Thursday, June 25, 2026
Home Blog Page 14

கோலாகலமாக தொடங்கியது இந்திய நாட்டிய விழா; ஒரு மாதத்துக்கு களைகட்டும்

0

சுற்றுலா பயணிகளை வரவேற்கும் வகையில் ’இந்திய நாட்டிய விழா’ மாமல்லபுரத்தில் கோலாகலமாக தொடங்கியது. வருகிற ஜனவரி 19 ஆம் தேதி வரை நடைபெறும் இந்த விழாவை ஏராளமான சுற்றுலா பயணிகள் கண்டுகளிக்க உள்ளனர்.

செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரத்தில் உள்ள கடற்கரை கோயில் வளாகத்தில் சுற்றுலாத் துறை சார்பில் ஆண்டுதோறும் ஒரு மாதம் இந்திய நாட்டிய விழா நடைபெறுவது வழக்கம். அந்த வகையில், இந்த ஆண்டின் நாட்டிய விழா நேற்று கோலாகலமாக தொடங்கியது. இதனை தமிழக சுற்றுலாத் துறை அமைச்சர் ராஜேந்திரன் மற்றும் சிறு குறு நடுத்தர தொழில் நிறுவனத்துறை அமைச்சர் தாமோ அன்பரசன் ஆகியோர் குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்தனர்.
தொடர்ந்து மேடையில் பேசிய அமைச்சர் தாமோ அன்பரசன், “கலைகளின் பிறப்பிடமாக உள்ளது மாமல்லபுரம். இங்குள்ள சிற்ப கலைகள் உலகிற்கு எடுத்துக்காட்டாக திகழ்கின்றன. உலக பாரம்பரிய சின்னங்களில் ஒன்றாக மாமல்லபுரத்தை யுனெஸ்கோ அறிவித்துள்ளது. தமிழ்நாட்டிற்கு வருகை தரும் சுற்றுலா பயணிகளை உற்சாகப்படுத்தவும், பாரம்பரியமிக்க பரத நாட்டியம், இசை, கிராமிய கலைகளை அழியாமல் காத்திட வேண்டும் என்ற நோக்கிலும் இந்த விழா வருடந்தோறும் நடத்தப்பட்டு வருகிறது.

1992-ம் ஆண்டு முதல் நடத்தப்படும் இந்த விழா கடந்த 2009 ஆண்டு முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியால் ‘இந்திய நாட்டிய விழா’வாக அறிவிக்கப்பட்டது. கடந்த 4 ஆண்டுகளில் திமுக ஆட்சியில் பல்வேறு திட்டங்கள் மாமல்லபுரத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ளன. உலக தரம் வாய்ந்த போட்டிகளான செஸ் ஒலிம்பியாட், கடல் அலை சறுக்கு போட்டி, காத்தாடி திருவிழா, பலூன் திருவிழா போன்றவற்றை மாமல்லபுரத்திற்கு கொண்டு வந்தது திமுக அரசு” என்றார்.
அதனைத்தொடர்ந்து பேசிய சுற்றுலாத் துறை அமைச்சர் ராஜேந்திரன், “மாமல்லபுரம் கட்டட கலையின் தாயகமாக, சிற்பக் கலையின் சிகரமாகவும் திகழ்ந்து வருகிறது. இங்கு நடைபெறும் இந்திய நாட்டிய விழாவின் மூலம் சுற்றுலா பயணிகள் இங்கு தங்கும் காலம் அதிகரிக்கிறது. இப்படி இந்தியாவின் முதன்மையான மாநிலமாக தமிழ்நாடு திகழ்வதற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்” என்றார். இதன் பின்னர் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் இருந்து நடன குழுக்கள் வரவழைக்கப்பட்டு நடத்தப்படும் இந்த விழாவில், வெளிநாடு மற்றும் உள்நாட்டு சுற்றுலா பயணிகள் ஏராளமானோர் கலந்துகொண்டு நடன நிகழ்ச்சியை கண்டு ரசித்தனர்.

முன்னதாக, நிகழ்ச்சியில் பங்கேற்ற சுற்றுலா பயணிகளுக்கு அமைச்சர்கள் மாலை மற்றும் சால்வை அணிவித்து உற்சாக வரவேற்பு அளித்தனர்.

நீக்கப்பட்ட வாக்காளர்கள் பெயரைச் சேர்க்க தேவைப்படும் 12 ஆவணங்கள்

0

சிறப்பு தீவிர திருத்தத் தின் மூலம் நீக்கப்பட்ட வாக்காளர்களின் பெயர் களை மீண்டும் சேர்க்க தேவைப்படும் 12 ஆவணங்கள் குறித்து தகவல் தெரியவந்துள்ளது.

வாக்காளர் பட்டியல் தீவிர திருத்தப் பணிகள் (SIR) மேற்கொள்ளப் பட்ட நிலையில், தமிழகத்தில் 97 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டனர். அனைத்து மாவட்டங்களிலும் வரைவு வாக்காளர் பட்டியல் வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்டு, அனைத்து வாக்குச்சாவடிகளிலும் வாக்காளர்களின் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளது. தேர்தல் ஆணைய இணைய தளத்திலும்
வெளியிடப்பட்டுள்ளது.

இதையடுத்து பெயர் நீக்கப்பட்டவர்கள், முகவரி மாறியவர்கள் உரிய ஆதாரங்களுடன் தங்களது பெயர்களை வாக்காளர் பட்டியலில் சேர்ப்பதற்கு சிறப்பு முகாம் மூலம் விண்ணப்பிக்கலாம். முகாமுக்கு செல்ல இயலாதோர் https://www.eci.gov.in/voters-services-portal
என்ற இணையதளம் மற்றும் வோட்டர் ஹெல்ப்லைன் App செயலியில் விண்ணப்பிக்கலாம்.

2026 ஜனவரி 1ஆம் தேதி 18 வயது பூர்த்தியடைவோர் வாக்காளர் பட்டியலில்
தங்களது பெயரைச் சேர்க்க பிறப்புச் சான்றிதழ் உள்ளிட்ட ஆவணங்களுடன் படிவம் 6-ஐ பூர்த்தி செய்து கொடுக்கலாம். இதேபோல தொகுதிக்குள் இடம் பெயர்ந்தவர்கள், தொகுதி விட்டு தொகுதி மாறி வந்தவர்களும் தங்களுடைய தற்போதைய முகவரிக்கான ஆவணத்துடன் படிவம் 8-ஐ பூர்த்தி செய்து கொடுக்கலாம். மேலும், பெயரைச் சேர்க்க தேவையான 12 ஆவணங்கள் என்பவை, பிறப்புச் சான்றிதழ், கடவுச்சீட்டு, ஒன்றிய-மாநில அரசு பொதுத்துறை நிறு வனங்களில் பணியாற்றும் அல்லது ஓய்வூதியதாரர்கள் அடையாள அட்டை, 1987-க்கு முன்பு அரசு, உள்ளாட்சி அமைப்புகள், வங்கிகள், அஞ்சல் அலுவலகம், எஸ்ஐசி வழங்கிய ஆவணங்கள், அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களின் பள்ளி, பல்கலைக்கழக சான்றிதழ்கள், வன உரிமை சான்றிதழ், சாதி சான்றிதழ், குடும்ப அட்டை, ஆதார் ஆகியவற்றில் ஒன்றை அளித்து பெயரைச் சேர்க்கலாம்.

மக்களவையில் வெடித்த மதுரை, கோவை மெட்ரோ ரயில் விவகாரம்

0

புதுடெல்லி: மதுரை மற்றும் கோவை மெட்ரோ ரயில் திட்டம் தொடர்பாக மக்களவையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் எம்.பி. சு.வெங்கடேசன் எழுத்துப்பூர்வமாக கேள்வியெழுப்பினார்.

மக்களவையில் மதுரை தொகுதி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் எம்.பி. சு.வெங்கடேசன் மதுரை, கோவை மெட்ரோ ரயில் குறித்து கேள்வி எழுப்பினார். எழுத்துப்பூர்வமாக அவர் எழுப்பிய கேள்வியில், “மதுரை மற்றும் கோவை மெட்ரோ ரயில் திட்டங்கள், அந்த நகரங்களில் 20 லட்சம் மக்கள்தொகை இல்லை என்ற காரணத்தினால் நிராகரிக்கப்பட்டதா? ஆக்ரா, போபால், இந்தூர் மற்றும் நாக்பூர் போன்ற ஒப்பிடத்தக்க நகரங்களில் அல்லது குறிப்பிட்ட வரையறைகளை விட குறைந்த மக்கள்தொகை கொண்ட வட மாநில நகரங்களில் மெட்ரோ திட்டங்களை அங்கீகரிப்பதற்கான அளவுகோல்கள் எவை?

2011 மக்கள்தொகை கணக்கெடுப்பை அடிப்படையாகக் கொண்டே இப்போதும் முடிவெடுக்கப்படுகிறதா? தற்போதைய மக்கள்தொகை உயர்வு கணக்கில் கொள்ளப்படுவது இல்லையா? பயணிகளின் எண்ணிக்கை குறித்த கணிப்புகள் சுயமதிப்பீடா அல்லது மூன்றாம் தரப்பு மதிப்பீடா? திட்டங்கள் நிராகரிக்கப்படுவதற்கு ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டதா? 50:50 என்ற விகிதத்தில் தமிழ்நாடு உள்ளிட்ட தென்னிந்திய மாநிலங்கள் சமர்ப்பிக்கப்பட்ட நிதி திட்டங்கள் ஏற்கப்படவில்லையா? பிற பகுதிகளிலும் இதே அணுகுமுறை கையாளப்பட்டுள்ளதா? இல்லையெனில் இது புது அணுகுமுறையா? மக்கள் மத்தியில் மெட்ரோ திட்டங்களுக்கு ஒப்புதல் தரப்படாமல் கோபத்தையும் அதிருப்தியையும் ஏற்படுத்தி இருக்கிற பின்னணியில் அரசின் முடிவு மறு பரிசீலனை செய்யப்படுமா?” கேட்டிருந்தார்.இதற்கு மத்திய வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் துறைக்கான இணை அமைச்சர் ஸ்ரீ தோக்கன் சாகு எழுத்துப்பூர்வமாக பதில் அளித்தார். அவர் பேசுகையில், “நகர்ப்புற வளர்ச்சி, மாநிலங்களின் அதிகார பட்டியலில் வருவதால் அவர்களே திட்டங்களை உருவாக்கி தருகிறார்கள். அந்த முன்மொழிவுகளை ஆராய்ந்த பிறகு முடிவெடுக்கப்படுகிறது. ஒரே ஒரு அளவுகோலின் அடிப்படையில் மட்டும் முடிவுகள் அமைய வேண்டியதில்லை. திட்ட அமலாக்கத்திற்கான சாத்தியக் கூறுகள், வளங்களை திரட்டும் வாய்ப்பு ஆகியவற்றின் அடிப்படையில் முடிவெடுக்கப்படுகிறது. திட்டங்களை அங்கீகரிப்பதற்கு எந்த நிலையான காலக்கெடுவையும் நிர்ணயம் செய்ய முடியாது.

தமிழ்நாடு அரசு மதுரைக்காக சமர்ப்பித்துள்ள விரிவான திட்ட அறிக்கையில் மதுரை மக்கள்தொகை 15 லட்சம் என குறிப்பிடப்பட்டுள்ளது. 2011 மக்கள்தொகை கணக்கெடுப்பு படி இது 10.84 லட்சம்தான். கோவையை பொருத்தவரை பயணத்தின் குறைந்த சராசரி தூரங்கள் (low average trip lengths) மற்றும் சாலைகளில் உள்ள தற்போதைய சராசரி வேகங்களைக் கருத்தில் கொண்டு, மெட்ரோ அமைப்புக்கு மாறுவதால் ஏற்படும் போக்குவரத்து மாற்றம் (modal shift) மிகக் குறைவான நேர சேமிப்பை மட்டுமே அளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கோயம்புத்தூர் மாநகராட்சி பகுதி மற்றும் உள்ளூர் திட்டமிடல் பகுதி (LPA) ஆகியவற்றின் மக்கள்தொகை, முன்மொழியப்பட்ட மெட்ரோ அமைப்பால் சேவை செய்ய கடினமாக உள்ளது. ஏனெனில், உள்ளூர் திட்டமிடல் பகுதியில் வசிக்கும் மக்களின் எண்ணிக்கை, முன்மொழியப்பட்ட மெட்ரோ அமைப்புக்கு சேவை செய்யப்பட உள்ள மாநகராட்சி பகுதியை விட 5 மடங்கு பெரியதாகும்.

கோயம்புத்தூரில் 34 கி.மீ.க்கான முன்மொழியப்பட்ட வலைப் பின்னலில் ஒரு நாளைக்கான பயணிகளின் எண்ணிக்கை 5.9 லட்சமாக திட்டமிடப்பட்டுள்ளது. இது சென்னை மெட்ரோ ரயில் முதல் கட்டத்தின் (Phase-1) 54.10 கி.மீ. செயல்பாட்டு வலைப் பின்னலில் ஒரு நாளைக்கு 4 லட்சமாக உள்ள தற்போதைய பயணிகளின் எண்ணிக்கையுடன் ஒப்பிடுகையில் அதிகமாக உள்ளது. சென்னை மெட்ரோ ரயில் ஒரு பெரிய மக்கள்தொகைக்கு சேவை செய்கிறது. எனவே, விரிவான திட்ட அறிக்கையில் திட்டமிடப்பட்டுள்ள பயணிகளின் எண்ணிக்கை யதார்த்தமானதாக இல்லை. பல இடங்களில், போதுமான நிலம் (Right of Way – RoW) கிடைக்காததால் கட்டுமான நிலையங்களை (construct station) அமைக்கச் சாத்தியமில்லை.மெட்ரோ ரயில் திட்டங்களைத் தவிர, மத்திய அரசு ரூ. 20,000 கோடி செலவில் ரூ. 10,000 கோடி குளிரூட்டப்பட்ட இ-பேருந்துகளை இயக்குவதற்கான e-Bus Sewa திட்டத்தைத் தொடங்கியுள்ளது. இந்த திட்டத்தில் ஆந்திரா, கர்நாடகா, கேரளா மற்றும் தெலங்கானா ஆகிய தென்னிந்திய மாநிலங்கள் பங்கேற்றன. இருப்பினும், தமிழ்நாடு மற்றும் கேரளா இந்தத் திட்டத்தில் பங்கேற்கவில்லை” என்று தெரிவித்திருந்தார்.

சு.வெங்கடேசன் எம்பி “X” தள பதிவில்

இந்த நிலையில், இதற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் சு.வெங்கேடசன் எம்பி எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். அதில் அவர், “ஒன்றிய அமைச்சர் எந்த கேள்விக்கும் நேரடியாக பதில் அளிக்கவில்லை. அளவுகோல்கள் என்றிருந்தால் அவை பொதுவானதாக இருக்க வேண்டும். நாங்கள் கேள்வியில் நான்கு நகரங்களை குறிப்பிட்டு கேட்டிருக்கிறோம். ஆக்ரா, போபால், இந்தூர், நாக்பூர் போன்ற ஒப்பிடத்தக்க நகரங்களில் நீங்கள் மெட்ரோ ரயில் திட்டத்தை அணுகியதற்கும் மதுரை, கோவைக்கும் என்ன வேறுபாடு? மதுரை கோவையை விட குறைவான மக்கள்தொகை கொண்ட வடமாநில நகரங்களுக்கு மெட்ரோ திட்டங்களுக்கான ஒப்புதல் எதுவும் தரப்படவில்லையா? தரப்பட்டிருந்தால் எந்த அளவுகோல்களின் அடிப்படையில்? மதுரைக்கும், கோவைக்கும் நீங்கள் சொல்லுகிற காரணங்கள் ஏற்கனவே நீங்கள் ஒப்புதல் அளித்துள்ள மெட்ரோ ரயில் திட்டங்களில் இல்லையா? 50:50 என்ற நிதி திட்டம் அடிப்படையில் திட்டங்களுக்கு ஒப்புதல் தருவது மீதான அணுகுமுறை பாரபட்சம் இன்றி பிற பகுதிகளிலும் சீராக அமலாக்கப்படுகிறதா? இந்தக் கேள்விகளுக்கு அமைச்சர் பதிலில் எந்த விளக்கமும் இல்லை. 2011 மக்கள்தொகை அடிப்படையில் தான் முடிவெடுப்பீர்களா? நீங்கள் மக்கள்தொகை கணக்கெடுப்பை நடத்தாததற்காக அதற்குப் பின்னர் 14 ஆண்டுகள் உயர்வை கண்டுள்ள மக்கள்தொகையை கணக்கில் எடுக்க மாட்டீர்களா? என்ற கேள்விக்கும் நேரடி பதிலில்லை. இந்த அரசாங்கம் எப்போதுமே தனக்கு விருப்பமில்லாத கேள்விகளுக்கு பதில் சொல்வதை தவிர்ப்பதும், நழுவுவதும், திசை திருப்புவதும் வாடிக்கையாக வைத்துள்ளது. திட்டங்களுக்கு ஒப்புதல் தருவதற்கெல்லாம் காலக்கெடு நிர்ணயிக்க முடியாது என்று அராஜகமாக பதில் தரப்பட்டுள்ளது. எங்கள் கேள்வியே தமிழ்நாட்டிற்கு என்று அறிவிக்கப்படும் திட்டங்கள் மட்டும் எந்த கால வரையறையும் இன்றி தாமதமாவது ஏன் என்பது தான். மதுரை “எய்ம்ஸ்” ஒன்றிய அரசின் பாரபட்சத்தால் தாமதமாவது போல தற்போது மதுரை மெட்ரோவும் நிராகரிக்கப்படுகிறது ஏன் என்பது தான்.
பட்டுக்கோட்டைக்கு வழி கேட்டால் கொட்டைப்பாக்குக்கு விலை சொல்வது போல, பி.எம்.இ. சேவா குளிரூட்டப்பட்ட பேருந்து திட்டம் பற்றி பதிலில் குறிப்பிட்டுள்ளார். கேட்ட கேள்விக்கு பதில் சொல்லாமல், கேட்காத கேள்விக்கு பதில் சொல்வதும் இவர்களின் வாடிக்கைதான். எல்லாவற்றிற்கும் மேலாக மக்களின் கோபம் அதிருப்தியை கருத்தில் கொண்டு உங்கள் முடிவை மறுபரிசீலனை செய்வீர்களா என்ற கேள்விக்கும் பதில் இல்லை. நீங்கள் பதிலை தயாரித்த உடன் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்கு முன்பாக மேலே எழுப்பப்பட்டுள்ள கேள்விகளுக்கும் எங்கள் தருகிற பதிலுக்கும் ஏதாவது சம்பந்தம் இருக்கிறதா என்று பாருங்கள். அது குறைந்தபட்ச நாடாளுமன்ற நெறிமுறை.

மதுரை மெட்ரோவை புறக்கணிப்பதற்காகத்தான் மக்கள் கவனத்தை திசை திருப்ப நீங்கள் மதுரையில் நாடகம் அரங்கேற்றிக் கொண்டிருக்கிறீர்கள் என்பது எல்லோருக்கும் தெரியும். ஆனால் மதுரை மக்கள் விழிப்புணர்வு கொண்டவர்கள். நீங்கள் அவர்களை நாடி செல்லும் போது நாடாளுமன்றத்தில் பதிலளிக்காத கேள்விகளுக்கு எல்லாம் பதில் அளிக்க வேண்டி இருக்கும் என்று சு.வெங்கடேசன் எம்பி குறிப்பிட்டுள்ளார்.

கோவை ஐடி பார்க்கிற்குள் புகுந்த யானைகள்

0

கோயம்புத்தூர் கீரணத்தம் ஐடி பார்க் உள்ள பகுதியில் 3 காட்டு யானைகள் சுற்றி வரும் நிலையில் வனத்துறையினர் யானைகளை விரட்டும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

கோவை மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள பெரியநாயக்கன்பாளையம், தடாகம் பகுதயில் அதிகளவிலான காட்டு யானைகள் உள்ளன. இந்த யானைகள் அவ்வப்போது உணவு மற்றும் தண்ணீரை தேடி குடியிருப்பு மலையடிவார கிராமங்களில் புகுந்து வருகின்றன. மேலும் அவ்வாறு வரும் யானைகள் பயிர் சேதங்களை ஏற்படுத்துவதாக விவசாயிகள் குற்றம் சாட்டி வந்தனர். இந்த நிலையில் நேற்று இரவு மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் இருந்து இறங்கிய 3 காட்டு யானைகள் கௌசிகா நதி பள்ளம் வழியாக தண்ணீரைத் தேடி நீண்ட தூரம் வந்துள்ளன. வனத்தில் இருந்து 15 கி.மீ தூரம் நடந்து கோவை மாநகர் பகுதியை ஒட்டியுள்ள கீரணத்தம் ஐ.டி.பார்க் அருகே இருந்த குட்டையில் இறங்கின.

இதனை பார்த்து அந்த பகுதி பொதுமக்கள் உடனடியாக பெரியநாயக்கன்பாளையம் வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த வனத்துறையினர் யானைகளை விரட்டிய நிலையில் குட்டையில் இருந்து வெளியேறிய யானைகள் அங்கிருந்த அடர் மரங்கள் இருக்கும் பகுதிக்குள் சென்று விட்டன. மேலும், இன்றிவு 3 யானைகளையும் வனப்பகுதிக்குள் விரட்ட வனத்துறையினர் முடிவு செய்தனர்.

கலைமகள் சபா நிதி நிறுவன வழக்கு – ஒரு நபர் ஆணையம் அமைத்து உத்தரவு

0

தமிழ்நாடு, ஆந்திரா மற்றும் கேரளாவில் கலைமகள் சபா நிதி நிறுவனத்தின் மூலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு பணத்தை திரும்ப வழங்க ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் ஒரு நபர் ஆணையத்தை அமைத்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கலைமகள் சபா என்ற நிதி நிறுவனம் 5 லட்சத்து 33 ஆயிரத்து 356 உறுப்பினர்களிடம் பெற்ற முதலீடு மூலமாக தமிழகம், ஆந்திரா மற்றும் கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் சுமார் 13 ஆயிரத்து 500 ஏக்கர் நிலங்களை வாங்கி ரியல் எஸ்டேட் தொழிலில் ஈடுபட்டது.
இந்த நிறுவனத்துக்கு எதிராக முறைகேடு புகார்கள் வந்ததையடுத்து கலைமகள் சபா நிர்வாகத்தை நிர்வகிக்க, பதிவுத் துறை உதவி தலைமைப் பதிவாளர் அந்தஸ்துக்கு குறையாத அதிகாரியை நியமிக்க சென்னை உயர் நீதிமன்றம் கடந்த 2021ம் ஆண்டு உத்தரவிட்டது. அதன்படி 4 அதிகாரிகள் நியமிக்கப்பட்டும் எந்த முன்னேற்றமும் இல்லாததால் அதை எதிர்த்து கோவையைச் சேர்ந்த கருப்பண்ணன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தார்.

அதில், கலைமகள் சபாவுக்கான சொத்துக்கள் தமிழகம் மற்றும் அண்டை மாநிலங்களிலும் உள்ளதால் தமிழக அரசு அதிகாரிகளுக்குப் பதிலாக உயர் நீதிமன்றத்தின் ஓய்வு பெற்ற நீதிபதியை நியமித்து முதலீட்டாளர்களுக்கான தொகையை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரியிருந்தார்.இந்நிலையில் இந்த வழக்கு நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், என். செந்தில்குமார் ஆகியோர் அடங்கிய சிறப்பு அமர்வில் விசாரணைக்கு வந்தது. அனைத்து தரப்பு வாதங்களுக்கு பின் தீர்ப்பளித்த நீதிபதிகள், ஏற்கனவே கோவை மற்றும் திருவாரூர் மாவட்டங்களில் கலைமகள் சபாவுக்கு சொந்தமான சொத்துக்கள் கணக்கிடப்பட்டு அவற்றின் சந்தை மதிப்பு உள்ளிட்டவை மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.
அதே போல, தமிழகம் மற்றும் பிற மாநிலங்களில் உள்ள சொத்துக்களையும் மதிப்பீடு செய்ய வேண்டியுள்ளது. ஆக்கிரமிப்பில் உள்ள சொத்துக்களை அகற்றவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கலைமகள் சபாவுக்கு சொந்தமான சொத்துக்கள் அனைத்தையும் சரி பார்த்து மின்னணு முறையில் பொது ஏலம் விட்டு, உறுப்பினர்களுக்கு சேர வேண்டிய தொகையை வழங்க உயர் நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி எஸ்.எஸ்.சுந்தர் தலைமையில் ஒரு நபர் ஆணையம் அமைக்கப்படுகிறது.
இவருக்கு உதவியாக வழக்கறிஞர்கள் எம்.எழிலரசி, என்.பிரேமலதா ஆகியோரும் நியமிக்கப்படுகின்றனர். மேலும் அனைத்து உறுப்பினர்களின் விவரங்களையும் முறையாக இணையத்தில் பதிவு செய்வதற்கான நடவடிக்கைகளையும் இந்த ஆணையம் மேற்பார்வையிட வேண்டும் என உத்தரவிட்டனர்.

எடப்பாடி பழனிசாமியுடன் நயினார் நாகேந்திரன் சந்திப்பு – தொகுதி பங்கீடு பேச்சா?

0

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை, பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் இன்று சந்தித்து பேசினார். அதிமுக பொதுக்குழு, செயற்குழுக் கூட்டம் சென்னையில் நேற்று நடைபெற்றது. இதில், அதிமுக கூட்டணியில் இடம்பெறும் கட்சிகள் தொடர்பாக முடிவெடுக்கும் அதிகாரம் எடப்பாடி பழனிசாமிக்கு வழங்கி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

மேலும், இந்த கூட்டத்தில் பாஜகவுக்கு அதிர்ச்சி வைத்தியம் அளிக்கும் விதமாக தீர்மானம் ஒன்று நிறைவேற்றப்பட்டது. அதாவது திமுக என்ற தீயசக்தியை வீழ்த்தும் நோக்கத்துடனும், திமுக எதிர்ப்பு வாக்குகளை சிதறவிடாமல் தடுக்கும் ராஜதந்திரத்துடனும் பாஜகவை அதிமுக தலைமையிலான கூட்டணியில் எடப்பாடி பழனிசாமி இணைத்திருக்கிறார்  என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இதில் தேசிய ஜனநாயகக் கூட்டணி என்று கூறாமல், அதிமுக தலைமையிலான கூட்டணி என்ற வார்த்தை அழுத்தம் திருத்தமாக பயன்படுத்தப்பட்டுள்ளது. அதேபோல, 2026 சட்டமன்றத் தேர்தலில் அதிமுக பெரும்பான்மையான இடங்களை கைப்பற்றி தனித்து ஆட்சியமைக்கும் எனவும் எடப்பாடி பழனிசாமி தனது உரையில் தெரிவித்தார்.
அமித்ஷா உள்ளிட்ட பாஜக தலைவர்கள், ‘கூட்டணி ஆட்சி’ என்ற சொல்லாடலை தொடர்ந்து பயன்படுத்தி வந்த நிலையில், தனித்து ஆட்சி எனக் கூறி பாஜகவுக்கு நேரடியாக பதிலடி கொடுத்துள்ளார் எடப்பாடி பழனிசாமி.எடப்பாடி – நயினார் நாகேந்திரன் சந்திப்பு இந்த சூழலில், சென்னை கிரீன்வேஸ் சாலை உள்ள இல்லத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் இன்று சந்தித்து பேசினார். சுமார் ஒரு மணி நேரம் இந்த சந்திப்பு நடைபெற்றது. பிறகு செய்தியாளர்களை சந்தித்த நயினார் நாகேந்திரனிடம்,

எடப்பாடி பழனிசாமியிடம் தொகுதி பங்கீடு குறித்து பேசினீர்களா? எனக் கேள்வியெழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த நயினார் நாகேந்திரன், அதிமுக பொதுக்குழுக் கூட்டம் சிறப்பாக நடைபெற்றது. அதற்காக எடப்பாடி பழனிசாமியை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தேன். தொகுதி பங்கீடு பற்றி எதுவும் பேசவில்லை” என்றார். டிடிவி தினகரன், ஓபிஎஸ்-ஐ கூட்டணிக்கு கொண்டு வருவது தொடர்பாக ஆலோசிக்கப்பட்டதா? என்ற கேள்விக்கு, இல்லை என பதிலளித்தார். தொடர்ந்து பேசிய அவர் நாளை மறுதினம் டெல்லி செல்ல உள்ளதாக தெரிவித்தார்.

தேமுதிக, பாமகவை கூட்டணிக்குள் கொண்டு வருவது தொடர்பாக ஆலோசிக்கப்பட்டதா ? என்ற கேள்விக்கு, பதில் அளிக்காமல் சிரித்தபடி அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.

டெல்லியில் அமித்ஷாவுடன் சந்திப்பு..!

0

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை டெல்லியில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் நேற்று டிசம்பர் 2-ந் தேதி சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின் போது தம்மை அதிமுகவில் மீண்டும் சேர்ப்பது மற்றும் தனிக்கட்சி தொடங்குவது பற்றி அமித்ஷாவிடம் ஓ.பன்னீர்செல்வம் தமது இறுதி முடிவை தெரிவித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதிமுகவில் தங்களை மீண்டும் சேர்க்க வேண்டும் என வலியுறுத்தி வருகிறார் ஓ.பன்னீர்செல்வம். பாஜக இதற்கான அழுத்தத்தை எடப்பாடி பழனிசாமிக்கு கொடுக்கும் எனவும் நம்பினார் ஓ.பன்னீர்செல்வம். ஆனால் பாஜக தரப்பில் தமக்கு உரிய மரியாதை கிடைக்கவில்லை என்பதால் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியை விட்டே வெளியேறுவதாக அறிவித்தார் ஓ.பன்னீர்செல்வம்.இதனையடுத்து ஓ.பன்னீர்செல்வம், திமுக அணியில் இணைவாரா? விஜய்யின் தவெக அணிக்கு போவாரா? என விவாதங்கள் நடைபெற்றன. இந்த நிலையில் பண்ருட்டி ராமச்சந்திரன் உள்ளிட்டோருடன் ஓ.பன்னீர்செல்வம் நடத்திய ஆலோசனைக்குப் பிறகு சில முடிவுகள் எடுக்கப்பட்டன.

அதில்,டிசம்பர் 10-ந் தேதி எடப்பாடி பழனிசாமி கூட்டியுள்ள அதிமுக பொதுக்குழுவில் ஓபிஎஸ் உள்ளிட்டோரை மீண்டும் கட்சியில் சேர்ப்பது பற்றி ஏதேனும் முடிவு எடுக்கப்படுமா? என பொறுத்திருந்து பார்ப்பது
அதிமுக பொதுக்குழுவில் முடிவு எதுவும் எடுக்கப்படாத நிலையில் டிசம்பர் 15-ந் தேதி தனி அரசியல் கட்சியை தொடங்குவது என முடிவெடுக்கப்பட்டதாக நமது மின்னம்பலத்தில் பதிவு செய்திருந்தோம்.
இதனையடுத்து ஓ.பன்னீர்செல்வம் நேற்று திடீரென டெல்லி சென்றார். ஓ.பன்னீர்செல்வத்தின் டெல்லி பயணம் தொடர்பாக பல்வேறு தகவல்கள் பகிரப்பட்டு வருகின்றன

புதிய அரசியல் கட்சியை முறைப்படி பதிவு செய்ய டெல்லி சென்றார்
பாஜகவில் இணைய முடிவெடுத்துவிட்டார்
பாஜக மூத்த தலைவர்களை சந்தித்து தம்மை மீண்டும் அதிமுகவில் சேர்க்க எடப்பாடி பழனிசாமிக்கு நெருக்கடி தர வேண்டும் என பேசினார் என்பதுதான் அந்த தகவல்கள்.
இது தொடர்பா பாஜக மூத்த தலைவர்களிடம் நாம் விசாரித்த போது, டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை நேற்று இரவு ஓ.பன்னீர்செல்வம் சந்தித்து பேசினார். அப்போது, 2026 சட்டமன்ற தேர்தலில் அதிமுக- பாஜக கூட்டணி வெற்றி பெற அதிமுகவில் இருந்து வெளியேற்றப்பட்டவர்களை மீண்டும் கட்சியில் சேர்ப்பது முக்கியம் என்று சொன்னார் ஓபிஎஸ். அத்துடன் அதிமுகவில் தங்களை மீண்டும் சேர்க்காவிட்டால் டிசம்பர் 15-ந் தேதிக்குப் பின்னர் தனிக்கட்சி தொடங்கும் முடிவில் இருப்பதையும் அமித்ஷாவிடம் ஓபிஎஸ் தெரிவித்தார். இதனை கேட்டுக் கொண்ட அமித்ஷா, டிசமப்ர் 10-ந் தேதிக்குப் பிறகு அதிமுக பொதுக்குழுவுக்குப் பின்னர் சென்னை வரும் போது பேசிக் கொள்ளலாம் என்று மட்டும் ஓபிஎஸ்ஸிடம் சொல்லி அனுப்பிவிட்டார்  என்றனர்.

அரசு வழக்கறிஞர் வெட்டி படுகொலை  போலீஸ் விசாரணை

0

தென்காசியில் அலுவலகத்திற்குள் புகுந்து அரசு வழக்கறிஞர் மீது மர்ம நபர்கள் அரிவாளால் வெட்டப்பட்டு, அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த தற்போது சிகிச்சை பலன் இன்றி வழக்கறிஞர் மணரமடைந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தென்காசி மாவட்டம் மேலழகியான் கிராமத்தைச் சேர்ந்தவர் முத்துக்குமாரசுவாமி (42). தென்காசி செங்கோட்டை நீதிமன்றத்தில் அரசு வழக்கறிஞராக பணியாற்றி வரும் இவர், தென்காசி தெற்கு மாவட்ட திமுக வழக்கறிஞர் அணியின் துணை அமைப்பாளராகவும் இருந்துள்ளார். மேலும், கூலக்கடை பஜாரில் வழக்கறிஞர் அலுவலகம் நடத்தி நடத்தி வந்துள்ளார்.

இதனிடையே இன்று (டிசம்பர் 3) இவரின் அலுவலகத்தில் திடீரென புகுந்த மர்மநபர்கள் அங்கிருந்த வழக்கறிஞர் முத்துக்குமாரசுவாமியை அரிவாளால் சரமாரியாக வெட்டியுள்ளனர். அப்போது முத்துக்குமாரசுவாமியின் அலறல் சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள், ஓடி வந்த நிலையில், அவர்களை பார்த்த மர்மநபர்கள் உடனடியாக விட்டு அங்கிருந்து தப்பியுள்ளனர். இது குறித்து அக்கம்பக்கத்தினர் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த தென்காசி போலீசார், காயமடைந்த முத்துக்குமாரசுவாமியை மீட்டு தென்காசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், சிகிச்சை பலனளிக்காமல் முத்துக்குமாரசுவாமி உயிரிழந்தார். இது குறித்து தகவலறிந்த தென்காசி மாவட்ட எஸ்பி அரவிந்த் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று ஆய்வு நடத்தினார். கொலைக்கான காரணம் மற்றும் அவரை கொலை செய்த மர்ம நபரின் அடையாளம் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதனிடையே வழக்கறிஞர் முத்துக்குமாரசுவாமி கொலை சம்பவத்தை கண்டித்து வழக்கறிஞர்கள், தென்காசி புதிய பேருந்து நிலையம் மற்றும் நடுபஜார் பகுதிகளில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

கல்லூரி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை; குற்றவாளிகள் மூவரின் புகைப்படத்தை வெளியிட்ட போலீசார்

0

தமிழகத்தை உலுக்கிய கோவை கல்லூரி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கில் கைது செய்யப்பட்ட 3 பேரின் புகைப்படங்களை காவல்துறையினர் வெளியிட்டுள்ளனர்.

கோவை விமான நிலையம் பின்புறம் உள்ள பிருந்தாவன் நகர் பகுதியில் கடந்த நவம்பர் 2ம் தேதி கல்லூரி மாணவி ஒருவர் தனது ஆண் நண்பருடன் பேசிக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த கும்பல் ஆண் நண்பரை தாக்கி விட்டு மாணவியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்தனர். இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் சிசிடிவி காட்சிகள் அடிப்படையில் விசாரணை மேற்கொண்டனர். இதையடுத்து துடியலூர் வெள்ளக்கிணறு பகுதியில் குற்றச்சம்பவத்தில் ஈடுபட்டவர்களை 24 மணி நேரத்தில் துப்பாக்கியால் சுட்டு கைது செய்தனர். விசாரணையில் கைது செய்யப்பட்டவர்கள் சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த அண்ணன் தம்பிகளான கருப்பசாமி என்ற சதீஷ், கார்த்திக் என்ற காளீஸ்வரன் மற்றும் இவர்களின் உறவினரான தவசி என்ற குணா என்பது தெரியவந்தது.

இதையடுத்து காவல்துறையினர் கடந்த 27ஆம் தேதி குற்றவாளிகளை ஒருநாள் காவலில் எடுத்து விசாரித்தனர். அப்போது இந்த குற்றவாளிகள் மூன்று பேரும் மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட அன்று காலை அன்னூர் அருகே செரையம்பாளையம் பகுதியில் 3 பேரும் மது அருந்தி கொண்டிருந்த போது கண்டித்த ஆட்டு வியாபாரியை அடித்து கொலை செய்துள்ளனர் என்பது தெரிய வந்தது.முன்னதாக கல்லூரி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்தில் 30 நாட்களுக்குள் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்ய முதல்வர் ஸ்டாலின் காவல்துறைக்கு அறிவுறுத்தி இருந்த நிலையில் பாலியல் வன்கொடுமை சம்பவத்தில் தொடர்புடைய மூன்று பேருக்கும் எதிராக கோவை மாவட்ட கூடுதல் நீதிமன்ற நீதிபதி சிந்து முன்னிலையில் செவ்வாய்க்கிழமை குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது. இதுவரை நடந்த விசாரணை அடிப்படையில் கைது செய்யப்பட்ட மூன்று பேருக்கும் பாலியல் வன்கொடுமை சம்பவத்தில் உள்ள தொடர்பு குறித்து முதல் கட்டமாக 50 பக்கங்கள் அடங்கிய குற்றப்பத்திரிக்கையை காவல்துறையினர் தாக்கல் செய்துள்ளனர்.

அவர்கள் மீது கூட்டு பாலியல் வன்கொடுமை கடத்தல் நகை பறிப்பு ஒன்றாக இணைந்து குற்ற சம்பவங்களை ஈடுபடுதல் உள்ளிட்ட 13 பிரிவுகளின் அவர்கள் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் இந்நிலையில் குற்றவாளிகள் மூவரின் புகைப்படங்களை இன்று காவல்துறையினர் வெளியிட்டுள்ளனர்.

மேலும் ஆட்டு வியாபாரியை கொலை செய்த சம்பவம் குறித்து விசாரிக்க காவல்துறையினர் மனுதாக்கல் செய்ய திட்டமிட்டு உள்ளனர்.

திருப்பத்தூர் பேருந்து விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு முதலமைச்சர் நிவாரணம் அறிவிப்பு

0

சிவகங்கை திருப்பத்தூர் அருகே இரண்டு அரசு பேருந்துகள் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில், 11 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்திருக்கிறார்.

அதேபோல உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ரூ.3 லட்சம் நிவாரணம் அறிவித்திருக்கிறார். இது குறித்து தனது X பக்கத்தில் அவர் பதிவிட்டிருப்பதாவது, “சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே நிகழ்ந்த விபத்தில் 11 பேர் உயிரிழந்துள்ளனர் என்ற துயரச் செய்தியறிந்ததும் மிகுந்த அதிர்ச்சிக்கும் வேதனைக்கும் உள்ளானேன். உடனடியாக மாவட்ட ஆட்சியரையும் மாவட்டப் பொறுப்பு அமைச்சர் திரு. கே.ஆர்.பெரியகருப்பன் அவர்களையும் தொடர்புகொண்டு, சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு உரிய உயர்தர சிகிச்சை கிடைப்பதை உறுதிசெய்திடுமாறு அறிவுறுத்தியுள்ளேன். இவ்விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்வதோடு, காயமடைந்துள்ளவர்கள் விரைந்து நலம்பெற விழைகிறேன்” என்று கூறியுள்ளார்.இந்த விபத்தில் உயிரிழந்த 11 பேரின் குடும்பத்தினருக்கும் தலா ரூ.3 லட்சம் நிவாரணம் வழங்க முதலமைச்சர் உத்தரவிட்டிருக்கிறார். அதேபோல படுகாயமடைந்தவர்களுக்கு ரூ.1 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு ரூ.50,000 வழங்க உத்தரவிட்டிருக்கிறார்.

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் உட்கோட்டம், நாச்சியார்புரம் காவல் நிலையத்திற்குட்பட்ட விவேகனந்தா பாலிடெக்னிக் கல்லூரி அருகில், காங்கேயத்தில் இருந்து காரைக்குடி நோக்கி சென்ற (TN 39 N 0198) அரசு பேருந்தும், காரைக்குடியில் இருந்து திண்டுக்கல் நோக்கி சென்ற (TN 63 N 1776) அரசு பேருந்தும் நேருக்கு நேர் மோதி இன்று மாலை 05.00 மணியளவில் விபத்து ஏற்பட்டது.இந்த விபத்தில் இதுவரை 11 நபர்கள் இறந்துள்ளதாகவும், 20க்கும் மேற்பட்ட நபர்கள் காயமடைந்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. காயம்பட்ட நபர்கள் காரைக்குடி அரசு மருத்துவமனை, திருப்பத்தூர் அரசு மருத்துவமனை, சிவகங்கை அரசு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சையில் இருந்து வருகின்றனர். மேலும் காவல்துறையினர் மற்றும் தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று காயம்பட்ட நபர்களை மீட்டனர். சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளர், காவல் துணைக்கண்காணிப்பாளர், திருப்பத்தூர் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீட்பு பணிகளை துரிதப்படுத்தினர்.