நிலுவையில் உள்ள இரட்டை இலை சின்னம் விவகாரம் குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்று அதிமுகவில் இருந்து அண்மையில் நீக்கப்பட்ட அக்கட்சியின் மூத்த தலைவரும், சட்டமன்ற உறுப்பினருமான செங்கோட்டையன் தேர்தல் ஆணையத்திற்கு கடிதம் எழுதியுள்ளார்.
அதில் நிலுவையில் உள்ள இரட்டை இலை சின்னம் விவகாரத்தை தேர்தல் ஆணையம் கையில் எடுத்து விசாரிக்க வேண்டும். மேலும் ஈபிஎஸ் தலைமைத் தாங்குவது உண்மையான அதிமுக இல்லை. கட்சியின் உண்மை நிலையை நிரூபிக்க அவகாசம் தேவை என்று அக்கடிதத்தில் குறிப்பிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதிமுகவின் மூத்த நிர்வாகிகளில் ஒருவரான முன்னாள் அமைச்சரும், கோபிசெட்டிபாளையம் தொகுதி எம்எல்ஏ-வுமான செங்கோட்டையனை அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அண்மையில் அதிரடியாக நீக்கினார். எடப்பாடி பழனிசாமிக்கும், செங்கோட்டையனருக்கும் கடந்த ஓராண்டு காலமாகவே மோதல் போக்கு இருந்து வந்தது. அதிமுகவில் எம்ஜிஆர் காலத்தில் இருந்தே தான் பொறுப்பு வகித்துவரும் நிலையில், கட்சி சார்பில் எடுக்கப்படக்கூடிய முக்கிய முடிவுகளில் தனது தலையீடு இல்லையே என்ற எண்ணம் செங்கோட்டையனுக்கு வெகு நாட்களாக இருந்து வந்ததாகவும் கூறப்பட்டது. இதுபோன்ற பல நிகழ்வுகளால் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான மனநிலையில் செங்கோட்டையன் இருந்து வந்தார்.இந்நிலையில் கடந்த அக்டோபர் 30ஆம் தேதி அன்று, இராமநாதபுரத்தில் நடைபேற்ற முத்துரமலிங்க தேவரின் குருபூஜையில் அதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட முன்னாள் முதலமைச்சர் ஓபிஎஸ், டிடிவி தினகரன் ஆகியோர் கலந்து கொண்டு தேவர் சிலைக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர். இந்த நிகழ்வில் முன்னாள் முதலமைச்சர் ஓபிஎஸ் வாகனத்தில் அவருடன் ஒன்றாக வந்த செங்கோட்டையன், அவர்களுடன் ஒன்றாக தேவர் சிலைக்கு மாலை அணிவித்து அஞ்சலி செய்தார்.
இந்த நிகழ்வு அரசியல் வட்டாரத்தில் புயலை கிளப்பியது. மேலும் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட ஓபிஎஸ், டிடிவி தினகரன், சசிகலா ஆகியோருடன் செங்கோட்டையன் இணைந்து பயணித்து, அதிமுகவை எடப்பாடியிடம் இருந்து மீட்கப் போவதாக கூறப்படுகிறது. இதன் எதிரொலியாக அதிமுகவின் கட்சி விதிகளுக்கு எதிராக செயல்பட்டதாக கூறி, அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியால் செங்கோட்டையன் அதிரடியாக நீக்கப்பட்டார். தன்னை நீக்கியதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், கட்சி விதிகளை முறையாக பின்பற்றாமல் தன்னை நீக்கிவிட்டதாக செய்தியாளர்கள் சந்திப்பின்போது எடப்பாடி மீது செங்கோட்டையன் குற்றம்சாட்டினார்.
கோவை பீளமேடு அருகேயுள்ள சர்வதேச விமான நிலையத்தின் பின்புறம், கடந்த (நவ.2) அன்று இரவு சுமார் 10.30 மணியளவில் கல்லூரி மாணவி ஒருவர் தனது ஆண் நண்பருடன் கார் ஒன்றில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தார். ஆள் நடமாட்டம் இல்லாத அந்த சாலையில் திடீரென கார் அருகே இரு சக்கர வாகனத்தில் வந்த மூவர், காரில் இருந்தவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். ஒரு கட்டத்தில் அது கைகலப்பாக மாற, அந்த மூவரும் மறைத்து வைத்திருந்த கத்தி மற்றும் இரும்பு கம்பியால் காரின் கண்ணாடிகளை அடித்து உடைத்து சேதப்படுத்தியுள்ளனர். இதனால் காரில் இருந்த ஆண் நண்பர் கீழே இறங்கியபோது, அவரது தலை மற்றும் கையில் அந்த 3 பேரும் கத்தியால் தாக்கியுள்ளனர். ரத்த வெள்ளத்தில் அவர் சரிந்ததை அடுத்து, காரில் இருந்த பெண்ணை இழுத்துச் சென்று, அருகிலிருந்த புதர் பகுதியில் வைத்து பாலியல் வன்கொடுமை செய்துவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர். படுகாயம் அடைந்த அந்த இளைஞர் போலீசாருக்கு தகவல் கொடுத்ததன் பேரில், போலீசார் சம்பவ இடத்துக்கு விருந்து சென்று அந்தப் பெண்ணை தேடத் தொடங்கினர்,அதிகாலை சுமார் 4 மணியளவில் போலீசார் அவர்களை மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இச்சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், இக்குற்றச்செயலில் ஈடுபட்ட மூவரையும் பிடிக்க தனிப்படைகள் அமைக்கப்பட்டு தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வந்தது. சம்பவம் நடந்த பகுதியில் சிசிடிவி கேமராக்கள் இல்லாததால் அந்த இடத்திற்கு செல்கிற வழிகளில் உள்ள சிசிடிவிகளை போலீசார் ஆய்வு செய்தனர். அப்போது குற்றச்செயலில் சம்பந்தப்பட்ட மூவரும் அங்கிருந்து தப்பி சென்றது தெரியவந்தது.
இதனையடுத்து குற்ற செயலில் ஈடுபட்ட மூவரையும் தீவிரமாக தேடும் பணியில் ஈடுபட்டனர். விசாரணையில் அவர்கள் மூவரும் கோவை துடியலூர் அருகேயுள்ள வெள்ளக்கிணறு பட்டத்தரசியம்மன் கோயில் அருகே பதுங்கியிருப்பது தெரியவந்தது. அவர்கள் மூவரையும் தனிப்படை போலீசார் கைதுசெய்ய முயன்றபோது அவர்கள் மறைத்து வைத்திருந்த அரிவாளால் காவலர் சந்திரசேகர் என்பவரை தாக்கியுள்ளனர். இதில் அவருக்கு இடது கையில் காயம் ஏற்பட்டது. தப்பியோட முயன்ற மூன்று பேரின் கால்களிலும் பீளமேடு காவல் ஆய்வாளர் அர்ஜுன், சரவணம்பட்டி காவல் ஆய்வாளர் ஞானசேகரன் ஆகியோர் துப்பாக்கியால் சுட்டு பிடித்தனர். அவர்கள் மூவரையும் கோவை அரசு மருத்துவமனையில் போலீசார் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், கைது செய்யப்பட்டுள்ள குணா என்கிற தவசி, சதீஷ் என்கிற கருப்பசாமி, கார்த்திக் என்கிற காலீஸ்வரன் ஆகிய 3 பேரும் சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் என்பதும், கோவை இருகூர் அருகே வீடு எடுத்து தங்கி, கட்டட வேலை செய்து வந்ததும் தெரியவந்துள்ளது.
இதில் கருப்பசாமி மற்றும் காலீஸ்வரன் இருவரும் சகோதரர்கள் என்பதும், இவர்கள் மீது ஒரு கொலை வழக்கு, வழிப்பறி, அடிதடி கடத்தல் போன்ற வழக்குகள் நிலுவையில் இருப்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. இதையடுத்து மூவர் மீதும் பெண் வன்கொடுமை வழக்கு, திருட்டு, வழிப்பறி, கொலை முயற்சி உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.
எடப்பாடி பழனிசாமியின், மாப்பிள்ளை இப்போது கட்சியில் தலையெடுத்து வருகிறார். அதிமுகவும் வாரிசு அரசியல் செய்து வருகிறது என்று அக்கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து அண்மையில் நீக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் பகிரங்கமாக குற்றஞ்சாட்டியுள்ளார்.
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில் இருந்து சென்னை செல்வதற்காக கோவை விமான நிலையம் வந்த அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவரிடம் கட்சியில் நீக்கப்பட்டது மற்றும் அடுத்தகட்ட நகர்வு குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அப்போது பதிலளித்த அவர், “புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். காலத்தில் இருந்து நான் ஒரே நிலைப்பாட்டில்தான் இருக்கிறேன். இந்த இயக்கம் வலிமை பெற வேண்டும் என எம்.ஜி.ஆர் காலத்திலிருந்தே எனது முழுமையான உழைப்பை கொடுத்து வந்தேன். என்னை பொருத்தவரை தன்னால் முடியாததை முடியும் என்று சொல்லி தன்னையும், பிறரையும் ஏமாற்றுபவர்கள் நேரத்தையும் பிறரின் உழைப்பையும் கெடுக்கிறார்கள். அப்படிபட்டவர் தான் எடப்பாடி பழனிசாமி. திமுகவில் மட்டும் குடும்ப அரசியல் இல்லை. அதிமுகவிலும் வாரிசு அரசியல் உள்ளது. எடப்பாடி பழனிசாமியின் மைத்துனர், மாப்பிள்ளை என அவரது குடும்பத்தினர்கள் அதிமுகவில் தலையெடுத்து வருவது அனைவரும் அறிந்த உண்மை” என்று செங்கோட்டையன் கூறினார்அதிமுகவில் இருந்து நீக்கம்: அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட ஓபிஎஸ் உள்ளிட்டோரை கட்சியில் மீண்டும் சேர்க்க வேண்டும் என கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் கெடு விதித்தார். இதனையடுத்து அவரிடம் இருந்த கட்சிப் பதவிகள் அனைத்தையும் எடப்பாடி பழனிசாமி பறித்தார். இந்நிலையில் தேவர் ஜெயந்தியை முன்னிட்டு பசும்பொன்னில் முத்துராமலிங்க தேவர் சிலைக்கு ஓபிஎஸ், டிடிவி தினகரனுடன் இணைந்து செங்கோட்டையன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அப்போது எடப்பாடி பழனிசாமியை திமுகவின் பி டீம் என செங்கோட்டையன் முன்னிலையிலேயே டிடிவி தினகரன் விமர்சித்தார்.
எடப்பாடி பழனிசாமி மீதான குற்றச்சாட்டு: இதையடுத்து அதிமுகவில் இருந்து செங்கோட்டையன் நீக்கப்படுவதாக எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். தொடர்ந்து எடப்பாடி பழனிசாமி மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை செங்கோட்டையன் அடுக்கினார். அதில் என்னை திமுகவின் ‘பி’ டீம் என இபிஎஸ் விமர்சிக்கிறார். கொடநாடு வழக்கில் இபிஎஸ் தான் ஏ1. நான் யாருக்கும் எப்போதும் பி டீம் இல்லை. யார் பி டீம் என தமிழக மக்களுக்கு நன்கு தெரியும். இபிஎஸ் தற்போது தற்காலிக பொதுச் செயலாளராக மட்டுமே இருந்து வருகிறார். பொதுச் செயலாளரை தொண்டர்கள் தேர்ந்தெடுக்க வேண்டும் என்ற விதி அதிமுகவில் உள்ளது. இதுதொடர்பான வழக்கு இன்னும் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. எனவே, அவர் என்னை எந்த அடிப்படையில் கட்சியில் இருந்து நீக்கினார் என்று தெரியவில்லை. இதுதொடர்பாக வழக்கறிஞர்களுடன் பேசி அடுத்தகட்ட நடவடிக்கை எடுப்பேன் என்று சில தினங்களுக்கு முன் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
பா.ஜ.க. மாநில முன்னாள் தலைவர் அண்ணாமலை “X” தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,
கோவை சர்வதேச விமான நிலையம் அருகில், நேற்று இரவு, நண்பருடன் பேசிக் கொண்டிருந்த கல்லூரி மாணவி, 3 சமூக விரோதிகளால் கூட்டுப் பாலியல் வன்முறைக்குள்ளாக்கப்பட்ட செய்தி, மிகுந்த அதிர்ச்சி அளிக்கிறது. மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் மாணவி விரைந்து நலம் பெற வேண்டிக் கொள்கிறேன். தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு வந்த பின்னர், சமூக விரோதிகளுக்கு சட்டத்தின் மீதோ, காவல்துறையின் மீதோ சிறிதும் பயமில்லை என்பதையே, பெண்களுக்கெதிரான இது போன்ற தொடர் குற்றச் செயல்கள் காட்டுகின்றன. திமுக அமைச்சர்கள் முதல், காவல்துறையினர் வரை, பாலியல் குற்றவாளிகளைப் பாதுகாக்கும் போக்கையே மேற்கொள்கின்றனர். பாலியல் குற்றங்களைத் தடுக்கவோ, பெண்களுக்கு பாதுகாப்பளிக்கவோ, திமுக ஆட்சி தவறிவிட்டது.
பொதுமக்களுக்கு பாதுகாப்பு வழங்கவோ, சட்டம் ஒழுங்கைக் காக்கவோ, காவல்துறையினரைப் பயன்படுத்தாமல், திமுக அரசை விமர்சிப்பவர்களைக் கைது செய்ய மட்டுமே பயன்படுத்துவதால், தமிழகம் இன்று இழிநிலையில் இருக்கிறது. இப்படி ஒரு கையாலாகாத நிலையில் காவல்துறையை வைத்திருக்கும் காவல்துறைக்குப் பொறுப்பான முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெட்கித் தலைகுனிய வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
உலகப் புகழ்பெற்ற தஞ்சாவூர் பெரிய கோயிலில் ராஜராஜ சோழனின் சதய விழா நாட்டுப்புற கலை நிகழ்ச்சிகளுடன் தொடங்கியது.
தஞ்சாவூரை ஆண்ட மாமன்னன் இராஜராஜசோழனின் 1040வது ஆண்டு சதய விழா இன்று (அக்.31) மற்றும் நாளை (நவ 1) ஆகிய இரண்டு நாட்களில் தஞ்சாவூர் பெரிய கோயில் வளாகத்தில் வெகு விமர்சையாக தொடங்கியது. இவ்விழாவில் தொடக்க நாளான இன்று கலை பண்பாட்டுத் துறை, தஞ்சாவூர் மண்டலம் சார்பில், தஞ்சாவூர் அரண்மனை வளாகத்திலிருந்து நாட்டுப்புற கலை நிகழ்ச்சியோடு பேரணியாக வலம் வந்து பெரிய கோயில் நந்தி மண்டபத்தில் நிறைவடைகிறது. இப்பேரணியில் கொம்பு வாத்தியம், சிலம்பாட்டம், புலியாட்டம், கும்மிக் கோலாட்டம், ஒயிலாட்டம், தப்பாட்டம், பொய்க்கால் குதிரையாட்டம், நையாண்டி மேள நாதசுரம், தவில், கரகாட்டம், மாடு ஆட்டம், மயிலாட்டம் ஆகியவை நடைபெற்றது. மேலும் தேவலோக நடனங்களான சிவன், பார்வதி, காளி, பச்சைக்காளி, பவளக்காளி, அரக்கன், கருப்பு ஆகியவையும், வள்ளித் திருமண வேடத்திலும் வலம் வருதல் நிகழ்வும், பம்பை கைச்சிலம்பாட்டம், மற்றும் பெரியமேளம் போன்ற கலைகளில் 250க்கும் மேற்பட்ட கலைஞர்களைக் கொண்டு கலை ஊர்வல பேரணியாக நடைபெற்றது. மேலும், இந்த ஊர்வல நிகழ்ச்சியில் அக்கால இராஜராஜ சோழனின் நகர்வலத்தை இக்கால தலைமுறைக்கு நினைவுப்படுத்தும் வகையில், குதிரை பூட்டப்பட்ட தங்கரதம், இராஜஇராஜ சோழன் வேடம், அமைச்சர்கள் வேடம், வாயில்காவலர்கள் வேடம் ஆகியவற்றில் வேடமிட்ட கலைஞர்கள் பங்குபெறும் ஊர்வல நிகழ்ச்சியும் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியை எம்பி முரசொலி, எம்எல்ஏ சந்திரசேகரன், மேயர் இராமநாதன் ஆகியோர் தொடங்கி வைத்தனர். மேலும் இந்நிகழ்ச்சியில் சதய விழா குழு தலைவர் செல்வம், அரண்மனை தேவஸ்தான பரம்பரை அறங்காவலர் பாபாஜி ராஜா போன்ஸ்லே, தஞ்சாவூர் மண்டலக் கலை பண்பாட்டு மைய உதவி இயக்குநர் இராஜாராமன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.உலகப் புகழ்பெற்ற தஞ்சாவூர் பெரிய கோயிலை கட்டிய மாமன்னன் ராஜராஜ சோழனின் சதய விழா ஆண்டுதோறும் வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் இந்தாண்டு 1040வது சதய விழா 2 நாட்கள் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இவ்விழாவில் தேவார திருமுறை அரங்கம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளும், ராஜராஜ சோழன் சிலைக்கு மாலை அணிவித்தல் ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன.
திமுக இருக்கும்வரை இந்த மண்ணில் பாஜகவின் பகல்கனவு நிறைவேறாது என திமுக தலைவரும், தமிழக முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் பேச்சு.
மாமல்லபுரம் கிழக்குக் கடற்கரைச் சாலையில், ‘என் வாக்குச்சாவடி – வெற்றி வாக்குச்சாவடி’ என்ற இலக்குடன் திமுகவினர் களப்பணியாற்றுவதற்கான பயிற்சி கூட்டத்தை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நடத்தினார். 2026 சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெறுவதற்கு தேவையான பணிகள் குறித்து விவாதிக்கப்பட்ட இக்கூட்டத்தில், மாவட்டச் செயலாளர்கள், மாநிலங்களவை மற்றும் மக்களவை உறுப்பினர் என 2,500-க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:
தொண்டர்கள் மனதில், இப்போ என்ன ஓடிட்டு இருக்குனு, எனக்கு நல்லா தெரியுது… என்னடா, தலைவரும் சும்மா இருக்கமாட்றாரு.. நம்மையும் சும்மா இருக்கவிடமாட்றாருனு சிலர் நினைப்பீர்கள். ஆனா சுணங்கி சும்மா இருந்துட்டா, நாம ஒரே இடத்துல தேங்கிடுவோம். ஆகையால் லட்சியத்தை நோக்கி ஓடிக்கிட்டே இருக்க வேண்டும். எப்போதும் மக்கள் கூடவே இருந்து பணியாற்றும் உங்களுக்கு, இந்த பயிற்சி கூட்டம் என்பது, எக்ஸாமுக்கு தயாராகுற ஸ்டூடண்ட், எல்லாத்தையும் படிச்ச பிறகு மீண்டும் ஒருமுறை ரிவிஷன் பண்ணுவாங்கள்ல. அப்படி எலக்ஷன் எனும் தேர்வுக்கு முன்னால் நாம் செய்யும் ரிவிஷன்தான் இந்த பயிற்சிக் கூட்டம்.2019 முதல் நாம் எதிர்கொண்ட அத்தனை தேர்தல்களிலும் மகத்தான வெற்றிகளை பெற்று வருவது, எதிரிகளுக்கு கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. அதேபோல, 2026 தேர்தலிலும் நாம்தான் வெற்றி பெறப் போகிறோம். அன்னைக்கு நியூஸ் ஹெட்லைன்ஸ் என்னனா “திராவிட மாடல் 2.0 ஆட்சி தொடங்கியது” இதுதான். இதை நான் ஆணவத்தில் சொல்லவில்லை. உங்கள் உழைப்பு மீதும், ஆட்சியின் சாதனைகள் மீதும். தமிழ்நாட்டு மக்கள் மீதும் உள்ள நம்பிக்கையில் கூறுகிறேன்” என்றார். மேலும் பேசிய அவர், “2026 தேர்தல் தமிழ்நாட்டின் எதிர்காலத்தை தீர்மானிக்கிற தேர்தல். தனித்தன்மையோடு தலைநிமிர்ந்து நிற்கிற நம் ஆட்சியா? அல்லது டெல்லிக்கு வளைந்து கொடுக்கிற அடிமைகளின் ஆட்சியானு தீர்மானிக்கிற தேர்தல். தமிழ்நாட்டோட சுயமரியாதையையும், தனித்தன்மையையும் காப்பாற்றப்போகும் தேர்தல்.தமிழ்நாட்டை அழிக்க இன எதிரிகளும், தமிழ்த் துரோகிகளும் நேரடியாகவும், மறைமுகமாகவும் வருகிறார்கள். அவர்களை வீழ்த்தி நம் மண், மொழி, மானத்தைக் காக்க வேண்டும். அதற்காகதான் திமுக கூட்டணி அனைத்துத் தொகுதிகளையும் கைப்பற்றியாகணும்னு தொடர்ந்து சொல்கிறேன். தமிழ்நாட்டுக்கு எல்லா வகையிலும் அநீதி இழைக்கப்படுகிறது. குறிப்பாக, இந்தி, சமஸ்கிருதம், ஜிஎஸ்டி, புதிய கல்விக் கொள்கை, நீட் தேர்வு, ஆளுநர் என தொல்லைக்கு மேல் தொல்லை கொடுக்கிறார்கள். இது தமிழ்நாட்டின் மேல் தொடுக்கப்படும் தாக்குதல். இந்த தாக்குதலை முறியடிக்கிற வல்லமை நமக்குதான் உள்ளது. ஏனென்றால், இந்த மண்ணில் திமுக இருக்கும்வரை பாஜகவின் பகல்கனவு நிறைவேறாது. அது அவர்களுக்கே நன்றாகத் தெரியும். இருந்தாலும், புதுசு புதுசா குறுக்குவழிகளைத் தேடுகிறார்கள். அந்த வகையில் உழைக்கும் மக்கள், பட்டியலினத்தவர், சிறுபான்மையினர், பெண்கள் உள்ளிட்டவர்களின் பெயர்களை SIR மூலமாக வாக்காளர் பட்டியலிலிருந்து நீக்கிவிட்டால் பாஜகவும், அதன் கூட்டாளியான அதிமுகவும் வெற்றிபெற்று விடலாம்ன்னு கணக்கு போடுறாங்க. அதாவது, மக்களை நேரடியா தேர்தல் களத்தில் சந்திக்கிற தெம்பு, திராணி இல்லாதவங்க, மக்களோட வாக்குரிமையை பறிச்சிட்டா வெற்றி பெறலாம்-ன்னு தப்புக்கணக்கு போடுறாங்க. SIR முறையை கைவிடவேண்டும் என்பதையும், வாக்காளர் பட்டியலைச் சீர்ப்படுத்தணும்-னா அதுக்குரிய வழிமுறைகளைப் பின்பற்றி கால அவகாசத்தை வழங்க வேண்டும் என்பதையும் இந்தியத் தேர்தல் ஆணையத்திடம் திமுக நேரடியாகவே வலியுறுத்தியுள்ளது. அதையும் மீறி முன்னெடுக்கப்படுகிற ஜனநாயக விரோத செயல்பாடுகளை, சட்டரீதியா எதிர்கொள்வது மட்டுமில்லை, மக்களோடு களத்தில் நின்று எதிர்கொள்ளும் வலிமையும் நமக்கு உண்டு. இன்னும் சொல்லப்போனால் நமக்கு மட்டும்தான் உண்டு!ஆகையால், மக்களின் வாக்குரிமையையே பறிக்கத் துணியும் SIR செயல்பாட்டை விழிப்போடு கண்காணிக்க வேண்டும். உண்மையான வாக்காளர் எல்லாரும், வாக்காளர் பட்டியலில் இடம்பெற வேண்டும். அதை உறுதி செய்ய வேண்டியது உங்களுடைய பொறுப்பு,” என்றார்.
அத்துடன், ” அதிமுக தன்னோட சொந்தக்கட்சியின் உரிமைகளையே பாஜகவிடம் அடகு வெச்சிட்ட நிலையில், மக்களுடைய உரிமைகளைப் பத்தி கவலைப்பட அதுக்கு நேரமிருக்காது. ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் மக்களின் உரிமைகளை காக்க வேண்டியவர்கள் திமுகவினரும், தோழமைக் கட்சியினரும்தான் என்பதை மீண்டும் நினைவூட்டுகிறேன். மக்கள் நலனையும், மாநில உரிமைகளையும் காக்கும் திமுக ஆட்சியில் ‘தமிழ்நாடு தலைகுனியாது’-னு நான் உறுதியளிக்கிறேன். 2021 தேர்தல் தமிழ்நாட்டை கொத்தடிமை அதிமுக கூட்டத்திடம் இருந்து மீட்ட தேர்தல். அதேபோல, 2026 தேர்தல் என்பது தமிழ்நாட்டை பாஜக – அதிமுக கும்பலிடம் இருந்து பாதுகாப்பதற்கான தேர்தல். ஐந்தாண்டு காலம் வளப்படுத்தப்பட்ட தமிழ்நாட்டை கபளீகரம் செய்து நாசம் செய்யத் திட்டமிடும் கூட்டத்தை வேரோடும், வேரடி மண்ணோடும் வீழ்த்தியாக வேண்டும்.எதிர்க்கட்சி தலைவரா உள்ள எடப்பாடி பழனிசாமி, பெயரளவுக்காவது திராவிட கட்சியா இருந்த அதிமுகவை, அமித்ஷாகிட்ட விழுந்து சரண்டர் பண்ணிட்டாரு. அந்த கூட்டணியை தமிழ்நாட்டு மக்களும் விரும்பல, ஏன் அவருடைய கட்சிக்காரர்களும் விரும்பல! இருந்தாலும் விசிக வர்றாங்க, கம்யூனிஸ்ட்டுகள் வர்றாங்க, காங்கிரஸ் வர்றாங்கனு அவரும் தினமும் சொல்லிப் பார்த்தார். ஆனால் யாரும் அங்கே போகவில்லை… மக்களும் அவர் பேசுறத நம்பத் தயாராக இல்லை.
ஆகையால், தமிழ்நாட்டுக்கு எதிரா கூட்டணி அமைச்சிருக்க அவருடைய சந்தர்ப்பவாதத்தை மக்களிடம் எடுத்துச் சொல்லி, அவர்களுடைய நம்பிக்கையைப் பெற்று, அதை நமது கூட்டணிக்கான வாக்குகளா மாற்ற வேண்டும். திமுக 7ஆவது முறையும் ஏற்றமிகு ஆட்சியை அமைக்க வேண்டும். தமிழ்நாட்டை நிரந்தரமா ஆளும் தகுதி திமுக-வுக்கு தான் இருக்குனு நிரூபிக்கணும்” என்று திமுக தொண்டர்கள் மத்தியில் ஸ்டாலின் பேசினார்.
கோவையில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள குடியரசு துணைத் தலைவர் சி பி ராதாகிருஷ்ணன் கோவை வந்த நிலையில். டவுன்ஹால் பகுதியில் மாநகராட்சி அலுவலக வளாகத்தில் இருந்த காந்தி சிலைக்கு அவர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். முன்னதாக குடியரசுத் துணைத் தலைவர் வருகையை ஒட்டி அங்கு போக்குவரத்து நிறுத்தப்பட்டு போலீசாரின் பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டுவரப்பட்டது. அப்போது திடீரென மணிக்கூண்டு நோக்கி ஒருவழிப்பாதையில் போலீசாரின் தடையை மீறி ஹெல்மெட் அணியாமல் போதை இளைஞர்கள் இருவர் அதிவேகமாக அவ்வழியாகச் சென்றனர். அப்போது போலீசார் அவர்களை பிடிக்க முயன்ற போதும் அதிவேகமாக தப்பிச்சென்றனர். அப்போது புனித மைக்கேல் பள்ளி அருகே அதிவேகமாக சென்ற இளைஞர்களின் வாகனம் மற்றொரு வாகனத்தின் மீது மோதி இருவரும் சாலையில் விழுந்தனர். அப்போது அங்கு பணியில் இருந்த போலீசார் உடனடியாக இருவரையும் பிடித்து கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
முதல் கட்ட விசாரணையில் போதையில் அதிவேகமாக போலீசாரின் தடையை மீறி இருசக்கர வாகனத்தில் வேகமாக சென்ற நபர்கள் கரும்புக்கடை சாரமேடு பகுதியை சேர்ந்த ஆனீஷ் ரகுமான் மற்றும் ஆஷிக் என்பது தெரியவந்தது. இவர்கள் மீது பல்வேறு போதை பொருட்கள் விற்பனை தொடர்பான வழக்கு நிலுவையில் உள்ளதும் தெரிய வந்துள்ளது. தொடர்ந்து இருவரிடமும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 2 நாள் சுற்று பயணமாக இன்றிரவு மதுரை வந்தடைந்தார். அவருக்கு விமான நிலையத்தில் கட்சியினர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகே உள்ள பசும்பொன்னில் முத்துராமலிங்க தேவரின் 118 ஆவது ஜெயந்தி விழா மற்றும் 63 ஆவது குருபூஜை விழா நடக்கிறது. இவ்விழாவில் பங்கேற்பதற்காக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று மாலை சென்னையில் இருந்து விமானம் மூலம் மதுரை வந்து அடைந்தார். மதுரை விமான நிலையத்தில் முதலமைச்சருக்கு திமுக தொண்டர்கள் மற்றும் எஸ்ஆர்எம்யூ உறுப்பினர்கள் சால்வை வழங்கி உற்சாக வரவேற்பு அளித்தனர். முதல்வருடன் அமைச்சர்கள் கே.என்.நேரு, கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு, பெரியகருப்பன், மூர்த்தி மற்றும் ஐ.பெரியசாமி, நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் உடன் இருந்தனர். அங்கிருந்து காரில் புறப்பட்டு கோவில்பட்டி சென்று அங்கு முன்னாள் முதல்வர் கருணாநிதி திருஉருவ சிலையை திறந்து வைத்த பின் அங்கிருந்து புறப்பட்டு நெல்லை மாவட்டம் அரியநாயகிபுரம் முக்கூடல் சென்று இரவு தங்குகிறார். நாளை காலை அங்கிருந்து புறப்பட்டு தென்காசி மாவட்டம் சீவநல்லூர் சென்று, அங்கு கலைஞர் கனவு இல்லம் திட்டத்தை துவக்கி வைத்து விட்டு பின்பு அங்கிருந்து புறப்பட்டு அனந்தபுரம் சென்று அங்கு அரசு நிகழ்ச்சியில் கலந்துகொள்கிறார். இதன் பிறகு அங்கிருந்து புறப்பட்டு அமர் சேவா சங்கம் சென்று அங்கு பார்வையிட்ட பிறகு அங்கிருந்து புறப்பட்டு, மதியம் தென்காசி விருந்தினர் மாளிகை சென்று தங்குகிறார். பின்னர் நாளை மாலை மதுரை வந்து அரசு விருந்தினர் மாளிகையில் இரவு தங்குகிறார்.
நாளை மறுநாள் காலை அங்கிருந்து 8 மணிக்கு கோரிபாளையம் சென்று அங்கு தேவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி விட்டு பின்னர் அங்கிருந்து புறப்பட்டு தெப்பக்குளம் சென்று அங்கு மருதுபாண்டியர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்த உள்ளார். இதன் பிறகு அங்கிருந்து கிளம்பி ராமநாதபுரம் மாவட்டம், கமுதி பசும்பொன் சென்று அங்கு தேவர் நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்துகிறார்.
இறைச்சி கடையில் ஏற்பட்ட தகராறில் கொலை செய்யப்பட்ட வழக்கில் ஐந்து பேருக்கு இரட்டை ஆயுள் தண்டனை வழங்கிய கோயம்புத்தூர் குற்றவியல் நடுவர் நீதிமன்றம் .
கோவை திருமால் வீதியில் இறைச்சிக் கடை நடத்தி வந்தவர் மொய்தீன் பாஷா. கடந்த 2015 ஆம் ஆண்டு அக்டோபர் 31 ஆம் தேதி இவரது கடையில் வேலை செய்யும் சிறுவன் இருந்த போது, உக்கடம் பகுதியில் இறைச்சி கடை நடத்தி வந்த சாதிக் அலி என்பவர் நான்கு கிலோ மாட்டு ஈரல் மற்றும் எலும்பு துண்டுகளை எடுத்துச் சென்றுள்ளார். இந்த நிலையில் தான் கடையில் இல்லாத போது எப்படி இறைச்சி மற்றும் எலும்புகளை எடுத்துச் செல்லலாம்? என உக்கடம் பகுதிக்கு சென்று சாதிக் அலி கடையின் முன் நின்று மொய்தீன் பாஷா கேள்வி எழுப்பியுள்ளார். அப்போது இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு, அன்றைய தினம் இரவு சமரசம் பேசிக் கொள்ளலாம் என முடிவு செய்யப்பட்டது. இதையடுத்து, இரு தரப்பை சேர்ந்தவர்களும் இடையர் வீதியில் உள்ள பேக்கரி அருகே அன்று இரவு சந்தித்தனர். அப்போது இரு தரப்பினரிடையே திடீரென மோதல் ஏற்பட்டது. இதில் மொய்தீன் பாஷா மற்றும் அவரது நண்பர் அபிப் முகமது ஆகியோரை சாதிக் அலி தனது நண்பர்களுடன் சேர்ந்து கத்தியால் குத்தி கொலை செய்தார். இது தொடர்பாக சாதிக் அலி, ஷேக் அலி, அஸ்கர் அலி, மன்சூர் அலி, ஜாகிர் உசேன், அசாருதீன் ஆகிய ஆறு பேர் கைது செய்யப்பட்டனர். இவர்களில் ஷேக் அலி 2019 ஆம் ஆண்டு வழக்கு விசாரணை நடைபெறும் போது உயரிழந்தார். இந்த கொலை வழக்கு கோயம்புத்தூர் ஐந்தாவது குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் கடந்த 10 ஆண்டுகளாக நடைபெற்று வந்தது. இரு தரப்பு வாதங்கள் மற்றும் விசாரணை முடிவடைந்த நிலையில், இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டது.
இதில் குற்றம்சாட்டப்பட்ட சாதிக் அலி, அஸ்கர் அலி, மன்சூர் அலி, ஜாகிர் உசேன் மற்றும் அசாருதீன் ஆகிய ஐந்து பேருக்கும் இரட்டை ஆயுள் தண்டணை மற்றும் தலா 4 லட்சம் ரூபாய் அபராதம் விதித்து கோயம்புத்தூர் 5-வது குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி சிவக்குமார் தீர்ப்பளித்தார். இரட்டை கொலை வழக்கில் 10 ஆண்டுகளுக்கு பிறகு குற்றவாளிகளுக்கு இரட்டை ஆயுள் தண்டனை வழங்கப்பட்டது.
பொள்ளாச்சி அருகே உள்ள கோட்டூர் பகுதியில் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் 500-க்கும் மேற்பட்ட மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த நிலையில் இன்று காலை மாணவிகள் பள்ளிக்கு வந்து, பிரார்த்தனை முடிந்தவுடன் அவரவர் வகுப்பறைகளுக்குச் சென்றனர். அதில் 10 ஆம் வகுப்பு படிக்கும் மாணவிகள், தங்களது வகுப்பறைக்குச் சென்று இரும்பால் ஆன இருக்கையில் அமர்ந்தனர். ஏற்கனவே வெல்டிங் விட்டிருந்த அந்த இருக்கை மாணவிகள் அமந்தவுடன் திடீரென உடைந்து விழுந்தது. இதில் 3 மாணவிகள் கீழே விழுந்தனர். இதனை பார்த்த தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள் உடனடியாக மாணவிகளை கோட்டூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு கொண்டு சென்றனர். அதனைத் தொடர்ந்து, மேல் சிகிச்சைக்காக பொள்ளாச்சி அரசு தலைமை மருத்துவமனைக்கு அந்த மாணவிகள் அனுப்பி வைக்கப்பட்டனர். தொடர்ந்து மருத்துவர்கள் அவர்களுக்கு சிகிச்சை அளித்து வருகின்றனர் இந்த சம்பவம் குறித்து பள்ளி மாணவியின் தந்தை சதீஷ் கூறுகையில், “இன்று காலையில் பள்ளிக்கு சென்ற எனது மகள் கீழே விழுந்ததாக பள்ளி ஆசிரியர்கள் மூலமாக தகவல் தெரிய வந்தது. அதன் பேரில் கோட்டூர் அரசு மருத்துவமனைக்கு நேரில் சென்றோம். பின்னர், அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு எனது மகளை அழைத்து வந்துள்ளோம். காலுக்கு கீழ்ப்புறம் அடிபட்டதால் எக்ஸ்ரே எடுக்க மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர் என தெரிவித்தார்.அதனைத் தொடர்ந்து, அந்த பகுதியைச் சேர்ந்த வெள்ளை நடராஜ் கூறுகையில், “தமிழக அரசு பள்ளிகளில் மாணவ மாணவிகள் அமரும் இருக்கைகள் முறையாக பராமரிக்கப்படுகிறதா என ஆய்வு மேற்கொள்ள வேண்டும். மாவட்ட கல்வி அலுவலர், பள்ளி மாணவ மாணவிகள் நலன் கருதி உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்” என தெரிவித்தார்.
இந்த சம்பவம் குறித்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மாணவிகள் அமரும் இருக்கை முறையாக பராமரிக்கப்படாததே காரணம் என பெற்றோர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்