கடந்த 33 மாதங்களில், தமிழக அரசு பல்வேறு வணிக ஒப்பந்தங்கள் மூலம், சுமார் 8.65 லட்சம் கோடி ரூபாயை ஈர்த்துள்ளது. இதன் காரணமாக, சுமார் 30 லட்சம் புதிய வேலை வாய்ப்புகளை மக்களுக்கு உருவாக்கியுள்ளதாக தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது.
இதுதொடர்பாக மேலும் கூறியிருப்பதாவது:-
2021க்கு பிறகு 44 தொழிற்சாலைகளுக்கு அடிக்கல், 27 தொழிற்சாலைகள் திறப்பு காரணமாகவும் 74,757 பேருக்கு வேலைவாய்ப்பு உருவாக்கப்பட்டுள்ளது. ஒரு மாபெரும் தொழில் புரட்சிக்கு அடித்தளமாக அமைந்துள்ளது. 2030க்குள் தமிழ்நாட்டை 1 ட்ரில்லியன் அமெரிக்க டாலர் பொருளாதார வளர்ச்சி பெற்ற மாநிலமாக மாற்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இந்திய பொருளாதாரத்திற்கு மிக முக்கிய பங்களிக்கும் மாநிலமாக தமிழகத்தை உயர்த்த, திமுக அரசு முனைப்புடன் செயல்படுகிறது. முதலீட்டாளர்களின் முதல் முகவரி தமிழ்நாடு என்று மாநாடு மூலம், ரூ.1,90,803 கோடி முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளன. சிங்கப்பூர், மலேசியா, ஜப்பான் போன்ற வெளிநாட்டு பயணங்கள் மூலம் ரூ.7,441 கோடி முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளன.
ஜனவரி 7,8-ம் தேதிகளில் நடந்த உலக முதலீட்டாளர்கள் மாநாடு மூலம் ரூ.6,64,180 கோடி முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளன. ஸ்பெயின் நாட்டு சுற்றுப்பயணம் மூலம் ரூ.3,440 கோடி முதலீடுகளுக்கு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தானது. இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
கோவை கூடலூர் நகராட்சியில் மத்திய அரசால் அறிவிக்கப்பட்டுள்ள திடக்கழிவு மேலாண்மை திட்டம் புதிய விதிகளின்படி, வீடுகள், நிறுவனங்கள் உள்ளிட்ட அனைத்து கழிவு உருவாக்குபவர்களும் குப்பைகளை உருவாகும் இடத்திலேயே நான்கு வகைகளாகப் பிரித்து ஒப்படைக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
பொதுமக்களிடையே இத்திட்டத்தை நடைமுறைப்படுத்தும் நோக்கில், குறிப்பாக பள்ளி மாணவர்களுக்கு திடக்கழிவு மேலாண்மை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் பிரச்சாரம் நடைபெற்றது. புதிய விதிகளின்படி குப்பைகள் ஈரக்கழிவு, உலர்க்கழிவு, சுகாதாரக் கழிவு மற்றும் சிறப்பு கவனத்துடன் கையாள வேண்டிய கழிவு என நான்கு பிரிவுகளாகப் பிரிக்கப்பட வேண்டும்.
ஈரக்கழிவுகளில் சமையலறைக் கழிவுகள், காய்கறி மற்றும் பழத்தோல்கள், உணவுக் கழிவுகள் உள்ளிட்ட மக்கும் கழிவுகள் அடங்கும். இவை உரமாக்குதல் அல்லது உயிர்வாயு தயாரிப்பு போன்ற முறைகளில் பயன்படுத்தப்படலாம்.
உலர்க்கழிவுகளில் காகிதம், பிளாஸ்டிக், உலோகம், கண்ணாடி உள்ளிட்ட மறுசுழற்சி செய்யக்கூடிய பொருட்கள் அடங்கும்.
சுகாதாரக் கழிவுகளாக பயன்படுத்தப்பட்ட நாப்கின்கள், டயப்பர்கள் உள்ளிட்ட கழிவுகள் தனியாக சேகரிக்கப்பட்டு பாதுகாப்பாக மூடப்பட்டு வழங்கப்பட வேண்டும்.
சிறப்பு கவனக் கழிவுகளில் காலாவதியான மருந்துகள், பேட்டரிகள், பல்புகள், பெயிண்ட் டப்பாக்கள் மற்றும் இதர வீட்டு அபாயகரமான பொருட்கள் அடங்கும். இவை அங்கீகரிக்கப்பட்ட அமைப்புகள் அல்லது குறிப்பிட்ட சேகரிப்பு மையங்கள் மூலம் பாதுகாப்பாக அகற்றப்பட வேண்டும்.
குப்பைகளைத் தரம் பிரிப்பது என்பது தூய்மை பணியாளர்களின் பொறுப்பு மட்டுமல்ல, குப்பை உருவாகும் இடத்திலேயே அதனை முறையாகப் பிரிப்பது ஒவ்வொரு குடிமகனின் பொறுப்பாகும் என்ற கருத்து மாணவர்களுக்கு எடுத்துரைக்கப்பட்டது. மேலும், வீடுகளில் பெற்றோரிடம் குப்பைகளை நான்கு வகைகளாகப் பிரித்து வழங்குமாறு வலியுறுத்துதல், பள்ளி வளாகத்தில் குப்பைகளைத் தரம் பிரித்தல், தேவையற்ற பிளாஸ்டிக் பயன்பாட்டைக் குறைத்தல் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பில் பங்கேற்பது போன்ற நடவடிக்கைகள் குறித்து மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. தூய்மையான சுற்றுச்சூழலுக்கு அடித்தளம் குப்பைகளைத் தரம் பிரித்து சேகரிப்பதன் மூலம் மறுசுழற்சி செய்யக்கூடிய பொருட்களை மீட்டெடுக்கவும், மக்கும் கழிவுகளை உரமாக்கவும், குப்பைக் கிடங்குகளுக்குச் செல்லும் கழிவின் அளவைக் குறைக்கவும் முடியும். இதன் மூலம் சுற்றுச்சூழல் மாசுபாடு குறைவதுடன், பொதுச் சுகாதாரத்தையும் பாதுகாக்க முடியும்.
“குப்பையை உருவாக்கும் இடத்திலேயே தரம் பிரிப்போம், தூய்மையான சுற்றுச்சூழலை உருவாக்குவோம்” என்ற நோக்கத்துடன் மாணவர்களிடையே இந்த விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது.
தமிழ்நாட்டில் ஆவணப்பதிவு நடைமுறைகளை எளிமைப்படுத்தும் வகையில், பொதுமக்கள் தாங்களே நேரடியாக இணையவழியில் ஆவணங்களைப் பதிவு செய்யும் முறையினை பதிவுத்துறை அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்த ஆவணப்பதிவு முறையின் மூலம் சார்பதிவாளர் அலுவலகங்களுக்கு நேரில் செல்லாமலேயே இணையவழியில் பொதுமக்கள் தங்கள் ஆவணங்களைப் பதிவு செய்து கொள்ள முடியும்.ஆவணப்பதிவு முறை
பதிவுத்துறை இணையதளத்தில் தங்களது உள்நுழைவினைத் தாங்களே உருவாக்கி மேற்படி ஆவணங்களை இணையவழியில் சமர்ப்பிக்கலாம்.
ஆவணத்தை எழுதிக் கொடுப்பவர்கள், எழுதிப் பெறுபவர்கள் மற்றும் சாட்சிகள் ஆகிய அனைவருக்கும் ஆதார் அட்டை பதிவேற்றம் செய்யப்பட வேண்டும்.
ஆதார் ஆணையத்தின் மூலம் கைரேகை அல்லது கருவிழிப் படலம் வழி ஆதார் சரிபார்க்கப்பட வேண்டும். தொழில்நுட்பத் தேவைகள்
இணைய இணைப்பு, UIDAI அங்கீகரிக்கப்பட்ட எல்1 விரல் ரேகை இயந்திரம், கருவிழிப்படலம் ஸ்கேன் செய்யும் கருவி, புகைப்படம் எடுக்க நீலநிறத் திரை (புகைப்படம் எடுப்பவரின் பின்புறத்தில் வைத்திருக்க வேண்டும்), புகைப்படக் கருவி (Webcam) ஆகிய தொழில்நுட்ப உபகரணங்கள் தேவைப்படும்.
முக்கிய அம்சங்கள்
வருகையில்லா ஆவணப்பதிவின் மூலம் இணைய வழியில் சமர்ப்பிக்கப்பட்ட ஆவணங்களை சார்பதிவாளர்கள் 24 மணி நேரத்திற்குள் பதிவு செய்தோ அல்லது திருத்தத்திற்காக திருப்பி அனுப்பியோ அல்லது நிராகரித்தோ நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இந்த முறையில் சமர்ப்பிக்கப்படும் ஆவணங்கள், சார் பதிவாளர்களால் தற்போதுள்ள நடைமுறையில் உள்ளபடி சரிபார்க்கப்பட்டு, சட்ட விதிகளுக்குட்பட்டு பதிவு செய்யப்படும்.
திருத்தத்திற்காக திருப்பி அனுப்பப்படும் ஆவணங்களைத் திருப்பி அனுப்பப்பட்ட நாளிலிருந்து 30 நாட்களுக்குள் தேவையான திருத்தங்களுடன் மீண்டும் சமர்ப்பிக்கலாம்.
பதிவு செய்யப்பட்ட ஆவணங்களில் சார்பதிவாளர் டிஜிட்டல் கையொப்பமிட்டு, ஆவணப் பதிவிற்காக உருவாக்கப்பட்ட பயனர் உள்நுழைவுக்கு அனுப்பி வைக்கப்படும்.
பின்னர், பதிவு செய்யப்பட்ட செய்யப்பட்ட ஆவணத்தை 60 நாட்களுக்குள் தேவையான எண்ணிக்கையில் பதிவிறக்கம் செய்துகொள்ளும் வகையில் மென்பொருள் வசதி செய்யப்பட்டுள்ளது.
60 நாட்கள் முடிந்த பின்னர், பொதுமக்கள் நடைமுறையில் உள்ள முறையின்படி சான்றிட்ட நகலுக்கு (Certified Copy) விண்ணப்பித்து பதிவு செய்யப்பட்ட ஆவணத்தைப் பெறலாம்.
ஆவணத்தின் ஒவ்வொரு பக்கத்திலும் QR குறியீடு இடம் பெறும். அதில் ஆவண எண், ஆவணத்தின் தன்மை மற்றும் பதிவு செய்யப்பட்ட தேதி ஆகிய விவரங்கள் இடம்பெறும்.
பதிவு அலுவலர் ஆவணத்தில் டிஜிட்டல் கையொப்பமிடுவார். காகித ஆவணத்தில் ஏதேனும் மாற்றம் செய்யப்பட்டிருந்தால் டிஜிட்டல் கையொப்பமிடப்பட்ட ஆவணத்துடன் ஒப்பிட்டு சரிபார்க்கலாம்.
டிஜிட்டல் ஆவணம் மாற்றம் செய்யப்பட்டால், டிஜிட்டல் கையொப்ப சரிபார்ப்பில் “X” குறியீடு தோன்றுவதன் மூலம் மாற்றம் செய்யப்பட்டிருப்பதை அறியலாம் என பதிவுத்துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நிகழ்ச்சியில், வணிகவரி மற்றும் பதிவுத் துறை அமைச்சர் த. லோகேஷ் தமிழ்செல்வன், வணிகவரி, பதிவுத்துறை மற்றும் அறநிலையங்கள் துறை செயலாளர் ஜெ.குமரகுருபரன், பதிவுத்துறைத் தலைவர் ஜி.கே.அருண் சுந்தர் தயாளன் ஆகியோர் கலந்து கொண்டனர்
பாரதிய ஜனதா கட்சியின் 16-வது தேசிய தலைவராக கடந்த ஜனவரி மாதத்தில் நிதின் நவீன் பொறுப்பேற்றார். அவர் பொறுப்பேற்றதிலிருந்தே கட்சியின் நிர்வாகிகளை மாற்றும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வந்தன. இந்நிலையில், தற்போது தேசிய துணைத் தலைவர்கள், பொதுச் செயலாளர்கள் உள்ளிட்ட முக்கிய பொறுப்புகளுக்கான புதிய பட்டியலை அவர் வெளியிட்டுள்ளார். அதன்படி, பாஜகவின் தேசிய மகளிர் அணி தலைவர் பொறுப்பிலிருந்து (மகிளா மோர்ஷா) தமிழ்நாட்டைச் சேர்ந்த வானதி சீனிவாசன் விடுவிக்கப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக சத்தீஸ்கர் மாநிலத்தைச் சேர்ந்த ரூப் குமாரி சௌத்ரி நியமனம் செய்யப்பட்டுள்ளார். தவிர, தமிழ்நாட்டைச் சேர்ந்த எம்.வெங்கடேசனுக்கு பாஜகவின் தேசிய செயலாளர் பதவி வழங்கப்பட்டுள்ளது. ஏற்கனவே பொதுச் செயலாளராக (அமைப்பு) பதவி வகித்து வந்த பி.எல் சந்தோஷும், பொருளாளராக பதவி வகித்து வந்த பியூஷ் கோயலும் அதே பதவியில் தொடர்வார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
புதிய பட்டியலின்படி, ராஜஸ்தான் முன்னாள் முதலமைச்சர் வசுந்தரா ராஜே சிந்தியா, தீரத் சிங், ராம் மாதவ், பைஜ்யந்த் ஜெய் பாண்டா, புரந்தேஸ்வரி, ரேகா வர்மா, வரஷாபென் நரேந்திரபாய் தோஷி, பார்தி பிரவீன் பவார், மன்பிரீத் சிங் பாதல், லால் சிங் ஆர்யா, நாகராஜா, தாரிக் மன்சூர் மற்றும் மதுசந்திரகர் ஆகிய 13 தேசிய துணைத் தலைவர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். அதேபோல், ஸ்மிருதி இரானி, வினோத் தாவ்டே, சுனில் பன்சால், பிப்லப் குமார் தேப், சதீஷ் பூனியா, கஜேந்திர பாட்டீல், ஹரிஷ் திவேதி மற்றும் சஞ்சய் பாட்டியா ஆகியோர் பொதுச் செயலாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். தகவல் தொழில்நுட்ப பிரிவு தலைவராக பதவி வகித்துவந்த அமித் மால்வியா நீக்கப்பட்டு, அவருக்கு பதிலாக சத்தீஸ்கர் பாஜக தலைவர் தீபக் மஸ்கி நியமிக்கப்பட்டுள்ளார். இவருக்கு சமூக ஊடக தலைவர் என்ற கூடுதல் பொறுப்பும் வழங்கப்பட்டுள்ளது. தீப மஸ்கி சத்தீஸ்கர் மாநிலத்தைச் சேர்ந்தவர். இவர் முன்னதாக பாஜக மாநில செய்தி தொடர்பாளராக பணியாற்றி இருக்கிறார். பாரதிய ஜனதா கட்சியை வழிநடத்தும் மூத்த தலைவர்கள் கொண்ட மார்க் தர்ஷக் மண்டலில் பிரதமர் நரேந்திர மோடி, எல்.கே அத்வானி, முரளி மனோகர் ஜோஷி மற்றும் ராஜ்நாத் சிங் ஆகியோர் தொடர்ந்து வருகின்றனர். இது தவிர, பிரதமர் மோடி தலைமை தாங்குகிற நாடாளுமன்ற வாரியம் ஒன்றும் செயல்பட்டு வருகிறது.
இதில், நிதின் நபின், ராஜ்நாத் சிங், அமித் ஷா, ஜே.பி. நட்டா, பி.எஸ். எடியூரப்பா, சர்பானந்த சோனோவால், கே. லட்சுமண், இக்பால் சிங் லால்புரா, சுதா யாதவ், சத்யநாராயண் ஜாதியா மற்றும் பி.எல். சந்தோஷ் ஆகிய 12 பாஜக உறுப்பினர்கள் உள்ளனர்.
அன்னூர் பகுதியில் குறைவான தண்ணீரில் அதிக கொசு மருந்தை கலந்து குடியிருப்பு பகுதிக்குள் பணியாளர்கள் அடித்ததாக கூறி அப்பகுதி மக்கள் வாக்குவாதம்.
கோவை மாவட்டம், அன்னூர் பேரூராட்சிக்கு உட்பட்ட 7வது வார்டு பகுதியில் கடந்த சில தினங்களுக்கு முன்பு 3 குழந்தைகளுக்கு டெங்கு காய்ச்சல் வந்துள்ளது. இதுகுறித்து தகவலறிந்த அன்னூர் பேரூராட்சி நிர்வாகம், அன்னூர், சத்தி சாலை, உப்பு தோட்டம் ஆகிய பகுதிகளில் உள்ள குடியிருப்புகளில் கொசு மருந்து அடிக்கும் பணியை நேற்று (ஆகஸ்டு 10) தொடங்கியது.
கழிவுநீர் கால்வாய், குப்பை தொட்டி இருக்கும் இடங்கள் மற்றும் தண்ணீர் தேங்கும் இடங்களில் கொசு மருந்தை பணியாளர்கள் தெளித்தனர். மேலும், குடியிருப்புகளில் உள்ள வீடுகளுக்குள் சென்றும் ஊழியர்கள் கொசு மருந்தை தெளித்திருக்கின்றனர். இவ்வாறு இன்று உப்பு தோட்டம் பகுதியில் கொசு மருந்து அடித்த போது, அந்த பகுதியைச் சேர்ந்த மோகன் (வயது 65). ராணி என்கிற பிரேமா (வயது 75) ஆகிய இருவர் மூச்சுத் திணறி உயிரிந்துள்ளனர். ஏற்கனவே இவர் நுரையீரல் பாதிப்பு காரணமாக வீட்டில் இருந்தபடி சிகிச்சை எடுத்து வந்துள்ளனர்.
இந்த சூழலில்தான் இவர்கள் இருவரின் வீட்டிலும் கொசு மருந்து அடித்த அடுத்த 1 மணி நேரத்தில் மூச்சு திணறி உயிரிழந்துள்ளனர். இதனிடையே குறைவான தண்ணீரில் அதிக கொசு மருந்தை கலந்து குடியிருப்பு பகுதிக்குள் பணியாளர்கள் அடித்ததாக கூறி அப்பகுதி மக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து பிரச்சனை குறித்து பேரூராட்சி செயல் அலுவலர் கார்த்திகேயன் சம்பந்தப்பட்ட இடத்திற்கு வந்து பாதிக்கப்பட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது, “டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட குடியிருப்பு பகுதிகளை சுற்றி 400 மீட்டர் தொலைவிற்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் கொசு மருந்து அடிக்க அறிவுறுத்தப்பட்டது. அதன் பேரில் தான் இந்த குடியிருப்பு பகுதிகளில் கொசு மருந்து அடிக்கப்பட்டது. இதனால் பொதுமக்களுக்கு எந்த ஒரு பாதிப்பும் ஏற்படவில்லை” என கூறினார்.
செயல் அலுவலரின் இந்த பதிலால் அதிருப்தி அடைந்த அப்பகுதி மக்கள், பேரூராட்சியின் அலட்சிய போக்கை கண்டித்து பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட போவதாக அறிவித்தனர். இதனால் அங்கு சற்றே பரபரப்பான சூழல் உருவானது.
மக்களவைத் தொகுதி மறுவரையறைச் சட்டத் திருத்த மசோதா விவகாரம் குறித்து சென்னை கலைவாணர் அரங்கத்தில் இன்று (ஆக.08) மாலை 05.00 மணிக்கு தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும், முதலமைச்சருமான விஜய் தலைமையில் அனைத்துக் கட்சிகளின் எம்பிக்களின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் தவெகவின் கூட்டணிக் கட்சிகளான காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆகிய கட்சிகளின் எம்பிக்கள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தை அதிமுக, திமுக, தேமுதிக, பாமக, மக்கள் நீதி மய்யம் ஆகிய கட்சிகள் புறக்கணித்தன.
மக்களவை மற்றும் மாநிலங்களவையை சேர்த்து தமிழ்நாட்டில் மொத்தம் 57 எம்பிக்கள் உள்ளனர். இந்நிலையில், மதிமுக சார்பில் துரை வைகோ, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன், ரவிக்குமார், சிபிஐ சார்பில் சுப்பராயன், செல்வராஜ், சிபிஎம் சார்பில் சு.வெங்கடேசன், சச்சுதானந்தம், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் நவாஸ் கனி ஆகிய எம்.பி.க்கள் பங்கேற்றனர்.
காங்கிரஸ் சார்பில் ஜோதிமணி, மாணிக்கம் தாகூர், சசிகாந்த் செந்தில், பிரவீன் சக்கரவர்த்தி, ப.சிதம்பரம், கார்த்தி சிதம்பரம், விஜய் வசந்த், விஷ்ணு பிரசாத், ராபர்ட் புரூஸ், கோபிநாத், கிறிஸ்டோபர் திலக் என 19 எம்பிக்கள் கலந்து கொண்டனர். காங்கிரஸ் எம்பி சுதா, தான் கட்சிப் பணிக்காக கர்நாடகாவில் இருப்பதால் கூட்டத்தில் பங்கேற்கவில்லை எனத் தெரிவித்துள்ளார்திமுக உள்ளிட்ட கட்சிகளைச் சேர்ந்த 37 எம்பிக்கள், முதலமைச்சர் விஜய் தலைமையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்கவில்லை. இந்தக் கூட்டத்தில் தொகுதி மறுவரையறை குறித்தும், அதனால் தொகுதிகளின் எண்ணிக்கையில் ஏற்படும் மாற்றங்கள் குறித்தும் விரிவாக ஆலோசிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
‘பாஜகவின் ஆஃபர் கதை’
கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களைச் சந்தித்த தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் மாணிக்கம் தாகூர், “பாஜக பல்வேறு ஏமாற்று வேலைகளை செய்ய ஆரம்பித்துள்ளது. 50 சதவீதம் கூட்டுவோம், 60 சதவீதம் கூட்டுவோம் என பல்வேறு ஆஃபர் கதைகளை கட்டிக்கொண்டிருக்கிறார்கள். இந்த ஆஃபர்களில் ஏமாந்துவிடாமல் இருக்க வேண்டும். இந்த முன்னெடுப்பு மிகப்பெரிய வெற்றியைப் பெறும்.
எங்களைப் பொறுத்தவரை தமிழ்நாட்டிற்கு எந்த விதத்திலும் துரோகம் நடக்காமல் பார்த்துக்கொள்வது மிக முக்கியம். தமிழ்நாட்டைப் பொறுத்தவரை எந்தவொரு தொகுதி மறுவரையறையும் நியாயமானதாக இருக்காது. தமிழ்நாட்டை ஏமாற்றுவதற்கான வேலைதான் இது.
உண்மையிலேயே பாஜகவும் மிகப்பெரிய அளவில் சதி செய்கிறது. இந்தச் சதியில் தமிழ்நாடு ஏமாந்துவிடக் கூடாது. ‘ஃபேர் டீலிமிட்டேஷன்’ (Fair Delimitation) என்று கூறப்படுவது ஒரு தவறான புரிதல். தொகுதி மறுவரையறையே ஒரு பெரிய சதி. தமிழ்நாட்டின் அதிகாரத்தைப் பறிப்பதற்காகவே இந்தத் தொகுதி மறுவரையறை நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. இதை எதிர்த்து 543 மக்களவைத் தொகுதிகளையும், 39 தமிழ்நாட்டு மக்களவைத் தொகுதிகளையும் பாதுகாப்பது மிக முக்கியம். எங்களைப் பொறுத்தவரை, 543 தொகுதிகளும், தமிழ்நாட்டின் 39 தொகுதிகளும் நியாயமான பிரதிநிதித்துவத்தை உறுதி செய்யும் வகையில் பாதுகாக்கப்பட வேண்டும்.
எப்போது தொகுதி மறுவரையறை நடந்தாலும், தமிழ்நாட்டுக்கு நியாயமான தொகுதி மறுவரையறை வழங்கப்படாது. பிரதமர் நரேந்திர மோடியும், உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் தமிழ்நாட்டுக்கு எதிரான ஃபேக் டீலிமிட்டேஷனை தான் கொண்டு வருவார்கள்” எனத் தெரிவித்துள்ளார்.மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சு.வெங்கடேசன் கூறுகையில், “தொகுதி மறுவரையறை தொடர்பாக 42-வது அரசியலமைப்புச் சட்டத் திருத்தம் 1976-ல் கொண்டு வரப்பட்டது. தொடர்ந்து, 84- வது அரசியலமைப்புச் சட்டத் திருத்தம் 2001-ல் கொண்டு வரப்பட்டது. அதன் காலக்கெடு வரும் டிசம்பர் மாதத்துடன் நிறைவடைய உள்ள நிலையில், தமிழ்நாடு மற்றும் தென் மாநிலங்களின் உரிமைகள், அதிகாரத்தின் வலிமை பாதிக்கப்படக் கூடாது என்பதற்காக தொடர்ந்து நாம் முயற்சி செய்து வருகிறோம்.
கடந்த திமுக ஆட்சியின்போது, அனைத்துக் கட்சிக் கூட்டம் நடத்தப்பட்டது. அந்தக் கூட்டத்தில், ‘ஃபேர் டீலிமிட்டேஷன்’ என்ற பெயரில் மாநிலங்களின் உரிமைகள் பாதிக்கப்படாமல் பாதுகாக்கப்பட வேண்டும் என அனைத்துக் கட்சிகளும் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றினோம்.
அதற்குப் பிறகு, ஏப்ரல் 16- ஆம் தேதி நாடாளுமன்றத்தில் தொகுதி மறுவரையறை தொடர்பான சட்டத் திருத்தம் கொண்டு வரப்பட்டபோது, அரசியலமைப்பின் 131-வது சட்டத்திருத்தம் தொடர்பான விவாதத்தின்போது, மத்திய உள்துறை அமைச்சர் சட்டத்தை முன்வைத்து உரையாற்றினார். அப்போது, அனைத்து மாநிலங்களுக்கும் 50% வரை தொகுதிகள் அதிகரிக்கப்படும் என்பதை ஒரு சலுகையைப் போன்று அவர் தெரிவித்தார்.
ஆனால், அந்த அம்சம் சட்டத்தில் இடம்பெறவில்லை. இருந்தபோதிலும், அந்த சட்டத்தை நாம் எதிர்த்தோம். இன்றைக்கு, அன்று அவர் கூறிய அந்த வார்த்தைகள் மீண்டும் சட்ட வடிவம் பெறப்போகிறது என்ற செய்தி நாடு முழுவதும் பேசப்பட்டு வருகிறது. இது ஒரு ஏமாற்று வேலை. ஏனென்றால், ‘ஃபேர் டீலிமிட்டேஷன் என்பது நோ டீலிமிட்டேஷன்’ என்பதுதான். அதுதான் உண்மையான ஃபேர் டீலிமிட்டேஷன். தொகுதி மறுவரையறைக் குழு இந்தியா முழுவதும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையை 522- லிருந்து 543 ஆக உயர்த்தியபோது, தமிழ்நாட்டின் நாடாளுமன்றத் தொகுதிகளின் எண்ணிக்கை 41-லிருந்து 39 ஆகக் குறைந்தது.
எனவே, தற்போது உள்ள 543 மக்களவைத் தொகுதிகள் என்ற எண்ணிக்கையும், மாநிலங்களுக்குத் தற்போது ஒதுக்கப்பட்டுள்ள தொகுதிகளின் எண்ணிக்கையும் தொடர்ந்து பாதுகாக்கப்பட வேண்டும் என்பதே எங்களது நிலைப்பாடு. இந்தக் கருத்தை அனைத்து கட்சிகளும் இன்று தெரிவித்துள்ளோம். அனைத்து கட்சிகளும் ஒருமித்த கருத்துடன் இதுதொடர்பான தீர்மானத்தையும் நிறைவேற்றியுள்ளோம். மேலும், இதுதொடர்பான தீர்மானத்தை சட்டப்பேரவையிலும் கொண்டு வருவோம் என்று முதலமைச்சர் தெரிவித்துள்ளார்” என்று குறிப்பிட்டுள்ளார்.
‘தொகுதி மறுவரையறை தேவையில்லை’
செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர் சி.டி.ஆர்.நிர்மல்குமார், “முதலமைச்சர் தலைமையில் இன்று தமிழ்நாட்டைச் சேர்ந்த அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களின் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் காங்கிரஸ், இடதுசாரி கட்சிகள் உள்ளிட்ட பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். தொகுதி மறுவரையறை மூலம் தமிழ்நாடு மற்றும் தென் மாநிலங்களின் உரிமைகள் பாதிக்கப்படக்கூடிய சூழல் உருவாகியுள்ளது. இதனால் தமிழ்நாட்டு மக்களுக்கு மிகப்பெரிய அநீதி ஏற்படும் நிலை உருவாகும் எனக் கூட்டத்தில் பல்வேறு கருத்துகள் தெரிவிக்கப்பட்டன.
கூட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தெரிவித்த அனைத்து கருத்துகளையும் பரிசீலித்து, முக்கியமான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தொகுதி மறுவரையறை தமிழ்நாட்டிற்கு தேவையில்லை என்பதே கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. தற்போது தமிழ்நாட்டில் உள்ள மக்களவைத் தொகுதிகளின் எண்ணிக்கையில் எந்த மாற்றமும் தேவையில்லை என்றும் தெரிவிக்கப்பட்டது. தொகுதி மறுவரையறை மேற்கொள்ள வேண்டும் என்று இதுவரை எந்தத் தரப்பிலிருந்தும் கோரிக்கை எழவில்லை. அப்படியிருக்கும்போது, எதற்காக இந்தத் தொகுதி மறுவரையறையை மேற்கொள்ள வேண்டும்? இதனால் யாருக்கு என்ன பயன்? எனவும் கேள்வி எழுப்பப்பட்டது.
மக்களின் தேவைக்காகவே பெரிய அளவிலான மாற்றங்கள் கொண்டு வரப்பட வேண்டும். ஆனால், மக்களிடமிருந்து எந்தக் கோரிக்கையும் இல்லாத நிலையில், திடீரென தொகுதி மறுவரையறையை மேற்கொள்ள வேண்டிய அவசியம் இல்லை எனவும் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது. தொகுதி மறுவரையறை என்பது மக்களின் நலனுக்காக அல்லாமல், தேர்தல் கணக்குகளுக்காகவும் எண்ணிக்கைகளை மாற்றுவதற்காகவும் மேற்கொள்ளப்படுவதாக சந்தேகம் எழுகிறது. குறிப்பாக, பாரதிய ஜனதா கட்சியின் அரசியல் தேவைக்காக இதுபோன்ற நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறதா? என்ற கேள்வியும் எழுப்பப்பட்டது.
எனவே, தற்போதுள்ள தொகுதிகளின் எண்ணிக்கையில் எந்த மாற்றமும் செய்யக்கூடாது என்றும், தமிழ்நாட்டின் உரிமைகள் மற்றும் நலன்களைப் பாதுகாக்க வேண்டும்” என்றும் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
தீர்மானம்
தொகுதி மறுவரையறை விஷயத்தில், தமிழ்நாடு மற்றும் தென்னிந்திய மாநிலங்களின் உரிமையை நிரந்தரமாகப் பாதுகாத்திட தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் அரசினர் தனித் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் இன்றைய ஆலோசனைக் கூட்டத்தில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
அத்துடன், தமிழகத்தின் 39 நாடாளுமன்றத் தொகுதிகளின் எண்ணிக்கை அப்படியே தொடர வேண்டும் எனவும் இன்றைய கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
கோவை, பொள்ளாச்சியில் இருந்து கோவை வந்த பேருந்தில் பயணித்த கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்த குற்றத்திற்காகப் போத்தனூர் காவல் ஆய்வாளரின் ஓட்டுநராகப் பணியாற்றி வந்த காவலர் மணிவேந்தன் கைது செய்யப்பட்டு உள்ளார்.
கோவை மாவட்டம், கிணத்துக்கடவு பகுதியைச் சேர்ந்த கல்லூரி மாணவி ஒருவர், வழக்கம் போல் பொள்ளாச்சியில் இருந்து கோவை நோக்கி வந்த பேருந்தில் ஏறி உள்ளார். பேருந்தில் கூட்டம் அதிகமாக இருந்ததால், அந்த மாணவி பேருந்தின் படியில் நின்றபடி பயணித்து உள்ளார். அப்போது, அதே பேருந்தில் பயணித்த நபர் ஒருவர், மாணவிக்கு உதவுவது போல நடித்து, அவருக்குப் பாலியல் சீண்டல் கொடுத்துத் தொல்லை அளித்து உள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த மாணவி, ஈச்சனாரி அருகே உள்ள தனது கல்லூரி நிறுத்தத்தில் இறங்கி, இச்சம்பவம் குறித்துப் பேரூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் உடனடியாகப் புகார் அளித்தார்.
மாணவி அளித்த புகாரின் பேரில் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டதில், பாலியல் தொல்லையில் ஈடுபட்டது போத்தனூர் குற்றப் பிரிவு காவல் ஆய்வாளரின் ஓட்டுநராகப் பணியாற்றி வந்த காவலர் மணிவேந்தன் என்பது தெரியவந்தது.இதனைத் தொடர்ந்து, காவலர் மணிவேந்தன் மீது வழக்குப் பதிவு செய்த பேரூர் அனைத்து மகளிர் காவல் நிலையப் போலிசார், அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பாதுகாப்பளிக்க வேண்டிய காவலரே பேருந்தில் மாணவியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டு கைதான சம்பவம் கோவையில் மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
பழநியில் ரூ.100 கோடி மதிப்பிலான நிலம் சட்டவிரோதமாகப் பத்திரப்பதிவு செய்யப்பட்டது தொடர்பாக சிபிசிஐடி விசாரணைக்கு பயந்து நிலத்தை விற்றவர், வாங்கியவர்கள் என 3 பேர் தலைமறைவாகினர். அவர்களைத் தேடும் பணியை சிபிசிஐடி போலீஸார் தீவிரப்படுத்தியுள்ளனர்.
திண்டுக்கல் மாவட்டம் பழநி மலை அடிவாரத்தில் உள்ள தண்டபாணி சுவாமிகள் மடத்துக்குச் சொந்தமான ரூ.100 கோடி மதிப்புள்ள 1.40 ஏக்கர் நிலம் முறைகேடாக பத்திரப்பதிவு செய்தது தொடர்பாக சார்பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன், நிலத்தை விற்பனை செய்தவர், வாங்கியவர்கள் என 4 பேர் மீது பழநி அடிவாரம் போலீஸார் வழக்கு பதிவு செய்தனர்.
இந்த விவகாரம் தொடர்பாக சார்பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன், மாவட்ட பதிவாளர் சசிகலா ஆகியோர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டனர். பத்திரப்பதிவையும் உயர் நீதிமன்றம் ரத்து செய்தது. மேலும், வழக்கு விசாரணை சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது. இதையடுத்து, சிபிசிஐடி டிஎஸ்பி அஜய் தங்கம் தலைமையிலான குழுவினர் விசாரணையைத் தொடங்கி, தேவஸ்தானம் மற்றும் பத்திரப்பதிவு அலுவலகத்தில் விசாரித்தனர். நேற்று திண்டுக்கல் சிபிசிஐடி அலுவலகத்தில் பழநி தேவஸ்தான நிலப்பிரிவு கண்காணிப்பாளர் முருகானந்தம், வழக்குப் பிரிவு கண்காணிப்பாளர்கள் சிவனேசன், கணபதி, வட்டாட்சியர் (ஓய்வு) மாரியப்பன், கிராம நிர்வாக அலுவலர் (ஓய்வு) சின்னசாமி ஆகிய 5 பேரிடம் எஸ்பி சாஜிதா விசாரணை நடத்தினார்.
இதேபோல, பத்திரப்பதிவு அலுவலகத்தில் மற்றொரு குழுவினர் ஆய்வு செய்து சிசிடிவி வீடியோ பதிவுகளைப் பெற்றுக்கொண்டனர். கிடுக்கிப்பிடி விசாரணையால் தேவஸ்தானம் மற்றும் பதிவுத் துறை அதிகாரிகள், பணியாளர்கள் பலர் கலக்கத்தில் உள்ளதாக கூறப்படுகிறது. வழக்கு தொடர்பாக விசாரணைக்கு ஆஜராக மனுதாரர்கள், எதிர்மனுதாரர்களுக்கு சிபிசிஐடி போலீஸார் சம்மன் அனுப்பும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த நிலையில் நிலத்தை விற்ற திருப்புகழ் சுவாமிகள், முருகதாஸ் சுவாமிகள் மற்றும் தண்டபாணி சுவாமிகள் அறக்கட்டளையைச் சேரந்த முருகதாஸ், நிலத்தை வாங்கிய உடுமலைப்பேட்டை பாப்பான்குளத்தைச் சேர்ந்த வெள்ளைதுரை மற்றும் பழநி டி.கே.என்.புதூரைச் சேர்ந்த சேதுபதி ஆகியோர் தலைமறைவானதும், செல்போனை சுவிட்ச் ஆப் செய்து வைத்திருப்பதும் விசாரணையில் தெரியவந்தது.
மேலும் பத்திரப்பதிவு நாளில் சாட்சிக் கையெழுத்திட்டோரும் தலைமறைவாகி உள்ளனர். இவர்களைத் தேடும் பணி நடந்து வருகிறது. முறைகேடாக கோயில் நிலத்தை விற்றவர், வாங்கியவர்கள் புகைப்படத்தை வெளியிட வேண்டும் என அரசியல் கட்சியினர் உள்பட பலரும் வலியுறுத்தி வரும் நிலையில், நிலத்தை விற்ற முருகதாஸ், வாங்கிய சேதுபதி ஆகியோரது புகைப்படமும், நிலம் தொடர்பான வில்லங்கச் சான்றும் இணையத்தில் வைரலாகி வருகிறது.
மேலும் 2 பேருக்கு தொடர்பு? – கடந்த மார்ச் மாதம் ரூ.100 கோடி நிலத்தை பத்திரப்பதிவு செய்ய முயற்சி நடந்தபோது, பணியில் இருந்த சார்பதிவாளர் பழனிச்சாமி வழக்கு நிலுவையில் இருப்பதால் பதிவு செய்ய இயலாது எனக்கூறி நிராகரித்தார். அவர் பணியிட மாறுதலில் சென்றார். பின்னர் சார்பதிவாளர் பாலசந்தர் பொறுப்பேற்ற நிலையில் ஜூலை 3-ம் தேதி சர்ச்சைக்குள்ளான நிலத்தை பதிவு செய்வதற்கான சில முன்னேற்பாடுகள் நடந்துள்ளன.
ஜூலை 6-ம் பாலசந்தர்விடுமுறையில் சென்றதால், சிறப்பு பணிக்கு வந்த ஜஸ்டின் மணிகண்டன் நிலத்தை பதிவு செய்துள்ளார். இந்த விஷயத்தில் மேற்கண்ட 3 பேரிடமும் சிபிசிஐடி விசாரிக்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த மோசடியில் பல முக்கிய அரசியல் புள்ளிகள், அதிகாரிகள் சம்பந்தப்பட்டுள்ளதாகக் கூறப்படும் நிலையில் இதுவரை கைப்பற்றப்பட்ட ஆவணங்கள், வீடியோ ஆதாரங்களை வைத்து சிபிசிஐடி போலீஸார் 3 குழுவாக பிரிந்து தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.
லஞ்சப் பணத்தைக் கண்டுபிடிக்க அதிகாரிகளின் ஆன்லைன் கணக்குகளை டிராக்கிங் செய்த போலீசார், ₹5,000 ரொக்கமும் பறிமுதல், விடிய, விடிய நடந்த விசாரணை !!!
தமிழ்நாடு முழுவதும் தாலுகா அலுவலகங்கள், வருவாய்த்துறை அலுவலகங்களில், லஞ்ச ஒழிப்பு போலீசார் நேற்று சோதனை நடத்தினார்கள். கோவை, பாலசுந்தரம் சாலையில் வடக்கு தாலுகா அலுவலகம் உள்ளது. இங்கு தாசில்தாராக ஜெயக்குமார் என்பவர் பணியாற்றி வருகிறார். இந்நிலையில் இங்கு வரும் பொது மக்களிடம் இடைத்தரகர்கள் மூலம் பணம் பெறப்படுவதாக புகார் எழுதன. இதை அடுத்து லஞ்ச ஒழிப்பு கூடுதல் காவல் கண்காணிப்பாளர் ராஜேஷ் தலைமையில், கோவை மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசார் நேற்று மாலை 5 மணிக்கு திடீரென சோதனை நடத்தினார்கள். அப்பொழுது தாசில்தார் உட்பட பலரும் அலுவலகத்தில் இருந்தனர். இதைத்தொடர்ந்து அலுவலகத்தில் இருந்தவர்கள் யாரும் ? வெளியே செல்ல அனுமதிக்கப்படவில்லை, வெளியில் இருந்தவர்கள் யாரும் ? உள்ளே வர அனுமதிக்கப்படவில்லை, இதை அடுத்து அந்த அலுவலகத்தில் உள்ள ஒவ்வொரு அறையிலும் மேஜை டிாயர்கள், கோப்புகள் உள்ளிட்ட இடங்களில் கணக்கில் வராத பணம் ஏதாவது பதுக்கி வைக்கப்பட்டு உள்ள்ளதா ? என்று போலீசார் அதிரடி சோதனை நடத்தினர்.
மேலும் google pay மூலமாக லஞ்சப் பணம் பெறப்பட்டு உள்ளதா ? என ஒவ்வொரு அலுவலர்களிடம் செல்போன்களை போலீசார் ஆய்வு செய்தனர். அதில் சுமார் மூன்று ஊழியர்களின் செல்போன்களில் கூகுள் பே மூலம் சந்தேகத்துக்குரிய தொகை பரிமாற்றம் செய்யப்பட்டு இருப்பது தெரிய வந்தது.
இதனால் அந்த பணம் எதற்காக பெறப்பட்டது ? அனுப்பியவர்கள் யார் ? என்று போலீசார் விசாரித்தனர். இதை அடுத்து துணை தாசில்தார், தாலுகா இன்ஜினியர், வருவாய் ஆய்வாளர், கிராம நிர்வாக அதிகாரி, அலுவலக உதவியாளர் உட்பட ஆறு பேரின் கூகிள் pay கணக்குகளை போலீசார் ஆய்வு செய்தனர். இதில் ரூபாய் 7 1/2 லட்சம் பணம் பெற்றது தெரிய வந்தது. இதில் தாலுகா என்ஜினியர் அதிக அளவில் பணம் பெற்றது தெரியவந்தது. இது தவிர ரூபாய் 5,000 ரொக்க பணம் கைப்பற்றப்பட்டது. இதைத்தொடர்ந்து ஐந்து அதிகாரிகளிடம் விடிய, விடிய விசாரணை நடைபெற்றது.
கோவையில் பல இடங்களில் தொடர்ந்து லஞ்ச ஒழிப்பு சோதனை நடைபெறுவது அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
திருநெல்வேலி அருகே உள்ள மேலக்கரையை சேர்ந்தவர் ருஜைனா பாத்திமா. இவருடைய கணவர் புதிய கார் வாங்கியுள்ளார். பண பிரச்சினைக்காக அந்த காரை ரவிக்குமார் என்பவரிடம் அடமானம் வைத்தாக தெரிகிறது. அந்த காரை ரவிக்குமார் சொந்த உபயோகத்துக்கு பயன்படுத்துவது ருஜைனா பாத்திமாவுக்கு தெரியவந்தது.
இதனால், ஒரு இடத்தில் ரவிக்குமார் நிறுத்தி இருந்த காரை மாற்று சாவி மூலம் எடுத்து பொள்ளாச்சி பகுதியில் ருஜைனா பாத்திமா நிறுத்தி உள்ளார். இதுகுறித்து ரவிக்குமார், சிறப்பு படையை சேர்ந்த கோவை காட்டூர் சிறப்பு-சப் இன்ஸ்பெக்டர் பூபதியிடம் புகார் கொடுத்து உள்ளார். விசாரணை நடத்திய பூபதி, ருஜைனா பாத்திமா மற்றும் அவருடைய கணவர் ஆகியோரின் 2 செல்போன்களை பிடுங்கி வைத்துக்கொண்டதாக தெரிகிறது. கார் அடமான விவகாரத்தையும், 2 செல்போன்களை திரும்ப கொடுக்கவும் ரூ.70 ஆயிரம் பூபதி ருஜைனா பாத்திமா மற்றும் அவருடைய கணவரிடம் கேட்டதாக தெரிகிறது. இதுகுறித்து ருஜைனா பாத்திமா கோவை லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் தெரிவித்துள்ளார். லஞ்ச ஒழிப்பு கூடுதல் துணை சூப்பிரண்டு ராஜேஷ் ,இன்ஸ்பெக்டர் ஆறுமுகம் மற்றும் போலீசார் இதுகுறித்து விசாரணை நடத்தினார்கள். ருஜைனா பாத்திமா உக்கடம் பஸ் நிலையத்தில் இருப்பதாகவும், லஞ்ச பணத்தை பெற்று கொள்ளுமாறும் சிறப்பு-சப் இன்ஸ்பெக்டர் பூபதியிடம் தெரிவித்துள்ளார். அவரும் உக்கடம் பஸ் நிலையத்துக்கு வந்து ரூ.70 ஆயிரத்தை பெற்றபோது, மறைந்து இருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் மடக்கிப்பிடித்து பூபதியை கைது செய்தனர். அவரிடம் இருந்த லஞ்சப்பணமும் பறிமுதல் செய்யப்பட்டது.
லஞ்சம் வாங்கி சிறப்பு -சப் இன்ஸ்பெக்டர் பூபதி கைதான விவகாரம் கோவையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கோவை பாரதியார் பல்கலைக் கழகத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் தொலைதூரக் கல்வி முறையில் பல்வேறு முதுகலை படிப்புகளில் படித்து வருகின்றனர் . ஏற்கனவே இரண்டு வருடங்களில் முடிக்க வேண்டிய படிப்பை, முறையாக பாடம் நடத்தாமலும் தேர்வு நடத்தாமலும், தற்போது வரை இரண்டு ஆண்டுகளில் இரண்டு பருவத் தேர்வுகள் மட்டுமே நடத்தப்பட்டுள்ளன. தற்போது மூன்றாம் பருவத்தேர்வு இந்தாண்டு தொடங்கும் நிலையில், மாணவர்களை ஜூன் 25ஆம் தேதிக்குள் மூன்றாம் பருவத்தேர்வு கட்டணம் செலுத்த வேண்டும் என பாரதியார் பல்கலைக்கழகம் தெரிவித்த நிலையில் மாணவர்கள் கடந்த ஜூன் 25ஆம் தேதிக்குள் பல்கலைக் கழக இணையதளத்தில் கட்டணத்தை செலுத்தி உள்ளனர். ஆனால் கட்டணம் மூன்றாம் பருவத் தேர்வுக்கு பதிலாக நான்காம் பருவத் தேர்வில் கட்டணம் இணையதளத்தில் பதிவாகியுள்ளதால், மூன்றாம் பருவத்திற்கு கட்டணம் செலுத்தவில்லை எனக் கூறி ஒவ்வொரு மாணவருக்கும் தலா 300 ரூபாய் பாரதியார் பல்கலைக்கழகம் அபராதம் விதித்துள்ளது மாணவர்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்து உள்ளது. மேலும் வகுப்புகள் எப்போது தொடங்கப்படும், புத்தகங்கள் எப்போது வழங்கப்படும் என்று பாரதியார் பல்கலைக் கழகம் அறிவிக்காத நிலையில், மூன்றாவது பருவம் மற்றும் நான்காவது பருவம் இந்தாண்டுக்குள் நிறைவடைமா என்று எதிர்பார்ப்பு மாணவர்கள் மத்தியில் எழுந்துள்ளது. மேலும் மாணவர்களின் கல்வியில் பல்கலைக்கழக நிர்வாகம் இப்படி விளையாட கூடாது என அவர்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர். உயர்கல்வித்துறை அமைச்சர் உடனடியாக இந்த விவகாரத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர்கள் வேண்டுகோள் விடுத்து உள்ளனர்.