.

அண்ணாமலை தேர்தலில் போட்டியிடுவது எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தற்போது பேச்சாளர் பட்டியல் இடம் பெற்று உள்ளார். ஸ்டார் வேட்பாளர் அது குறித்தான கேள்விக்கு

பரப்புரை தங்களுக்காக பண்ணுவதாக, கூறியிருக்கிறார். கட்சி இது தொடர்பாக மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் கூறி உள்ளதாகவும், அவருடைய பணி என்ன ? என்று, நாங்களும் அவருடைய பரப்புரை தங்கள் தொகுதியில் குறிக்கு இன்று காலை பேசி வந்ததாகவும், என்னென்ன தேதிகளில் எங்கெங்கு ? வருவதாக உள்ளார் என்றும், நாளை மாலை கோவை வடக்கு தொகுதிக்கு வருகிறார். நாளை மறுநாள் வேட்பு மனு தாக்கல் செய்வதற்கு மத்திய அமைச்சர் முருகன் ஜி வுடன் செல்கிறார். அவருடைய பணிகள் சரியாக போய்க் கொண்டு உள்ளதாக கூறினார்.

அண்ணாமலை சீட்டு கொடுக்காதது குறித்தான கேள்விக்கு

சீட்டு கொடுக்கின்ற இடத்தில் முதலில் நாங்கள் இல்லை, அதனால் இது மாதிரி தவறான கருத்துக்களை பரப்பாதீர்கள். அவர் தெளிவாகச் சொல்லி இருக்கிறார். நான் தேர்தலில் போட்டியிடவில்லை, என்று அவரை கூறியதற்கு பின்னரும் திரும்பவும், திரும்ப கட்சி பூசல், அக்கா – தம்பி, அண்ணன் – தம்பி ஒன்று விடாமல், அதாவது இன்றைக்கு ஊடகங்களை பார்க்கிறோம். தேர்தல் பிரச்சாரம் சென்று கொண்டு இருக்கக் கூடிய தலைவர்கள் அவருடைய பிரச்சனைகள், தமிழகத்தினுடைய மக்களுடைய பிரச்சினைகளை பேசாமல் எங்கெங்கெல்லாம் ? இது போன்ற வைப் கிடைக்குமா ? அங்கெல்லாம் இது போன்ற கருத்துக்களை உருவாக்குவது என்பது நாங்கள் எடுத்துக் கொள்ள விரும்பவில்லை, ஏனென்றால் உண்மையான பிரச்சனைகளை நீங்கள் பேசினீர்கள் என்றால் பதில் சொல்லலாம்..

அ.தி.மு.க முன்னாள் சபாநாயகர் தனபால் தேர்தலில் சீட்டு கொடுக்காமல், பா.ஜ.க விற்கு கொடுத்து இருப்பதாக பேசியது குறித்தான கேள்விக்கு

கூட்டணிப் பேச்சு வார்த்தையில் எந்தெந்த தொகுதி என்பது கட்சியினுடைய மேல் மட்டத்தில் தலைமை முடிவெடுக்கிறது. அதில் இருக்கின்ற ஒவ்வொரு விபரங்கள் நீங்கள் கொடுத்தீர்களா ? நீங்கள் இந்த பட்டியல் கொடுத்தீர்களா ? நீங்கள் அதை பேசினீர்களா ? எப்படி வரும் என்று அதை எப்படி ? நீங்கள் எதிர்பார்க்கிறீர்கள்.

எல்லா கூட்டணியும் தி.மு.க விடம் கேட்டார்கள், அதை நீங்கள் ஏன் ? கொடுக்கவில்லை என்று கேட்பீர்களா ? என கேள்வி எழுப்பியவர், கேளுங்கள் நாங்கள் அதை தான் சொல்கிறோம், ஒவ்வொரு கூட்டணி தலைமையும், அவர்கள் தலைமை தான் முடிவு செய்கிறது. இதற்கு மேல் எங்களுக்கு ஒன்றும் தெரியாது என்றார்.

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய மத்திய இணை அமைச்சர் டாக்டர் எல்.முருகன், பேசும்போது ;

பிரதமர் நரேந்திர மோடியின் ஆசீர்வாதம் பெற்று பா.ஜ.க வேட்பாளராக அறிவிக்கப்பட்டு உள்ளதாகவும், தி.மு.க வை ஆட்சியில் இருந்து அகற்றுவது தான் தேசிய ஜனநாயக கூட்டணியின் ஒரே நோக்கம் என தெரிவித்தார்.

மேலும் கடந்த ஐந்து ஆண்டுகளில் மக்கள் பல வேதனைகளை சந்தித்து வருவதாகவும், கருணாநிதி, ஸ்டாலின், உதயநிதி, இன்பநிதி என குடும்ப ஆட்சி நடைபெற்று வருவதாகவும், இதனால் தமிழகத்தின் வளர்ச்சி பெரிதும் தடைபட்டு உள்ளதாக குறிப்பிட்டார்.

தமிழகத்தின் வளர்ச்சிக்கு டபுள் இன்ஜின் சர்க்காராக உள்ள தேசிய ஜனநாயக கூட்டணி அரசு தான் தேவை எனவும், கடந்த ஐந்து ஆண்டுகளில் மத்திய அரசோடு தி.மு.க அரசாங்கம் அனுசரணையாக இல்லாததால், தமிழகத்தின் வளர்ச்சி பாதிக்கப்பட்டதாகவும் குறிப்பிட்டார்.

மக்கள் விரும்பும் வளர்ச்சியை தேசிய ஜனநாயக கூட்டணி தான் கொடுக்கும் எனவும், கட்சி சொல்வதை கேட்டு அனைவரும் உழைத்து வருகிறோம் என குறிப்பிட்டார்.

வானதி vs அண்ணாமலை.. எடப்பாடி பழனிசாமி பாஜகவிற்கு வைத்த செக்.. நடுவில் செந்தில் பாலாஜி

0

அரசியல் சதுரங்க வேட்டை என்பது எல்லா கட்சிகளும் மேற்கொள்வது தான். இந்த முறை அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கோவை மண்டலத்தை வைத்து வைத்த நகர்வு மிகப்பெரிய ராஜதந்திரமாகவே மக்களிடையே பார்க்கப்படுகிறது. ஒரு பக்கம் அண்ணாமலைக்கு வெற்றி வாய்ப்பு அதிகம் உள்ள கவுண்டம்பாளையம் தொகுதியை ஒதுக்கவில்லை, மறுபக்கம் பாஜகவிற்கு கோவை வடக்கு தொகுதியை ஒதுக்கி உள்ளார். அண்ணாமலை, வானதி சீனிவாசன் ஆகிய இருவருக்குமே கோவை வடக்கு தான் ஒரே ஆப்சன், மறுபக்கம் செந்தில் பாலாஜி கோவைக்குள் வந்துள்ளார். இதனால் என்னாகும் என்பதை பார்ப்போம்.

இந்த சட்டசபை தேர்தலில் அதிமுக பாஜகவிற்கு ஒதுக்கிய 27 தொகுதிகளில் நான்கு தொகுதிகள் மட்டும் தான் பாஜகவிற்கு மிகவும் எளிதான தொகுதிகள், மற்ற தொகுதிகள் எல்லாம், திமுகவின் மிகவும் வலுவான செல்வாக்கு உள்ள தொகுதிகள். அதில்வெற்றி பெறுவது மிக மிக சவாலானது. தற்போதைய நிலையில் கோவை தெற்கு (ஏற்கனவே வானதி சீனிவாசன் ஜெயித்தது), நெல்லை (நயினார் நாகேந்திரன் செல்வாக்கு), கன்னியாகுமரி/நாகர்கோவில் (பாஜக-வின் பாரம்பரிய கோட்டை), மொடக்குறிச்சி (பாஜகவின் சரஸ்வதி ஜெயித்த இடம்), இதில் கோவை தெற்கு இந்த முறை ஒதுக்கப்படவில்லை. கோவை வடக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இதுவும் பாஜகவிற்கு சாதகமானது தான்.ஆனால் இதனைவிட சாதகமான சிங்காநல்லூர், கவுண்டம்பாளையம் உள்ளிட்ட சில தொகுதிகள் உள்ளன. ஆனால் அவற்றை எடப்பாடி பழனிசாமி பாஜகவிற்கு ஒதுக்கவில்லை, இதன்மூலம் அதிமுக-பாஜக கூட்டணி அமைந்தாலும், கோயம்புத்தூர் மண்டலத்தில் தனது பிடியை தளர்த்த எடப்பாடி பழனிசாமி விரும்பவில்லை என்பது தெளிவாகத் தெரிகிறது.

கோவை வடக்கு சிக்கல் என்ன
பாஜக முன்னாள் மாநில தலைவரான அண்ணாமலை மற்றும் பாஜக மகளிரணி தேசிய தலைவியான வானதி சீனிவாசன் ஆகிய இருவருமே கோவை வடக்கு தொகுதியைத்தான் கேட்கிறார்கள். இருவரையும் ஒரே தொகுதியில் மோத விடுவதன் மூலம், பாஜக-விற்குள் இருக்கும் விரிசலை அவர் ஊதிப் பெரிதாக்கி உள்ளதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன. இதில் யாரை தேர்வு செய்வது என்பது தான் பாஜக வேட்பாளர் பட்டியல் தாமதத்திற்கு காரணம் என்கிறார்கள். அதேபோல் அண்ணாமலைக்கு வெற்றி வாய்ப்புள்ள கவுண்டம்பாளையம், சிங்காநல்லூர் போன்ற தொகுதியை தராமல் (நாடாளுமன்ற தேர்தலில் அதிக வாக்குகள்) அவருக்குச் சவாலான தொகுதிகளை மட்டும் ஒதுக்கியிருப்பது, அண்ணாமலையின் அரசியல் செல்வாக்கை அவரது சொந்த மண்டலத்திலேயே முடக்க எடப்பாடி பழனிசாமி திட்டமிட்டதாக அண்ணாமலை ஆதரவாளர்கள் விமர்சிக்கிறார்கள்.எடப்பாடி பழனிசாமியின் வியூகம் ஒருபுறம் எனில், கரூரைவிட்டு விட்டு, கோவை தெற்கில் செந்தில் பாலாஜி மீண்டும் களமிறங்குவது அதிமுகவின் கொங்கு மண்டல கோட்டைக்கு மட்டுமல்ல.. பாஜக-விற்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக பார்க்கப்படுகிறது. செந்தில் பாலாஜிவின் அதிமுகவின் அத்தனை வியூகங்களும் நன்றாகவே தெரியும். எனவே அவர்களை வியூகத்தை முறியடித்து கொங்கு மண்டலத்தில் திமுக-வின் தேர்தல் வியூகத்தை மிகத் தீவிரமாக முன்னெடுப்பார். எனவே செந்தில் பாலாஜியின் வருகை பாஜக மற்றும் அதிமுக-வின் ஓட்டு வங்கியில் அவர் பெரிய ஓட்டையைப் போட வாய்ப்புள்ளது. குறிப்பாக, பண பலம் மற்றும் ஆள் பலத்தில் செந்தில் பாலாஜியைச் சமாளிப்பது பாஜக-விற்கு எளிதான காரியமல்ல. இதுதான் தற்போதைய சிக்கலை இன்னும் அதிகமாக்க போகிறது என்கிறார்கள் அரசியல் விமர்சகர்கள்..

தமிழ்நாடு சட்டம் – ஒழுங்கு புதிய டிஜிபியாக சந்தீப் ராய் ரத்தோர் நியமனம்

0

2026 தமிழக சட்டமன்ற தேர்தல் வருகின்ற ஏப்ரல் 23 ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த நிலையில், தமிழக காவல்துறை உயரதிகாரிகளை மாற்றி இந்திய தலைமைத் தேர்தல் ஆணையம் அதிரடி நடவடிக்கை மேற்கொண்டிருக்கின்றது.
அந்த வகையில், தமிழ்நாடு டிஜிபி-யை தேர்தல் ஆணையம் மாற்றி உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தின் புதிய சட்டம் ஒழுங்கு டிஜிபி-யாக சந்தீப் ராய் ரத்தோர் நியமிக்கப்பட்டுள்ளார். பொறுப்பு டிஜிபியாக வெங்கட்ராமன் பதவி வகித்து வந்த நிலையில், அவரை மாற்றி இந்திய தலைமைத் தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.நாளை காலை 11 மணிக்கு சந்தீப் ராய் ரத்தோர் பொறுப்பேற்க உள்ளார்.மேலும், சஞ்சய் குமார் ஐபிஎஸ் தாம்பரம் காவல் ஆணையராகவும், அபிஷேக் தீக்ஷித் ஐபிஎஸ் மதுரை காவல் ஆணையராகவும், ஆர்.வி. ரம்யா பாரதி மேற்கு மண்டல ஐஜியாக நியமிக்கப்பட்டுள்ளார். இவர்களும் நாளை காலை 11 மணிக்கு பொறுப்பேற்க உள்ளனர்.

ஐபிஎஸ் அதிகாரிகளைத் தொடர்ந்து ஐஏஎஸ் அதிகாரிகளும் மாற்றப்பட்டுள்ளனர். அந்தவகையில், அருண் தம்புராஜ் சேலம் மாவட்ட ஆட்சியராகவும், விஷ்ணு மஹாஜன் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியராகவும் நியமிக்கப்பட்டிருக்கின்றனர்.

ஆட்சியை நான்தான் காப்பாற்றிக் கொடுத்தேன்! எனக்கே சீட் இல்லை! தனபால்

0

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவிற்கு பிறகு நான்தான் எடப்பாடி பழனிசாமி ஆட்சியை காப்பாற்றி கொடுத்தேன். அப்படிப்பட்ட எனக்கே சீட் கொடுக்கவில்லை என அவிநாசியின் சிட்டிங் எம்எல்ஏவும், முன்னாள் சபாநாயகருமான தனபால் பரபரப்பு குற்றச்சாட்டை தெரிவித்துள்ளார்.இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது: அவிநாசி தொகுதியில் போட்டியிட நான் விருப்பனு அளித்திருந்தேன். ஆனால் அவிநாசி தொகுதி பாஜகவுக்கு ஒதுக்கப்பட்டுவிட்டது. இந்த தகவலை கூட கட்சி சார்பில் என்னை அழைத்து சொல்லவே இல்லை.அவிநாசி போய்விட்டதால் வேறு தொகுதியில் போட்டியிடுகிறீர்களா என்று கூட அவர்கள் என்னை கேட்கவில்லை. சிட்டிங் எம்எல்ஏ, முன்னாள் சபாநாயகரான எனக்கு சீட் வழங்கவில்லை, எனக்கு மரியாதையும் கொடுக்கவில்லை. முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைந்ததும் தினகரன் ஆதரவு 18 எம்எல்ஏக்கள், எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக போர்க்கொடி உயர்த்திய போது அவர்களை தகுதி நீக்கம் செய்து எடப்பாடி பழனிசாமியின் ஆட்சியை நான்தான் காப்பாற்றிக் கொடுத்தேன். அப்படிப்பட்ட எனக்கே சீட் கொடுக்கவில்லை என்று தனது மனக்குமுறலை கொட்டியுள்ளனர்.

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அவிநாசி (தனி) தொகுதியில் எம்எல்ஏவாக இருப்பவர் அதிமுகவை சேர்ந்த தனபால். இவர் முன்னாள் சபாநாயகராகவும் இருந்தார். இவரது மகன் லோகேஷ் தமிழ்ச் செல்வன்.இவர் கடந்த 2024 ஆம் ஆண்டு நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் நீலகிரி தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்தார். இந்த நிலையில் தனபாலுக்கு அவ்வப்போது உடல்நிலை சரியில்லாமல் போவதால், தொகுதி பக்கமே வருவதில்லையாம். தனபால் எங்கே என கேட்டு அந்த தொகுதி மக்கள் போஸ்டர் ஒட்டாத குறையாக அதிருப்தியில் இருக்கிறார்களாம். கடந்த சில மாதங்களுக்கு முன்பு அத்திக்கடவு- அவிநாசி திட்டம் தொடர்பான அதிமுக பாராட்டு விழாவில் மட்டும் தனபால் கலந்து கொண்டாராம். அதன் பிறகு தொகுதி பக்கம் தலை வைத்து கூட படுப்பதில்லை என்கிறார்கள் தொகுதி மக்கள்.

இந்த நிலையில் தனபால் செயல்படாமல் உள்ளதாலும், கொங்கு மண்டலம் அதிமுகவின் கோட்டை என்பதாலும் வரும் தேர்தலில் அதிமுக சார்பில் களம் காணும் வேட்பாளருக்கு வெற்றி உறுதி என்றார்கள். இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்த தனபாலின் மகன் லோகேஷ் தமிழ்ச்செல்வன் முயற்சித்து வந்தார். அவர் அதிமுக சார்பில் விருப்பமனுவையும் கொடுத்திருந்தார். ஆனால் அவருக்கு சீட் வழங்கக் கூடாது என பலர் போர்க் கொடி உயர்த்தி, அதை தலைமைக்கே கொண்டு சென்றுவிட்டனராம். அதிமுகவில் ஐடி விங்கில் இருந்த லோகேஷ், அவிநாசி தொகுதி பொறுப்பாளராகவும் எம்ஜிஆர் இளைஞரணி மாநில இணைச் செயலாளராகவும் இருந்து வந்தார். லோகேஷ் மீது புகார் சென்றதால் அவருக்கு சீட் கிடைக்காது என்றே சொல்லப்பட்டது. இதையடுத்து தனது அப்பாவுக்கு மரியாதை இல்லை, அவர் இதய அறுவை சிகிச்சை செய்து கொண்ட போது கூட கட்சி சார்பில் யாரும் வந்து பார்க்கவில்லை என குற்றச்சாட்டுகளை முன்வைத்த லோகேஷ், தவெகவில் இணைந்துவிட்டார்.

அவர் ராசிபுரம் தொகுதியில் போட்டியிடுகிறார். இந்த சூழலில்தான் அவிநாசியில் தனக்கு சீட் கொடுக்கவில்லை என தனபால் குற்றம்சாட்டியுள்ளார்.

துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வேட்பு மனு தாக்கல்

0

சேப்பாக்கம்- திருவல்லிக்கேணி சட்டமன்றத் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று (ஏப்.2) வேட்புமனு தாக்கல் செய்தார்.

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு, ஒரே கட்டமாக வரும் 23 ஆம் தேதி நடைபெறுகிறது. இதனால் அரசியல் கட்சி தலைவர்கள், தங்களது வேட்பாளர்களை ஆதரித்து தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர். மற்றொருபுறம், தேர்தலை நேர்மையாகவும், 100 சதவீதம் வாக்குப்பதிவு என்ற இலக்கை அடையும் வகையிலும் தேர்தல் ஆணையம் பள்ளி, கல்லூரிகளில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறது. தேர்தல் பறக்கும் படையினர் மற்றும் நிலையான கண்காணிப்புக் குழு அதிகாரிகள், தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் வாகனத் தணிக்கையை தீவிரப்படுத்தியுள்ளனர். இந்நிலையில், வேட்பு மனுத்தாக்கலுக்கான கடைசி தேதி ஏப்ரல் 6- ஆம் தேதி என்பதால், வேட்பாளர்கள் தங்கள் வேட்புமனுவை தாக்கல் செய்து வருகின்றனர். இதனால் மாவட்ட ஆட்சியர் அலுவலகங்கள் பரபரப்பாக காணப்படுகின்றன.இந்நிலையில், திமுகவின் இளைஞரணிச் செயலாளரும், தமிழ்நாடு துணை முதலமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் இன்று (ஏப்ரல் 02) சென்னை ஐஸ் ஹவுஸ் அருகே பெசன்ட் சாலையில் உள்ள தேர்தல் நடத்தும் அலுவலர் அலுவலகத்தில் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி சட்டமன்றத் தொகுதியின் தேர்தல் நடத்தும் அதிகாரி ஆர்.சுகந்தியிடம் தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார்.இந்நிகழ்வின் போது, மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன், அண்ணா நகர் திமுக வேட்பாளர் சிற்றரசு, திமுக மாநில ஊடகப்பிரிவு இணைச்செயலாளர் வழக்கறிஞர் சரவணன் உள்ளிட்டோர் உடனிருந்தனர். பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், “இது ஒரு வரலாறு வெற்றியாக இருக்கும். கண்டிப்பாக இந்த முறையும் வெற்றி பெறுவோம்” என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதி ஒரு பார்வை

கடந்த 2008- ஆம் ஆண்டு தொகுதி மறுசீரமைப்புக்குப்பின் சேப்பாக்கம்- திருவல்லிக்கேணி உருவானது. மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி தொடர்ந்து மூன்று முறை போட்டியிட்டு சேப்பாக்கம் தொகுதியில் வெற்றி பெற்றுள்ளார். அதேபோல், கடந்த 2011 மற்றும் 2016 சட்டமன்றத் தேர்தல்களில் சேப்பாக்கம் தொகுதியில் மறைந்த திமுக சட்டமன்ற உறுப்பினர் ஜெ.அன்பழகன் போட்டியிட்டு வெற்றி பெற்றிருந்தார். அதைத் தொடர்ந்து, கடந்த 2021 சட்டமன்றத் தேர்தலில் முதன்முறையாக சேப்பாக்கம்- திருவல்லிக்கேணி சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று உதயநிதி ஸ்டாலின் துணை முதலமைச்சரானார். இந்நிலையில், சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி சட்டமன்றத் தொகுதியில் உதயநிதி ஸ்டாலின், இரண்டாவது முறையாக போட்டியிடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

திருச்சி கிழக்கு தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்தார் விஜய்: திறந்த வாகனத்தில் பிரச்சாரம்…

0

சென்னை நீலாங்கரையில் உள்ள தனது இல்லத்தில் இருந்து கார் மூலம் சென்னை விமான நிலையத்திற்கு வந்த தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், பின்னர் தனி விமானம் மூலம் திருச்சிக்கு புறப்பட்டார்.

திருச்சி வந்தடைந்த விஜய்க்கு, தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள் உற்சாக வரவேற்பு அளித்தனர். அதை தொடர்ந்து, திருச்சி மாநகராட்சியின் பாலக்கரை பகுதியில் மண்டல அலுவலகத்திற்கு சென்ற விஜய், திருச்சி கிழக்கு சட்டமன்றத் தொகுதியின் தேர்தல் நடத்தும் அலுவலர் முத்து முருகேசபாண்டியிடம் தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார்.

இந்நிகழ்வின் போது தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுச் செயலாளர் என்.ஆனந்த், இணைப் பொதுச்செயலாளர் சி.டி.ஆர்.நிர்மல்குமார் மற்றும் திருச்சி மாவட்டச் செயலாளர்கள் உடனிருந்தனர்.வேட்பு மனுவைத் தாக்கல் செய்த பின்னர், பிரச்சார வாகனத்தில் நின்றவாறு சென்ற விஜய்க்கு, சாலையின் இரு புறங்களிலும் நின்று தமிழக வெற்றிக் கழகத்தினர் உற்சாக வரவேற்பு அளித்தனர். இதன் தொடர்ச்சியாக, விஜய் பரப்புரையில் ஈடுபட்டு வாக்கு சேகரித்தார்.

கட்சித் தொடங்கி முதன்முறையாக தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலைச் சந்திக்கும் தமிழக வெற்றிக் கழகம் 234 சட்டமன்றத் தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிடுகிறது. இதில் பெரம்பூர், திருச்சி கிழக்கு ஆகிய 2 தொகுதிகளில் விஜய் போட்டியிடுகிறார்.கடந்த மார்ச் 30-ம் தேதி பெரம்பூர் சட்டமன்றத் தொகுதியில் விஜய் தனது வேட்பு மனுவைத் தாக்கல் செய்தார். அன்றைய தினமே கொளத்தூர், பெரம்பூர் ஆகிய சட்டமன்றத் தொகுதிகளில் அவர் பிரச்சாரம் மேற்கொண்டார். பின்னர் பாதுகாப்பு குறைபாடு காரணம் என்று கூறி வில்லிவாக்கத்தில் தனது பிரச்சாரத்தை அவர் ரத்து செய்திருந்தார்.

திருச்சி கிழக்கில் திமுக சார்பில் தற்போதைய சட்டமன்ற உறுப்பினர் இனிகோ இருதயராஜ் மீண்டும் போட்டியிடுகிறார். சிறுபான்மையினர் வாக்கு அதிகம் உள்ள தொகுதி என்பதால் திருச்சி கிழக்கில் திமுக – தவெக இடையே கடும் போட்டி நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வேட்புமனுவை தாக்கல் செய்தார் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்…

0

காரைக்குடியில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தனது மனைவி மற்றும் தாயுடன் சென்று இன்று (மார்ச் 30) வேட்பு மனு தாக்கல் செய்தார்.

தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான 234 தொகுதிகளுக்கும் முதல் ஆளாக வேட்பாளர்களை அறிவித்து தேர்தல் பரப்புரையை தீவிரப்படுத்தியுள்ள நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், வேட்பு மனு தாக்கல் செய்யும் முதல் நாளான இன்று காரைக்குடி தொகுதியில் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார். நாம் தமிழர் கட்சியின் அனைத்து வேட்பாளர்களும் இன்று அவர் அவர் பகுதியில் வேட்பு மனு தாக்கல் செய்தனர்.

காரைக்குடியில் காங்கிரஸ் சார்பில் மாங்குடி எம்எல்ஏ மீண்டும் போட்டியிட உள்ள நிலையில், அதிமுக கூட்டணியில் உள்ள அமமுகவை சேர்ந்த தேர் போகி பாண்டி, தவெக சார்பில் டாக்டர் பிரபு ஆகியோர் களத்தில் உள்ளனர். போட்டி கடுமையாக இருக்கும் சூழலில், நேற்று பரப்புரையை தொடங்கிய சீமான் இன்று வேட்பு மனுவை தாக்கல் செய்தார். முன்னதாக தனது சொந்த ஊர் மற்றும் எல்லா சமுதாய மக்களும் காரைக்குடியில் இருப்பதால் தான் இங்கு போட்டியிடுவதாக தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

யார் கேட்டது இலவசம்
இதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய சீமான், “எம் மண்ணின் வளத்தை, மக்களின் நலத்தை அடமானமாக வைத்து கடன் பெறுகிறீர்கள். கடனில் மட்டும் வளர்ச்சி என்று காட்டினால் எப்படி? கல்வி, மருத்துவம், குடிநீர், தடையற்ற மின்சாரம், தரமான போக்குவரத்து, நல்ல சாலை போன்றவை தரமானதாக உள்ளதா? ஒவ்வொரு ஆண்டும் மக்களை வெள்ளத்தில் மிதக்க விட்டு வெள்ள நிவாரணம் கொடுப்பது நல்ல ஆட்சியா? வெள்ளத்தில் மக்கள் பாதிக்கப்படாத அளவுக்கு மழை நீர், கழிவு நீர் வழிந்தோட வசதி ஏற்படுத்திக் கொடுத்து மக்களைப் பாதுகாப்பது தான் ஆட்சி.யார் கேட்டது இலவசம்.. ஸ்டாலின் எதிர்கட்சியாக இருந்தபோது ‘இலவசங்களை மக்கள் விரும்பவில்லை, அதை எதிர்பார்க்கவில்லை, அவர்கள் வேலை தான் கேட்கிறார்கள்’ என்று பேசியது உண்டு. இப்போது திருப்பி நீங்கள் அதையே செய்கிறீர்கள். ஒரு இனத்தின் மகனாக, இலவசத்திற்கு ஆயிரம், ஐநூறுக்கு கையேந்துவதை தன்மான இழப்பாக, இனமான இழப்பாகப் பார்க்கிறேன். அவமதிப்பாகப் பார்க்கிறேன். இது எந்த மாதிரி ஆட்சி முறை?இப்படியே சென்றால் எங்கு போய் நிறுத்துவீர்கள்?
இப்போது பத்தரை லட்சம் கோடி கடன் உள்ளது. அடுத்த ஐந்தாண்டு யாராவது வந்தால்.. கொடுமை! இதை எப்படி இந்த அறிவுச் சமூகம் ஏற்கிறது? மக்களை ‘இலவசம் கொடுக்கிறோம்’ என்று சொல்லி ஏன் ஏமாற்ற வேண்டும்?மிக்சி, கிரைண்டர், ஃபிரிட்ஜ், வேட்டி, சேலை, ஒரு லிட்டர் எண்ணெய், ஒரு கிலோ பருப்பு – இதை எல்லாம் கூட வாங்கிக் கொள்ள முடியாதா? ஒரு அடிப்படை தேவையை நிறைவேற்றிக் கொள்ள முடியாத ஏழ்மை, வறுமை – அந்த அளவுக்குக் கூட வருமானம் இல்லை. என்ன கொடுமை இது?எங்கே கொண்டு போய் நிறுத்துவீர்கள் என்று சொல்லுங்கள். மலை, மணல், மரங்கள் இல்லை.. கொடுமை!” என தெரிவித்தார்.

பெரம்பூர் தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்தார் தவெக தலைவர் விஜய்

0

தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பாக தேர்தலில் போட்டிடும் 243 வேட்பாளர்களின் பெயர் பட்டியல் நேற்று வெளியான நிலையில், பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய 2 தொகுதிகளில் போட்டியிடுவதாக விஜய் அறிவித்திருந்தார். அதனைத் தொடர்ந்து இன்று பெரம்பூர் தொகுதியில் போட்டியிடுவதற்காக வேட்புமனுவை தாக்கல் செய்தார் விஜய்.

தேர்தல் நடத்தும் அதிகாரியிடம் வேட்புமனுவை தாக்கல் செய்த கையோடு, பெரம்பூரிலிருந்து பரப்புரை பயணத்தை தொடங்கியுள்ளார். அவரை காண மக்கள் கூட்டம் அலைமோதியதால் அந்த பகுதியில் கடும் கூட்டநெரிசல் ஏற்பட்டது. கடந்த சில மாதங்களுக்கு முன்பே, ‘ஆட்சியில் பங்கு, அதிகாரத்திலும் பங்கு’ என்று வெளிப்படையாகவே கூட்டணிக்காக பிற கட்சிகளுக்கு விஜய் அழைப்பு விடுத்த போதிலும், தவெகவுடன் கூட்டணி அமைக்க எந்த கட்சியும் முன்வரவில்லை. இருப்பினும், ‘மக்களின் துணையோடு தேர்தல் களம் காண்போம்’ என்று விஜய் கூறியிருந்த நிலையில், நேற்று 234 தொகுதிகளுக்குமான வேட்பாளர் பட்டியலை ஒரே கட்டமாக வெளியிட்டார். அதன்படி, சென்னை பெரம்பூர், திருச்சி கிழக்கு ஆகிய 2 தொகுதிகளில் தான் போட்டியிடுவதாக அறிவித்தார்.1952-ம் ஆண்டு முதல் 16 சட்டமன்ற தேர்தல் மற்றும் ஒரு இடைத்தேர்தல் என இதுவரை 17 தேர்தல்களை சந்தித்துள்ள பெரம்பூர் தொகுதி இந்த ஆண்டு தனது 18-வது தேர்தலை சந்திக்கிறது. இதில் 9 முறை திமுகவும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 3 முறையும், அதிமுக 2 முறையும், சுயேட்சை 2 முறையும், இந்திய தேசிய காங்கிரஸ் ஒரு முறையும் வெற்றி பெற்றுள்ளன. தற்போது முதன்முறையாக தேர்தலை சந்திக்கும் தவெக தலைவர் விஜய் பெரம்பூர் தொகுதியில் போட்டியிடுவதால், அவருக்கு எதிராக ஏற்கனவே இந்த தொகுதியில் இடைத்தேர்தல் மற்றும் 2021 சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற ஆர்.டி சேகரை திமுக களம் இறக்கியுள்ளது. அதிமுகவில் அதன் கூட்டணி கட்சியான பாமகவிற்கு சீட் வழங்கப்பட்டிருப்பதால் விஜயை எதிர்கொள்ளும் வகையில் திலகபாமாவை பாமக களம் இறக்கியுள்ளது. அதே போல், 234 தொகுதிகளிலும் தனித்து களம் காணும் நாம் தமிழர் கட்சி அந்த தொகுதிவாசியான வெற்றித்தமிழனை களம் இறக்கியுள்ளது. இவை மட்டுமல்லாமல் எஸ்யுசிஐ (கம்யூனிஸ்ட்) கட்சி சார்பில் சுயேட்சையாக செபாஸ்டின் களமிறங்குகிறார்.

வேட்பு மனு தாக்கல்; வெற்றி நிச்சயம் என நம்பிக்கை மு.க.ஸ்டாலின்

0

கொளத்தூர் தொகுதியில் தொடர்ந்து நான்காவது முறையாக போட்டியிடும் தமிழக முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின், தமது வேட்பு மனுவை இன்று தாக்கல் செய்தார்.

சென்னை, செம்பியம், பேப்பர் மில் சாலையில் உள்ள ஒருங்கிணைந்த மாநகராட்சி அலுவலக கட்டட வளாகத்தில் தேர்தல் நடத்தும் அதிகாரி சாந்தியிடம் அவர் தனது வேட்பு மனுவை அளித்தார்.

வேட்புமனு தாக்கல் செய்த பின் மு.க ஸ்டாலின் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர், “திமுகவின் வேட்பாளராக, மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியின் வேட்பாளராக போட்டியிடுகிறேன். கொளத்தூர் தொகுதி மக்கள் நான்காவது முறையும் என்னை அமோகமான வாக்குகள் வித்தியாசத்தில் நிச்சயமாக வெற்றி பெற வைப்பார்கள் என்ற முழு நம்பிக்கையுடன் இருக்கிறேன்.எங்களின் தேர்தல் பிரச்சாரம் எப்போதும் போல வலுவாக இருக்கும். கடந்த மூன்று முறை நின்று போட்டியிட்டதை விட 4-வது முறை கொளத்தூர் தொகுதி மக்களிடம் அதிக ஆதரவை பார்க்க முடிகிறது. டெல்லியை எதிர்த்து தமிழ்நாடு போராடுகிறது. தமிழ்நாட்டின் உரிமையை காப்பதற்கான இந்த வெற்றி மிகப் பெரிய வெற்றியாக அமையும்” என்று ஸ்டாலின் கூறினார்.
திமுக தலைவர் மு.க ஸ்டாலினுக்கு முதலமைச்சர் என்ற அந்தஸ்தை கொடுத்த தொகுதி கொளத்தூர். 2011, 2016, 2021 ஆகிய சட்டமன்றத் தேர்தல்களில் மு.க.ஸ்டாலின் கொளத்தூர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.அதற்கு முன்பு ஆயிரம் விளக்கு தொகுதியில் போட்டியிட்டு அவர் வெற்றி பெற்றார்.அதாவது 1984 முதல் 2006 -ம் ஆண்டு வரை 6 சட்டமன்றத் தேர்தல்களில் ஆயிரம் விளக்கு தொகுதியில் போட்டியிட்டு 4 முறை மு.க.ஸ்டாலின் வெற்றி பெற்றுள்ளார். 2011 ஆம் ஆண்டு முதல் கொளத்தூர் தொகுதியில் போட்டியிட்டு தொடர்ந்து 3 முறை ஹாட்ரிக் வெற்றியும் கண்டுள்ளார். இந்த நிலையில், தொடர்ந்து நான்காவது முறையாக, 2026 சட்டப் பேரவை தேர்தலிலும் மு.க.ஸ்டாலின் கொளத்தூர் தொகுதியிலேயே களமிறங்குகிறார்.
அவரை எதிர்த்து அதிமுக சார்பில் சந்தான கிருஷ்ணன், நாம் தமிழர் கட்சி சார்பில் சுந்தர பாண்டியன், தமிழக வெற்றி கழகத்தின் சார்பில் வி.எஸ் பாபு ஆகியோர் போட்டியிடுகின்றனர்.
கொளத்தூர் தொகுதியில் கடந்த 2011 தேர்தலில் அதிமுக வேட்பாளர் சைதை துரைசாமியை 68,677 வாக்குகள் வித்தியாசத்தில் ஸ்டாலின் வீழ்த்தினார். 2016 பொதுத் தேர்தலில், அதிமுக வேட்பாளர் ஜெ.சி.டி. பிரபாகரனை 91,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி கொண்டார்.

இதேபோன்று, 2021 சட்டமன்றத் தேர்தலில், அதிமுக வேட்பாளர் ஆதிராஜாராமை 70 ஆயிரத்துக்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் ஸ்டாலின் வென்றார்.
கடந்த 1984 ஆம் ஆண்டு முதல் 2021 ஆம் ஆண்டு வரை, ஒன்பது சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டுள்ள மு.க.ஸ்டாலின் 7 முறை வெற்றி கண்டுள்ளார். 2026 தமிழக சட்ட மன்றத் தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் இன்று தொடங்கி ஏப்ரல் 6-ம் தேதி முடிவடைகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

50 ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் செந்தில் பாலாஜியை தோற்கடிப்பேன் – அம்மன் அர்ஜூனன்

0

கோயம்புத்தூர் தெற்கு தொகுதியில் 50 ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன் என அதிமுக வேட்பாளர் அம்மன் அர்ஜுனன் கூறியுள்ளார்.

வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் கோயம்புத்தூர் மாவட்டத்தில் போட்டியிடும் திமுக வேட்பாளர் பட்டியலை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார். அதில் மேட்டுப்பாளையம் தொகுதியில் கவிதா கல்யாணம் சுந்தரமும், கோயம்புத்தூர் வடக்கு தொகுதியில் செந்தமிழ் செல்வன், கோயம்புத்தூர் தெற்கு தொகுதியில் செந்தில் பாலாஜி, சூலூர் தொகுதியில் தளபதி முருகேசன், தொண்டாமுத்தூர் தொகுதியில் என்.ஆர்.கார்த்திகேயன், கிணத்துக்கடவு தொகுதியில் சபரி கார்த்திகேயன், வால்பாறை தொகுதியில் சுதாகரும் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அதிமுகவின் கோட்டை என கருதப்படும் கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள 10 தொகுதிகளில் திமுகவை அதிக தொகுதிகளில் வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்பதற்காக இந்த முறை கோயம்புத்தூர் தெற்கு தொகுதியில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி களம் இறக்கப்பட்டுள்ளதாக அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.இந்நிலையில், கோவை தெற்கில் தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் அம்மன் அர்ஜுனன் இது தொடர்பாக பேசியதாவது, ”திமுக, அதிமுகவிற்கு போட்டியில் வெற்றி பெறுவது அதிமுக தான். 2026 மே மாதம் 5-ஆம் தேதி எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக பொறுப்பேற்பார்” என்றார். செந்தில் பாலாஜி கோயம்புத்தூர் தெற்கு சட்டமன்ற தொகுதியில் வேட்பாளராக அறிவிக்கப்பட்டது தொடர்பான கேள்விக்கு, ”செந்தில் பாலாஜி எங்கள் வேட்பாளர் விஜயபாஸ்கரை கண்டு பயந்து இங்கே வந்துவிட்டார். கரூரில் அதிமுக வேட்பாளர் விஜயபாஸ்கர் என்று அறிவிக்கப்பட்டதும் செந்தில் பாலாஜிக்கு காய்ச்சல் வந்துவிட்டது. இது சிறிய தொகுதி என்பதால் மக்களை ஏமாளிகள் என்று நினைத்து டப்பா, பாக்ஸ் போன்று ஏதாவது கொடுத்து விடலாம் என்று நினைத்து விட்டனர். ஆனால் கொங்கு மக்களுக்கு வரவேற்கவும் தெரியும், அடித்து விரட்டவும் தெரியும்.நிச்சயமாக 50,000 வாக்குகள் வித்தியாசத்தில் நான் வெற்றி பெறுவேன். இங்கு அவருக்கு இடமில்லை. கடந்த சட்டமன்றத் தேர்தலில் உலக நாயகன் போட்டியிட்டார் அவரால் வெல்ல முடிந்ததா? இல்லை தானே. இங்குள்ள மக்கள் யோசித்து அவர்களுக்கான மக்கள் பணியை செய்யும் நபர்களை தான் தேர்ந்தெடுப்பார்கள். ஓட்டு வாங்கி விட்டு சென்னைக்கு செல்பவர்களுக்கு வாக்களிக்க மாட்டார்கள். 2016ஆம் ஆண்டு இதே தெற்கு தொகுதியில் இரட்டை இலை சின்னத்தில் 17 ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றேன். தற்போது தேசிய ஜனநாயக கூட்டணி பலமும் உள்ளது. அதேபோன்று இந்த முறையும் 50 ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன்” என்றார்.