Wednesday, September 23, 2026
Home Blog Page 7

குற்றவாளிகளுக்கு உச்சபட்ச தண்டனை – கோவையில் அமைச்சர் சம்பத்குமார் பேட்டி

0

கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்திற்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் உயிரிழந்த சிறுமியின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார்.

தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் சம்பத்குமார், சிறுமி கொலை செய்யப்பட்ட தகவல் கிடைத்தவுடனே, அதிகாரிகளை தொடர்பு கொண்டு பேசினேன். புகார் வருவதற்கு முன்பே இந்த சம்பவம் நடந்துள்ளது. ஆனால், காவல்துறை துரிதமாக செயல்பட்டு கைது செய்துள்ளனர். இந்த வழக்கு விசாரணை மேலும் துரிதப்படுத்தப்படும். கைது செய்யப்பட்ட இரண்டு பேரும் நீதிமன்ற காவல் உள்ளனர். சிறுமி கொலை வழக்கில் உடனடியாக குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்ய வேண்டும் எனக் கேட்டுள்ளேன். குற்றம் நிரூபிக்கப்படும் பட்சத்தில், அவர்களுக்கு உச்சபட்ச தண்டனையை வாங்கி தருவதில் தவெக அரசு உறுதியாக இருக்கிறது.அதேசமயம் பாதிக்கப்பட்ட சிறுமியின் குடும்பத்தினருக்கு தேவையான நிவாரணமும் வழங்கப்படும். கோவை சிறுமிக்கு நேர்ந்த இந்த சம்பவமே, தமிழ்நாட்டில் இறுதியாக இருக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கின்றோம். அதுவே முதலமைச்சரின் எண்ணமும் கூட. குற்றம் செய்பவர்களுக்கு பயம் இருக்க வேண்டும். குற்றவாளிகளுக்கு உச்சபட்ச தண்டனையைப் பெற்று கொடுப்பது எங்களது கடமையாக இருக்கும்” எனத் தெரிவித்தார்.மேலும் பேசிய அவர், “தமிழ்நாடு முழுவதும் சிங்கப்பெண்கள் திட்டம் விரைவில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. வரும் 27ஆம் தேதி இத்திட்டம் நடைமுறைப்படுத்த வாய்ப்பு இருக்கிறது. இதன்மூலம், கண்காணிப்பு தீவிரப்படுத்தப்படும். காவல்துறை மூலம் விழிப்புணர்வு பிரச்சாரங்கள் செய்யவும் திட்டமிட்டிருக்கிறோம். கோவை சிறுமியின் குடும்பத்திற்கு நிதியுதவியை முதலமைச்சர் விரைவில் அறிவிப்பார். சம்பவம் நடந்த பகுதியை நான் பார்க்கவில்லை. காவல்துறை விசாரித்து வருகின்றனர். தவறு செய்தவர்களுக்கு தண்டனை கொடுப்பதில் எங்கள் அரசு எந்த சமரசமும் செய்து கொள்ளாது. அது யாராக இருந்தாலும் சரி, தண்டனை கடுமையாக இருக்கும். குற்றம் நடந்த பகுதியில் கண்காணிப்பைப் பலப்படுத்த பணிகள் மேற்கொள்ளப்படும். அதேபோல, குற்றச் சம்பவங்கள் அதிகம் நடக்கக் கூடிய பகுதிகளிலும் கண்காணிப்பு பலப்படுத்தப்படும்” என்றார்.

கோவையில் 10 வயது சிறுமி கொலை, குற்றவாளிகள் இருவர் கைது…

0

கோவை மாவட்டம், சூலூர் காவல் பள்ளபாளையம் பகுதியில் வசிக்கும் 10 வயது பெண் நேற்று முன்தினம் (மே 21) மாலை வீட்டிற்கு அருகிலிருந்த கடைக்குச் சென்றுள்ளார். வெகு நேரமாகியும் சிறுமி வீடு திரும்பவில்லை. இதனால் பதற்றமடைந்த பெற்றோர் அக்கம்பக்கத்தில் சிறுமியை தேடியுள்ளனர்.
ஆனால் எங்கு தேடியும் அவர் கிடைக்காததால், சிறுமி சென்ற மளிகைக்கடைக்கு சென்று விசாரித்துள்ளனர். அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த ஒரு இளைஞர் சிறுமியை அழைத்துச் சென்றது தெரியவந்தது. ஆனால் அவர் யார் என்று தெரியாததால் உடனடியாக சிறுமியின் பெற்றோர், சூலூர் காவல் நிலையத்தில் இதுகுறித்து புகார் அளித்துள்ளனர்.
புகாரின் பேரில் போலீசார் விசாரணையை தொடங்கிய நிலையில், நேற்று கண்ணம்பாளையம் குளக்கரை அருகே உடலில் காயங்களுடன் சிறுமியின் சடலம் கண்டெடுக்கப்பட்டது. சிறுமி கடத்தப்பட்டு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டாரா என்பதை அறிய, அவரது உடலானது சிங்காநல்லூர் ESI மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இதனிடையே, சிறுமிக்கு நீதி கேட்டு அவரது உறவினர்களும் பெற்றோரும் சூலூர் காவல் நிலைய வாயில் முன்பாக சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இரவு சுமார் 9 மணியளவில் துவங்கிய மறியல் அதிகாலை 5 மணியை தாண்டி, 9 மணி நேரத்துக்கும் மேலாக நீடித்தது. இதனையடுத்து வாகனங்கள் மாற்று பாதையில் திருப்பி விடப்பட்டன.

இந்நிலையில், அதே பகுதியைச் சேர்ந்த கார்த்திக் என்பவர் சிறுமியை கடத்தி கொலை செய்திருப்பது போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது. சிசிடிவி காட்சிகளின் அடிப்படையிலும், கைதான கார்த்திக் கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையிலும் அவர் கைது செய்யப்பட்டார். மேலும் அவருக்கு துணையாக இருந்த மோகன்ராஜ் என்பவரையும் போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். போராட்டத்தில் ஈடுபட்ட சிறுமியின் உறவினர்கள், சிறுமி பாலியல் துன்புறுத்தல் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டு இருப்பதாகவும், சிறுமியின் முகம் உள்ளிட்ட பகுதிகள் சிதைக்கப்பட்டு இருப்பதாகவும் தெரிவித்தனர். மேலும் உரிய நடவடிக்கை எடுக்கும் வரை தொடர் போராட்டத்தில் ஈடுபட போவதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

இதனையடுத்து மேற்கு மண்டல காவல்துறை தலைவர் ரம்யா பாரதி, துணைத் தலைவர் சாமிநாதன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பவன்குமார் தலைமையில் 100க்கும் மேற்பட்ட போலீசார் சூலூர் பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட கார்த்திக், மோகன்ராஜ் ஆகியோரை விசாரணைக்காக சம்பவ இடத்திற்கு போலீசார் அழைத்துச் சென்றனர். அப்போது போலீசாரிடம் இருந்து தப்ப முயன்ற முக்கிய குற்றவாளி கார்த்திக், அருகிலுள்ள மதில் சுவர் மீது ஏறி குதித்ததில் கால் மற்றும் கையில் முறிவு ஏற்பட்டது. தற்போது அவர் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இரண்டாவது குற்றவாளியான மோகன்ராஜ், சூலூர் குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில், நீதிபதி அருண்குமார் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டார். அவரை விசாரித்த நீதிபதி, மே 27-ஆம் தேதி வரை மோகன்ராஜை நீதிமன்ற காவலில் எடுத்து விசாரிக்க உத்தரவிட்டுள்ளார்.

மாற்றுத்திறனாளி பெண்ணுக்கு கூட்டுப் பாலியல் வன்கொடுமை… இருவர் கைது

0

புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்தவர் 35 வயதான வாய் பேச முடியாத மாற்றுத்திறனாளி பெண். திருமணமாகாத இவர் தனியார் அரிசி ஆலையில் வேலை பார்த்து வருகிறார். இதற்காக, அவரது கிராமத்தில் இருந்து மற்றொரு ஊருக்கு பேருந்தில் சென்று வந்தார், நேற்று முன்தினம் மாலை வேலையை முடித்த அப்பெண், பேருந்து நிறுத்தத்தில் பேருந்திற்காக நின்று கொண்டிருந்துள்ளார். அப்போது அந்த வழியாக காரில் வந்த இருவர், அப்பெண் தனியாக நிற்பதை பார்த்து காரை நிறுத்தியுள்ளனர். மேலும், பெண்ணை அவரது ஊரில் இறக்கி விடுவதாகவும் கூறி அழைத்துள்ளனர். ஆனால், அப்பெண் மறுத்த நிலையில், வலுக்கட்டாயமாக காரில் ஏற்றிச் சென்றுள்ளனர். அங்கிருந்து சற்று தொலைவில் உள்ள மறைவான இடத்திற்கு சென்ற அவர்கள், அப்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். அதனால் மயங்கிய பெண்ணை காரில் அழைத்து சென்று கறம்பக்குடி – ஆலங்குடி சாலையில் தள்ளி விட்டுச் சென்றதாக தெரிகிறது. மயக்கம் தெளிந்த அந்த பெண் அழுது கூச்சலிட்டுள்ளார். அந்த சத்தம் கேட்டு வந்த அப்பகுதி மக்கள், பெண்ணை மீட்டனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், விசாரணை மேற்கொண்டனர்.அதில், பெண்ணை காரில் அழைத்து சென்று பாலியல் வன்கொடுமை செய்தது மணக்கொல்லை கிராமத்தை சேர்ந்த கார் உரிமையாளர் சேகர் (56) மற்றும் அவரது நண்பர் மாரிமுத்து (55) என்பதும், இருவரும் அப்பெண்ணிற்கு தெரிந்த நபர்கள் என்பதும் தெரியவந்தது. உடனடியாக மாரிமுத்துவை கைது செய்த மழையூர் போலீசார், தலைமறைவாக இருந்த சேகரை தீவிரமாக தேடி வந்தனர். இதற்கிடையே, பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளி பெண்ணை மீட்டு, சிகிச்சைக்காக புதுக்கோட்டை இராணியார் அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.இந்த நிலையில், தலைமறைவாக உள்ள நபரை கைது செய்ய வலியுறுத்தியும், பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு உரிய நீதி வழங்க வேண்டும் எனவும் அப்பெண்ணின் உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் என 100-க்கும் மேற்பட்டோர் மழையூர் காவல்நிலையம் முன்பு சாலை மறியலில் ஈடுபட்டனர். பெண் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில், ஏற்கனவே மாரிமுத்து என்பவர் கைது செய்யப்பட்டு, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாகவும், தலைமறைவாக இருந்த சேகரை திண்டுக்கல்லில் வைத்து போலீசார் கைது செய்துள்ளதாகவும் புதுக்கோட்டை நகர துணை காவல் கண்காணிப்பாளர் பிருந்தா தெரிவித்துள்ளார்.

இருந்தாலும், சேகர் கைது செய்யப்பட்டதில் நம்பிக்கை இல்லை எனக் கூறி போராட்டத்தை கைவிட மறுத்த பெண்ணின் உறவினர்கள் தொடர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களிடம் வட்டாட்சியர் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார். இந்நிலையில், மாற்றுத்திறனாளி பெண்ணுக்கு நேர்ந்த இந்த கொடூர சம்பவம், தமிழ்நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

13 வயது சிறுவனை மது பாட்டிலில் அடித்துக் கொன்ற சக நண்பர்கள்…

0

கோவை மாவட்டம், இருகூர் பகுதியைச் சேர்ந்தவர் பாரதிராஜா தூய்மைப் பணியாளராகப் பணியாற்றி வருகிறார். இவருடைய மூத்த மகன் ரித்தீஷ் (13), கடந்த மே 15- ஆம் தேதி மாலை திடீரென காணாமல் போயுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர், சிறுவனைப் பல இடங்களிலும் தேடியுள்ளனர், சிறுவன் கிடைக்காததால் சிங்காநல்லூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

புகாரின் பேரில் வழக்குப்பதிவுச் செய்த சிங்காநல்லூர் காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தினர். அதில் சிறுவனின் நண்பர்களை அழைத்து விசாரணை மேற்கொண்டனர். அதில், சிறுவன் அடித்துக் கொலை செய்யப்பட்டது தெரிய வந்தது. இதைத்தொடர்ந்து, இருகூர் ரயில் நிலையத்தின் சிறிய மேடை அருகே மறைவான பகுதியில் புதைக்கப்பட்ட ரித்தீஷின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அத்துடன் சிறுவனின் மர்ம மரணம் குறித்து போலீசார் மேற்கொண்ட தீவிர விசாரணையில், கடந்த மே 15- ஆம் தேதி அன்று ரித்தீஷ் தனது நண்பர்களுடன் இருகூர் பொங்காளியம்மன் கோயில் அருகே உள்ள கால்வாய்க்கு மீன்பிடிப்பதற்காக சென்றுள்ளார். அப்போது சிறுவர்களிடையே திடீரென தகராறு ஏற்பட்டுள்ளது. வாக்குவாதம் முற்றிய நிலையில், ஆத்திரமடைந்த 13 மற்றும் 15 வயதுடைய இரண்டு சிறுவர்கள், ரித்தீஷை கல்லாலும், மதுப்பாட்டிலாலும் கடுமையாகத் தாக்கியுள்ளனர். இதில் பலத்த காயமடைந்து நிலைகுலைந்த ரித்தீஷ், சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார் என்பது காவல் துறையினரின் முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.

இதையடுத்து கொலைச் சம்பவத்தில் ஈடுபட்ட ரித்தீஷ் நண்பர்களான இரண்டு சிறுவர்களையும் சிங்காநல்லூர் காவல்துறையினர் கைது செய்து சிறுவர் சீர்திருத்தப் பள்ளியில் அடைத்தனர்

கேரளா முதலமைச்சராக வி.டி.சதீசன் பதவியேற்பு; அமைச்சரவையில் 2 பெண் உறுப்பினர்கள்…

0

கேரளம் சட்டப்பேரவைக்கான தேர்தலில், காங்கிரஸ் கட்சி பெருவாரியான இடங்களில் வெற்றிபெற்று ஆட்சி அமைக்கும் அதிகாரத்தை பெற்றது. பத்து வருடங்கள் கழித்து ஆட்சி பொறுப்பேற்க தயாராக இருந்த காங்கிரஸ் கட்சியில் இருந்து, யார் அடுத்த முதலமைச்சர் என்ற எதிர்பார்ப்பு நிலவியது. அப்போது, காங்கிரஸ் தலைமை வி.டி.சதீசன் தான் அடுத்த கேரளம் முதலமைச்சர் என முடிவெடுத்து அறிவிப்பை வெளியிட்டது.

தொடர்ந்து, இன்று வி.டி. சதீசனுக்கு கேரளம் ஆளுநர் ராஜேந்திர விஷ்வநாத் அர்லேகர் பதவி பிரமாணம் செய்துவைத்தார். தமிழ்நாட்டில் நடைபெற்றது போலவே, முதலில் வந்தே மாதரம், அதன்பின்னர் தேசிய கீதம் பாடப்பட்ட பின், வி.டி.சதீசன் முதலமைச்சராகப் பதவியேற்றுக் கொண்டார்.

கேரளம் சட்டப்பேரவை வளாகத்திற்கு பின்னால் அமைந்திருக்கும், சென்ட்ரல் மைதானத்தில் வைத்து முதலமைச்சர் பதவியேற்பு விழா ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. முதலமைச்சர் வி.டி. சதீசனுடன் 21 சட்டப்பேரவை உறுப்பினர்கள் அமைச்சர்களாகப் பொறுப்பேற்றனர்.இம்முறை கேரளம் சட்டப்பேரவையில் 3 பெண் உறுப்பினர்களுக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. பிந்து கிருஷ்ணா, கே.ஏ. துளசி ஆகிய இருவருக்கும் காங்கிரஸ் அமைச்சரவையில் இடம் அளிக்கப்பட்டுள்ளது.

மேலும், சட்டப்பேரவையின் துணைத்தலைவராக ஷைனிமோள் உஸ்மான் தேர்வு செய்யப்பட்டுள்ளார். 1960-ஆம் ஆண்டில் பேரவை அதிகாரத்தில் அங்கம் வகித்த ஏ. நஃபீசத் பீவிக்குப் பிறகு, இம்மாநிலத்தின் சட்டப்பேரவையில் அதிகாரத்தைப் பெறும் முதல் பெண்ணாக ஷைனிமோள் உருவெடுத்துள்ளார்.

காங்கிரஸ் கூட்டணியில் அங்கம்வகிக்கும் இந்தியன் யூனியன் முஸ்லீம் லீக் கட்சியின் பி.கே. குன்ஹாலிகுட்டிக்கும் அமைச்சரவையில் இடம் வழங்கப்பட்டுள்ளது. மொத்தமாக, வி.டி.சதீசன் அமைச்சரவையில், 21 பேர் அமைச்சர்களாகப் பொறுப்பேற்றுள்ளனர். இந்த அமைச்சர்களின் பெயர் பட்டியலை நேற்றைய தினமே (மே 17) ஆளுநர் அர்லேகரிடம் வி.டி. சதீசன் ஒப்படைத்திருந்தார்.

மொத்தம் 140 உறுப்பினர்களைக் கொண்ட கேரளம் சட்டப்பேரவைக்கான தேர்தல் கடந்த ஏப்ரல் 9 அன்று நடைபெற்ற நிலையில், மே 4-ஆம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் வெளியிடப்பட்டன.அதில், ஆளும் அரசாக இருந்த கம்யூனிஸ்ட் கட்சி தலைமையிலான கூட்டணி (எல்.டி.எஃப்) வெறும் 35 இடங்களை பெற்று படுதோல்வியை சந்தித்தது. அவர்களுக்கு எதிராகக் களம்கண்ட காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி (யூ.டி.எஃப்) 102 தொகுதிகளை கைப்பற்றி சாதனை வெற்றியை பதிவு செய்தது. மூன்றாவது இடத்தில் பா.ஜ.க 3 தொகுதிகளை வென்றிருந்தது.

கேரளம் முதலமைச்சராக வி.டி. சதீசன் பதவியேற்ற நிகழ்வில், காங்கிரஸ் மூத்த தலைவரும், மக்களைவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி கலந்துகொண்டு, புதிய அமைச்சரவைக்கு தனது வாழ்த்துகளை தெரிவித்தார்.

தமிழக அரசின் தலைமை வழக்கறிஞராக விஜய் நாராயண் நியமனம்…

0

தமிழ்நாடு அரசின் புதிய தலைமை வழக்கறிஞராக மூத்த வழக்கறிஞர் விஜய் நாராயணை நியமித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. 17-வது சட்டமன்ற தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் அதிக இடங்களில் வென்று ஆட்சியை பிடித்த நிலையில், கடந்த திமுக ஆட்சியில் அரசின் தலைமை வழக்கறிஞராக பதவி வகித்த பி.எஸ்.ராமன் ராஜினாமா செய்ததால் அந்த பதவி காலியானது. இந்நிலையில் மூத்த வழக்கறிஞர் விஜய் நாராயணை தலைமை வழக்கறிஞராக நியமித்து, தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. அதனால், விரைவில் அவர் பொறுப்பேற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
அரசு தலைமை வழக்கறிஞராக நியமிக்கப்பட்டுள்ள விஜய் நாராயண், தனது பள்ளி கல்வியை பீகார் மாநிலத்தில் இருந்த ராஞ்சியில் முடித்தார். பின்னர் தனது பட்டப்படிப்பை சென்னை லயோலா கல்லூரியிலும், சட்டப்படிப்பை சென்னை அரசு சட்டக் கல்லூரியில் முடித்தார்.

அரசியலமைப்பு சட்டத்தை மேம்படுத்த பணியாற்றிய குழுவில் இடம்பெற்ற பிரபல வழக்கறிஞர் எம்.கே.நம்பியார் இவரது தாத்தா ஆவார். மத்திய அரசின் தற்போதைய அட்டர்னி ஜெனரலான கே.கே.வேணுகோபாலும் இவரது உறவினராவார். வரலாற்று ஆய்வாளரும், பத்திரிக்கையாளருமான சர்தார் கே.எம்.பணிக்கர் தாய்வழி தாத்தா ஆவார்.தொழிலாளர், அரசியலமைப்பு, நிர்வாகம், வணிகம் உள்ளிட்ட பல்வேறு சட்டங்கள் குறித்த வழக்குகளில் ஆஜரானவர். 2004-ஆம் ஆண்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் மூத்த வழக்கறிஞர் அந்தஸ்து வழங்கப்பட்டது. உச்ச நீதிமன்றத்திலும், நாட்டின் பல்வேறு உயர் நீதிமன்றங்களிலும் ஆஜராகி திறம்பட வாதம் செய்தவர்.
இந்திய சட்ட நிறுவனத்தின் சென்னை மண்டல செயற்குழு உறுப்பினராக இந்திய தலைமை நீதிபதியால் 2012-ஆம் ஆண்டு நியமிக்கப்பட்டார். திருச்சியில் உள்ள தமிழ்நாடு தேசிய சட்டப்பள்ளியின் பொதுக்குழு உறுப்பினராக கடந்த பிப்ரவரி மாதம் சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியால் நியமிக்கப்பட்டார்.
சென்னை உயர் நீதிமன்றத்தின் தொன்மையான வழக்கறிஞர் சங்கமான மெட்ராஸ் பார் அசோசியேசனின் தலைவராக இருந்தவர். முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக ஆட்சி காலத்தில் 2017 முதல் 2021ஆம் ஆண்டு வரை தமிழக அரசின் தலைமை வழக்கறிஞராக பதவி வகித்துள்ளார்.அதன் பின்னர் 2021-இல் திமுக ஆட்சி வந்தவுடன், மூத்த வழக்கறிஞர் பி.எஸ்.ராமன் அரசு தலைமை வழக்கறிஞராக பதவி வகித்தார். இந்நிலையில், நடைபெற்று முடிந்த சட்டமன்ற தேர்தலில் தவெக அதிக தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சியமைத்ததை அடுத்து, தலைமை வழக்கறிஞராக இருந்த பி.எஸ்.ராமன் தனது பதவியை ராஜினாமா செய்தார்.

இதையடுத்து, புதிய தலைமை வழக்கறிஞராக மூத்த வழக்கறிஞர் விஜய் நாராயணை நியமித்து அரசு உத்தரவு பிறப்பித்துள்ளார். அரசின் தலைமை வழக்கறிஞராக விஜய் நாராயண் விரைவில் பொறுப்பேற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

நம்பிக்கை வாக்கெடுப்பில் திமுக வெளிநடப்பு..!

0

முதலமைச்சர் விஜய் தலைமையிலான தவெக ஆட்சியின் பெரும்பான்மையை நிரூபிக்க இன்று சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு மீதான விவாதம் நடைபெற்றது. அதில் பேசிய சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், வாக்கெடுப்பில் பங்கேற்காமல் அவையில் இருந்து வெளிநடுப்பு செய்வதாக அறிவித்தார். எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் உரையில், “தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் பதிவான மொத்தம் 4 கோடி 93 லட்சம் வாக்குகளில், ஒரு கோடி 72 லட்சத்து 26 ஆயிரம் வாக்குகள் தவெக பெற்றது. தவெகவிற்கு எதிராக சுமார் 3 கோடி பேர் வாக்களித்துள்ளனர். உங்களுக்கு வாக்களித்தவர்களுக்கே உங்கள் மீதான நம்பிக்கை குறைந்து வருகிறது.

தேர்தலில் 108 இடங்களில் வெற்றி பெற்று, இரண்டு தொகுதிகளில் ஒரு தொகுதியை முதலமைச்சர் ராஜினாமா செய்துள்ளார். ஒரு தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் வாக்களிக்கவில்லை. அதன்படி, 106 இடங்கள் தான் உள்ளது. திமுக கூட்டணி ஆதரவு கட்சிகள் உடன் ஆட்சி அமைத்துள்ளீர்கள். குடியரசு தலைவர் ஆட்சி அமைந்துவிடும் என கூறியதால் எங்கள் கூட்டணி கட்சிகள் ஆதரவளித்தன. அப்போதும் திமுக உடன் கூட்டணியைத் தொடர்வதாக விசிக, கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகள் கூறியுள்ளனர்தேசிய ஜனநாயக கட்சி ஆதரவில் வெற்றி பெற்ற அமமுக வேட்பாளர், அவருடைய கட்சி தலைவருக்கே தெரியாமல் உங்களுக்கு ஆதரவு அளித்துள்ளார்.சட்டப்பேரவை உறுப்பினர்களை கடன் பெற்று ஆட்சியை முதலமைச்சர் தக்கவைத்துள்ளார். இந்த வாக்கெடுப்பில் திமுக கலந்துகொள்ளாமல் வெளிநடப்பு செய்கிறது. நான் முதல்வன், புதுமைப்பெண், தமிழ் புதல்வன், காலை உணவு, தாயுமானவர், அன்புக் கரங்கள் போன்ற திமுக-வின் மக்கள் நலத்திட்டங்கள் தொடர வேண்டும்” என்று குறிப்பிட்டு பேசினார்இது தொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில், “தமிழ்நாட்டு மக்களில் 65 சதவீத வாக்காளர்களால் நிராகரிக்கப்பட்ட தமிழக வெற்றிக் கழக அரசின் நம்பிக்கை கோரும் தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பின்போது எதிர்க்கட்சியான திராவிட முன்னேற்றக் கழக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தோம். தூய சக்தி என்று சொல்லி மக்களை ஏமாற்றிய ஆளுங்கட்சி குதிரை பேரத்தில் ஈடுபட்ட குற்றச்சாட்டு வருகிறது.

மேலும், மக்களுக்கு அளித்த தேர்தல் வாக்குறுதிகளையும் நிறைவேற்ற முயற்சிக்காமல், பொறுப்பைத் தட்டிக் கழிக்கிறது. இதனால், வாக்களித்த மக்களின் நம்பிக்கையையும் கூட இந்த புதிய அரசு இழந்து வருகிறது என்பது வெளிப்படை. மக்கள் தீர்ப்பால் பதவி நாற்காலி கிடைக்காத காரணத்தால், ‘sofa’ அரசியலை அரங்கேற்றும் த.வெ.க. அரசின் மீது பெரும்பான்மை மக்களுக்கு நம்பிக்கை இல்லை என்ற உணர்வை சட்டப்பேரவையில் பிரதிபலித்து உரையாற்றினோம்.” என்று எதிர்க்கட்சித் தலைவரும், திமுக சட்டப்பேரவை உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலின் பதிவிட்டுள்ளார்.

பெரும்பான்மையை நிரூபித்தார் முதலமைச்சர் விஜய்…!

0

தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று (மே 13) முதலமைச்சர் விஜய் தலைமையிலான ஆட்சியின் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டி நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற்றது. நம்பிக்கை வாக்கெடுப்பு மீதான தீர்மானத்தை முதலமைச்சர் விஜய் அவையில் முன்மொழிந்தார். அதனைத்தொடர்ந்து தீர்மானம் மீதான விவாதம் நடைபெற்று, நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இதில் சட்டப்பேரவை எதிர்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் வெளிநடப்பு செய்வதாக அறிவித்த நிலையில், திமுக மற்றும் தேமுதிக சட்டமன்ற உறுப்பினர்கள் வாக்கெடுப்பில் பங்கேற்காமல் வெளிநடப்பு செய்தனர்.

சட்டப்பேரவை 6 பகுதிகளாக பிரிக்கப்பட்டு, ஆதரவு, எதிர்ப்பு, நடுநிலை என சபாநாயகர் வாக்கெடுப்பை நடத்தினார். பெரும்பான்மையை பெற 117 எம்.எல்.ஏ-களின் ஆதரவு தேவை என்ற நிலையில், தவெக அரசிற்கு 144 எம்.எல்.ஏ-க்கள் ஆதரவை அளித்தனர். இதன் மூலம் தவெக பெரும்பான்மையை நிரூபித்து ஆட்சியை தக்கவைத்தது. மேலும், அதிமுக சார்பில் 22 எம்.எல்.ஏ-க்கள் எதிர்ப்பும், பாமக, பாஜக சார்பில் 5 பேர் நடுநிலையும் வகித்தனர். மொத்தம் 171 பேர் வாக்கெடுப்பில் பங்கேற்றனர், 60 பேர் பங்கேற்கவில்லை. திருப்பத்தூர் தவெக எம்.எல்.ஏ சென்னை உயர்நீதிமன்றத்தின் தடை விதிப்பு காரணமாக வாக்கெடுப்பில் பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

வெற்றி பெற்றதாக அறிவிப்பு

முதலமைச்சர் விஜய் தலைமையிலான தவெக அரசு பெரும்பான்மையை பெற்று, வெற்றி பெற்றதாக சபாநாயகர் ஜே.சி.டி பிரபாகர் அறிவித்து, வாழ்த்து தெரிவித்தார். அதனைத்தொடர்ந்து, முதலமைச்சர் விஜய் ஆதரவாக வாக்களித்தவர்களுக்கு நன்றி தெரிவித்தார்.

தவெக 144 வாக்குகளை பெற்றது எப்படி?

தவெக எம்.எல்.ஏ-க்கள் 105, காங்கிரஸ் 5, சிபிஐ, சிபிஎம், விசிக, ஐயூஎம்எல் ஆகிய கட்சிகள் தலா 2, காமராஜ் (அமமுகவில் இருந்து நீக்கப்பட்டவர்) 1 மற்றும் அதிமுகவின் எஸ்.பி.வேலுமணி ஆதரவாளர்கள் 25 என மொத்தம் 144 பேர் தவெகவுக்கு ஆதரவாக வாக்களித்தனர்.நடந்து முடிந்த சட்டப்பேரவை தேர்தலில் தவெக 108 தொகுதிகளில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது. இதில் அக்கட்சியின் தலைவர் விஜய் 2 தொகுதிகளில் நின்று வெற்றி பெற்ற காரணத்தினால், எம்.எல்.ஏ-க்களின் எண்ணிக்கை 107 ஆக குறைந்தது.

திமுக கூட்டணி 73 இடங்களில், அதிமுக கூட்டணி 53 இடங்களில் வெற்றி பெற்ற நிலையில், தமிழ்நாட்டில் தொங்கு சட்டப்பேரவை என்ற நிலை உருவானது. இதனையடுத்து, தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்த தவெக, ஆட்சியமைக்க தேவையான 118 இடங்களை பெற, பிற கட்சிகளின் ஆதரவை நாடியது. தவெகவின் கோரிக்கையை ஏற்று, காங்கிரஸ் திமுக கூட்டணியிலிருந்து வெளியேறி தவெகவுக்கு ஆதரவளித்தது. தொடர்ந்து, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், விசிக, ஐயூஎம்எல் ஆகிய திமுக கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் தவெக தலைவர் விஜய், தமிழ்நாடு பொறுப்பு ஆளுநர் இராசேந்திர விஸ்வநாத் அர்லேகரை சந்தித்து ஆதரவு கடித்ததை வழங்கி ஆட்சியமைக்க அழைக்கக் கோரினார். அதனையடுத்து, முறைப்படி அழைப்பு விடுக்கப்பட்டது. மேலும், மே 13-ம் தேதிக்குள் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டது. மே 10-ம் தேதி சென்னை நேரு அரங்கத்தில் தவெக தலைவர் விஜய்யை ஆளுநர் முதலமைச்சராக பதவி பிரமாணம் செய்து வைத்தார். அவருடன் சேர்ந்து 9 அமைச்சர்களும் பதவியேற்றுக் கொண்டனர்.

தமிழ்நாட்டில் 17வது சட்டப்பேரவையின் முதல் கூட்டம் மே 11-ம் தேதி கூடியது. ஆளுநரால் நியமிக்கப்பட்ட தற்காலிக சபாநாயகர் கருப்பையா, தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.எல்.ஏ-க்களுக்கு பதவி பிரமாணம் செய்து வைத்தார். மறுநாள் சபாநாயகராக தவெக சார்பாக வேட்புமனு தாக்கல் செய்த கே.சி.டி.பிரபாகர் மற்றும் துணை சபாநாயகராக ரவிசங்கர் ஆகியவர்கள் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டனர். அதனைத்தொடர்ந்து, இன்று சட்டப்பேரவையில் தவெக அரசிற்கான பெரும்பான்மைக்கான நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன.

தமிழ்நாட்டில் உள்ள 717 டாஸ்மாக் கடைகளை மூட முதலமைச்சர் விஜய் உத்தரவு…!

0

தமிழ்நாட்டில் உள்ள 717 மதுபான சில்லறை விற்பனைக் கடைகள் இரண்டு வாரத்திற்குள் மூட உத்தரவிடப்பட்டுள்ளது. கோயில்கள், பள்ளிக் கல்லூரிகள் அருகே உள்ள டாஸ்மாக் கடைகளை மூட தமிழ்நாடு அரசு ஆலோசித்து வருவதாக திங்கட்கிழமை செய்தி வெளியான நிலையில், இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இது தொடர்பான தமிழ்நாடு அரசு உத்தரவின்படி, பொதுத் தலங்கள் அருகே உள்ள டாஸ்மாக் மதுபான கடைகளை கணக்கெடுக்கும் பணி தீவிரமாக நடைபெற்றது. இந்நிலையில், 717 மதுபான சில்லறை விற்பனைக் கடைளை மூட உத்தரவு வெளியாகியுள்ளது. 2026 சட்டப்பேரவை தேர்தலில் வெற்றி பெற்ற தமிழக வெற்றிக் கழகம், பெரும்பான்மை பெறாத காரணத்தால், காங்கிரஸ் கூட்டணி மற்றும் கம்யூனிஸ்ட், இந்திய யூனியன் முஸ்லீம் லீக், விசிக ஆகிய கட்சிகளின் ஆதரவோடு ஆட்சி அமைத்துள்ளது. தொடர்ந்து, தமிழ்நாடு முதலமைச்சராக விஜய் மே 10-ஆம் தேதி பொறுப்பேற்றுக் கொண்டார்.அப்போது, தமிழ்நாட்டில் 2 மாதங்களுக்கு 500 யூனிட் வரை பயன்படுத்தும் வீடுகளுக்கு, 200 யூனிட் வரை இலவச மின்சாரம், பெண்கள் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் ‘சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை’ உருவாக்கப்படும், தமிழகத்தில் போதைப்பொருள் புழக்கத்தை முற்றிலும் தடுக்கும் வகையில், அதிரடி நடவடிக்கை எடுக்கப்படும் என முதல் 3 கோப்புகளில் கையெழுத்திட்டார்இந்நிலையில், இன்று காலை மதுபானக் கடைகள் மூடுவது தொடர்பாக தமிழ்நாடு அரசு வெளியிடப்பட்ட அரசாணையில், “தமிழ்நாடு மாநில வாணிபக் கழகத்தால் 4,765 மதுபான சில்லறை விற்பனைக் கடைகள் தற்போது நடத்தப்பட்டு வருகிறது. அதில், வழிபாட்டுத்தலங்கள், கல்வி நிறுவனங்கள் மற்றும் பேருந்து நிலையங்கள் அருகிலிருந்து 500 மீட்டர் வரை அமைந்துள்ள கடைகளை ஆய்வு செய்து கண்டறியுமாறு தமிழ்நாடு முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் உத்தரவிட்டிருந்தார்.

அதன்படி, இந்த மூன்று இடங்களில் 717 மதுபான சில்லறை விற்பனைக் கடைகள் செயல்பட்டு வருவது கண்டறியப்பட்டது. பொதுமக்கள் நலனை கருத்தில் கொண்டு வழிபாட்டுத்தலங்கள் அருகிலுள்ள 276 கடைகள், கல்வி நிறுவனங்கள் அருகிலுள்ள 186 கடைகள் மற்றும் பேருந்து நிலையங்கள் அருகிலுள்ள 255 கடைகள் என மொத்தம் 717 மதுபான சில்லறை விற்பனைக் கடைகளை அடுத்த இரண்டு வாரத்திற்குள் மூடுமாறு முதலமைச்சர் ஜோசப் விஜய் உத்தரவிட்டுள்ளார்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

தமிழ்த்தாய் வாழ்த்து பாடல் கடைசியாக இசைக்கப்பட்ட விவகாரம் – அமைச்சர் ஆதவ் அர்ஜுனா விளக்கம்.

0

சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் நடந்த விஜய் முதலமைச்சராகப் பதவியேற்கும் விழாவில் கடைசியாக ‘தமிழ்த்தாய் வாழ்த்து’ பாடல் இசைக்கப்பட்டது தமிழ் ஆர்வலர்கள் மற்றும் அரசியல் கட்சிகளின் தலைவர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. குறிப்பாக, தவெக ஆட்சியமைக்க ஆதரவுத் தெரிவித்திருந்த அரசியல் கட்சிகள், ‘தமிழ்த்தாய் வாழ்த்து’ மூன்றாவதாக இசைக்கப்பட்டதற்கு அதிருப்தியையும், இதுப்போன்ற நிகழ்வுகள் மீண்டும் நடைபெறாது என்ற உறுதியை தமிழ்நாடு அரசு மக்களுக்கு அளிக்க வேண்டும் என்று வலியுறுத்தியிருந்தனர்.
அதன் தொடர்ச்சியாக, தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடல் மூன்றாவதாக இசைக்கப்படுவதில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைமையில் அமைந்திருக்கும் தமிழ்நாடு அரசுக்கு உடன்பாடில்லை என்று அமைச்சர் ஆதவ் அர்ஜுனா விளக்கம் அளித்துள்ளார்.இது குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா வெளியிட்டிருந்த எக்ஸ் பதிவில், ” ‘நீராரும் கடலுடுத்த…’ எனத் தொடங்கும் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலுக்கு நூற்றாண்டு கடந்த வரலாற்றுப் பெருமிதம் உள்ளது. இந்தப் பாடல் ‘உலகெங்கும் பரவ வேண்டும்…’ என்ற இலட்சியத்தின் தொடர்ச்சியாகவே, தமிழ்நாடு அரசு மாநிலப் பாடலாக அதை அறிவித்தது. இத்தகைய பெருமைமிக்க தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலே, தமிழ்நாட்டில் நடக்கும் அரசு நிகழ்ச்சிகள் உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் முதலில் ஒலிக்கப்படும். நிகழ்ச்சியின் இறுதியில் தேசிய கீதம் இசைக்கப்படும். அதுதான் வழக்கமான நடைமுறை; பொருத்தமான நடைமுறை.
தமிழ்நாட்டில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைமையில் அமைந்திருக்கும் புதிய அரசுக்கும் வழக்கமாக உள்ள இந்த நடைமுறையில் எந்தவிதமான மாற்றுக் கருத்தும் இல்லை. இப்படியான சூழலில், இன்று தமிழக பொறுப்பு ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் தலைமையில் நடைபெற்ற முதலமைச்சர் உள்ளிட்ட அமைச்சர்கள் பதவியேற்பு விழாவிலல் முதலில், வந்தே மாதரமும், பிறகு தேசிய கீதமும், மூன்றாவதாக தமிழ்தாய் வாழ்த்தும் இசைக்கப்பட்டது. இந்தப் புதிய நடைமுறை தமிழ்நாட்டிற்கு ஒவ்வாதது. தாய்த் தமிழ்நாட்டில், தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடல் மூன்றாவதாக இசைக்கப்படுவதில், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைமையில் அமைந்திருக்கும் தமிழ்நாடு அரசுக்கு உடன்பாடில்லை.
இதுகுறித்து நாங்கள் ஆளுநர் தரப்பிடம் வலியுறுத்தியபோது, ஒன்றிய அரசின் புதிய சுற்றறிக்கையின்படி செயல்படவேண்டிய பொறுப்பு ஆளுநருக்கு இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டது. அதையொட்டி தவிர்க்க முடியாத சூழலில், தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடல் மூன்றாவது பாடலாக ஒலிக்கப்பட்டது. ஆனால், இனிவரும் காலங்களில் இந்தப் புதிய நடைமுறை பின்பற்றப்படாது. மாறாக, இதற்கு முன்பிருந்த நடைமுறைப்படியே, நிகழ்ச்சியின் தொடக்கத்தில் தமிழ்த்தாய் வாழ்த்தும், நிகழ்ச்சியின் இறுதியில் தேசிய கீதமும் இசைக்கப்படும்.
தமிழ்நாட்டில் மட்டுமல்ல, இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களிலும், அந்தந்த மாநில மொழி வாழ்த்துப் பாடலே நிகழ்ச்சியின் தொடக்கத்தில் இசைக்கப்பட வேண்டும். அதற்கு ஒன்றிய அரசு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். ஒட்டுமொத்த தமிழக மக்களின் உணர்வும் ஒருமித்த எண்ணமும் அதுதான். எங்களுடைய உறுதியான நிலைப்பாடும் அதுதான். வாய்மையே வெல்லும்! வாழ்க தமிழ்!” என்று குறிப்பிட்டுள்ளார்.