Wednesday, September 23, 2026
Home Blog Page 12

மார்ச் 28 முதல் பிரச்சாரம்…

0

தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, மேற்கு வங்கம், அசாம் உள்ளிட்ட மாநிலங்களுக்கு சட்டமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டிற்கு வருகிற ஏப்ரல் 23 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது. தொகுதி பங்கீடு, வாக்குறுதிகள், பிரச்சாரம் ஆகியவற்றால் அரசியல் களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. நாம் தமிழர் கட்சி ஏற்கனவே 234 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரத்தை தொடங்கிவிட்டனர். அதிமுக சார்பில் முதல்கட்ட வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்பட்டுள்ளது. தவெக தலைவர் விஜய் பெரம்பூர் தொகுதியில் போட்டியிடவுள்ளதாக கூறப்படும் நிலையில், மார்ச் 28 ஆம் தேதி முதல் அங்கு விஜய் பிரச்சாரம் தொடங்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளதுசட்டமன்ற தேர்தாலுக்காக தொகுதி பங்கீடு முடிந்துவிட்டதால் அடுத்தடுத்து வேட்பாளர் பட்டியல் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வருகிற மார்ச் 30 ஆம் தேதி முதல் வேட்புமனுத்தாக்கல் தொடங்கவுள்ளது. அதனால் திமுக, அதிமுக, பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட பிரதான கட்சிகளின் வேட்பாளர் பட்டியல் வெளியாகும் என்று துகவல் வெளியாகியுள்ளது. தேர்தல் நேரத்தில் அதைப்பற்றி கவலை கொள்ளாமல் விஜய் வளைகாப்பு நிகழ்ச்சிக்காக மும்பை சென்றது சர்ச்சையானது.234 தொகுதிகளிலும் தவெக தனித்து போட்டியிடும் என்று விஜய் கூறியுள்ளார். இந்நிலையில் தவெக சார்பில் மார்ச் 27 ஆம் தேதி (நாளை மறுநாள்) மாமல்லபுரத்தில் வேட்பாளர் அறிமுக கூட்டம் நடைபெறவுள்ளதாக கூறப்படுகிறது. தவெக வேட்பாளர்களை மேடையில் அறிமுகம் செய்து அந்தக் கட்சியின் தலைவர் விஜய் பேசவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. விஜய் பெரம்பூர் தொகுதியில் போட்டியிடவுள்ளதாக கூறப்பட்டு வருகிறது.இதற்காக பெரம்பூரில் ஏசியுடன் கூடிய தவெக தேர்தல் அலுவலகம் அமைக்கப்பட்டு வருகிறது. அதனை நாளை மறுநாள்.. அதாவது 27 ஆம் தேதி விஜய் திறந்து வைக்கவுள்ளதாக கூறப்படுகிறது. அதனை தொடர்ந்து மார்ச் 28 ஆம் தேதி முதல் பிரச்சாரம் செய்யவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. விஜய் பிரச்சாரம் செய்வது தொடர்பாக அந்தக் கட்சியின் மூத்த நிர்வாகி செங்கோட்டையன், உள்துறை செயலாளரை சந்தித்து ஆலோசனை நடத்தியுள்ளார்.மொத்தம் 20 நாட்கள் பிரச்சாரம் செய்யும் விஜய், தினசரி 5-6 இடங்களில் பிரச்சாரம் செய்து பேசவுள்ளதாக சொல்லப்படுகிறது. தவெகவின் நட்சத்தி பேச்சாளர்கள் பட்டியலும் வெளியாகியுள்ளது. விஜய், புஸ்ஸி ஆனந்த், செங்கோட்டையன், ஆதவ் உள்ளிட்ட 20 நிர்வாகிகளின் பெயர்கள் வெளியிடப்பட்டுள்ளன. பெரம்பூரில் இருந்து தமிழகம் முழுவதும் பயணம் செய்து பிரச்சாரம் மேற்கொள்வார் என கூறப்படுகிறது .

பாமக சார்பில் 3 வேட்பாளர்களை அறிவித்தார் அன்புமணி

0

தமிழ்நாடு சட்டப் பேரவை தேர்தலில் பாமக சார்பில் போட்டியிடும் மூன்று பேர் கொண்ட முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை அந்த கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் எம்.பி. இன்று வெளியிட்டுள்ளார்.

வரும் ஏப்ரல் 23-ம் தேதி தமிழ்நாடு சட்டப் பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஒரே கட்டமாக நடைபெறுகிறது. இதற்கான வேட்பு மனுத்தாக்கல் வரும் மார்ச் 30- ஆம் தேதி தொடங்குகிறது. இதனால் அரசியல் கட்சிகள் தங்கள் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை அறிவித்து வருகின்றனர்.அந்த வகையில் அதிமுக சார்பில் போட்டியிடும் 23 பேர் கொண்ட முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை அந்த கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று காலை வெளியிட்டார். அதைத் தொடர்ந்து, சென்னை எம்.ஜி.ஆர். மாளிகையில் இன்று (மார்ச் 25) அதிமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள பாஜக, அமமுக, தமாகா, பாமக, புரட்சிப் பாரதம் உள்ளிட்ட கட்சிகளுக்கான தொகுதிகளை எடப்பாடி பழனிசாமி, கூட்டணி கட்சித் தலைவர்களின் முன்னிலையில் அறிவித்திருந்தார்.இதில் அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு சேலம் மேற்கு உள்ளிட்ட 18 சட்டமன்றத் தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில், பாமக சார்பில் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடும் மூன்று பேர் கொண்ட முதல் வேட்பாளர் பட்டியலை அந்த கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் எம்.பி. இன்று வெளியிட்டார்.அதன்படி, கீழ்வேளூர் சட்டப் பேரவை தொகுதியில் பாமகவின் பொதுச் செயலாளர் வடிவேல் இராவணன், அம்பத்தூர் சட்டப் பேரவை தொகுதியில் நகர்மன்ற முன்னாள் தலைவரும், கட்சியின் மாநில துணைத் தலைவருமான சி.ஹெச். சேகர், செஞ்சி சட்டப் பேரவை தொகுதியில் பாமக இளைஞரணித் தலைவரும், முன்னாள் எம்எல்ஏவுமான கணேஷ் குமார் ஆகியோர் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.

அதிமுக கூட்டணியில் யாருக்கு எந்த தொகுதி? முழு பட்டியலை வெளியிட்டார் எடப்பாடி பழனிசாமி

0

அதிமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள பாஜக, பாமக, அமமுக உள்ளிட்ட கட்சிகள் போட்டியிடும் தொகுதிகளின் பட்டியலை அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று வெளியிட்டுள்ளார்.

தமிழ்நாட்டில் சட்டப் பேரவை தேர்தல் வரும் ஏப்ரல் 23 ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில், அதிமுக தனது கூட்டணி கட்சிகளுடன் கடந்த சில வாரங்களாக தொகுதி பங்கீட்டுப் பேச்சுவார்த்தை நடத்தி வந்தது. அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி சில முறை டெல்லி சென்றும் கூட்டணி தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா உள்ளிட்டவர்களிடம் ஆலோசனை நடத்தியிருந்தார். இந்நிலையில், அதிமுக கூட்டணியில் முக்கிய கட்சிகளான பாஜக, பாமக, அமமுக ஆகிய கட்சிகளுடனான தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நேற்று முன்தினம் நிறைவடைந்ததையடுத்து, அக்கட்சிகளுக்கான இடங்கள் அறிவிக்கப்பட்டன.

அதன்படி, பாஜக 27 , பாமக 18, அமமுக 11, தமாக 5, ஐஜேகே 2, தமமுக 1 என தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.

அதிமுக சார்பாக போட்டியிடும் 23 வேட்பாளர்கள் கொண்ட முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை இன்று காலை அதிமுக அறிவித்திருந்து. இதில் எடப்பாடி தொகுதியில் மீண்டும் களமிறங்குகிறார் இபிஎஸ். மேலும், வேப்பனஹள்ளியில் கே.பி. முனுசாமி, திண்டுக்கல் தொகுதியில் திண்டுக்கல் சீனிவாசன், நத்தம் தொகுதியில் நத்தம் விஸ்வநாதன், கரூர் தொகுதியில் எம்.ஆர். விஜயபாஸ்கர், விராலிமலை தொகுதியில் சி. விஜயபாஸ்கர், ராயபுரம் தொகுதியில் ஜெயக்குமார், சிவகாசி தொகுதியில் முன்னாள் அமைச்சர் கே.டி. ராஜேந்திர பாலாஜி ஆகியோர் போட்டியிடுகின்றனர்.இதன் தொடர்ச்சியாக அதிமுக தலைமையிலான கூட்டணியில் இடம் பெற்றுள்ள கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ள தொகுதிகளின் விவரங்களை எடப்பாடி பழனிசாமி இன்று அறிவித்துள்ளார். சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுகவின் தலைமையில் அலுவலகத்தில் இந்த நிகழ்வு நடைபெற்றது. அப்போது, கூட்டணிக் கட்சித் தலைவர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.2026 சட்டமன்ற தேர்தலில் கூட்டணி கட்சிகளுக்கு 65 தொகுதிகளை அதிமுக ஒதுக்கிய நிலையில், 169 தொகுதிகளில் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய இபிஎஸ், “அதிமுக போட்டியிடும் தொகுதிகள் விவரம் விரைவில் அறிவிக்கப்படும்” என்றார்.

பெரம்பூர் தொகுதியில் விஜய் போட்டியிடுவதாக கூறப்படும் நிலையில், அங்கு பாமகவுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது ஏன் என்ற கேள்விக்கு பதிலளித்த அவர், “கூட்டணி அமைத்த பிறகு எல்லாம் சமமாக தான் பார்க்க வேண்டும். சிறியவர், பெரியவர்கள் எல்லாம் இல்லை. எல்லாம் கட்சிக்கும் பலம் உள்ளது. எல்லாம் கட்சியும் சேர்ந்தால் தான் வெற்றி பெற முடியும். 234 தொகுயிலும் எங்கள் வேட்பாளர்கள் வெற்றி பெறுவார்கள். அதிமுக மீண்டும் ஆட்சி அமைக்கும்” என்றார்.

காவல்துறையினர் 9 பேரும் குற்றவாளிகள்: மதுரை நீதிமன்றம் தீர்ப்பு

0

தமிழ்நாட்டையே உலுக்கிய சாத்தான்குளம் தந்தை-மகன் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட 9 பேரும் குற்றவாளிகள் என மதுரை முதலாவது கூடுதல் அமர்வு நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது.

கரோனா பெருந்தொற்று ஊரடங்கு அமலில் இருந்த கடந்த 2020 ஜூன் மாதம் 19ஆம் தேதி, சாத்தான்குளம் பகுதியில் இரவு நேரத்தில் மொபைல் கடையை திறந்து வைத்திருந்ததாக கூறி ஜெயராஜ் (58) மற்றும் அவருடைய மகன் பென்னிக்ஸ் (31) உள்ளிட்டோரை விசாரணைக்காக சாத்தான்குளம் போலீசார் காவல் நிலையம் அழைத்து சென்றனர். காவல் நிலையத்தில் அவர்களை கொடூரமாக தாக்கிய போலீசார், ஜூன் 20 ஆம் தேதி கோவில்பட்டி கிளைச் சிறையில் அடைத்தனர்.

இதற்கிடையே காவல் நிலையத்தில் போலீசார் நடத்திய தாக்குதல் காரணமாக ஜூன் 22 ஆம் தேதி மாலை பென்னிக்ஸிற்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டு கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அன்று இரவே அவர் உயிரிழந்தார். இதைத் தொடர்ந்து 23ஆம் தேதி அதிகாலை ஜெயராஜும் மருத்துமனையில் உயிரிழந்தார். இந்த சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மேலும், காவல் துறையில் நிலவும் காவல் மரணங்கள் தொடர்பாக இந்தியா முழுவதும் பெரிய அளவில் விவாதம் எழுந்தது. இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக மதுரை உயர் நீதிமன்ற கிளை தாமாக முன்வந்து இந்த வழக்கை விசாரணைக்கு எற்றது. இந்த கொடூர கொலை சம்பவத்தின் போது சாத்தான்குளம் காவல் நிலையத்தில் பணியாற்றிய பெண் காவலர் ஒருவர், காவல் நிலையத்தில் ஜெயராஜ்-பென்னிக்ஸ் மீது நடத்தப்பட்ட தாக்குதல் தொடர்பாக நீதிபதியிடம் சாட்சியம் அளித்தார். இந்த வழக்கில் இது மிக முக்கிய திருப்புமுனையாக அமைந்தது.மேலும், இந்த வழக்கு முதலில் சிபிசிஐடி வசம் ஒப்படைக்கப்பட்டு, பின்னர் சிபிஐக்கு மாற்றப்பட்டது. சிபிஐ இந்த வழக்கை விசாரித்து வந்த நிலையில், இந்த வழக்கில் தொடர்புடைய சாத்தான்குளம் காவல் ஆய்வாளர் ஸ்ரீதர், எஸ்.எஸ்.ஐ பால்துரை, உதவி ஆய்வாளர்கள் பாலகிருஷ்ணன், ரகு கணேஷ், தலைமை காவலர் முருகன் உள்ளிட்ட 10 காவலர்கள் மீது கொலை வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இவர்களில், எஸ்.எஸ்.ஐ பால்துரை கரோனா பாதிப்பால் உயிரிழந்ததால், தற்போது வழக்கில் எஞ்சிய 9 காவலர்கள் மீதான வழக்கு விசாரணை மதுரை முதலாவது கூடுதல் அமர்வில் நடைபெற்று வந்தது. மதுரை மாவட்ட முதலாவது கூடுதல் நீதிமன்ற நீதிபதி ஜி.முத்துக்குமரன் முன்னிலையில், சுமார் ஆறு ஆண்டுகளாக இந்த விசாரணை நடைபெற்றது. சிபிஐ தரப்பில் 50-க்கும் மேற்பட்ட சாட்சிகள் விசாரிக்கப்பட்டு, பல்வேறு ஆவணங்கள் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டன. இதனிடையே, சிபிஐ தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையில், தந்தை-மகன் இருவரும் காவல் துறையினரால் மிகக் கொடூரமான முறையில் சித்திரவதை செய்யப்பட்டதே அவர்களின் மரணத்திற்கு மிக முக்கிய காரணம் என்று உறுதிப்படுத்தப்பட்டிருந்தது. இந்நிலையில், ஆறு ஆண்டுகளாக நடைபெற்று வந்த இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. இதில், குற்றஞ்சாட்டப்பட்ட 9 பேரும் குற்றவாளிகள் என நீதிபதி முத்துக்குமரன் தீர்ப்பளித்தார். குற்றவாளிகளுக்கான தண்டனை விவரம் மார்ச் 30 -ம் தேதி அறிவிக்கப்படும் என்றும் நீதிபதி தெரிவித்தார்.

ரூ.75 கோடி மதிப்பிலான பணம், பொருட்கள் பறிமுதல்..!- தேர்தல் ஆணையம்

0

தமிழகத்தில் இதுவரை உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.75 கோடி மதிப்பிலான பணம் மற்றும் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

சட்டமன்றத் தேர்தல் ஏப்ரல் 23ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து, தேர்தல் நடத்தை விதிகளும் அமலுக்கு வந்துள்ளது. இதனால், ஒவ்வொரு மாவட்டங்களில் உள்ள சட்டமன்றத் தொகுதிகளிலும் பறக்கும் படையினர், நிலை கண்காணிப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டு தீவிர சோதனை நடைபெற்று வருகிறது.

குறிப்பாக, வாக்காளர்களுக்கு பணம் அல்லது பரிசுப் பொருள் விநியோகம் செய்யப்படுவதை தடுக்கும் நோக்கில், ரூ.50 ஆயிரத்திற்கு மேல் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்படும் பணம் பறிமுதல் செய்யப்பட்டு வருகிறது. அதன்படி, தமிழ்நாட்டில் தற்போது வரை ரூ.75 கோடி மதிப்பிலான பணம் மற்றும் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

இதுதொடர்பாக தேர்தல் ஆணையம் வெளியிட்ட அறிக்கையில், ‘தேர்தல் களத்தில் போட்டியிடும் அரசியல் கட்சியினை சார்ந்த வேட்பாளர்கள் மற்றும் சுயேட்சை வேட்பாளர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் சமமான சூழலை உருவாக்கித் தர வேண்டும் என்ற நோக்கில் வேட்பாளர்களின் தேர்தல் செலவினங்கள் உன்னிப்பாகக் கண்காணிக்கப்பட்டு, பதிவு செய்யப்பட்டு வருகிறது.

ஒரு வேட்பாளர் சட்டப்பேரவைத் தேர்தலின்போது, அதிகபட்சம் ரூ.40 லட்சம் வரை மட்டுமே தேர்தல் சம்பந்தமான பணிகளுக்காக செலவினம் மேற்கொள்ள இயலும். வேட்பாளரின் தேர்தல் செலவினங்களை கண்காணிப்பதற்காக, பல்வேறு தேர்தல் செலவின கண்காணிப்புக் குழுக்கள் மாவட்ட அளவில் அமைக்கப்பட்டு, மாவட்ட தேர்தல் அலுவலரால் கண்காணிக்கப்பட்டு வருகிறது.234 சட்டமன்றத் தொகுதிகளிலும் பறக்கும் படை, நிலை கண்காணிப்புக் குழுக்கள் மட்டுமில்லாமல் 25 துறை சார்ந்த கண்காணிப்புக் குழுக்களும் இடம் பெற்றுள்ளன. இதில் வருமானவரித்துறை, அமலாக்கத்துறை, சுங்கத்துறை உள்ளிட்ட துறைகளும் உள்ளது.

தற்போது 234 தொகுதிகளிலும், தொகுதிக்கு தலா 9 பறக்கும் படைகள், 9 நிலை கண்காணிப்புக் குழுக்கள் என்ற விகிதத்தில், தமிழ்நாடு முழுவதும் 2,160 பறக்கும் படைகள், 2,160 நிலை கண்காணிப்புக் குழுக்கள் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனர்.அந்த வகையில், தேர்தல் நடத்தை விதிமுறைகள் வந்த பிறகு தமிழகத்தில் இதுவரை ரூ.23 கோடியே 74 லட்சம் ரொக்க பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அதேபோல, ரூ.23 கோடியே 19 லட்சம் மதிப்பிலான தங்கம் மற்றும் இதர நகைகள், ரூ.61 லட்சம் மதிப்பிலான மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

மேலும், ரூ.5 கோடியே 63 லட்சம் மதிப்பிலான கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்கள், ரூ.21 கோடியே 96 லட்சம் மதிப்பிலான இலவச பொருட்கள் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் என மொத்தமாக ரூ.75 கோடியே 3 லட்சம் மதிப்பிலான பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது’ என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாம் தமிழர் கட்சி தேர்தல் அறிக்கை.. அன்பான சர்வாதிகார சீமான் ..!

0

நாம் தமிழர் கட்சியின் தேர்தல் அறிக்கை 49 பிரிவுகளில் அந்தக் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ளார். அந்தஅறிக்கையில் தன்னலமற்ற, அன்பான சர்வாதிகார ஆட்சி முறை கொண்டுவரப்படும்.. ரயில்வே துறையை மாநில அரசுக்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும்.. 3 மரம் நட்டு, ஒரு மரம் வெட்டு என சட்டம் கொண்டுவரப்படும்.. தமிழகத்தில் உச்ச நீதிமன்ற கிளை கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும் என்பது உள்ளிட்ட பல்வேறு வாக்குறுதிகள் இடம் பெற்றுள்ளன.கடந்த முறை நாடாளுமன்ற தேர்தலில் நாம் தமிழர் கட்சி சுமார் 8 சதவீதத்திற்கு மேல் வாக்குகளை வாங்கி பெரிய அரசியல் கட்சிகளைதிரும்பி பார்க்க வைத்தது. முன்னதாக 2016 சட்டமன்றத் தேர்தலில் 1.1% வாக்குகளைப் பெற்றிருந்த அக்கட்சி, 2021-ல் அதை 6.58%-ஆக உயர்த்தி, தமிழ்நாட்டு அரசியலில் ஒரு தவிர்க்க முடியாத சக்தியாக மாறியது. அக்கட்சியின் சார்பாக 234 தொகுதிகளிலும் 117 ஆண்கள் மற்றும் 117 பெண்கள் எனச் சமமாக வேட்பாளர்கள் நிறுத்தப்பட்டனர். கடந்த 2021 தேர்தலில் அக்கட்சி ‘கரும்பு விவசாயி’ சின்னத்தில் போட்டியிட்டது. சுமார் 30,41,717 (30.4 லட்சம்) வாக்குகள் பெற்றது. தி.மு.க மற்றும் அ.தி.மு.க கூட்டணிகளுக்குப் பிறகு, தனித்துப் போட்டியிட்டு அதிக வாக்குகளைப் பெற்ற கட்சிகளில் நாம் தமிழர் கட்சி மூன்றாவது இடத்தைப் பிடித்தது.அதேநேரம் 2024 நாடாளுன்ற தேர்தலில் நாம் தமிழர் கட்சி சுமார் 35,60,485 (35.6 லட்சம்) வாக்குகள் பெற்றது. வாக்கு சதவீதம்: 8.19% ஆகும். இது 2019 தேர்தலில் அவர்கள் பெற்ற 3.9 சதவீதத்தை விட இரண்டு மடங்கு அதிகம் ஆகும்.. பல தொகுதிகளில் 3-வது மற்றும் 4-வது இடத்தைப் பிடித்தனர். 2021 சட்டமன்றத் தேர்தலில் 6.58% ஆக இருந்த வாக்கு சதவீதம், 2024-ல் 8.19% ஆக உயர்ந்தது. ஈரோடு, கன்னியாகுமரி, நாகப்பட்டினம், திருச்சி போன்ற பல தொகுதிகளில் பா.ஜ.க மற்றும் அ.தி.மு.க கூட்டணிகளுக்குப் போட்டியாக மூன்றாவது இடத்தைப் பிடித்து ஆச்சரியப்படுத்தினர். குறிப்பாக நாகப்பட்டினம் தொகுதியில் அக்கட்சியின் வேட்பாளர் சுமார் 13.5% வாக்குகளைப் பெற்றார். இது அந்தத் தேர்தலில் நாம் தமிழர் கட்சி ஒரு தொகுதியில் பெற்ற அதிகபட்ச சதவீதமாகும். ‘கரும்பு விவசாயி’ சின்னம் கிடைக்காத நிலையிலும், கடைசி நேரத்தில் ஒதுக்கப்பட்ட ‘மைக்’சின்னத்தை பிரபலப்படுத்தி அதிக வாக்குகள் பெற்றிருந்தார்கள்.இந்நிலையில் 2026 சட்டசபை தேர்தலில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் நாம் தமிழர் கட்சி வழக்கம் போல் தனித்துப் போட்டியிடுகிறது. தமிழகத்தில் 234 தொகுதிகளிலும் புதுச்சேரி பிராந்தியத்தில் உள்ள 23 தொகுதிகளிலும், காரைக்கால் பிராந்தியத்தில் உள்ள 5 தொகுதிகளிலும் சேர்த்து 28 தொகுதிகளுக்கு வேட்பாளர்களை சீமான் முன்னதாக அறிவித்துவிட்டார். சொந்த மண்ணிலிருந்து குரல் கொடுக்க விரும்புவதாக கூறிய சீமான், வரும் சட்டபேரவைத் தேர்தலில் காரைக்குடித் தொகுதியில் போட்டியிடப்போவதாக கூறினார். இதனிடையே நாம் தமிழர் கட்சியின் தேர்தல் அறிக்கையை அந்தக் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று வெளியிட்டார். சென்னை கிண்டியில் உள்ள தனியார் ஹோட்டலில் நடந்த நிகழ்ச்சியில், தமிழ், தமிழர்களுக்கான முக்கியத்துவம் எப்படி இருக்க வேண்டும் என்று பேசிய சீமான், தேர்தல் வாக்குறுதிகளை வெளியிட்டார். அதன்படி, தன்னலமற்ற அன்பான சர்வாதிகார ஆட்சி கொண்டுவரப்படும். வரி விதிப்பில் மாற்றம் கொண்டுவரப்படும்..தமிழகத்தில் உச்ச நீதிமன்ற கிளை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். பல கோடி பனைத்திட்டம் என்ற பெயரில் தமிழ்நாடு முழுவதும் பனைமரம் நடப்படும். சிற்றூர்களில் பசுஞ்சோலை திட்டம் கொண்டுவரப்படும், 3 மரம் நட்டு, ஒரு மரம் வெட்டு என்ற திட்டம் கொண்டுவரப்படும்.. சிபா ஆதித்தனார் பெயரில் விளையாட்டு பல்கலைக்கழகம் அமைக்கப்படும். சென்னை மட்டுமின்றி திருச்சி, கோவை, மதுரை, கன்னியாகுமரியை தலைநகரமாக்குவோம்.

திருச்சி நிர்வாக தலைநகரமாக்கப்படும். சென்னை தொழில்நுட்ப தலைநகர் ஆக்கப்படும். தலைமை செயலகம், சட்டமன்றம் திருச்சிக்கு மாற்றப்படும்.மொழி, கலை, பண்பாட்டு தலைநகரமாக மதுரை இருக்கும். தண்ணீர் வணிகத்திற்கு தடை விதிப்போம். அரசின் சார்பில் இலவச தூய குடிநீர் வழங்குவோம்.. பெண்களுக்கு சட்டமன்றம், நாடாளுமன்றத்தில் தனி தொகுதிகள் ஒதுக்கப்படும்” உள்பட பல்வேறு வாக்குதிகளை சீமான் வெளியிட்டுள்ளார்.

இந்த முறை பூத் ஸ்லிப் கிடையாது – புதிய மாற்றத்தை அறிவித்த தேர்தல் ஆணையம்…

0

நடைபெறவுள்ள சட்டப் பேரவை தேர்தலில் வாக்காளர்களுக்கு வழங்கப்படும் பூத் ஸ்லிப் என அழைக்கப்படும் வாக்காளர் சீட்டில் இந்த முறை புகைப்படம் இடம் பெறாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதற்கு பதிலாக வாக்காளர் தகவல் சீட்டு அச்சிட்டு வழங்கப்படும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் வரும் ஏப்ரல் 23-ம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், வாக்காளர்களுக்கு வழங்கப்படும் வாக்காளர் சீட்டில் (பூத் ஸ்லிப்) புதிய மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ளது. அதன்படி, இந்த முறை வழங்கப்படும் வாக்காளர் சீட்டில் புகைப்படம் இடம்பெறாது எனவும், வாக்குச் சாவடியின் பெயர், வாக்குப் பதிவு நாள், நேரம் போன்றவை இடம் பெற்றிருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இந்த சீட்டுகள் வாக்காளர்களுக்கு மாவட்ட தேர்தல் அலுவலரால் வாக்குப் பதிவுக்கு 5 நாட்களுக்கு முன்னர் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. வாக்குச் சாவடியில் வாக்காளர் தகவல் சீட்டு அடையாளத்தை மெய்ப்பிப்பதற்கான ஆவணமாக ஏற்றுக் கொள்ளப்படாது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து தேர்தல் ஆணையம் வெளியிட்ட அறிவிப்பில், ”2026-ம் ஆண்டிற்கான சட்டமன்றப் பொதுத் தேர்தலில் வாக்காளர் புகைப்பட அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ள அனைத்து வாக்காளர்களும், அவர்கள் வாக்களிப்பதற்கு முன்னர், வாக்குச்சாவடியில் தங்கள் அடையாளத்தை மெய்ப்பிப்பதற்காக வாக்காளர் புகைப்பட அடையாள அட்டையை அளிக்க வேண்டும் என இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

வாக்காளர் புகைப்பட அடையாள அட்டையை அளிக்க இயலாத வாக்காளர்கள், அவர்களின் அடையாளத்தை மெய்ப்பிப்பதற்காக 12 விதமான அடையாள ஆவணங்களில் ஏதேனும் ஒன்றை காண்பிக்கலாம்” என இந்திய தேர்தல் ஆணையம் ஆணையிட்டுள்ளது.

ஆதார் அட்டை
தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்தின் பணி அடையாள அட்டை
புகைப்படத்துடன் கூடிய வங்கி / அஞ்சலக கணக்குப் புத்தகம்
தொழிலாளர் நல அமைச்சகத் திட்டத்தின்கீழ் வழங்கப்பட்ட மருத்துவ காப்பீட்டு அட்டை/ ஆயுஷ்மான் பாரத் மருத்துவ காப்பீட்டு அட்டை
ஓட்டுநர் உரிமம்
வருமான வரி நிரந்தர கணக்கு எண் அட்டை (PAN Card)
தேசிய மக்கள்தொகை பதிவேட்டின்கீழ் இந்திய தலைமைப் பதிவாளரால் வழங்கப்பட்ட திறனட்டை
இந்திய கடவுச்சீட்டு
புகைப்படத்துடன் கூடிய ஓய்வூதிய ஆவணம்
மத்திய/மாநில அரசுகள்/பொதுத் துறை நிறுவனங்கள்/ வரையறுக்கப்பட்ட பொது நிறுவனங்களின் தொழிலாளர்களுக்கு வழங்கப்பட்ட புகைப்படத்துடன் கூடிய பணி அடையாள அட்டை
பாரளுமன்ற/சட்டமன்ற/சட்டமேலவை உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்டுள்ள அடையாள அட்டை மற்றும்
இந்திய அரசின் சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகத்தால் வழங்கப்பட்ட இயலாமைக்கான தனித்துவமான அடையாள அட்டை களை காண்பிக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஒரு வாக்காளர் வேறொரு சட்டமன்றத் தொகுதியின் வாக்காளர் பதிவு அதிகாரியால் வழங்கப்பட்ட அடையாள அட்டையை வைத்திருந்தால் அந்த அடையாள அட்டையையும் இந்திய தேர்தல் ஆணையம் குறிப்பிடும் ஆவணமாகப் பயன்படுத்தலாம். ஆனால், அந்த வாக்காளருடைய பெயர் அந்த வாக்குச்சாவடிக்குரிய வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றிருக்க வேண்டும்.

வாக்காளர் புகைப்பட அடையாள அட்டை அல்லது இந்திய தேர்தல் ஆணையத்தால் வரையறுக்கப்பட்ட மேற்கூறிய ஏதாவது ஒரு அடையாள ஆவணம் வைத்திருப்பதால் மட்டுமே ஒரு வாக்காளர் தனது வாக்கைச் செலுத்தி விட முடியாது. அவருடைய பெயர் வாக்குச் சாவடிக்கு அனுப்பப்பட்ட வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றிருந்தால் மட்டுமே அவர் வாக்குரிமையைச் செலுத்த தகுதியுடையவர் ஆவார் என்று தெளிவுபடுத்தப்படுகிறது.

1950-ஆம் ஆண்டு மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் பிரிவு 20A-ன்கீழ் பதிவு பெற்றுள்ள வெளிநாடு வாழ் இந்தியர்கள், அவர்களின் கடவுச்சீட்டிலுள்ள விவரங்களை அடிப்படையாகக் கொண்டு, அவர்களின் அசல் கடவுச்சீட்டின் அடிப்படையில் மட்டுமே (வேறெந்த அடையாள ஆவணமும் அல்லாது) அவர்களின் அடையாளம் வாக்குச்சாவடியில் மெய்ப்பிக்கப்பட வேண்டும் என்றும் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

விஜய்யுடன் பேச்சுவார்த்தை நடத்தவில்லை; ஆதவ் அர்ஜுனா யார் என்றே தெரியாது – நயினார் பதில்

0

விஜய்யுடன் எந்த பேச்சுவார்த்தையும் நடத்தவில்லை. ஆதவ் அர்ஜுனா யார் என்று எனக்கு தெரியாது என பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.

நெல்லையில் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவரிடம் பல்வேறு கேள்விகள் முன்வைக்கப்பட்டன. தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை குறித்து கேட்டதற்கு பியூஸ் கோயல் வரும்போது கூட்டணி பேச்சுவார்த்தை நடைபெறும். அவர் இன்னும் ஓரிரு நாட்களில் வருவதற்கான வாய்ப்புகள் உள்ளன. எனவே தொகுதி பங்கீடு குறித்து பின்னர் அறிவிக்கப்படும். தேர்தலுக்கு இன்னும் நாட்கள் உள்ளன. வேட்பு மனு தாக்கல் செய்யவும் 10 நாட்கள் அவகாசம் உள்ளது” என்றார்.

ED, IT ஆகியவற்றை வைத்து மத்திய அரசு மிரட்டுவதாக எழும் புகார்கள் குறித்து எழுப்பிய கேள்விக்கு, “அமலாக்கத்துறை, வருமானத்துறை போன்றவை சுதந்திரமான அமைப்பு. அவற்றை வைத்து மிரட்ட வேண்டிய அவசியம் எங்களுக்கு கிடையாது. அமலாகத்துறை விஷயங்களில் சிக்கியவர்கள் மீதுதான் விசாரணை நடத்தப்படும். கடந்த தேர்தலுக்கு முன்பிருந்தே அமலாக்கத்துறை விசாரணை நடக்கும் அனைவர் மீதும் வழக்கு உள்ளது. விஜய் கட்சி ஆரம்பிப்பதற்கு முன்னாலிருந்தே திமுக அமைச்சர்கள், விஜய் உள்ளிட்டோர் மீது அமலாக்கத்துறை, வருமானவரித்துறை வழக்குகள் உள்ளன. 10 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே அவர்கள் மீது வழக்கு இருக்கும் சூழலில், இப்போது அதை வைத்து நாங்கள் மிரட்டுவதாக சொன்னால் சரியானதாக இருக்குமா?” என்று கேள்வி எழுப்பினார்.
தொடர்ந்து விஜய்யுடன் கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை நடத்தியதாக பரவிய வதந்திகளுக்கு விளக்கமளித்தார் நயினார் நாகேந்திரன். “தமிழக பாஜக தலைவர் என்ற முறையில் நீங்கள் சொல்லும் யாருடனும் நாங்கள் பேச்சுவார்த்தை நடத்தவில்லை. விஜய் கட்சியிலிருந்தும் எங்களிடம் பேச்சுவார்த்தை நடத்தவில்லை” என்று கூறினார்.

80 தொகுதிகள், துணை முதல்வர் போன்ற ஆஃபர்கள் கொடுப்பதாக சொன்னதாக ஆதவ் அர்ஜுனா சொல்கிறாரே என கேட்டதற்கு, “ஆதவ் அர்ஜுனா என்பவர் யார் என்றே தெரியாது” என்றார்.ஜனநாயகன்’ படத்திற்கு நெருக்கடி கொடுப்பது பாஜக தான் என்று பரவும் செய்திகள் குறித்து கேட்டபோது, “மத்திய அரசின் அமைப்புகளை நாங்கள் பயன்படுத்த வேண்டிய அவசியம் இல்லை. அவை அனைத்தும் சுதந்திரமான அமைப்பு. அதில் சம்பந்தப்பட்டவர்களிடம் மட்டுமே விசாரணை நடத்தப்படும்” என்று பதிலளித்தார். தேசிய ஜனநாயக கூட்டணியின் தேர்தல் பரப்புரை குறித்த கேள்விக்கு, “தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டிருக்கிறது. பிரதமர் மோடி கன்னியாகுமரி மற்றும் கோயம்புத்தூர் பகுதிகளுக்கு வரவுள்ளார். அவர் வரும் தேதி இன்னும் முடிவு செய்யப்படவில்லை. உள்துறை அமைச்சர் அமித்ஷா, பாஜகவின் தேசிய தலைவர் நிதின் நபீன் என அகில இந்திய தலைவர்கள் பலரும், ஆந்திர துணை முதலமைச்சர் பவன் கல்யாண் போன்றோரும் தேர்தல் பரப்புரைக்காக வரவுள்ளனர்” என்றார்.

திமுக கூட்டணி கட்சிகளின் தொகுதி பங்கீடு குறித்து கேட்டதற்கு, “திமுக கூட்டணி கட்சிகளின் சீட்டு குறைக்கப்பட்டுள்ளதாக அனைவரும் சொல்கிறார்கள். திமுக கூட்டணி கட்சிகளுக்கான சீட்டை மக்களும் குறைப்பார்கள். பாஜக சாதி, மதத்தை சார்ந்துள்ள கட்சி கிடையாது. மதம் சார்ந்த கட்சி என்றால் அது திமுக தான். அதனை மறுப்பு இல்லாமல் பகிரங்கமாக சொல்ல முடியும். இந்துக்கள் வாக்குகள் எங்களுக்கு வேண்டாம் என முதலமைச்சர் வெளிப்படையாகவே சொல்லியுள்ளார். இஸ்லாமிய, கிறிஸ்தவ அமைப்புகளின் நிகழ்வுகளில் நேரடியாக பங்கேற்கிறோம். இந்த நல்ல நாளில் அனைவருக்கும் யுகாதி வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறோம். சுபகாஞ்சலூ யுகாதி சால சந்தோசம்” என தெலுங்கில் வாழ்த்து தெரிவித்தார். புதிய கட்சிகள் உங்கள் கூட்டணிக்கு வருகிறதா என்ற கேள்விக்கு, “இப்போதுதான் பதில் சொல்லியுள்ளேன். சால சந்தோசம்” என கூறிவிட்டு சென்றார்.

கூட்டணி கட்சிகளுக்கான தொகுதி பங்கீடு இறுதி செய்யப்படுமா? திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் ஆலோசனை

0

திமுக தலைமையகமாக சென்னை அண்ணா அறிவாலையத்தில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் இன்று (மார்ச் 16) நடைபெறும் திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் கூட்டணி கட்சிகளுக்கான தொகுதிப் பங்கீட்டை இறுதி செய்யப்படுவது குறித்து முக்கிய முடிவு எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

2026 சட்டமன்றத் தேர்தல் வரும் ஏப்ரல் 23-ம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ள சூழலில், அனைத்து கட்சிகளும் தேர்தல் மற்றும் பிரச்சாரத்திற்கான பணிகளை தீவிரப்படுத்தியுள்ளன. அந்த வகையில், ஆளும் கட்சியான திமுக தேர்தல் பணிகள், தேர்தல் பிரச்சாரம் உள்ளிட்ட பல்வேறு பணிகள் தொடர்பாக ஆலோசனை நடத்தி வருகிறது. அதன் ஒரு பகுதியாக இன்று (மார்ச் 16) சென்னை தேனாம்பேட்டையில் உள்ள திமுக தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற்று வருகிறது.

தலைவர் மு.க ஸ்டாலின் தலைமையிலும், பொதுச்செயலாளர் துரைமுருகன் முன்னிலையில் நடைபெற்ற மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், பொருளாளர் டி.ஆர். பாலு, முதன்மைச் செயலாளர் கே.என். நேரு, துணை பொது செயலாளர்கள் கனிமொழி, பொன்முடி, ஆ.ராசா, ஐ.பெரியசாமி, திருச்சி சிவா, அந்தியூர் செல்வராஜ், அமைப்பு செயளாலர் ஆர்.எஸ் பாரதி, அமைச்சர்கள், சட்டமன்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள், தமிழ்நாடு முழுவதும் இருந்து 77 மாவட்ட செயலாளர்கள் பங்கேற்றுள்ளனர்.

கடந்த 2021 சட்டமன்ற தேர்தலில் திமுக 173 இடங்களில் போட்டியிட்டு, 133 இடங்களில் வெற்றி பெற்றிருந்தது. வரும் சட்டமன்றத் தேர்தலில் கூட்டணி கட்சிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால் அதிகப்படியான தொகுதிகள் கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், அனைத்து மாவட்டச் செயலாளர்கள் கட்சி பாகுபாடு இன்றி தேர்தல் பணிகளில் ஈடுபட வேண்டும் என்பது தொடர்பான அறிவுரைகள் இந்த கூட்டத்தின் வாயிலாக வழங்கப்பட இருப்பதாக கூறப்படுகிறது. மேலும் இந்த கூட்டத்தில் மாவட்டச் செயலாளர் உடன் மு.க.ஸ்டாலின் உரையாற்றி, மாவட்ட செயலாளர்களின் நிறை குறைகளையும் கேட்டறிய உள்ளார்.நாளை முதல் நேர்காணல்

இதனிடையே, நாளை முதல் திமுக சார்பில் தேர்தலில் போட்டியிடுவதற்கான விருப்பமனு வழங்கியவர்களுக்கு நேர்காணல் நடைபெறவுள்ளது. மேலும், வேட்புமனு தாக்கல் செய்வதற்கு இன்னும் 15 நாட்கள் மட்டுமே உள்ள நிலையில், தேர்தல் தொடர்பாக எத்தகைய பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்பது தொடர்பான முக்கிய முடிவுகள் இந்த கூட்டத்தில் எடுக்கப்படும்.

கூட்டணி தொகுதி பங்கீடு

குறிப்பாக திமுகவின் கூட்டணி உடன்பாடு மற்றும் தொகுதி பங்கீடு இதுவரை இறுதி ஆகாத சூழலில், இந்த கூட்டத்தில் கூட்டணி கட்சிகளுக்கான தொகுதிப்பங்கீடு முழுவதுமாக இறுதி செய்யப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் உடல்நல குறைவால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், உடல்நலம் தேறி இன்றைய தினம் மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் அவர் கலந்து கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

7 மணி நேர விசாரணைக்கு பிறகு வெளியே வந்த விஜய்… டெல்லியில் “ரோடு ஷோ”

0

சிபிஐ அலுவலகத்தில் இருந்து வெளியே வந்த விஜய் சாலையோரம் கூடியிருந்த தவெக தொண்டர்கள் மற்றும் ரசிகர்களுக்கு காரில் நின்றபடி சிரித்த முகத்துடன் கையசைத்து சென்றார்.

கரூரில் கடந்த செப். 27 ஆம் தேதி தவெக தலைவர் விஜய் பரப்புரை மேற்கொண்டார். அப்போது கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் குறித்து விசாரிக்க சிறப்பு புலனாய்வு குழு அமைக்கப்பட்ட நிலையில், உச்ச நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து, சிபிஐ இந்த வழக்கை விசாரித்து வருகிறது. முன்னதாக, கரூர் சம்பவம் குறித்த விசாரணைக்கு ஆஜராக தவெக நிர்வாகிகள் ஆதவ் அர்ஜுனா, ஆனந்த் உள்ளிட்டோருக்கு சிபிஐ சம்மன் அனுப்பி இருந்தது.

அதன்பேரில் டெல்லி சிபிஐ அலுவலகத்தில் அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது. அதன் தொடர்ச்சியாக தவெக தலைவர் விஜய்க்கும் சிபிஐ சம்மன் அனுப்பியது. அதன்படி, கடந்த ஜனவரி மாதம் டெல்லி சிபிஐ அலுவலகத்தில் நடைப்பெற்ற விசாரணைக்கு இரு முறை விஜய் ஆஜராகி இருந்தார். இந்த நிலையில், கடந்த மார்ச் 9 ஆம் தேதி மீண்டும் விசாரணைக்கு ஆஜராக விஜய்க்கு மூன்றாவது முறையாக சிபிஐ சம்மன் அனுப்பியது.அதற்கு விஜய் தரப்பில் இருந்து விசாரணையை 15 நாட்களுக்கு தள்ளி வைக்குமாறும், தேர்தல் பணிகள் காரணமாக விசாரணையை தமிழ்நாட்டில் ஏதேனும் ஒரு அலுவலகத்தில் நடத்திடுமாறும் வலியுறுத்தப்பட்டது. ஆனால், அந்த கோரிக்கைகளை சிபிஐ நிராகரித்துவிட்டது. இதனை தொடர்ந்து சிபிஐ சம்மன் படி, விஜய் இன்று காலை 10 மணி அளவில் டெல்லி சிபிஐ அலுவலகத்தில் ஆஜரானார். அதிகாரிகள் அவரிடம் சுமார் 7 மணி நேரம் வரை விசாரணை நடத்தி உள்ளனர். இதன்பின் மாலை 6 மணி அளவில் சிபிஐ அலுவலகத்தில் இருந்து விஜய் வெளியே வந்தார். அப்போது அலுவலகத்தின் வெளியே காத்திருந்த தவெக தொண்டர்கள் மற்றும் ரசிகர்களுக்கு காரில் நின்றபடி சிரித்த முகத்துடன் கையசைத்து சென்றார். அது தொடர்பான வீடியோ காட்சிகள் இணையத்தில் தற்போது வைரலாகி வருகின்றன.

மேலும், கரூர் விவகாரத்தில் விசாரணைக்கு ஆஜராக, கரூர் திமுக எம்எல்ஏ செந்தில் பாலாஜிக்கும் சிபிஐ சம்மன் அனுப்பி உள்ளது. வரும் மார்ச் 17 ஆம் தேதி அவரும் டெல்லிக்கு செல்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. அண்மையில் இதுகுறித்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய செந்தில் பாலாஜி, ” கரூரில் பாதிக்கப்பட்ட மக்களை மருத்துவமனைக்கு நேரில் சென்று பார்த்து ஆறுதல் கூறினேன். என்னை போல மற்ற அரசியல் கட்சித் தலைவர்களும் அங்கு வந்திருந்தனர். அவர்களுக்கும் சிபிஐ சம்மன் அனுப்புமா? விசாரணை முறையாக நடக்கின்றது என்றால் மருத்துவமனையில் மக்களைச் சந்தித்து ஆறுதல் கூறிய அனைவருக்கும் சிபிஐ சம்மன் வழங்கியிருக்க வேண்டுமே?” என கேள்வி எழுப்பியிருந்தார்.