Tuesday, September 22, 2026
Home Blog Page 5

தமிழகம் முழுவதும் பல்வேறு வட்டார போக்குவரத்து அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை…!

0

கடந்த சில தினங்களுக்கு முன்பு, தமிழ்நாடு முழுவதும் சுமார் 40-க்கும் மேற்பட்ட சார் பதிவாளர் அலுவலகங்களில், பத்திரப்பதிவு செய்ய வரும் பொதுமக்களிடம் ஏக்கர் அல்லது கட்டுமானத்திற்கு ஏற்ப லஞ்சம் பெறப்படுவதாக லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு புகார்கள் வந்தன. அந்தப் புகார்களின் அடிப்படையில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் அதிரடி சோதனை மேற்கொண்டு 37 லட்ச ரூபாய்க்கு மேல் பறிமுதல் செய்தனர்.அதன் தொடர்ச்சியாக, அரசு அலுவலகங்களை கண்காணித்து வருவதாகவும், குறிப்பிட்ட தகவலின் அடிப்படையில் தொடர் சோதனைகள் நடைபெறும் என்றும் லஞ்ச ஒழிப்பு போலீசார் எச்சரித்திருந்தனர். அதன்படி இன்று காலை முதல் தமிழகம் முழுவதும் உள்ள பல்வேறு வட்டார போக்குவரத்து அலுவலகங்களில் அதிரடியாக சோதனை நடைபெற்று வருகிறது.

குறிப்பாக தாம்பரம், கள்ளக்குறிச்சி, அரியலூர், தென்காசி, தஞ்சாவூர், திருப்பத்தூர் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட வட்டார போக்குவரத்து அலுவலகங்களில் சோதனை நடைபெற்று வருவதாக லஞ்ச ஒழிப்பு போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வட்டார போக்குவரத்து அலுவலகங்களில், வாகனத்தின் ஆவணங்களில் பெயர் மாற்றுதல், பெயர் நீக்குதல், ஓட்டுநர் உரிமம் பெறுதல், வாகனப் பதிவு மற்றும் தகுதி சான்றிதழ் உள்ளிட்ட பல்வேறு சேவைகளுக்காக வரும் பொதுமக்களிடம் இருந்து லஞ்சம் வாங்குவதாக எழுந்த புகாரின் அடிப்படையில் இந்த சோதனை நடந்து வருவதாக கூறப்படுகிறது.இவர்கள் வாகனப் பதிவு தகுதி சான்றிதழ்கள், ஓட்டுநர் உரிமம் வழங்குவதற்கு எவ்வளவு பணம் லஞ்சம் பெறுகிறார்கள்? அதற்கான ஆவணங்களில் எவ்வளவு பணம் வாங்கியதாக கணக்கு காட்டுகிறார்கள்? என பல்வேறு முக்கிய கோப்புகளையும் கைப்பற்றி ஆய்வு செய்து வருகின்றனர்.

நெல்லை மாவட்ட வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்திலும் லஞ்ச ஒழிப்பு போலீசார் இன்று அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். நெல்லை வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் புதிய ஓட்டுநர் உரிமம் பெறுவது, புதிய வாகனங்களைப் பதிவு செய்வது உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்கு அரசு நிர்ணயித்த கட்டணத்தைவிட கூடுதலாக பணம் வசூலிக்கப்படுவதாக மாவட்ட லஞ்ச ஒழிப்புத் துறைக்குத் தொடர்ந்து புகார்கள் வந்தன. இதனை அடுத்து மாவட்ட லஞ்ச ஒழிப்புப் பிரிவு துணை கண்காணிப்பாளர் எஸ்கால் தலைமையிலான குழுவினர் வட்டடார போக்குவரத்து அலுவலகத்திற்குள் நுழைந்து அனைத்து கதவுகளையும் மூடினர்.சோதனை தொடங்கியதும், அலுவலக வளாகத்தில் இருந்த இடைத்தரகர்கள் வெளியே செல்ல அனுமதிக்கப்படவில்லை. அவர்கள் அனைவரும் தீவிர விசாரணைக்கு உட்படுத்தப்பட்டனர். அலுவலகத்தில் இருந்த முக்கிய ஆவணங்கள், கணக்கில் வராத ரொக்கப் பணம் மற்றும் அதிகாரிகளின் மேஜைகளில் இருந்த கோப்புகளைப் போலீசார் ஒவ்வொன்றாக ஆய்வு செய்து வருகின்றனர்.

சோதனையின் முடிவில் கைப்பற்றப்பட்ட பணம் மற்றும் ஆவணங்கள் குறித்த முழுமையான விவரங்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையில் சோதனைக்குப் பயந்து போலீசாரை கண்டதும் ஊழியர்கள் வெளியே ஓட முயன்றனர். அவர்களை போலீசார் அழைத்து வந்து சோதனையை தொடர்ந்துள்ளனர்

தவெகவில் இணைந்த முன்னாள் அமைச்சர் பச்சைமால், விஜயதரணி…!

0

சென்னை பனையூரில் உள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் தலைமை அலுவலகத்தில் இன்று மாற்றுக்கட்சியினர் இணைப்பு விழா அக்கட்சியின் பொதுச்செயலாளரும், அமைச்சருமான என்.ஆனந்த் தலைமையில் நடைபெற்றது. விழாவில், அதிமுக முன்னாள் எம்.பி.க்கள் பாலகங்கா, இளவரசன் மற்றும் முன்னாள் அமைச்சர் பச்சைமால், திருநெல்வேலி முன்னாள் மேயர் விஜயலட்சுமி, அதிமுக சிறுபான்மைப் பிரிவு நிர்வாகி ஜான் மகேந்திரன், ஆண்டிப்பட்டி முன்னாள் எம்.எல்.ஏ. தவசி, பாஜகவைச் சேர்ந்த முன்னாள் எம்.எல்.ஏ. விஜயதரணி உள்ளிட்டோர் தங்களை தமிழக வெற்றிக் கழகத்தில் இணைத்துக் கொண்டனர்.
அவர்களை அமைச்சர் ஆனந்த், கட்சித் துண்டை அணிவித்து வரவேற்றார். இந்நிகழ்ச்சியில் அமைச்சர்கள் ஆதவ் அர்ஜுனா, விஜய் தமிழன் பார்த்திபன், ராஜ்மோகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த தவெகவில் இணைந்த முன்னாள் எம்.எல்.ஏ.விஜயதரணி, “தமிழக வெற்றிக் கழகத்தில் என்னை அன்போடு அரவணைத்துச் சேர்த்துக் கொண்டனர். தமிழ்நாட்டில் ஒரு மிகப்பெரிய மாற்றத்தைக் கொண்டு வர வேண்டும், நேர்மையான ஆட்சியைத் தர வேண்டும் என்ற உன்னத நோக்கில் இக்கட்சி செயல்படுகிறது. போதை கலாச்சாரத்தை முற்றிலும் ஒழிக்க வேண்டும் என்ற சபதத்தை ஏற்று, பெண்களின் பாதுகாப்பை உயர்த்திப் பிடிக்கும் ஒரு சிறந்த தலைவராக விஜய் விளங்குகிறார். தமிழ்நாட்டை வழிநடத்தக்கூடிய தகுதி தவெகவிற்கு முழுமையாக உள்ளது. இன்னும் 10 முதல் 15 ஆண்டுகளில் இந்தியாவை வழிநடத்தக்கூடிய முக்கிய இடத்தில் தலைவர் விஜய் இருப்பார் என்பதை நான் உறுதியாகத் தெரிவித்துக் கொள்கிறேன்.கடந்த இரண்டரை ஆண்டு காலம் பாஜகவில் எனக்கு எந்தப் பணியும் இல்லாமல் இருந்தது. அரசியலில் உழைப்பும், மக்கள் பணியும் மிக முக்கியம். என்னைப் போன்ற உழைக்கக் கூடியவர்களுக்கு தவெக ஒரு சிறந்த வாய்ப்பை ஏற்படுத்தித் தந்துள்ளது. எங்கள் உழைப்பு மக்களுக்குத் தேவை என்பதை அறிந்து எங்களை அழைத்திருக்கிறார்கள். நிச்சயமாக தவெக ஆட்சி, இந்திய நாடே திரும்பிப் பார்க்கக்கூடிய ஒரு சிறந்த ஆட்சியாக அமையும்” எனத் தெரிவித்துள்ளார். காங்கிரஸ் கட்சியில் மூன்று முறை எம்.எல்.ஏ.வாக இருந்த விஜயதரணி, கடந்த 2024- ஆம் ஆண்டு தன்னை பாஜகவில் இணைத்துக் கொண்டிருந்தார். பின்னர் அக்கட்சி தலைமை மீது அதிருப்தியில் இருந்ததாகக் கூறப்படும் நிலையில் தற்போது தவெகவில் இணைந்துள்ளார். தவெகவில் இணைந்த ஆல் இந்தியா சிந்தாரிக் பெந்தோகஸ் சபைகளின் தலைவர் பேராயர் ஜோஸ்வா இமானுவேல் அளித்த பேட்டியில், “கடந்த 21 ஆண்டுகளாகத் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சிறுபான்மையினர் பிரிவில் பயணித்து பல்வேறு பணிகளைச் செய்து வந்தேன். ஆனால், தற்போதைய சூழலில் மக்களின் நலனுக்காகவும், திருச்சபைகளின் பாதுகாப்பு மற்றும் மேம்பாட்டிற்காகவும் ஒரு மாற்றுப்பாதை தேவைப்படுகிறது. சிறுபான்மையினருக்கான ஆட்சி என்று சொன்னதால்தான் இத்தனை காலம் திமுகவோடு பயணித்தோம். ஆனால், சிறுபான்மையினரின் நலன் மற்றும் உரிமைகளுக்காக எப்போது அணுகினாலும், உரிமைகள் பறிக்கப்படும் சூழலே நிலவுகிறது. திமுக ஆட்சியில் சிறுபான்மையினருக்குப் பாதுகாப்பு இல்லை என்பதே கசப்பான உண்மை” எனத் தெரிவித்துள்ளார்.

தவெகவில் இணைந்த நகைச்சுவை நடிகர் சீனிவாசன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், “தமிழக வெற்றிக் கழகம் ஆட்சி இனி தமிழ்நாட்டில் தொடரும். உச்ச வருமானத்தை விட்டுவிட்டு சேவை செய்யும் மனப்பான்மை இனி தலைவர் வழியில் ஒவ்வொரு வரும் பின்பற்ற வேண்டும்; தமிழ்நாடு சிங்கப்பூராக விரைவில் ஆக்கப்படும்” எனத் தெரிவித்துள்ளார்.

அமித்ஷா தலைமையில் நடைபெற்ற தமிழ்நாடு பாஜக மையக்குழு கூட்டம்…

0

தமிழ்நாடு பாஜகவில் சட்டமன்றத் தேர்தலுக்கு பின்னர் பல்வேறு ஆலோசனை கூட்டங்கள் நடைபெற்றன. மாவட்டத் தலைவர்களின் ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டு, அதில் தேர்தல் தோல்விக்கான காரணங்களையும் ஆராய்ந்தனர்

இதநிடையே, சட்டமன்றத் தேர்தலுக்கு பின்னர் கடந்த ஜூன் 4-ஆம் தேதி தனது பிறந்த நாளில் பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை புதிய இயக்கத்தை துவங்கி உள்ளார். அந்த இயக்கத்திற்கு பாஜகவில் இருந்தவர்கள் அதிகளவில் சென்றுள்ளனர்.

இந்த நிலையில் பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் கட்சியிலும், இயக்கத்திலும் ஒரே நேரத்தில் இருக்க தொண்டர்களால் இருக்க முடியாது. அண்ணாமலையின் புதிய இயக்கத்திற்கு பிரதமர் மோடி, அமித்ஷா ஆகியோரின் ஆதரவு இல்லை என்று தெரிவித்தார். மேலும், பாஜகவில் இருந்து பிரிந்து இருந்து சென்றவர்கள் மீண்டும் வந்து சேரலாம் எனவும் அறிவுறுத்தியிருந்தார்.இந்த நிலையில் தமிழ்நாடு பாஜகவின் மையக்குழு ஆலோசனைக் கூட்டம் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையில் டெல்லியில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் தமிழ்நாடு பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை இணை அமைசசர் முருகன், முன்னாள் அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட மாநில நிர்வாகிகள் மற்றும் முக்கியக் கட்சி பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர். இதுதொடர்பாக நயினார் நாகேந்திரன் தனது சமூக வலைதள பக்கத்தில், “மத்திய உள்துறை அமைச்சர் தலைமையில் தமிழக பாஜகவின் மையக் குழு ஆலோசனைக் கூட்டம் டெல்லியில் நடைபெற்றது. உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையில், பாரதிய ஜனதா கட்சியின் தேசிய தலைவர் நிதின் நபின் மற்றும் தேசிய அமைப்பு பொதுச்செயலாளர் சந்தோஷ் ஆகியோரின் வழிகாட்டுதலின்படி இந்த கூட்டம் சிறப்பாக நடைபெற்று முடிந்துள்ளது. இந்த முக்கிய மையக் குழு ஆலோசனைக் கூட்டத்தில் தமிழக பாரதிய ஜனதா கட்சியின் அனைத்து முக்கிய நிர்வாகிகளும் இணைந்து பங்கேற்றோம்” என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்தக் கூட்டத்தில் பேசிய அமித் ஷா, “தமிழகத்தில் பாஜக வாக்கு வங்கியை இழக்கவில்லை. தமிழகத்தில் மாவட்ட வாரியாக பாஜகவை பலப்படுத்த வேண்டும். சட்டமன்ற தேர்தல் முடிவுகளை தோல்வியாக கருத வேண்டாம். தனிப்பட்ட கருத்து வேறுபாடுகளைத் தவிர்த்துவிட்டு, அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். அடுத்தக் கட்டமாக உள்ளாட்சித் தேர்தல் மற்றும் மக்களவை தேர்தலை மனதில் வைத்து பாஜகவினர் தங்களின் பணிகளை மேற்கொள்ள வேண்டும்” என அறிவுறுத்தியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தவெக அரசின் முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடர்: ஜூன் 18

0

தமிழக சட்டப்பேரவை சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போது அவர், “தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டம் வரும் ஜூன் 18- ஆம் தேதி வியாழக்கிழமை அன்று காலை 10.00 மணிக்கு தலைமைச் செயலகத்தில் உள்ள சட்டமன்றப் பேரவைக் மண்டபத்தில் கூடும். அன்றைய தினம் தமிழ்நாடு பொறுப்பு ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேக்கர் உரையுடன் சட்டப்பேரவைக் கூட்டம் தொடங்குகிறது. சட்டப்பேரவைக் கூட்டடத்தொடரை எத்தனை நாட்கள் நடத்துவது என்பது குறித்து அலுவல் ஆய்வுக்குழு கூட்டம் நடத்தி பின்னர் அறிவிக்கப்படும் இந்தக் கூட்டத்தொடரில் ஆளுநர் உரையின்போது என்ன நடக்கிறது என்பதை நீங்களே பார்க்கப்போகிறீர்கள். அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களின் கோரிக்கை மனு தொடர்பாக இதுவரை முடிவு எடுத்திருந்தால் அறிவித்திருப்பேனே? அதிமுக உறுப்பினர்கள் கோரிக்கை தொடர்பாக ஆய்வு செய்து வருகிறேன். காத்திருங்கள் ஆய்வு முடிந்தபின் உரிய நேரத்தில் அறிவிக்கிறேன்.
சட்டப்பேரவையில் தவெக அரசு தமது பெரும்பான்மையை நிரூபித்த நிகழ்வு நேரலை செய்யப்பட்டது. சட்டப்பேரவைக் கூட்டத்தொடரை அதிகமாகப் பார்க்க வேண்டும் என்று மக்கள் தங்களது விருப்பத்தை தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக இளம் வயதினர், அரசியலில் நேரடி தொடர்பில் இல்லாதவர்கள் மிக ஆர்வத்தோடு சட்டமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள் மற்றும் தாங்கள் விரும்பித் தேர்ந்தெடுத்த முதலமைச்சரை நேரலையில் பார்க்க விரும்புகிறார்கள் என்பதை அறிந்துள்ளேன். சட்டப்பேரவை நிகழ்வுகள் முழுவதுமாக நேரலை செய்வது தொடர்பாக உரிய நேரத்தில் அறிவிப்புகள் வெளியிடப்படும்” என்று சபாநாயகர் ஜேடிசி பிரபாகர் தெரிவித்துள்ளார். இந்த கூட்டத்தொடரில் 2026- 2027 ஆம் நிதியாண்டிற்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்படவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. தவெக அரசு தாக்கல் செய்யும் முதல் பட்ஜெட் என்பதால் பொதுமக்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. தமிழ்நாடு சட்டப்பேரவைக் கூட்டம் பொதுவாக காலை 09.30 மணிக்கு தொடங்கும் நிலையில், வரும் ஜூன் 18- ஆம் தேதி நடைபெறும் கூட்டத்தொடர் காலை 10.00 மணிக்கு தொடங்கும் என்று சபாநாயகர் அறிவித்துள்ளார். கடந்த காலங்களில் காலை 10.00 மணிக்கே சட்டப்பேரவை கூட்டத்தொடர் கூடியது.

இருப்பினும், சட்டப்பேரவையில் மக்கள் பிரச்சனைகளை பேச கூடுதல் நேரம் தேவைப்படுவதாகக் கூறி, கடந்த திமுக ஆட்சியில் அவை விதிகளில் திருத்தம் கொண்டு வரப்பட்டு கடந்த 2024- ஆம் ஆண்டு ஜூலை முதல் காலை 09.30 மணிக்கு கூட்டத்தொடர் தொடங்கி நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

யாரேனும் தவறு செய்தால்’.. அதிர்ந்த அமைச்சர்கள்…

0

தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் தலைமையில் சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று (ஜூன் 05) காலை  அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. ‘வெற்றி தமிழகம்’ என்ற தலைப்பில் நடைபெற்ற இந்த அமைச்சரவைக் கூட்டத்தில் அனைத்து அமைச்சர்களும் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் பட்ஜெட் தாக்கல், ஆளுநர் உரை, தொழில் முதலீடுகள், டாஸ்மாக் விவகாரம், நிதிநிலை குறித்த வெள்ளை அறிக்கை, சட்டமன்றத் தேர்தலில் தவெக அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவது, வேலைவாய்ப்பு, மகளிர் உரிமைத்தொகை உள்ளிட்டவைக் குறித்து அமைச்சர்களுடன் முதலமைச்சர் விஜய் விரிவாக ஆலோசனை நடத்தியதாகக் கூறப்படுகிறது. சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில், அமைச்சர்களுக்கு பல்வேறு அறிவுறுத்தல்களை முதலமைச்சர் விஜய் வழங்கினார். அமைச்சர்கள் மக்களுக்காக உழைக்க வேண்டும், லஞ்சம் லாவண்யம் கட்டாயம் செய்யக்கூடாது. அவ்வாறு செய்தால் சம்பந்தப்பட்டவர்கள் மீது உடனடியாக கடும் நடவடிக்கை எடுக்கப்படும்” என்று முதலமைச்சர் எச்சரிக்கை விடுத்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும், அமைச்சர்கள் மக்கள் நலன் சார்ந்த திட்டங்களை விரைந்து செயல்படுத்த வேண்டும், தேர்தல் வாக்குறுதிகளை விரைவாக நிறைவேற்ற வேண்டும் என முதலமைச்சர் விஜய் அறிவுறுத்தியதாக தெரிகிறது. அமைச்சர்கள் மட்டுமின்றி அவர்களின் கீழ் பணியாற்றக் கூடியவர்களும் தவறு செய்யாத வகையில் பார்த்துக் கொள்ள வேண்டும். ‘Clean Government’ ஆக பணியாற்றுவதே இலக்கு. நாம் செயல்பாட்டுக்கு கொண்டு வரும் திட்டங்கள் அனைத்தும் மக்களிடம் சென்று சேர வேண்டும். திட்டங்கள் அனைத்தும் மக்களிடம் சென்று சேர்கிறதா என்பதையும் அமைச்சர்கள் கவனிக்க வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளார்.

தமிழ்நாடு முதலமைச்சராக விஜய் பதவியேற்றவுடன் நடைபெற்ற இந்த முதல் அமைச்சரவைக் கூட்டம், தவெக அரசின் பட்ஜெட்டில் பல்வேறு அறிவிப்புகள் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

2031 தேர்தலில் போட்டி …புதிய அரசியல் இயக்கத்தை ஆரம்பித்தார் அண்ணாமலை.

0

தமிழ்நாட்டில் சட்டப் பேரவைத் தேர்தலுக்கு முன், அதிமுகவுடன் பாஜக கூட்டணி அமைத்தது. இதனையடுத்து, பாஜகவின் மாநிலத் தலைவர் பதவியில் இருந்த அண்ணாமலை மாற்றப்பட்டு அவருக்குப் பதில் புதிய தலைவராக நயினார் நாகேந்திரன் நியமிக்கப்பட்டார். சட்டப் பேரவைத் தேர்தலில் போட்டியிட அண்ணாமலைக்கு வாய்ப்பு வழங்கப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அது நடக்கவில்லை.

ஆனால், காரைக்குடி, சிங்காநல்லூர், ஸ்ரீவைகுண்டம், விருகம்பாக்கம், மதுரை (தெற்கு) மற்றும் பத்மநாபபுரம் ஆகிய 6 சட்டமன்றத் தொகுதிகளுக்கு மட்டும் தேர்தல் பொறுப்பாளராக அண்ணாமலை நியமிக்கப்பட்டார். ஆனால், அவர் அதனை ஏற்றுக் கொள்ளவில்லை. இந்த தேர்தலில் அதிமுக கூட்டணியில் 27 தொகுதிகளில் போட்டியிட்ட பாஜக ஒரே ஒரு தொகுதியில் மட்டும் வெற்றி பெற்றது.
இதனிடையே, அண்ணாமலை தனிக்கட்சி தொடங்கப் போவதாக கடந்த சில நாட்களாக சமூக ஊடகங்களில் தகவல்கள் வெளியாகின. இதனை நிரூபிக்கும் வகையில், கடந்த 2 நாட்களுக்கு முன் டெல்லி பயணம் மேற்கொண்ட அண்ணாமலை உள்துறை அமைச்சர் அமித் ஷா உள்ளிட்டோரை சந்தித்தார். அப்போது அவர் பாஜகவின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்து விலகிக் கொள்வதாக கடிதம் அளித்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில், அண்ணாமலையின் ராஜிநாமா ஏற்றுக் கொள்ளப்பட்டதாக பாஜக தலைமை இன்று அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.இந்த நிலையில், இன்று நண்பகல் 12 மணிக்கு சமூக வலைதளத்தில் அண்ணாமலை பேசினார். அப்போது அவர், “பாஜகவில் 2020-ம் ஆண்டு ஆகஸ்ட் 25 ஆம் தேதி டெல்லியில் இருந்து வந்து இணைந்தேன். தமிழ்நாட்டு மக்களுக்காக 6 ஆண்டுகள் பணியாற்றியதை மிகப் பெரிய பாக்கியமாக கருதுகிறேன். புதிய அரசியலை உருவாக்க வேண்டும் என்ற எண்ணத்தோடு பாஜகவில் இருந்து விலகியுள்ளேன். இன்று முதல் புதிய அரசியல் இயக்கத்தை தொடங்குகிறோம். இதுவரை எனது அரசியல் பாதை வளைந்து, நெளிந்து இருந்தது. இது எளிதானது அல்ல. அதனால் ஒரு சில கருத்துக்களை தற்போது பகிர விரும்புகிறேன்.
முதலில் ஐஐம் லக்னோவில் படிக்கும் போது 25 வயதில், விஜயகாந்த் தலைமையிலான தேமுதிகவில் இண்டர்ன்ஷிப் செய்யும் வாய்ப்பு கிடைத்தது. அங்கு 3 மாதங்கள் பணியாற்றும் வாய்ப்பு கிடைத்தது. தொடர்ந்து பாஜகவில் இணைவதற்கு முதல் நாள், நடிகர் ரஜினிகாந்த் என்னை தொடர்பு கொண்டு அவர் தொடங்கவிருந்த அரசியல் கட்சியில் இணைய வேண்டும் என கேட்டுக் கொண்டார். அவரிடம் எனக்கு நீண்ட கால நட்பு உள்ளது. அவருடைய அரசியல் பாதை எப்படி இருக்க வேண்டும் என பல முறை அவரிடம் பேசியுள்ளேன். ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவது தான் தமிழ்நாட்டிற்கு நல்லது. ஆனால் கோவிட் கால கட்டத்தில் அரசியலுக்கு வராமல் இருப்பது தான் அவருக்கு நல்லது. இது பற்றி ரஜினிகாந்த்திடம் தெரிவித்து விட்டு பாஜகவில் இணைந்தேன். பிறகு அவரை சந்தித்து மன்னிப்பு கேட்டேன். அவரும் பெருந்தன்மையாக ஏற்றுக் கொண்டார்“ என்றார்.தொடர்ந்து பேசிய அண்ணாமலை, “என்னிடம் பலர் நீங்கள் தமிழனா? இந்தியனா? என கேட்பார்கள். எனது பெற்றோர் தமிழ்நாட்டை விட்டு வேறு மாநிலங்களுக்கு சென்றதில்லை. ஆனால் நான் தமிழ்நாட்டை விட்டு லக்னோ, டெல்லி, ஹைதராபாத் போன்ற நகரங்களிலும், கர்நாடகா போன்ற மாநிலங்களிலும் படிக்கவும் பணியாற்றவும் செய்துள்ளேன். நான் ஒரு பெருமைமிகு இந்தியன், பாரம்பரியம் மிக்க தமிழன். தமிழ்நாட்டில் மக்களோடு பயணித்து, சமரசமில்லாமல் மாநிலத்தின் வளர்ச்சியை உங்களோடு முன்னெடுத்து செல்ல வேண்டும்“ என்றார்.மேலும் பாஜகவில் இருந்து வெளியேறியது குறித்தும் அவர் பேசினார். அப்போது அவர், “தமிழ்நாட்டில் உள்ளாட்சி தேர்தல், மக்களவை தேர்தல் ஆகியவற்றில் பாஜக தனித்து போட்டியிட வேண்டும் என அப்போது கட்சியின் தலைவராக இருந்த ஜே.பி.நட்டாவிடம் கூறினேன். ஆனால், எனது கருத்து ஏற்கபடவில்லை. மேகதாது அணை விவகாரத்தில் தமிழ்நாடு பாஜக சார்பில் கர்நாடகாவில் ஆட்சியில் இருந்த பாஜகவை எதிர்த்து உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினோம். பிரதமர் மோடி மீது மிகப்பெரும் மரியாதை உள்ளது. ஆனால் ஒரு கட்டத்தில் பல பிரச்சனைகள் குறித்து எடுத்து கூறினேன். கடந்த 18 மாதங்களாக பாஜக தலைமையுடன் எனக்கு கருத்து வேறுபாடு இருந்தது. இதனையடுத்து கடந்த டிசம்பர் 4 ஆம் தேதி பாஜகவில் இருந்து விலகுவதாக கூறினேன். ஆனால் தேர்தல் பணியை முடித்து விட்டு செல்ல சொன்னார்கள். அதனால் பணியாற்றினேன். கட்சியில் இருந்து விலகுவது என்பது உடனடியாக எடுத்த முடிவு அல்ல“ என்றும் அண்ணாமலை கூறினார். தொடர்ந்து தனது அடுத்தகட்ட அரசியல் நகர்வு குறித்தும் அண்ணாமலை அறிவித்தார். அப்போது அவர், “தற்போது தமிழ்நாட்டில் அரசியல் இயக்கத்தை தொடங்குகிறோம். வரும் 2031 சட்டப் பேரவைத் தேர்தலில் இதனை கட்சியாக மாற்றி போட்டியிடுவோம். தமிழ் கலாச்சாரம், மாநில உரிமைகள் மற்றும் தேசிய பார்வை ஆகியவற்றை ஒருங்கிணைத்த ஒரு ‘தமிழ்-முதல்’ மற்றும் மதச்சார்பற்ற கொள்கைப் பாதையில் இந்த இயக்கம் பயணிக்கும். முதலில் அரசியல் இயக்கத்திற்கான கட்டமைப்புகளை உருவாக்க வேண்டும். அதற்கு சற்று அவகாசம் தேவை. இன்னும் 6 முதல் 8 மாதங்களுக்குள் இது அரசியல் கட்சியாக முழு வடிவம் பெறும். அப்போது அதன் பெயர் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும். ஆனால், களப்பணிகள் இப்போதே தொடங்கி விட்டன. அனைவரையும் முன்னிலைப்படுத்தும் அரசியலை முன்னெடுக்க வேண்டும். பழைய அரசியலில் இருந்து வெளியே வர வேண்டும்.
பண பலம் மற்றும் குடும்ப அரசியலை சார்ந்து இல்லாமல், தமிழக இளைஞர்களை முன்னிறுத்தி தூய்மையான அரசியல் செய்வதே இலக்கு“ என்றும் அவர் கூறினார்.

மேலும், www. betheleader.org என்ற இயக்கத்தின் இணையதளத்தையும் அண்ணாமலை அறிமுகப்படுத்தினார். இதில் பொதுமக்கள் உறுப்பினர்களாக இணைந்து கொள்ளலாம் என்றும் அவர் அறிவித்தார்.தொடர்ந்து பேசிய அண்ணாமலை, கோயம்புத்தூரில் ‘APJ center for ethics and politics’ என்ற மையம் தொடங்கப்படுவதாகவும், அங்கு இளைஞர்களுக்கு அரசியல் பயிற்சி வழங்கப்படும் என்றும் கூறினார். இது தொடர்பாக மேலும் பேசிய அவர், நமது இயக்கத்தை சேர்ந்தவர்கள் எந்த தேர்தலிலும் போட்டியிடுவதற்கு முன்பு, இந்த மையத்தில் பயிற்சி பெற வேண்டும். அவர்கள் மக்களின் தேவைகளை புரிந்து கொள்ள வேண்டும். நாம் மாறினால் மாற்றம் நடக்கும். எனக்கு யார் மீதும் வன்மம் கிடையாது.

இந்த இயக்கம் மக்களுக்கான பாதையாக இருக்க வேண்டும். தமிழ்நாட்டில் திமுக, அதிமுக, தவெக உள்ளிட்ட கட்சிகளை போன்று பாஜகவை பார்க்கிறேன். நாம் யாருக்கும் போட்டி கிடையாது என்றும் தெளிவுபடுத்தினார்.

மகளிர் உரிமை தொகை… பெண்களுக்கு இனி மாதம் ₹3000..!

0

மேற்கு வங்க அரசு பெண்களுக்கான புதிய வரலாற்றுச் சிறப்புமிக்க நலத்திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. ‘அன்னபூர்ணா பண்டார்’ என்ற பெயரில் அறிமுகமாகியுள்ள அன்னபூர்ணா யோஜனா 2026 திட்டத்தை முதலமைச்சர் சுவேந்து அதிகாரி ஹவுராவில் உள்ள மாநில தலைமைச் செயலகம் ‘நபன்னா’வில் அதிகாரப்பூர்வமாகத் தொடங்கி வைத்தார்.இந்தத் திட்டத்தின் கீழ் தகுதியான பெண்களுக்கு மாதந்தோறும் ₹3,000 நிதியுதவி நேரடியாக வங்கிக் கணக்கில் வழங்கப்படும். தொடக்க விழாவில் முதலமைச்சர் சுவேந்து அதிகாரி மற்றும் பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை அமைச்சர் அக்னிமித்ரா பால் ஆகியோர் ஐந்து பெண் பயனாளிகளுக்கு நிதியுதவிக் காசோலைகளை நேரில் வழங்கினர்.விழாவில் உரையாற்றிய முதலமைச்சர் சுவேந்து அதிகாரி, முதற்கட்டமாக 28,25,769 பெண்கள் இத்திட்டத்தின் கீழ் அங்கீகரிக்கப்பட்டுள்ளதாக அறிவித்தார். அனைவருக்கும் மாதந்தோறும் ₹3,000 நிதி நேரடியாக வழங்கப்படும் என்றார். இன்னும் தகுதியான பெண்கள் பதிவு செய்ய அடுத்த 90 நாட்கள் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. அரசு சார்பில் முழுமையான உதவி வழங்கப்படும் என்றும் உறுதியளித்தார். அன்னபூர்ணா பண்டார் திட்டத்தில் பயன்பெற 25 முதல் 60 வயது வரையிலான பெண்கள் விண்ணப்பிக்கலாம். இது பாரதிய ஜனதா கட்சியின் (BJP) முக்கிய தேர்தல் வாக்குறுதியாகும். முந்தைய ‘லக்ஷ்மிர் பண்டார்’ திட்டத்தில் வழங்கப்பட்ட ₹1,500 உதவியை இரட்டிப்பாக்கி ₹3,000 ஆக வழங்குவோம் என்ற வாக்குறுதியை ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு நிறைவேற்றியுள்ளனர். அமைச்சர் அக்னிமித்ரா பால் பேசுகையில், முந்தைய லக்ஷ்மிர் பண்டார் திட்டத்தில் பயன்பெற்ற பயனாளிகளும் கூட புதிய திட்டத்திற்கு மீண்டும் பதிவு செய்ய வேண்டும் என்றார். முந்தைய திட்டத்தில் ஏராளமான முறைகேடுகள் மற்றும் ஊழல் புகார்கள் எழுந்ததால், தற்போது அனைத்து விண்ணப்பங்களும் புதிய முறையில் கடுமையாக பரிசீலிக்கப்படுகின்றன என்று விளக்கினார். முன்பு சுமார் 2.2 கோடி பயனாளிகள் இருந்ததாகக் கூறப்படுகிறது. முறைகேடுகளைத் தடுக்க பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. மேற்கு வங்க தலைமைச் செயலாளர் மனோஜ் அகர்வால் கூறுகையில், பயனாளிகள் பட்டியல் முழுமையாக பொதுவில் வெளியிடப்படும் என்றார். தகுதியற்ற நபர்கள் பலன் பெற்றால் பொதுமக்கள் ஆட்சேபனை தெரிவிக்கலாம். இதன் மூலம் வெளிப்படைத்தன்மை உறுதி செய்யப்படும் என்றார். எனினும், அரசு வெளியிட்டுள்ள 11 பக்கங்கள் கொண்ட நீண்ட விண்ணப்பப் படிவம் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. எளிய பெண்களுக்கு இந்தப் படிவம் மிகவும் சிக்கலானதாகவும், நீளமானதாகவும் உள்ளதாக பல்வேறு தரப்பினரும் கடுமையாக விமர்சித்துள்ளனர். இந்த விமர்சனங்களுக்கு மத்தியிலும், தகுதியான அனைத்து பெண்களுக்கும் நிதியுதவி சென்றடைய அரசு உறுதியுடன் செயல்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இத்திட்டம் மேற்கு வங்க பெண்களின் பொருளாதார சுயசார்பை வலுப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக கிராமப்புற மற்றும் நடுத்தர வருமான குடும்பங்களைச் சேர்ந்த பெண்களுக்கு பெரும் நிவாரணமாக அமையும். தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றியதன் மூலம் பாஜக அரசு பெண் வாக்காளர்களுக்கு நம்பிக்கை அளித்துள்ளது.அன்னபூர்ணா யோஜனா 2026 திட்டம் மேற்கு வங்க அரசியலில் முக்கிய மைல்கல்லாகப் பார்க்கப்படுகிறது. முந்தைய திட்டத்தின் குறைபாடுகளைத் தீர்த்து, மிகவும் வெளிப்படையான முறையில் செயல்படுத்த அரசு முயற்சி எடுத்துள்ளது. அடுத்த மூன்று மாதங்களில் எத்தனை புதிய பயனாளிகள் இணைகிறார்கள் என்பதைப் பொறுத்து திட்டத்தின் வெற்றி அளவிடப்படும்.

தமிழ்நாடு மின்சார வாரியத்தின் ஹார்டு டிஸ்க் திருட்டில் அதிகாரிகளுக்குப் பங்கா..?

0

அண்ணா சாலையில் உள்ள மின்சார வாரியத்தின் (TNEB) தலைமையகத்திலிருந்து, குறிப்பாக டெண்டர்கள் மற்றும் கொள்முதல்கள் மேலும் நடைபெற்று வரும் விசாரணைகள் தொடர்பான பதிவுகள் அடங்கிய, ரகசியத் தரவுகள் உள்ள சுமார் 18 ஹார்டு டிஸ்க்குகள் திருடப்பட்டுள்ளன.

செயலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், முக்கிய பதிவுகள் மற்றும் ஆவணங்களைப் பாதுகாக்கும் பொருட்டு, திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடியில் உள்ள அலுவலகங்கள் உட்பட, மாநிலம் முழுவதும் உள்ள தமிழ்நாடு மின்சார வாரியத்தின் (TNEB) பல்வேறு பிரிவுகள் மற்றும் அதன் அலுவலகங்களை அரசு ஆய்வு செய்து வருவதாகத் தெரிவித்தார்.

“முக்கியமான ஆவணங்கள் மற்றும் டிஜிட்டல் பதிவுகளின் பாதுகாப்பை உறுதி செய்வதே எங்களின் முதன்மை நோக்கம். இந்த வழக்கு தொடர்பாக போலீசார் சிலரைக் கைது செய்துள்ளனர். இருப்பினும், இந்த நிலையில் மேலதிக விவரங்களை எங்களால் வெளியிட இயலவில்லை. விசாரணை முடிந்தவுடன், அனைத்து உண்மைகளும் பொதுமக்களுக்குத் தெரிவிக்கப்படும்,” என்று அவர் கூறினார்.
தமிழ்நாடு பசுமை எரிசக்தி கழகத்தின் (TNGECL) அதிகாரிகள் மீது சமீபத்தில் எடுக்கப்பட்ட ஒழுங்கு நடவடிக்கையைக் குறிப்பிட்டுப் பேசிய நிர்மல் குமார், ஹார்டு டிஸ்க் திருட்டு நடந்த நேரம், இதற்கும் அதற்கும் தொடர்பு இருக்கலாம் என்ற சந்தேகத்தை எழுப்பியுள்ளது என்றார்.
“TNGECL நிறுவனத்தின் தலைமை நிதிக் கட்டுப்பாட்டாளர் மற்றும் தொழில்நுட்ப இயக்குநர் உள்ளிட்ட சில அதிகாரிகள் சமீபத்தில் இடைநீக்கம் செய்யப்பட்டனர். இந்தச் சூழ்நிலையில், ஹார்டு டிஸ்க் திருட்டு நடைபெற்றுள்ளது. எனவே, இடைநீக்கங்களுக்கும் திருட்டுக்கும் இடையே ஏதேனும் தொடர்பு இருக்கலாம் என நாங்கள் சந்தேகிக்கிறோம். விசாரணை உண்மையை வெளிப்படுத்தும்,” என்று அவர் கூறினார். திருட்டுக்கான நோக்கத்தையும், அதற்குப் பொறுப்பானவர்களையும் அரசாங்கம் இன்னும் கண்டறியவில்லை என்று அமைச்சர் கூறினார்.
ஹார்ட் டிஸ்க்குகள் ஏன் திருடப்பட்டன என்றோ அல்லது இந்தச் சம்பவத்தின் பின்னணியில் யார் இருக்கிறார்கள் என்றோ எங்களுக்குத் தெரியாது. இதில் சம்பந்தப்பட்டவர்கள் தப்பித்துவிடலாம் என்று நம்பலாம், ஆனால் தகவல்களை மீட்பதற்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் நாங்கள் எடுத்து வருகிறோம்,” என்று அவர் கூறினார். டிஜிட்டல் காப்புப்பிரதிகள் மற்றும் பிற தொழில்நுட்ப வழிமுறைகள் மூலம் தரவுகளை மீட்டெடுப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அவர் குறிப்பிட்டார். முக்கியமான ஆவணங்களை மீட்டெடுக்க முடியும் என்பதில் நாங்கள் நம்பிக்கையுடன் உள்ளோம். இந்தக் குற்றத்தில் ஈடுபட்ட எவரும் தப்பிக்க விடப்பட மாட்டார்கள். இதற்குப் பொறுப்பானவர்கள் எனக் கண்டறியப்பட்ட அனைவர் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்,” என்று அவர் மேலும் கூறினார். கடந்த ஐந்து ஆண்டுகளில் மின்சார நிறுவனத்தால் மேற்கொள்ளப்பட்ட மின் கொள்முதல் ஒப்பந்தங்கள், டெண்டர்கள் மற்றும் பிற முக்கிய பரிவர்த்தனைகள் தொடர்பான விவரங்களைத் தொகுக்குமாறு மாநில அரசு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளதாக நிர்மல் குமார் மேலும் தெரிவித்தார் . இந்தப் பணி அடுத்த ஓரிரு நாட்களில் நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. முந்தைய ஆட்சியின் போது நடந்ததாகக் கூறப்படும் மின்மாற்றி கொள்முதல் ஊழல் குறித்துக் குறிப்பிட்ட அமைச்சர், மேலதிக விசாரணைக்காக சில ஆவணங்கள் ஏற்கனவே மத்திய புலனாய்வுத் துறையிடம் (சிபிஐ) ஒப்படைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.

அனுமதியின்றி குடிநீர் குழாய் இணைப்பு கொடுத்த தவெகவினர் ..!

0

அன்னூர் மேட்டுப்பாளையம் ஊராட்சியில் ,பட்டக்காரன் புதூர் மற்றும் கரப்பாளையம் புதூர் ஆகிய கிராமங்களில் சுமார் 300-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இங்கு வசிக்கும் மக்களுக்கு ஊராட்சி நிர்வாகம் சார்பில் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

பட்டக்காரன் புதூர் கிராமத்தில் உள்ள சில வீடுகளில் வசிப்பவர்கள் குடிநீர் வசதியின்றி அவதிப்பட்டு வந்தனர். இதனையடுத்து அவர்கள், ஊராட்சி நிர்வாகத்திடம் குடிநீர் இணைப்பு கேட்டு விண்ணப்பித்திருந்தனர். ஆனால் ஊராட்சி நிர்வாகம் இதுவரை எவ்விதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது.

இந்நிலையில், அந்த பகுதியை சேர்ந்த தவெக நிர்வாகிகள் சிலர், ஊராட்சி குடிநீர் குழாயில் இணைப்பு எடுத்து அந்த வீடுகளுக்கு குடிநீர் வசதி செய்து கொடுத்துள்ளனர். தவெகவினர் ஜே.சி.பி இயந்திரங்களை கொண்டு குழி தோண்டி குடிநீர் இணைப்பு கொடுத்த நிலையில், அது குறித்து அதே பகுதியை சேர்ந்த மற்றொரு கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் சட்ட விரோதமாக குடிநீர் இணைப்பு கொடுத்தது குறித்து அன்னூர் வட்டார வளர்ச்சி அலுவலத்திற்கும் புகார் தெரிவித்தனர். இதனை தொடர்ந்து, சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த அதிகாரிகள், எங்களிடம் அனுமதி பெறாமல் எப்படி குழி தோண்டினீர்கள்? எப்படி குடிநீர் இணைப்பு கொடுத்தீர்கள்? என தவெக நிர்வாகிகளை கேள்வி எழுப்பினர். இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த தவெகவினர் அதிகாரிகளுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது. மற்றொரு தரப்பினர் ஆளும் கட்சி என்றால் எது வேண்டுமானாலும் செய்யலாமா? இதற்கு அதிகாரிகள் அனுமதிக்கக்கூடாது என தெரிவித்தனர். இதனையடுத்து தோண்டிய குழிகளை மூடியதுடன், சட்டவிரோதமாக கொடுக்கப்பட்ட குடிநீர் இணைப்பும் துண்டிக்கப்பட்டது.

தவெக ஆட்சி அமைந்த பிறகு அக்கட்சியை சேர்ந்த நிர்வாகிகள் சிலர் அவ்வப்போது மருத்துவமனை, மாநகராட்சி மண்டல கூட்டங்களில் அனுமதி இன்றி நுழைந்து ஆய்வு மேற்கொள்வது சர்ச்சையை ஏற்படுத்தி வரும் நிலையில், ஊராட்சி நிர்வாகத்தின் அனுமதியின்றி சட்டவிரோதமாக குடிநீர் இணைப்பு கொடுத்தது பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

ரூ.18,600 கோடி முதலீடு; 8,200 பேருக்கு வேலைவாய்ப்பு – முதலமைச்சர் விஜய் முன்னிலையில் ஒப்பந்தம் கையெழுத்து…

0

18,600 கோடி முதலீட்டில் எல்&டி லிமிடெட் நிறுவனத்திற்கும், தமிழ்நாடு அரசிற்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.

இது குறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “தமிழ்நாட்டில் எல்&டி நிறுவனம் தொடர்ந்து முதலீடுகள் மேற்கொண்டு தொழில்துறையில் வலுவான தடம் பதித்துள்ளது. மேலும் தமிழ்நாட்டில் பரவலாகவும், வெவ்வேறு துறைகளிலும் மேலும் 18,600 கோடி ரூபாய் முதலீட்டில் 8,200 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் மூன்று திட்டங்கள் அமைக்க முன்வந்துள்ளது. தமிழ்நாட்டில் இந்நிறுவனத்தின் எதிர்கால வளர்ச்சி மற்றும் விரிவாக்கத் திட்டங்களுக்கு மாநில அரசின் முழுமையான ஒத்துழைப்பும், ஆதரவும் தொடர்ந்து வழங்கும்.
லார்சன் & டூப்ரோ லிமிடெட் (L&T) நிறுவனம், தமிழ்நாட்டில் மேற்கொள்ள இருக்கும் மூன்று திட்டங்கள்காஞ்சிபுரம் மாவட்டத்தில் 15,000 கோடி ரூபாய் முதலீட்டில் 500 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில், தகவல் தரவு மைய விரிவாக்கத் திட்டம்,
கோயம்புத்தூரில் 2,500 கோடி ரூபாய் முதலீட்டில் 2,000 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில், மின்னணுப் பொருட்கள் மற்றும் மின்னணு அமைப்புகள் உற்பத்தித் திட்டம்,
திருவள்ளூர் மாவட்டத்தில், 1,100 கோடி ரூபாய் முதலீட்டில் 5,700 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில், காட்டுப்பள்ளி எல்&டி கப்பல் கட்டும் தளம் விரிவாக்கத் திட்டம்.2036- ஆம் ஆண்டிற்குள் தமிழ்நாட்டின் பொருளாதாரத்தை 1.5 டிரில்லியன் டாலராக உயர்த்த வேண்டும் என்ற தமிழ்நாடு முதலமைச்சரின் இலட்சிய இலக்கினை எய்துவதற்கான முயற்சியின் மைல் கல்லாக இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் இருக்கும். பல்துறை சார்ந்த இம்முதலீடுகளின் மூலம் மாநிலத்தில் டிஜிட்டல் உள்கட்டமைப்பு மற்றும் செயற்கை நுண்ணறிவுச் செயல்பாடுகள் வளர்ச்சிப் பெறுவதுடன், மின்னணுவியல் உற்பத்தி சூழலமைப்பு மேம்படும்.

மேலும் காட்டுப்பள்ளி திட்டம், கடலோர காற்றாலை கட்டுருவாக்கத் தொழிலுக்கு உலகத்தரம் வாய்ந்த உள்கட்டமைப்பைக் கொண்டு வரும். இத்திட்டங்கள் செயலாக்கப்படுவதன் மூலம் தமிழ்நாட்டு இளைஞர்களுக்கு பெரிய அளவிலான நேரடி மற்றும் மறைமுக வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படுவதுடன், மாநிலத்தின் பொருளாதாரமும் மேம்படும்.தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் தலைமையிலான அரசு பொறுப்பேற்ற பின்னர், தொழில் துறையில் மேற்கொள்ளப்படும் முதல் புரிந்துணர்வு ஒப்பந்தம்” என தெரிவிக்கப்பட்டுள்ளது