கடந்த தி.மு.க ஆட்சியில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சராக பதவி வகித்தவர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி. திருவெறும்பூர் தொகுதியில் இரண்டு முறை சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட இவருக்கு, கடந்த ஆட்சியில் அமைச்சர் பொறுப்பு வழங்கப்பட்டது. இதுபோன்ற சூழலில், நடந்து முடிந்த 2026 சட்டப்பேரவை தேர்தலில் தோல்வியைத் தழுவினார்.

முன்னாள் அமைச்சரான அன்பில் மகேஸ், தற்போது திருச்சி தி.மு.க தெற்கு மாவட்டச் செயலாளராக இருந்து வருகிறார். அதுமட்டுமின்றி, சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலினின் நெருங்கிய நண்பராகவும், குடும்ப நண்பராகவும் உள்ளார்.
தனியார் பள்ளிகளுக்கு அரசு அனுமதி, நிரந்தர அங்கீகாரம் மற்றும் சட்டப்பூர்வ அனுமதிகளைப் பெற்றுத் தருவதாகக் கூறி ரூ.100 கோடி வரை மோசடி செய்ததாக புகார் எழுந்துள்ளது. இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்துள்ள மத்திய குற்றப்பிரிவு போலீசார் (Central Crime Branch police) விசாரணை நடத்தி வருகின்றனர். ஏற்கனவே, தமிழக தனியார் பள்ளிகள் சங்கத்தின் தலைவரும், தி.மு.க பிரமுகருமான பி.டி. அரசகுமாரை கைது செய்த மத்திய குற்றப்பிரிவு போலீசார், அவரை குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையில் அடைத்துள்ளனர். மேலும், அரசகுமாருக்கு உடந்தையாக இருந்த அவரது உறவினர்களான மதுரையைச் சேர்ந்த ஆரோக்கியராஜ் என்ற ராஜா மற்றும் திருச்சியைச் சேர்ந்த சுரேஷ் இருவரும் கைது செய்யப்பட்டனர். அசரகுமாரிடம் நடத்தப்பட்ட விசாரணையின் தொடர்ச்சியாகவே தற்போது சோதனைகள் தீவிரப்படுத்தப் பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
அதன்படி, திருச்சி தென்னூர், அண்ணா நகரில் உள்ள அன்பில் மகேஸ் பொய்யாமொழியின் இல்லத்தில், இன்று காலை முதலே மத்திய குற்றப்பிரிவு போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இதில், தனியார் பள்ளிகளிடம் அனுமதி வழங்குவதில் லஞ்சம் பெறப்பட்டதா? முறைகேடுகள் நடைபெற்றதா? என்பது குறித்த ஆவணங்களை மையமாகக் கொண்டு, போலீசார் விசாரித்து வருகின்றனர்.
இதற்கிடையே, அன்பில் மகேஸ் இல்லத்தில் நடைபெறும் சோதனை குறித்து தகவல் அறிந்த தி.மு.க-வினர், அவரது வீட்டிற்கு முன்பாக குவிந்து வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதனால், பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
திருச்சியில் உள்ள வீடு மட்டுமின்றி, சென்னை உள்ளிட்ட அன்பில் மகேஸுக்கு தொடர்புடைய 6 இடங்களில் ஒரே நேரத்தில் இந்த சோதனை நடத்தப்பட்டு வருகிறது. 6 இடங்களிலும் நடைபெற்று வரும் சோதனை முழுமையாக நிறைவடைந்த பின்னரே, கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் மற்றும் பிற ஆதாரங்கள் குறித்த முழுமையான விவரங்கள் தெரியவரும் என போலீசார் தரப்பில் தெரிவிக்கப் பட்டுள்ளது. இந்த சோதனையின் முடிவில் கிடைக்கும் ஆவணங்கள் மற்றும் பணப் பரிவர்த்தனை விவரங்களின் அடிப்படையில் வழக்கில் மேலும் யார் யாருக்கு தொடர்புள்ளது என்பது குறித்து மத்திய குற்றப்பிரிவு போலீசார் அடுத்தகட்ட விசாரணையை மேற்கொள்ள உள்ளனர்.
கே.என். நேருவுக்கு அனுமதி மறுப்பு இதற்கிடையே, தகவல் அறிந்த தி.மு.க முதன்மைச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான கே.என். நேரு, தென்னூரில் உள்ள அன்பில் மகேஸின் வீட்டிற்கு நேரில் சென்றுள்ளார்.
ஆனால், போலீசார் அவரை வீட்டிற்குள் செல்ல அனுமதிக்க மறுத்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து, செல்போன் மூலம் வீட்டிற்குள் இருந்த கட்சி நிர்வாகியை தொடர்பு கொண்டு பேசிய அவர் அங்கிருந்து புறப்பட்டு சென்றதாகக் கூறப்படுகிறது.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய கே.என். நேரு, “தி.மு.க-வில் சிறப்பாகச் செயல்படும் நபர்களைக் குறிவைத்து, வேண்டுமென்றே பயமுறுத்தும் வகையில் விஜய் அரசு இந்த சோதனை நடத்தி வருகின்றனர். திமுகவில் தீவிரமாகச் செயல்பட்டு, மக்கள் மத்தியில் யாரெல்லாம் பிரபலமாக இருக்கிறார்களோ, அவர்களை எல்லாம் குறிவைத்து விஜய் அரசாங்கம் இதுபோன்ற சோதனைகளை நடத்தி வருகிறது.
இந்த நடவடிக்கையைப் பழிவாங்கும் நடவடிக்கையாகவே நாங்கள் பார்க்கிறோம். நீதிமன்றத்தின் வாயிலாக நாங்கள் குற்றமற்றவர்கள் என்பதை நிரூபித்து வெளியே வருவோம்” எனத் தெரிவித்தார்.
வங்கிக் கணக்குகள் முடக்கம்
இச்சம்பவம் குறித்து காவல்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், “இந்த வழக்கின் விசாரணையை தீவிரப்படுத்திய மத்திய குற்றப்பிரிவு போலீசார் தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் விசாரணை மேற்கொண்டனர். இதுவரை 250-க்கும் மேற்பட்டோரிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது. பள்ளிக்கல்வித்துறை மற்றும் அதனைச் சேர்ந்த பல்வேறு அரசு அலுவலர்களிடமும் விசாரணை நடத்தப்பட்டதுடன், அதுதொடர்பான அரசு ஆவணங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.
இதுவரை 177 தனியார் பள்ளிகள் பாதிக்கப்பட்டதாகவும், அவர்களிடம் இருந்து பல கோடி ரூபாய் வசூலிக்கப்பட்டு நம்பிக்கை மோசடி செய்யப்பட்டிருப்பது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. தொடர்ந்து புகார்கள் பெறப்பட்டு வருகின்றன. நிதி மோசடி தொடர்பான விசாரணையில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் அவர்களது குடும்பத்தினரின் வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன.
குறிப்பாக, அரசகுமார் மற்றும் அவரது குடும்பத்தினருடன் தொடர்புடைய 20 வங்கிக் கணக்குகளும், வழக்கில் தொடர்புடைய மற்றொரு முக்கிய நபரான முத்துக்குமாருடன் தொடர்புடைய 29 வங்கிக் கணக்குகளும் முடக்கப்பட்டுள்ளன. அந்த கணக்குகளில் நடைபெற்ற நிதிப் பரிவர்த்தனைகள் தொடர்பாக தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.
விசாரணையில் சிக்கிய ஆதாரங்கள்
விசாரணையின் பல்வேறு கட்டங்களில் குற்றம் சாட்டப்பட்டவர்களின் குடியிருப்புகள், அலுவலகங்கள், பள்ளி வளாகங்கள் மற்றும் பள்ளிக்கல்வித்துறை இயக்குநரகம் அமைந்துள்ள DPI வளாகம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சோதனைகள் நடத்தப்பட்டுள்ளன.
அப்போது, குற்றச்செயலுடன் தொடர்புடையதாக கருதப்படும் ஆவணங்கள், தனியார் பள்ளிகள் தொடர்பான பதிவுகள், அரசு அலுவலகங்களுக்கு அளிக்கப்பட்ட மனுக்கள் மற்றும் பிரதிநிதித்துவ ஆவணங்கள், நிதிப் பரிவர்த்தனை தொடர்பான பதிவுகள், கைப்பேசிகள், கணினிகள், ஹார்டு டிஸ்க்குகள் உள்ளிட்ட டிஜிட்டல் மற்றும் மின்னணு ஆதாரங்கள் கைப்பற்றப்பட்டுள்ளது. கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் மற்றும் மின்னணு ஆதாரங்கள் வங்கிப் பரிவர்த்தனைகள் சாட்சிகளின் வாக்குமூலங்கள் ஆகியவற்றை ஒப்பிட்டு, மோசடியில் சம்பந்தப்பட்ட ஒவ்வொரு நபரின் பங்கு குறித்து மத்திய குற்றப்பிரிவு போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
வழக்குப் பதிவு
அதனடிப்படிப்படையில் அப்போதைய பள்ளிக்கல்வித்துறை அமைச்சராக இருந்த அன்பில் மகேஸ் பொய்யாமொழிக்கு இந்த விவகாரத்தில் தொடர்பு இருப்பது தெரியவந்துள்ளது. இதையடுத்து அவர் மீது ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
அதன் தொடர்ச்சியாகவே, சென்னை மற்றும் திருச்சியில் உள்ள 4 இடங்களிலும் அவரது உதவியாளர் வாலாடி கார்த்திக்குக்கு சொந்தமான சென்னை மற்றும் திருச்சியில் உள்ள 2 இடங்களிலும் என மொத்தம் 6 இடங்களில் ஒரே நேரத்தில் சோதனை நடந்து வருகிறது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே, தி.நகர் பகுதியில் உள்ள அன்பில் மகேஸ் அலுவலகம் ஒன்று பூட்டப்பட்டிருப்பதால், அதன் சாவி யாரும் எடுத்துவரவில்லை எனக் கூறப்படுகிறது. இதனால், பூட்டை உடைத்து சோதனை நடத்த குற்றப்பிரிவு போலீசார் திட்டமிட்டு வருகின்றனர்.


