Thursday, June 25, 2026
Home Blog Page 15

கோவையில் சுட்டு பிடிக்கப்பட்ட கொள்ளையர்களில் ஒருவர் உயிரிழப்பு..!

0

கோவை மாவட்டம் கவுண்டம்பாளையம் பகுதியில் அமைந்துள்ள வீட்டு வசதி வாரியக் குடியிருப்பில் 1800க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. நேற்று முன்தினம் (நவ.28) இந்தக் குடியிருப்பின் A-பிளாக்கில் 3 வீடுகள், C-பிளாக்கில் 10 வீடுகள் என மொத்தம் 13 வீடுகளிலிருந்து 42 பவுன் தங்க நகைகள், 500 கிராம் வெள்ளிப் பொருள்கள் மற்றும் ரூ.1.5 லட்சம் பணம் கொள்ளையடிக்கப்பட்டன. இச்சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார், சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் தீவிர விசாரணை மேற்கொண்டதில் உத்தரப்பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த ஆசிப் (48), இர்பான் (45), கல்லூ ஆரிப் (60) ஆகிய 3 பேர் இந்த திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டதையும், அவர்கள் குனியமுத்தூர் பகுதியில் பதுங்கி இருப்பதையும் கண்டறிந்தனர்.

நேற்று (நவ. 29) அந்த பகுதிக்குச் சென்ற போலீசார் திருடர்களை பிடிக்க முற்பட்டபோது அவர்கள் போலீசாரை தாக்கியுள்ளனர். இதில் பார்த்திபன் என்ற காவலருக்கு பலத்த காயம் ஏற்படவே, தப்பி செல்ல முயன்ற 3 பேரையும் அவர்களுடைய காலில் துப்பாக்கியால் சுட்டு பிடித்தனர். பின்னர் காயமடைந்தவர்களை கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.மூவரையும் சுட்டு பிடித்தது குறித்து கோவை மாநகர காவல் ஆணையர் சரவண சுந்தர் கூறுகையில், வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் நடந்த கொள்ளை சம்பவம் குறித்த விசாரணையில் சிசிடிவி காட்சிகள் மற்றும் ரகசிய தகவலின் அடிப்படையில் பதுங்கியிருந்த கொள்ளையர்கள் கண்டுபிடிக்கப்பட்டனர். அவர்களை பிடிக்க முயன்றபோது போலீசாரை தாக்க முற்பட்டதால் தற்காப்புக்காக துப்பாக்கிசூடு நடத்தப்பட்டது.3 பேரையும் கவுண்டம்பாளையம் பகுதிக்கு அழைத்துவந்த ஆட்டோ ஓட்டுநரிடமும் விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த சம்பவத்தைத் தொடர்ந்து பொது இடங்களில் வைக்கப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்களை கட்டுப்பாட்டு அறையுடன் இணைக்கு பணி நடைபெற்று வருகிறது” என்றார்.

இதனிடையே மூவருக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், காலில் துப்பாக்கி குண்டு பாய்ந்த ஆசிப் என்பவருக்கு தொடர்ந்து ரத்தப்போக்கு ஏற்பட்டது. இதனையடுத்து அவரை தீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதித்து தொடர் சிகிச்சை அளித்தனர். இருப்பினும் அதிகப்படியான ரத்தம் வெளியேறியதில் அவர் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார்.
மருத்துவமனையில் விசாரணை கைதி உயிரிழந்தது குறித்து மாவட்ட நீதிபதி விசாரணை மேற்கொள்ள இருப்பதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், பிரேதப் பரிசோதனைக்காக கொள்ளையன் ஆசிப்பின் உடல் அரசு மருத்துவமனை பிணவறையில் வைக்கப்பட்டுள்ளது.

SIR பணியில் முறைகேடு.. கலெக்டர், தாசில்தார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் – அமைச்சர் ஐ.பெரியசாமி

0

ஆத்தூர் தொகுதியில் எஸ்.ஐ.ஆர் பணியில் முறைகேடு நடந்துள்ளதால் கலெக்டர், தாசில்தார் மீது தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அமைச்சர் ஐ.பெரியசாமி கோரிக்கை விடுத்துள்ளார்.

இதுகுறித்து தமிழ்நாடு ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் ஐ.பெரியசாமி இன்று (நவம்பர் 30) திண்டுக்கலில் செய்தியாளர்களை சந்தித்து கூறியதாவது:

திண்டுக்கல் மாவட்டம், ஆத்தூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட சின்னாளபட்டி பேரூராட்சியில் வாக்காளர் பட்டியல் சிறப்புச் சேர்க்கைப் பணியின்போது ஏறக்குறைய 7227 வாக்காளர்கள் நீக்கப்பட்டு உள்ளனர். சுமார் 26 வாக்குச்சாவடிகளில் முறைகேடு நடந்துள்ளது. இதன் பின்னணியில் வட்டாட்சியர் மற்றும் மாவட்ட ஆட்சியர் வரை உள்ளனர்.

சின்னாளபட்டி பேரூராட்சியில் மொத்த வாக்குகளில் சுமார் 7227 வாக்காளர்களின் பெயர்கள் ‘இடம்பெயர்ந்துவிட்டார்கள்’ (Shifted) என குறிக்கப்பட்டு வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளன. நேற்று காலை முதலே ஆத்தூர் வட்டாட்சியர் ஒவ்வொரு வாக்குச்சாவடிக்கும் நேரடியாகச் சென்று அங்கிருந்த வாக்குச்சாவடி நிலைய அலுவலர்களை (BLO) வற்புறுத்தி, “இனி சேரும் வாக்குகளை ‘Shifted’ என்று போடுங்கள்” எனக் கூறி வாக்காளர் சேர்க்கைப் பணியை முடித்துவைக்கச் சொல்லி இருக்கிறார்.

ஆத்தூர் தொகுதியில் மொத்தம் 21800 முதல் 22000 வாக்குகள் வரை ‘Shifted’ என பதிவு செய்யப்பட்டு வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். சிறப்பு சேர்க்கை பணி தொடர வேண்டிய நிலையில் இரவோடு இரவாக பணியை வட்டாட்சியர் முடித்து விட்டார். 2016 ஆம் ஆண்டு தேர்தலில் சின்னாளப்பட்டியில் 17000க்கும் மேற்பட்ட வாக்குகள் பதிவான நிலையில் தற்போது நடைபெற்ற சிறப்புச் சேர்க்கையில் 16800 வாக்குகளே சேர்க்கப்பட்டுள்ளன. ஒட்டுப்பட்டியில் இருந்தும் சுமார் 60 வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர்.
சின்னாளபட்டி பகுதியில் பலர் வியாபாரம் நிமித்தமாக வெளியூர்களுக்குச் சென்று திரும்புபவர்கள். எனவே சேர்க்கைக்கான கடைசி நாள் வரை பொறுமையாக இருந்து சேர்க்கை நடத்தப்பட்டிருக்க வேண்டும். ஆனால் சேர்க்கை பணிகள் அவசரமாக நிறுத்தப்பட்டதால் இன்று வந்த பலரும் வாக்காளராக சேர முடியாமல் ஏமாற்றம் அடைந்துள்ளனர். வாக்காளர் பட்டியலில் பெரிய தவறு நடந்துள்ளதற்கு மாவட்ட ஆட்சியர் மற்றும் வட்டாட்சியர் ஆகியோர் மீது தேர்தல் ஆணையம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.

குறைகளை சரி செய்ய சூப்பர்வைசர் நியமிக்கப்பட்டுள்ளார் – மாவட்ட ஆட்சியர்

அமைச்சர் ஐ. பெரியசாமியின் குற்றச்சாட்டு குறித்து திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் சரவணன் செய்தியாளர்களை சந்தித்து கூறுகையில், ”ஆத்தூர் தொகுதியை பொறுத்தவரையில் 2, 3 குற்றச்சாட்டுகள் வந்துள்ளது. இந்திய தேர்தல் ஆணையம் 11 ஆம் தேதி வரை கால அவகாசம் வழங்கியுள்ளது. மேலும், விடுபட்டவர்களை சேர்ப்பதற்கு எடிட் செய்யும் வசதி (Edit option) கொடுக்கப்பட்டுள்ளது. எனவே தங்களது பதிவு விடுபட்டவர்கள் மீண்டும் 11 ஆம் தேதி வரை வந்து தங்களை பதிவு செய்து கொள்ளலாம். அனைத்து கட்சியினரும் பல்வேறு குறைகளை தெரிவித்துள்ளனர். அதனை சரி செய்வதற்கு சூப்பர்வைசர் நியமிக்கப்பட்டுள்ளார்.” என்றார்.

எந்த குளறுபடியும் நடைபெறவில்லை – தாசில்தார்

ஆத்தூர் தாசில்தார் முத்து முருகன் கூறுகையில், ”ஆத்தூர் தொகுதி முழுவதும் தொடர்ந்து எஸ்ஐஆர் படிவம் வாங்கப்பட்டு வருகிறது. இதில் எந்த ஒரு குளறுபடியும் நடைபெறவில்லை. குறிப்பாக வெளியூரில் வேலை செய்பவர்களுக்கு உதவும் வகையில் கடந்த இரண்டு வாரங்கள் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் வாக்குச்சாவடிகளில் SIR படிவம் பூர்த்தி செய்யவும், பெற்றுக்கொள்ளவும் சிறப்பு முகாம் அமைக்கப்பட்டது.
சரியான முறையில் SIR நடைபெற்று வருகிறது. ஒருவேளை விடுபட்டு இருந்தாலும் அவர்களுக்கு மீண்டும் சேர்ப்பதற்கான கால அவகாசங்கள் கொடுக்கப்பட்டுள்ளது” என்று தெரிவித்தார்.

டிட்வா புயலின் மழை ரூட் இதுதான் -வெதர்மேன் கணிப்பு

0

டிட்வா புயல் வழித்தடத்தில் எந்த மாற்றமும் இல்லை. தமிழக கடற்கரைக்கு இணையாக coastal bypass rider போல் நகர்ந்து வருகிறது. டெல்டா மாவட்டம் – நாகை மாவட்டம் வரை கனமழை பெய்து வருகிறது. நாகை மாவட்டத்தில் இன்று காலை 3.30 மணி வரை 100 மி.மீ. மழை பெய்துள்ளது.இது இன்று காலை 8.30 மணிக்கு நிச்சயம் 150 முதல் 175 மி.மீ. வரை தாண்டியிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த மழை மெதுவாக கடலூரை நோக்கி வருகிறது. அங்கிருந்து புதுச்சேரிக்கும் பின்னர் சென்னைக்கு இன்று இரவும் வருகிறது.நாளை ஞாயிற்றுக்கிழமை சென்னைக்கு மிகவும் சிறப்பான நாளாகும். நல்ல மழை வெளுக்கும். டிட்வா புயல் கடலில் கரையவில்லை. அது சென்னைக்கு அருகே 30ஆம் தேதி வருகிறது. நாகை மாவட்டம் திருத்துறைப்பூண்டியில் 135 மி.மீ மழையும் கோடியக்கரையில் 92.8 மி.மீ. மழையும் வேளாங்கண்ணியில் 88.8 மி.மீ. மழையும் பெய்துள்ளது. இவ்வாறு தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து சென்னை வானிலை மைய இயக்குநர் செந்தாமரை கண்ணன் வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய இலங்கை கடலோரப் பகுதிகளில் நிலவிய ‘டித்வா’ புயல், இலங்கை கடலோரப் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில், இலங்கை திரிகோண மலையிலிருந்து தென்மேற்கே சுமார் 40 கிமீ தொலைவிலும், இலங்கை மட்டக்களப்பிலிருந்து வடமேற்கே 100 கிமீ தொலைவிலும், சென்னையிலிருந்து தெற்கே 530 கிமீ தொலைவிலும் நிலை கொண்டுள்ளது.இது, வடமேற்கு திசையில் நகர்ந்து, இலங்கை கடலோரப் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளை கடந்து, 30-ம் தேதி அதிகாலை, தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில், வட தமிழகம் – புதுச்சேரி மற்றும் அதனை ஒட்டிய தெற்கு ஆந்திர கடலோரப் பகுதிகளுக்கு அருகே நிலவக்கூடும்.

இதன் காரணமாக வட தமிழகத்தில் நாளை (நவ.29), நாளை மறுநாளும் பெரும்பாலான இடங்களிலும், தென் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும், டிச.1 முதல் 4-ம் தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.தமிழகத்தில் நவ.29ஆம் தேதி டெல்டா மற்றும் அதனை ஒட்டிய கடலோர மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், பலத்த தரை காற்று, அதிகபட்சமாக மணிக்கு 90 கிமீ வேகத்தில் வீசக்கூடும். இதர கடலோர மாவட்டங்களில் பலத்த தரைக்காற்று அதிகபட்சமாக மணிக்கு 75 கிமீ வேகத்தில் வீசக்கூடும்.மயிலாடுதுறை, கடலூர், விழுப்புரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் ஒருசில இடங்களில் கன முதல் மிக கனமழையும், ஓரிரு இடங்களில் அதி கனமழையும் பெய்யக்கூடும். புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், அரியலூர், பெரம்பலூர், திருச்சி, சேலம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, காஞ்சிபுரம், சென்னை, திருவள்ளூர் மற்றும் ராணிப்பேட்டை மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தருமபுரி, நாமக்கல் மற்றும் கரூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யக்கூடும்.30-ம் தேதி தென் தமிழக கடலோர மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் பலத்த தரைக்காற்று அதிகபட்சமாக மணிக்கு 75 கிமீ வேகத்தில் வீசக்கூடும். இதர வட தமிழக கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் பலத்த தரைக்காற்று அதிகபட்சமாக மணிக்கு 80 கிமீ வேகத்தில் வீசக்கூடும்.

வெள்ளத்தால் மூழ்கிய நிலங்கள் -இழப்பீடு கோரி விவசாயிகள் ஆட்சியரிடம் மனு!

0

முல்லை பெரியாற்றில் வெள்ளம் ஏற்பட்டு தேனி மாவட்டம், கம்பம் அருகே சுருளிப்பட்டியில் விளை நிலங்கள் மூழ்கியதால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் இழப்பீடு கேட்டு ஆட்சியரிடம் மனு.

தேனி மாவட்டம் கம்பம் அருகே உள்ள சுருளிப்பட்டி மணற்படுகை பகுதியில் முல்லைப் பெரியாறு பாய்கிறது. இங்கு கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் கரை உடைந்து தண்ணீர் முழுவதும் விளைநிலங்களுக்குள் புகுந்தது. இதனால் விவசாய விளைநிலங்களில் இருந்த நெற்கதிர்கள், பயிர்கள், 40 லட்சம் மதிப்பிலான வாழை மரங்கள் போன்றவை சேதம் அடைந்தன. இது குறித்து பாதிக்கப்பட்ட விவசாயிகள் பொதுப் பணித்துறை மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகளிடம் தெரிவித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. இந்நிலையில் விவசாயிகள் சங்கத்தின் சார்பாக தலைவர் மனோகரன் தலைமையில் ஏராளமான விவசாயிகள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்து முல்லைப் பெரியாறு தடுப்பணைகளை சரி செய்துத் தர வேண்டும் என்று மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்தனர்.

இது குறித்து பெரியாறு வைகை பாசன விவசாயிகள் சங்கத்தின் தலைவர் மனோகரன் கூறுகையில், ”முல்லைப் பெரியாறில் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பாக ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் கம்பம் – சுருளிப்பட்டிப் பகுதியில் உள்ள மணற்படுகை கரை உடைந்தது. இதனால் விளைநிலங்களுக்குள் ஆற்று நீர் புகுந்ததால் 40 லட்சம் மதிப்பிலான வாழை மரங்கள் உள்ளிட்டவை சேதமடைந்தது.
விவசாய நிலத்தில் உரிமையாளர்கள் தங்கள் சொந்த செலவில் 8 லட்சம் மதிப்பில் சேதம் அடைந்த கரைப்பகுதிகளில் மணல் மூட்டைகள் கொண்டு தடுப்புகளை ஏற்படுத்திய நிலையில் நீர் வரத்து அதிகரித்ததால் மணல் மூட்டைகளுக்கு மேல் தண்ணீர் பாய்ந்து செல்கிறது.

இந்த ஆற்றில் செல்லும் நீர் மூலம் 8000 ஏக்கர் விவசாய நிலங்கள் பயன்பெறுகின்றன. இந்த நிலையில் கரை உடைந்து சேதம் ஏற்பட்டதால் நிலங்கள் தண்ணீரில் மூழ்கின. இது குறித்து பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் பல முறை புகார் தெரிவித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் அலட்சியம் காட்டி வருகின்றனர்.

மாணவியின் கையில் படுகாயம் -அரசுப் பள்ளி ஆசிரியை மீது வழக்குப்பதிவு

0

கோவை மாவட்டம், கருமத்தம்பட்டியைச் சேர்ந்தவர் ஶ்ரீராம் (43). இவரது மனைவி பரிமளா (34). இருவரும் விசைத்தறி கூடத்தில் தறி ஓட்டும் வேலை செய்து வருகின்றனர். இவர்களுக்கு 12 மற்றும் 9 வயதில் இரு மகன்களும், 7 வயதில் ஒரு மகளும் உள்ளனர். இச்சிறுமி எலச்சிபாளையம் அரசு நடுநிலைப் பள்ளியில் 2-ம் வகுப்பு படித்து வருகிறார், கடந்த நவம்பர் 7-ம் தேதி மதியம் 11.30 மணிக்கு, சிறுமி தனது வகுப்பு தோழிகளுடன் பள்ளியில் ஓடி விளையாடிக்கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த ஆசிரியை பெரியநாயகி, சிறுமியின் இடதுகை முட்டிக்குக் கீழ் பிரம்பால்அடித்ததாக கூறப்படுகிறது. பள்ளி முடிந்து வீட்டுக்கு வந்த சிறுமி இடதுகையை மடக்கிப் பிடித்தவாறு இருந்துள்ளார். அதை கண்ட தாய் பரிமளா, கையில் ரத்தம் கட்டிய வீக்கத்தைப் பார்த்து அதிர்ச்சியடைந்தார். மகளிடம் கேட்டதும், “ஆசிரியை குச்சியால் அடித்தார்” என்று கூறியுள்ளார்.மறுநாள் (நவ. 8) பள்ளிக்குச் சென்று ஆசிரியையிடம் கேட்டபோது, “மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சிகிச்சை பெறுங்கள், செலவு நான் ஏற்கிறேன்” என்று கூறியதால், பரிமளா வீட்டுக்கு திரும்பினார். ஆனால், சிறுமியின் நிலை மோசமானதால், நவம்பர் 13-ம் தேதி திருப்பூர் மாவட்டம் அவினாசியில் உள்ள சிஎன்எஸ் தனியார் மருத்துவமனையில் உள் நோயாளியாக அனுமதிக்கப்பட்டார். காவல் நிலையத்திற்கு தகவல் கிடைத்ததும், போலீசார் அங்கு வந்து பரிமளாவிடம் விசாரித்தபோது, “ஆசிரியை செலவு ஏற்கிறார், வழக்கு வேண்டாம்” என்று வாக்குமூலம் அளித்தார். அதனை தொடர்ந்து சிகிச்சை முடிந்து நவ. 17 அன்று சிறுமி வீடு திரும்பினார். அப்போது, மருத்துவச் செலவாக ரூ.41,000-ஐ ஆசிரியை பெரியநாயகி செலுத்தியதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், சிறுமிக்கு மீண்டும் கையில் வலி ஏற்பட்டதால், நவம்பர் 21 அன்று கோயம்புத்தூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்டார். காவல் நிலையத்திற்கு தகவல் கிடைத்ததும், போலீசார் தாய் பரிமளாவிடம் விசாரித்தனர். இம்முறை அவர் ஆசிரியை பெரியநாயகி மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வாக்குமூலம் அளித்தார்.

அதனை தொடர்ந்து சூலூர் குற்றவியல் நீதித்துறை நடுவரிடம் அனுமதி பெற்று, ஆசிரியை பெரியநாயகி மீது கருமத்தம்பட்டி போலீசார் குழந்தைகள் வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. மேலும், பள்ளி நிர்வாகத்திடமும் விசாரணை நடத்தப்படும் எனத் தெரிகிறது. இந்நிலையில், சிறுமிக்கு கோயம்புத்தூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

வனப்பகுதியில் விடப்பட்ட ‘ரோலக்ஸ் காட்டு யானை உயிரிழப்பு…

0

கோயம்புத்தூர் மாவட்டம், தொண்டாமுத்தூர் பகுதியில் அக்டோபர் மாதம் 17 ஆம் தேதி மயக்க ஊசி செலுத்தி பிடிக்கப்பட்ட ரோலக்ஸ் காட்டு யானை வன பகுதியில் விடப்பட்டு கண்காணிக்கப்பட்டு வந்த நிலையில் திடீரென உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கோவை மாவட்டம், தொண்டாமுத்தூர், கெம்பனூர் பகுதிகளில் விவசாய பயிர்களை ரோலக்ஸ் காட்டு யானை சேதப்படுத்தி வருவதாக தொடர்ந்து புகார்கள் எழுந்தது. இதனைத்தொடர்ந்து கடந்த அக்டோபர் 17 ஆம் தேதி ரோலக்ஸ் காட்டு யானையினை வனத்துறையினர் மயக்க ஊசி செலுத்தி பிடித்தனர்.

ரோலக்ஸ் யானை பொள்ளாச்சி ஆனைமலை புலிகள் காப்பகம் டாப்சிலிப் வரகளியார் முகாமில் மரக்கூண்டில் ஒரு மாதம் அடைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் ஒரு மாதத்திற்கு பிறகு மந்திரி மட்டம் வனப் பகுதியில் கடந்த நவம்பர் 12 ஆம் தேதி விடப்பட்டது. ஆனாலும் ரேடியோ சிக்னல் பொருத்தி ரோலக்ஸ் காட்டு யானை கண்காணிக்கப்பட்டு வந்த நிலையில் மந்திரி மட்டம் பகுதியில் இன்று இறந்து கிடப்பது தெரிய வந்தது.
இது தொடர்பாக கோவை ஆட்சியர் அலுவலகத்தில் ஆனைமலை புலிகள் காப்பக கள இயக்குனர் வெங்கடேஷ் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது வெங்கடேஷ் கூறுகையில், ”தொண்டாமுத்தூர் பகுதியில் அக்டோபர் 17 ஆம் தேதி யானை பிடிக்கப்பட்டு மரக்கூண்டில் வைக்கப்பட்டு இரண்டு வாரங்களுக்கு மேல் பராமரிக்கப்பட்ட நிலையில் நவம்பர் 12ம் தேதி மந்திரிமட்டம் வனப்பகுதியில் விடுவிக்கப்பட்டது.ரோலக்ஸ் காட்டு யானையை தினமும் ரேடியோ சிக்னல் வைத்து, நேரில் பார்த்து வனத்துறை ஊழியர்கள் கண்காணித்து வந்தனர். யானையின் நடமாட்டம் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வந்தது. இன்று காலை 11.45 மணிக்கு ரேடியோ சிக்னல் கிடைத்த நிலையில் யானை இருக்கும் பகுதியை வனத்துறை ஊழியர்கள் கண்காணித்து வந்தனர்.பிற்பகல் 2 மணி வரை யானை ஊழியர்களின் கண்காணிப்பில் இருந்தது. 2 மணி அளவில் அங்கிருந்த ஓடையின் அருகில் தண்ணீர் குடிக்க சென்றபோது வழுக்கி விழுந்தது. இதை பார்த்த வன ஊழியர்கள் உடனடியாக அங்கு செல்ல முடியாத நிலையில் அரை மணி நேரத்திற்கு பின்பு ரோலக்ஸ் யானையின் அருகில் சென்று பார்த்தபோது யானை இறந்து இருப்பது தெரிய வந்தது.

இதனால் யானையின் புகைப்படம் மற்றும் வீடியோக்களை வனத்துறை ஊழியர்கள் எடுத்து அனுப்புவதற்கு தாமதமாகிவிட்டது. யானையின் இறப்பு குறித்து விசாரிக்க தனிக்குழுவை தலைமை வனப்பாதுகாவலர். நாளை இந்த குழுவினர் சம்பவ இடத்தில் ஆய்வு மேற்கொண்ட பிறகு யானைக்கு பிரேத பரிசோதனை மேற்கொள்ளப்பட இருக்கிறது. இறக்கத்தில் வழுக்கி விழுந்து யானை உயிரிழந்துள்ளது. யானையின் வாயில் சாப்பிட்ட புல் உள்ளிட்டவை இருந்துள்ளது. அந்த பகுதி பெரிய அளவிலான சரிவு கிடையாது. சிறிய குன்றுகள் இருக்கும் இடம். ஆனால் அந்த பகுதி மண் வழுக்கும் தன்மை கொண்டதால் யானை வழுக்கி விழுந்து இறந்துள்ளது. யானைக்கு மயக்க மருத்து கொடுத்து 12 நாட்களுக்கு மேல் ஆகிவிட்டது. அதன் தாக்கம் இருக்க வாய்ப்பில்லை. கூடலூர் அருகே பிடிக்கப்பட்டு நெல்லை வனப்பகுதியில் உயிரிழந்த ராதாகிருஷ்ணன் யானை பாறையில் இருந்த புற்களை சாப்பிட சென்றபோது இடறி விழுந்து இறந்தது. ரோலக்ஸ் காட்டு யானை விடுவிக்கபட்ட மந்திரிமட்டம் பகுதி நல்ல தண்ணீர், தீவனங்கள் அதிகம் இருக்கும் பகுதி. அந்நிய தாவரங்கள் எதுவும் இருக்காது. யானை கழுத்தில் அரை மணி நேரத்திற்கு ஒரு சிக்னல் கிடைக்கும் வகையில் ரேடியோ காலர் பொருத்தப்பட்டு இருந்தது. ரோலக்ஸ் யானை நலமுடன் இருந்தது. உணவும் நல்ல முறையில் எடுத்துக்கொண்டு இருந்தது.இதுவரை இடமாற்றம் செய்யப்பட்ட யானைகளில் 10 சதவீதம் மட்டுமே மாற்று இடங்களில் தங்கி இருக்கின்றன. மற்ற யானைகளை மீண்டும் மீண்டும் பிடிக்கும் சூழல் இருந்துள்ளது. 23 யானைகள் இதுவரை இடமாற்றம் செய்யப்பட்டு இருக்கின்றன என்று மருத்துவர்கள் தெரிவித்து இருக்கின்றனர். இது தொடர்பான சரியான தகவல்களை நாளை தெரிவிக்கின்றேன்.” என்று ஆனைமலை புலிகள் காப்பக கள இயக்குனர் வெங்கடேஷ் தெரிவித்தார்.

2026 தேர்தல் செந்தில் பாலாஜிக்கு முதலமைச்சர் மு.க.  ஸ்டாலின் போட்ட உத்தரவு

0

எதிர்வரும் 2026 சட்டமன்ற தேர்தலில் கோயம்புத்தூர் மாவட்டத்தில் பெரும்பான்மையான தொகுதிகளில் வெற்றி பெற்றே ஆக வேண்டும் என திமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு அக்கட்சியின் தலைவர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

அண்ணா அறிவாலயத்தில், உடன்பிறப்பே வா’ என்ற தலைப்பில் சட்டமன்றத் தொகுதி வாரியாக பகுதி, நகர, ஒன்றிய, பேரூர் கழகச் செயலாளர்கள் ஒவ்வொருவரையும் திமுக தலைவரும், தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் தனித்தனியாக சந்திக்கும் நிகழ்வு கடந்த ஜூன் மாதம் 13ஆம் தேதி அன்று தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த சந்திப்பின்போது சட்டமன்றத் தொகுதிகளில் திமுக ஆட்சி குறித்த பொதுமக்களின் மனநிலை, இளைஞர்கள் முதல் முதியவர்கள் வரை உள்ள எதிர்பார்ப்புகள் உள்ளிட்டவை குறித்து கேட்டறிந்து வருகிறார்.
மேலும் மாணவர்கள், பெண்கள், தொழிலாளர்கள் என அனைத்து தரப்பினருக்கும் அரசு செயல்படுத்தி வரும் சிறப்பான திட்டங்களையும், சாதனைகளையும் அவர்களிடம் எடுத்துச் சொல்லி அரசின் செயல்பாடுகளை விளக்க வேண்டும் எனவும் நிர்வாகிகளை ஸ்டாலின் அறிவுறுத்தி வருகிறார். இச்சந்திப்பின் போது, முன்வைக்கப்படும் கோரிக்கைகள் உடனடியாக அமைச்சர்களிடம் பேசித் தீர்வு காணப்படுவதோடு, மண்டல பொறுப்பாளர்கள் அனைத்து பிரச்சனைகளையும் கண்காணித்து அறிக்கை தர வேண்டும் என்றும் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இந்த நிலையில், சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற இன்றைய ’உடன்பிறப்பே வா’ நிகழ்வில் சூலூர், கிணத்துக்கடவு, மற்றும் வால்பாறை சட்டமன்ற தொகுதிகளை சேர்ந்த கட்சி நிர்வாகிகளை ஸ்டாலின் சந்தித்து பேசினார். அப்போது அவர், கோயம்புத்தூர் மாவட்டத்தில் பெரும்பான்மையான தொகுதிகளில் திமுக வெற்றி பெற வேண்டும் என்று, நிர்வாகிகள் முன்னிலையில் மண்டல பொறுப்பாளர் செந்தில் பாலாஜிக்கு உத்தரவிட்டார். கடந்த சட்டமன்ற தேர்தலின்போது கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள 10 சட்டமன்ற தொகுதிகளிலும் அதிமுகவே வென்றது. அதன் காரணமாக இம்முறை திமுக நிச்சயம் வெற்றி பெற வேண்டும் என முதலமைச்சர் ஸ்டாலின் கண்டிப்பாக தெரிவித்துள்ளார். மேலும் அரசின் சாதனைகளை தொகுதி முழுக்கவும் விளம்பரப்படுத்த வேண்டும் என்றும், கலைஞர் உரிமைத்தொகை பெறாதவர்களில் தகுதியானவர்கள் இருப்பின் அவர்கள் உரிமைத்தொகை பெறும் வகையில் கட்சியினர் உதவிட வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளார்.அதேபோல் SIR பணிகளில் உள்ள குழப்பங்களால் லட்சக்கணக்கான வாக்காளர்கள் நீக்கப்படும் அபாயம் உள்ளதாகவும், வாக்காளர்களின் விவரங்களை சேகரிக்கும் பணிகளுக்கு திமுகவினர் மிகுந்த முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்றும் திமுக தவைவர் ஸ்டாலின் அறிவுறுத்தி உள்ளார்.

மோடி பீகாரில் ரூ.10 ஆயிரம் தந்தது போல் இங்கு 15 ஆயிரம் ரூபாய் தரவும் வாய்ப்பு உள்ளது என்பதால் தாய்மார்கள் தயாராக இருங்கள் -சீமான்

0

செக்கிழுத்த செம்மல் கப்பலோட்டிய தமிழன்’ வ.உ.சிதம்பரனாரின் 89 ஆவது நினைவு நாளையொட்டி சென்னை, கிண்டி காந்தி மண்டபம் வளாகத்தில் அமைந்துள்ள அவரது சிலைக்கு அருகே அலங்கரித்து வைக்கப்பட்டுள்ள திருவுருவப் படத்திற்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

இதைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த சீமான் கூறியதாவது:

இப்படி பணநாயக கொள்ளை கூட்டத்திடம் எங்கள் பிள்ளைகளை விட்டுச் செல்லவா? முன்னோர்கள் போராடிச் செத்தார்கள். எங்களுக்கு இருக்கக் கூடிய கடைசி உரிமை வாக்கு தான். அதையும் பறிக்கிறார்கள். அதைப் போராடிப் பெற வேண்டிய நிலைமைக்கு எங்களைத் தள்ளியுள்ளது நாடு. பகத்சிங் முன் வைத்த முழக்கம் விடுதலை பெற்று இவ்வளவு ஆண்டுகளாகியும் அப்படியே உள்ளது.
வருவாய் துறையில் பணியாற்றுபவர்கள் கல்வி அறிவு பெற்றவர்கள். அவர்களுக்கே எஸ்ஐஆர் பணி சிரமம் என்றால் அடித்தட்டில் பணிபுரியும் சுகாதார ஊழியர்கள், அங்கன்வாடி ஊழியர்கள் ஆகியோரை பணி அமர்த்தியுள்ளார்கள். தகுதி வாய்ந்த அதிகாரிகளின் சான்றிதழ்கள் என்று குறிப்பிட்டுள்ளார்கள். இவர்களெல்லாம் இந்த பணியைச் செய்வதற்குத் தகுதி வாய்ந்தவர்கள் தானா? பாஜக இந்த எஸ்ஐஆரை கொண்டு வருகிறது. செயல்படுத்துவது யார்? மேற்கு வங்கத்தில் மம்தா பானர்ஜி இதை செயல்படுத்த முடியாது என்று மக்களை திரட்டி பேரணி செல்லும் போது, திமுக ஒப்புக்கு ஆர்ப்பாட்டம் நடத்தி விட்டு, உங்களுடன் கூட்டணி வைத்த கட்சிகளை கூப்பிட்டு பேசி விட்டு இவ்வளவு தீவிரமாக எஸ்ஐஆரை செயல்படுத்த வேண்டிய தேவை என்ன இருக்கிறது?பிஎல்ஒ அலுவலர்களை பணியமர்த்தி விட்டு, உங்களது கட்சிக்காரர்களுக்கு அங்கு என்ன வேலை? உங்களது கட்சி வாக்குகளைத் தவிர மற்ற வாக்குகளை தூக்கி விடும் பணியை தவிர வேறு என்ன நடக்கும்? ஈரோடு கிழக்கில் கள்ள வாக்கு பதிவு செய்யப்பட்டதா? இல்லையா? வாக்குக்கு பணம் கொடுக்கப்பட்டதா? இல்லையா? பிறகு எஸ்ஐஆரை திருத்தி என்ன நேர்மை வரப் போகிறது? எனக்கு இருக்கும் கடைசி உரிமை இந்த வாக்கு தான். அதை காப்பாற்ற வேண்டிய பொறுப்புக்கு என்னை தள்ளிவிட்டார்கள். தவறு நடப்பதை திருத்துவதற்குப் பெயர் தான் திருத்தம். ஒரு நிலத்தில் களையை மட்டும் பிடுங்காமல் மொத்தமாக அழித்துவிட்டு, மறுபடியும் நடுவதாக சொல்லும் நீங்கள் முட்டாள்களா? நாங்களா?
யார் இதில் பைத்தியம்? இறந்து பல ஆண்டுகள் ஆனவர்களின் வாக்கை நீக்குமாறு பலமுறை எழுதிக் கொடுத்தும், இப்போதும் அவருக்கு விண்ணப்பம் வருகிறது என்பது என்ன மாதிரியான செயல்?பீகாரில் 81 லட்சம் பேர் ஏன் விடுபட்டார்கள்? ஒரு வீட்டில் 100 ஓட்டுகள் பதிவாகியுள்ளது. இரட்டை வாக்குரிமை வைத்திருப்பவர்களின் எண்ணிக்கை எஸ்.ஐ.ஆருக்கு பின்னர் பல மடங்கு அதிகரித்துள்ளது. சிறப்பு தீவிர திருத்தம் என்பது வாக்கு திருட்டு திருத்தமாகத் தான் இருக்கிறது.
பீகாரில் எஸ்ஐஆர் காரணமாக வாக்கு சதவீதம் அதிகரித்துள்ளதாக தமிழிசை சவுந்தர்ராஜன் சொன்னதாக கூறுகிறீர்கள். கள்ள ஓட்டு போட்டால் வாக்கு சதவீதம் அதிகரிக்க தான் செய்யும். 81 லட்சம் பேர் வெளியே நிற்கிறார்களே ஏன் என்று சொல்ல முடிகிறதா? போராடும் திறனை ஒழித்து விட்டு நீ என்ன நேர்மையாளன்? கடைசி நேரத்தில் மக்களின் வங்கிக்கணக்கில் பத்தாயிரம் போட்டு விட்டு வாக்கை பறிக்கும் நீ என்ன நேர்மையாளன்? இவர்கள் 1000 கொடுக்கிறார்கள். அவர்கள் 10 ஆயிரம் கொடுக்கிறார்கள். 5 ஆண்டு ஆட்சியில் அந்த 10 ஆயிரத்தை கொடுக்காமல் இப்போது ஏன் கொடுத்தார்கள்? எஸ்.ஐ.ஆர் பணிகளுக்கு திமுகவினர் செல்லும் போது அந்த வீட்டின் வரவேற்பில் எனது புகைப்படமுமோ, தம்பி விஜய் படமோ இருந்தால் அவர்களுக்கு ஓட்டு இருக்கும் என்று நினைக்கிறீர்களா? திமுக செல்லும் போது எடப்பாடி பழனிசாமி, ஜெயலலிதா புகைப்படம் இருந்தால் அவர்களுக்கு ஓட்டு இருக்கும் என்று நினைக்கிறீர்களா? பாஜகவினர் செல்லும் போது இஸ்லாமியர், கிறிஸ்தவர்களுக்கு ஓட்டு இருக்கும் என்று நினைக்கிறீர்களா? எப்படிப்பட்ட ஜனநாயகம் இது. கொளத்தூரில் கள்ள ஓட்டு இருக்கிறது என்றால், அவ்வளவு நேர்மையாளர்கள் அந்த தேர்தலை ரத்து செய்ய வேண்டியது தானே? கொளத்தூரில் மட்டும் தான் போலி வாக்காளர்கள் உள்ளார்களா?
பிஜேபி வென்ற தொகுதிகளில் எல்லாம் போலி வாக்காளர்கள் இல்லையா? திருத்தம் செய்வது என்றால் அதற்கு கால அவகாசம் எடுத்து செய்ய வேண்டியது தானே? வாக்காளர்கள் எங்களுக்கான ஆட்சியாளர்களை தேர்வு செய்தோம்‌. இப்போது ஆட்சியாளர்கள் தங்களுக்கான வாக்காளர்களைத் தேர்வு செய்கிறார்கள். பாஜகவிடம் நாட்டையே கொடுத்து நாசமாக்கி விட்டார்கள். இந்த அரை கிரவுண்டையும் முடித்து விட்டுச் செல்லுங்கள். தமிழ்நாட்டில் உள்ள பீகாரிகள் காங்கிரஸ் கட்சியின் வாக்காளர்கள் இல்லை. அனைவரும் பாஜகவின் வாக்காளர்கள். ஹிந்தியை திணித்தால் எதிர்க்கிறோம் என்பதால் ஹிந்திகாரர்களை திணிக்கிறார்கள்.
இறைவழிபாட்டை விமர்சித்த இயக்கங்கள் திரை வழிபாட்டை போற்ற வைத்தன. கடவுள் வழிபாட்டைவிட கதாநாயக வழிபாடு சிறந்தது என கட்டமைத்து விட்டார்கள். மோடி பீகாரில் 10 ஆயிரம் போட்டது போல், நமது ஆட்கள் 15 ஆயிரம் போடவும் வாய்ப்பு உள்ளது. அம்மாக்களிடம் வங்கியில் கணக்கை ஆரம்பித்து விடச் சொல்ல வேண்டும்.பீகாரை முன்மாதிரியாக எடுத்துக் கொள்ளக்கூடும். ஏற்கனவே 10 லட்சம் கோடி ரூபாய் கடன் இருக்கிறது. கூடுதலாக 2 லட்சம் கோடி கடன் அதிகரிக்க வேண்டியது தானே. காங்கிரஸ் கட்சி காசு கொடுத்ததால் அண்ணா தோற்றுவிட்டார். காசு கொடுப்பதை அண்ணா விமர்சித்துப் பேசினார். ரூ.2 கொடுத்ததற்கே விமர்சித்த அண்ணாவின் பிள்ளைகள் 2000 ரூபாய் கொடுக்கிறார்கள்.

உள்ளத்திலும், கோயிலிலும் தாமரை மலர வேண்டும் என கூறுகிறார்கள். தாமரை தண்ணீரிலேயே மலர்வதில்லை. எங்கள் ஊரில் வெங்காய தாமரை தான் வளர்கிறது” என்று சீமான் கூறினார்.

உயர் நீதிமன்ற உத்தரவை மதிக்காமல் லஞ்சத்திற்காக காத்திருக்கும் அரச அதிகாரிகள்- கோவையில் பெண் புகார்

0

கோவை மாவட்டம் கருமத்தம்பட்டி  அருகே உள்ள மோளகாளிபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் ரமேஷ். இவருக்கு அதே பகுதியில் சொந்தமாக விவசாய நிலம் உள்ளது. அதில் அவர் குடும்பத்துடன் விவசாயம் செய்து வருகிறார். இந்த நிலையில் அவரது நிலத்தை சுற்றியும் உள்ள காலி நிலங்களை பொன்னுச்சாமி, சாந்திநாதன்,சரவணன்,துரைசாமி பாலசுப்பிரமணியம் ஆகியோர் விலைக்கு வாங்கி அதை வீட்டு மனை இடங்களாக பிரித்து விற்பனை செய்வதற்கான ஏற்பாடுகளை செய்து வருகின்றனர். இது சம்பந்தமாக பாதிக்கப்பட்ட ரமேஷ் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த நிலையில் நிலத்தை அளவிட நீதிபதி உத்தரவிட்டுள்ளார். இந்த நிலையில் நில அளவையாளர் மற்றும் வட்டாட்சியர் அலுவலகம் அலுவலர்கள் நிலத்தை அளவிடு செய்யாமல் எதிர் தரப்பினரிடம் லஞ்சம் பெற்றுக்கொண்டு தாமதம் செய்து வருவதாக பாதிக்கப்பட்டவர் குற்றம் சாட்டியுள்ளார்.

மேலும் இது குறித்து காவல்துறையிடம் புகார் அளித்தும் போதிய பாதுகாப்பு வசதி கொடுக்கவில்லை என்றும் நில அளவையாளர் நிலத்தை வந்து அளக்க மறுப்பு தெரிவித்ததாகவும் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பாதிக்கப்பட்ட ரமேஷ் குடும்பத்துடன் புகார் அளித்தனர்.

அது மட்டும் இல்லாமல் அரசு பணியில் இல்லாத ஒருவரை அரசு அலுவலகத்தில் வேலைக்கு வைத்து அவர் மூலமாக லஞ்சம் பெறுவதாக குற்றம் சாட்டியுள்ளார்.

கோவையில் மாணவி பாலியல் வன்கொடுமையை கண்டித்து அதிமுக போராட்டம்

0

கோவையில் தனியார் கல்லூரி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்தை கண்டித்து இன்று பல்வேறு கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டங்களை மேற்கொண்டனர். அதேபோல் கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் அருகே அதிமுக மகளிர் அணியினர் சுமார் 300-க்கும் மேற்பட்டோர் கண்டன பதாகைகளுடன் முழக்கங்களை எழுப்பி ஆர்ப்பாட்டம் மேற்கொண்டனர். அதிமுக மகளிரணி மாநில செயலாளரும் முன்னாள் அமைச்சருமான வளர்மதி தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கருப்பு சட்டை அணிந்து கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் பேசிய வளர்மதி, அதிமுகவினர் போராட்டம் நடத்தப் போகிறார்கள் என தெரிந்ததை அடுத்து காவல் துறையினர் சினிமாவில் வருவது போன்று கடைசி நேரத்தில் யாரையோ பிடித்து சுட்டு பிடித்துள்ளதாக கூறுகின்றனர் என்றார். மேலும், அவர்கள் தான் குற்றவாளி என்று தெரிந்திருந்தால் சுட்டுக் கொன்றிருக்க வேண்டும். அதை விட்டு விட்டு காலில் சுட்டிருக்கக் கூடாது என்றும் அவர் கூறினார்.தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த முன்னாள் அமைச்சர் வளர்மதி, தற்போது 60 வயது மூதாட்டிக்கு கூட பெப்பர்ஸ் ஸ்பிரே கொடுக்க வேண்டிய நிலை உள்ளது என தெரிவித்தார்.

பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர் மனோஜ் பாண்டியன் திமுகவில் இணைந்தது குறித்தான கேள்விக்கு, அவர் ஒரு அணியில் இருந்து தான் சென்றிருக்கிறார். அதிமுகவிலிருந்து செல்லவில்லை என பதில் அளித்தார். அதிமுகவில் இருந்து பல்வேறு தலைவர்கள் பிரிந்து செல்வது குறித்த கேள்விக்கு இது போன்ற விஷயங்களை எல்லாம் எடப்பாடியார் பார்த்துக் கொள்வார் என்றும் அதிமுக என்பது ஒரு கடல் என்றும் தெரிவித்தார்.