Wednesday, September 23, 2026
Home Blog Page 9

கோவையில் சட்டவிரோத மதுபான விற்பனை – 5,102 மதுபான பாட்டில்கள் பறிமுதல் – 3 நபர்கள் கைது..!

0

கோவை மாவட்டம், அன்னூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மயில்ஸ் பகுதியில், மௌலிக்கா பேக்கரி பின்புறம் உள்ள குடிசையில் காளிமுத்து என்பவர் சட்டவிரோதமாக மதுபான பாட்டில்கள் பதுக்கி வைத்து விற்பனை செய்து வருவதாக கிடைத்த தகவலின் பேரில் காவல்துறையினர் நடவடிக்கை மேற்கொண்டனர்.

தேர்தல் காலத்தை முன்னிட்டு சட்டவிரோத மதுபான விற்பனை மற்றும் பிற குற்றச்செயல்களை தடுக்கும் வகையில் தீவிர கண்காணிப்பு மேற்கொள்ள கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன்,, வழங்கிய உத்தரவின்பேரில், PEW பிரிவு உதவி ஆய்வாளர் முருகநாதன் தலைமையிலான காவல்துறையினர் சோதனை நடத்தினர்.

அப்போது வீரமணி (35) மற்றும் குமார் (42) ஆகிய இரு நபர்கள் சுமார் 200 மது பாட்டில்களுடன் பிடிபட்டனர். அவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், முக்கிய குற்றவாளியான காளிமுத்து (48) என்பவர் காரியம்பாளையம் காட்டுத்தோட்டத்தில் உள்ள பண்ணை வீட்டில் அதிகளவு மதுபானங்களை பதுக்கி வைத்திருப்பது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து காவல்துறையினர் சோதனை மேற்கொண்டதில், சட்டவிரோத விற்பனைக்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்த பிராண்டி பாட்டில்கள் – 3,897, ரம் பாட்டில்கள் – 1,019, பீர் பாட்டில்கள் – 156
வோட்கா பாட்டில்கள் – 30 என மொத்தம் 5,102 மதுபான பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன

மேலும் இவ்வழக்கில் தொடர்புடைய காளிமுத்து (48), அவிநாசி, திருப்பூர் மாவட்டம், வீரமணி (35), புதுக்கோட்டை மாவட்டம், குமார் (42), சிவகங்கை மாவட்டம் ஆகிய 3 நபர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டனர்.

ஓட்டுக்கு ₹5000… எல்லாம் கொள்ளை அடித்த பணம்  இறுதி கட்ட தேர்தல் பிரச்சாரத்தில் கோவை வடக்கு வேட்பாளர் வானதி ஆவேச பேச்சு !

0

கோவையை ரவுடிகளிடம் அடகு வைக்காதீர்கள்  செந்தில் பாலாஜிக்கு செவாலியே விருது கொடுக்கலாம் – கோவை இறுதி கட்டப் பிரச்சாரத்தில் எம்.எல்.ஏ வானதி கிண்டல் !

கோவை வடக்குத் தொகுதி பா.ஜ.க வேட்பாளர் வானதி சீனிவாசன் இன்று வடவள்ளி பகுதியில் தனது பிரச்சாரத்தை நிறைவு செய்தார்.

பிரச்சாரத்தின் போது தொண்டர்கள் மத்தியில் அவர் பேசியதாவது

பா.ஜ.க வில் வெளி மாவட்டங்களில் இருந்து கூட இங்கு வந்து தேர்தல் களப்பணி ஆற்றிக் கொண்டு இருக்கின்றனர்.

தமிழகத்தைக் காப்பாற்ற வேண்டுமென்றால் ஒரே ஒரு வழி தான் உள்ளது. அதற்கு அ.தி.மு.க.வும், பா.ஜ.க வும் கைகோர்த்தாக வேண்டும் என்று மோடியும், அமித்ஷாவும் முடிவெடுத்தார்கள்.

கோவை என்பது தே.ஜ கூட்டணியின் பக்கம் என்பதை கடந்த தேர்தலில் காட்டினோம். ஆனால் துரதிர்ஷ்டவசமாக தி.மு.க ஆட்சிக்கு வந்தது.

உள்ளாட்சித் துறை அமைச்சராக எஸ்.பி. வேலுமணி இருந்த போது மாதத்திற்கு மூன்று முறை டெல்லிக்கு செல்வார். எதற்காகவென்றால் முதலில் விருதுகள் வாங்கவும், சம்பந்தப்பட்ட துறை அமைச்சர்களை சந்தித்து திட்டங்களைக் கேட்கவும் செல்வார்.

மத்திய, மாநில அரசுகள் இணைந்து சிறப்பான திட்டங்களை செயல்படுத்திக் கொண்டு இருந்த காலம் இருந்தது. ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் 1500 கோடி ரூபாய் கோவைக்கு கிடைக்கப்பெற்றது. ஏழு குளங்கள் இந்த திட்டத்தில் புனரமைக்கப்பட்டன.

வேலைவாய்ப்பை அதிகரிக்கும் வகையில் ராணுவ தளவாட மையத்தை கோவை, சேலம், ஓசூர் வரை நீட்டித்துக் கொடுத்தார் மோடி.

உத்தரப்பிரதேசம் மற்றும் தமிழ்நாட்டில் தான் இந்த திட்டம் கொண்டு வரப்பட்டது. இன்று உத்தரப்பிரதேசத்தில் ராணுவ தளவாட உற்பத்தி அதிகரித்து உள்ளது. ஆனால் தி.மு.க ஆட்சியில் இங்கு அந்த திட்டம் பாதாளத்திற்கு சென்று விட்டது.

நாம் முக்கிய கட்டத்தில் இருக்கிறோம். உலக தலைவர்கள் பிரதமர் மோடி எங்கள் நாட்டிற்கு வரமாட்டாரா ? என்று ஏங்குகின்றனர்.

நாம் பெட்ரோல், டீசல், கேஸுக்காக காத்து இருக்கவில்லை. மோடி நம்மை கண் இமை போல் காத்துக் கொண்டு இருக்கிறார். அப்படிப்பட்ட மோடியை கோ பேக் என்று சொல்லியும் தி.மு.க மீண்டும் ஆட்சிக்கு வந்தால், எப்படி மோடி கொடுக்கும் திட்டங்களை தமிழ்நாட்டிற்கு கொண்டு வருவார்கள்.

ரம்ஜான், கிறிஸ்துமஸ்க்கு வாழ்த்து சொல்லும் ஸ்டாலின் விநாயகர் சதுர்த்திக்கும், தீபாவளிக்கும் வாழ்த்து சொல்கிறாரா ? இந்துக்களுக்கு விரோதமான கட்சி தி.மு.க.

கோவில் குறித்தோ, சாமிகள் குறித்தோ ? உயர்வாக பேசியிருக்கிறார்களா ? ஓட்டுக்காக இப்போது ஸ்டாலின் நாடகம் போடுகிறார்.

பா ஜ.க வை பார்த்தால் அவருக்கு பயம்.
பெண்கள் பாதுகாப்பு மோசமாக உள்ளது. பகல் நேரத்தில் கூட பெண்கள் நடமாட முடியவில்லை. பெண் குழந்தைகள் பாதுகாப்பாக இருக்கின்றன என்று யாராவது சொல்ல முடியுமா ?

தி.மு.க அரசு தூக்கி எறியப்படா விட்டால் நாம் வீட்டை விட்டு வெளியே போக முடியாது.

சாக்லேட், ஊசி என்று பல வடிவங்களில் போதைப் பொருட்கள் அதிகரித்து உள்ளன.

தடுப்பூசியைக் கூட ஸ்டாலின் அரசு அனுப்பவில்லை. கோவையை பழி வாங்குகிறார்.

அ.தி.மு.க. ஆட்சி இருக்கும் போது மட்டும் தான் பாதுகாப்பாக தொழில் செய்ய முடியும். கடந்த இரண்டு நாட்களாக ஆயுதம் ஏந்திய கும்பல்கள் வீடுகள் மற்றும் தெருக்களில் அமர்ந்து இருக்கிறார்கள்.

ஒரு ஓட்டுக்கு ரூ.2,500, ரூ.5,000 என்று கொடுக்கிறார்கள். ஸ்டாலின் அடித்த கொள்ளைப் பணம் தான் இது.

5 ஆண்டுகளுக்கு ஒருமுறை வருவது தான் தேர்தல், ஆனால் ஓட்டுப்போட 5 நொடிகள் போதும். யோசித்து ஓட்டுப்போடுங்கள்.

கோவை மாநகராட்சி கவுன்சிலர்கள் யாரும் வேலை செய்வதில்லை. அந்த தேர்தலுக்கு வெள்ளிக் கொலுசு கொடுத்தார். அது மூன்றே மாதத்தில் பல் இளித்து விட்டது. எத்தனை கோடி கொட்டிக் கொடுத்தாலும் இங்கு மலரப் போவது தாமரையும், இரட்டை இலையும் தான் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

உத்தமபுத்திரனாக பார்த்து செந்தில் பாலாஜியை ஸ்டாலின் இங்கு அனுப்பி உள்ளார்.

நம்மை நம் வீட்டில் கூட நிம்மதியாக வாழ விடமாட்டார்கள். எஸ்.பி. வேலுமணி மேம்பாலங்கள் கட்டினார். திட்டங்களைக் கொண்டு வந்தார். ஆனால் ஸ்டாலின் ஸ்டிக்கர் மட்டும் ஒட்டினார்.

கோவை வடக்கு சட்டமன்றத் தொகுதியில் மட்டும் பல்வேறு திட்டங்கள் கிடப்பில் போடப்பட்டு உள்ளன.

இங்கிருக்கும் மாநகராட்சி கவுன்சிலர்கள் செந்தில் பாலாஜியின் கலெக்‌ஷன் ஏஜெண்டுகளாக உள்ளனர். அதையே இந்த தேர்தலில் செய்யப்பார்க்கிறார். எனவே அனைவரும் தாமரை சின்னத்தில் வாக்களியுங்கள் என்று வானதி சீனிவாசன் பேசினார்.

திமுக ஆட்சி கனவு கதம், கதம் இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் விஜய்…

0

திமுகவின் ஆட்சி கனவு கதம், கதம்தான் என்று நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் இன்று நடைபெற்ற இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் தவெக தலைவர் விஜய் பேசினார்.

2026 சட்டமன்ற தேர்தலையொட்டி நடைபெற்று வந்த தேர்தல் பரப்புரை இன்று மாலை 6 மணியுடன் நிறைவடைந்தது. இந்த நிலையில், சென்னை நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் செயல் வீரர்கள் கூட்டம் இன்று நடைபெற்றது. இதில், தவெக தலைவர் விஜய் கலந்து கொண்டு தேர்தல் பிரச்சாரம் செய்தார்.

அப்போது பேசிய அவர், “மிக மிக முக்கியமான நேரத்தில் நாம் இருக்கிறோம். திமுக ஆட்சியையும், ஸ்டாலின் சாரையும் வீட்டுக்கு அனுப்பப் போற, தேர்தலின் கடைசி பிரச்சாரம் இது. மக்களை கண்டுக்காத ஆட்சியையும், அதன் தலைவரையும் வீட்டுக்கு அனுப்பும் தேர்தலின் கடைசி பிரச்சாரம் இது. திமுக ஆட்சியில் வீட்டு வரி, தண்ணீர் வரி, தொழில் வரி, விலைவாசி உயர்வு மற்றும் குப்பைக்கும் கூட வரி போடப்பட்டுள்ளது. இப்படிப்பட்டவர்களை வீட்டிற்கு அனுப்பாமல் கோட்டைக்கா அனுப்ப முடியும்?” என்று கேள்வியெழுப்பினார்.

நம் அரசியல் எதிரி திமுக, கொள்கை எதிரி பாஜக

தொடர்ந்து விஜய் பேசியபோது, “தமிழ்நாட்டில் எந்த அரசாங்கமும் வாங்காத அளவிற்கான கடனை திமுக பெற்றுள்ளது. 6 லட்சம் கோடி ரூபாய் கடனை அவர்கள் வாங்கியுள்ளனர். நம் அரசியல் எதிரி திமுக, கொள்கை எதிரி பாஜக என்ற நிலைப்பாட்டில் இதுவரை நாம் ஒரு அங்குலமும் மாறவில்லை. மதச்சார்பற்ற சமூக நீதிதான் நமது கொள்கை. இந்த விஷயத்தில் நூறு சதவீதம் என்னை நம்பலாம்.

திமுகவின் சாயம் வெளுக்கும்

இந்து, முஸ்லிம், கிறிஸ்தவர்களுக்கான ஆளாகவே நான் இருப்பேன். எம்மதமும் நம் மதம். நான் ஒன்று சொன்னால், அதிலிருந்து மாறமாட்டான். முதலமைச்சர் ஸ்டாலினை போல நான் இல்லை. சிறுபான்மையினரின் வாக்கிற்காக காங்கிரஸ் உடனும், கட்சியைக் காப்பாற்றுவதற்காக பாஜகவுடனும் திமுக மறைமுக கூட்டணி வைத்துள்ளது. எனவே இந்த தேர்தலில் திமுக தோற்பது உறுதி. தேர்தலில் தோற்ற பிறகு கட்சியை காப்பாற்ற மோடி மற்றும் அமித் ஷாவின் காலில் திமுக விழும். அன்று திமுகவின் மொத்த சாயமும் வெளுக்கும். அப்போது பாஜகவின் முதல் அடிமை யார் என்ற போட்டி திமுகவிற்கும், பிறருக்கும் இடையில் நடைபெறும்.

திமுக ஆட்சி கனவு கதம்-கதம்

சிறுபான்மை சகோதரர்களுடன் நான் எப்போதும் நிற்பேன். இந்த தேர்தலில் திமுகவும் மற்றும் பலரும் மண்ணை கவ்வப்போவது உறுதி. திமுகவின் ஆட்சி கனவு கதம்-கதம் தான். ஸ்டாலின் சாரிடம் இருந்து நாட்டை காப்பாற்றி ஆக வேண்டும். தயவுசெய்து விசில் சின்னத்தில் ஓட்டு போடுங்கள். தயவு செஞ்சு உங்கள் விஜய்க்கு வாய்ப்பு கொடுங்கள்” என்றார்.

எடப்பாடிக்கும் கேள்வி ?

தொடர்ந்து பேசிய அவர், “சேலத்தில் இல்லாமல் வேற ஏதாவது தொகுதியில் நின்று எடப்பாடி பழனிசாமியால் வெற்றி பெற முடியுமா?. முதலில் அதை செய்துவிட்டு என்னை பற்றி பேசுங்கள். சொந்த தொகுதியில் தோற்றுவிடுவோம் என்ற பயத்தில் தவெகவின் சின்னத்தை திருடியவர் அவர். எடப்பாடி தொகுதி மக்கள் சுயேட்சை சின்னமான டிவி சின்னத்தில் ஓட்டு போட வேண்டும். பாஜகவை சேர்ந்தவர் என்னை நடிகன் என்று கூறுகிறார். ஆம் நான் நடிகன்தான். நான் அரசியலில் நடிக்கவில்லை. ஆனால் நீங்கள் அரசியலில் இருந்து கொண்டு நடிக்கிறீர்கள். உங்களை நாடக நடிகர்கள் என்று கூறலாமா? நீங்கள் அனைவரும் டேஞ்சரான நாடக கம்பெனி என்று கூறலாமா?

75 ஆண்டுகால பவள விழா பாப்பா, 55 வருட பல்லாங்குழி பாப்பா

இது ஒரு மாற்றத்திற்கான தேர்தல். போகி பண்டிகை அன்று வீட்டில் உள்ள பழைய பொருட்களை தூக்கி வீசுவது போல, இந்த தேர்தலில் 75 ஆண்டுகால பவள விழா பாப்பாவையும், 55 வருட பல்லாங்குழி பாப்பாவையும், தூக்கி வீசி எறிவோமா? புதிய அரசாங்கத்தை கொண்டு வருவோமா? திமுக, அதிமுக என யாருக்கு ஓட்டு போட்டாலும் அது பாஜகவிற்கு ஓட்டு போடுவது போல்தான்” என்றார்.

சூரியன் பட்டால் சன் ஸ்டோக் வரும்

மேலும் பேசிய அவர், “மே 4ஆம் தேதி அக்னி நட்சத்திரம் துவங்கும் நாள். அன்று அக்கினி வெயில் மண்டையை பிளக்கும். அன்று சூரியன் பட்டால் சன் ஸ்டோக் வரும். ஆகவே அன்று குழந்தைகள் முதல் பெரியவர் வரை அந்த சூரியனை வெறுத்து ஒதுக்குவார்கள்.200 யூனிட் கட்டணம் இல்லா மின்சாரம் தவெக ஆட்சிக்கு வந்ததும், 200 யூனிட் கட்டணம் இல்லா மின்சாரம், முதியோர்கள் அனைவரும் அனைத்து அரசு பேருந்துகளிலும் கட்டணம் இல்லாமல் பயணிக்கலாம். பெண்கள் பாதுகாப்புக்கான கடுமையான சிறப்பு சட்டம் கொண்டுவரப்படும். போதைப்பொருள் தடுப்புக்கான சிறப்பு சட்டம் கொண்டு வரப்படும்” என்றும் அவர் கூறினார்.

மனசாட்சி வேண்டாமா?

பின்னர், கரூர் சம்பவத்தை நினைவுகூர்ந்த அவர், “அங்கு என்ன நடந்தது என்று பொதுமக்களிடம் கேட்டால் அவர்களே புட்டு, புட்டு வைப்பார்கள். மாறாக என் மீது பழியை போடுகிறார்கள்? கரூரில் காவல்துறை கொடுத்த நேரத்தில் சரியாக அங்கு நான் இருந்தேன். நாமக்கல்லில் இருந்து கரூருக்கு எப்படி வந்தேன் என்று உலகமே லைவில் பார்த்துக் கொண்டிருந்தது. என் மீது பழி போடுகிறீர்கள். மனசாட்சி வேண்டாமா?” என்றும் விஜய் ஆவேசமாக கேள்வி எழுப்பினார்.

தமிழகத்தில் ஓய்ந்தது பிரச்சாரம் – வெளியாட்கள் தொகுதிகளில் இருந்து வெளியேற தேர்தல் ஆணையம் உத்தரவு…

0

தமிழக சட்டப் பேரவை தேர்தலுக்கான பரப்புரை நிறைவடைந்தது. இதனையடுத்து வெளியாட்கள் தொகுதியை விட்டு வேளியேற தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுத்துள்ளது.

தமிழக சட்டமன்ற தேர்தல் நாளை மறுநாள் (ஏப்ரல் 23) நடைபெறவுள்ளது. இதற்காக அரசியல் கட்சி தலைவர்கள் கடந்த ஒரு மாதமாக தீவிர பரப்புரை மேற்கொண்டு வந்தனர். குறிப்பாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், தவெக தலைவர் விஜய், நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் உள்ளிட்ட தலைவர்கள் கடந்த சில நாட்களாக சூறாவளி சுற்றுப் பயணம் மேற்கொண்டு வந்தனர்.

பிரச்சாரம் நிறைவு நாளில் தலைவர்கள் சூறாவளி சுற்றுப்பயணம்,

இறுதி நாளான இன்று தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் சென்னை மாவட்டத்திற்கு உள்பட்ட சோழிங்கநல்லூர், சைதாப்பேட்டை, வேளச்சேரி, கொளத்தூர் உள்ளிட்ட தொகுதிகளில் பரப்புரை மேற்கொண்டார். எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, தான் போட்டியிடும் எடப்பாடி தொகுதியில் இறுதிகட்ட பரப்புரை மேற்கொண்டார். துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தான் போட்டியிடும் சேப்பாக்கம் திருவல்லிக்கேணி உள்ளிட்ட இடங்களில் பரப்புரை செய்தார். அதே போன்று தவெக தலைவர் விஜய், சென்னையில் சைதாப்பேட்டை, நந்தனம் பகுதிகளில் பரப்புரை மேற்கொண்டார். நாம் தமிழர் தலைமை ஒருங்கிணைப்பாளார் சீமான் தான் போட்டியிடும் காரைக்குடி தொகுதியில் பரப்புரையை நிறைவு செய்தார்.
ஆறு மணியுடன் பரப்புரை நிறைவு.
இன்று மாலை 6 மணியுடன் பரப்புரை நிறைவடைந்த நிலையில் அரசியல் கட்சி தலைவர்கள், வேட்பாளர்கள் உள்ளிட்டோர் தேர்தல் பரப்புரை, பொதுக் கூட்டம், சாலை வலம் உள்ளிட்ட எந்த வகையிலும் பிரச்சாரத்தில் ஈடுபடக் கூடாது. மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் 1951, பிரிவு 126-இன் கீழ் ஏப்ரல் 21 மாலை 6 மணிக்கு மேல் வாக்குப்பதிவு முடியும் வரை (ஏப்ரல் 23) திரைப்படம், தொலைக்காட்சி, ரேடியோ, வாட்ஸ்-ஆப், முகநூல், எக்ஸ் போன்ற எவ்வித மின்னணு சாதனங்கள் மூலம் அரசியல் கட்சிகள் பரப்புரையில் ஈடுபட கூடாது. இந்த விதிமுறைகளை மீறுவோருக்கு 2 ஆண்டு சிறை தண்டனை அல்லது அபராதம் விதிக்கப்படும்.

வெளியாட்கள் வெளியேற உத்தரவு,

அதே போன்று அந்தந்த தொகுதிகளில் வாக்காளர்கள் அல்லாத அரசியல் கட்சி நிர்வாகிகள் மற்றும் வெளிமாவட்டத்தை சேர்ந்தவர்கள் இன்று மாலை 6 மணிக்கு மேல் தொகுதியை விட்டு வெளியேற வேண்டும். இதனை உறுதி செய்ய கல்யாண மண்டபங்கள், தங்கும் விடுதிகளில் போலீசார் மாநிலம் முழுவதும் சோதனைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும் வேட்பாளர்கள் அல்லது அரசியல் கட்சிகள் தங்களின் தேர்தல் பணிமனைகளை வாக்குச்சாவடிகளில் இருந்து 200 மீட்டர் தொலைவிற்கு வெளியே மட்டுமே அமைக்க வேண்டும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. மேலும், பணிமனையில் 2 நபர்கள் மட்டுமே இருக்க வேண்டும் எனவும், தேவையற்ற கூட்டங்களை தவிர்க்க வேண்டும் எனவும் தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.

தமிழ்நாடு பாதிக்கப்பட்டால் இந்தியாவையே திரும்பி பார்க்க வைத்துவிடுவோம் – முதல்வர் ஸ்டாலின்

0

நாடாளுமன்றச் சிறப்புக் கூட்டத்தொடர் ஏப்ரல் 16ஆம் தேதி கூட்டப்படவுள்ள நிலையில், தொகுதி மறுவரையறை குறித்து, திமுக தலைவரும் தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் இன்று (14-04-2026) தனது சமூக வலைதள பக்கத்தில் வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். அந்த பதிவில், “தமிழ்நாட்டின் வாசல்வரை வந்துவிட்ட பேராபத்தைப் பற்றிச் சொல்லவும், ஒன்றிய பாஜக அரசுக்கு எச்சரிக்கை விடுக்கவும் இந்த வீடியோவை வெளியிடுகிறேன்.

தேர்தல் பிரச்சாரத்துக்காக நிற்காமல் ஓடிக்கொண்டே இருந்தாலும் இந்தக் கடமையை தவிர்க்க முடியாது. நாளை மறுநாள் ஏப்ரல் 16 அன்று, நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தொடர் கூடுகிறது. கூடுகிறது என்று சொல்வதைவிட, தமிழ்நாடு, மேற்கு வங்கத் தேர்தலுக்கு இடையில் வலுக்கட்டாயமாகக் கூட்டப்படுகிறது என்றுதான் சொல்ல வேண்டும்.

‘Delimitation’ என்ற தொகுதி மறுவரையறை தொடர்பாக அரசியல் சட்டத் திருத்தத்தை இந்தத் தொடரில் ‘புல்-டோஸ்’ செய்யப் போகிறார்கள்.

ஆரம்பத்திலிருந்தே இதுபற்றி நாம் தொடர்ந்து எச்சரித்தோம். மக்களுக்கு விழிப்புணர்வையும் ஏற்படுத்தினோம். தமிழ்நாடு மட்டுமல்லாமல், இந்தியா முழுவதுமிருந்து, இதனால் பாதிப்படையவுள்ள மாநில முதலமைச்சர்களையும், முக்கியக் கட்சித் தலைவர்களையும் சென்னைக்கு அழைத்து, கூட்டு நடவடிக்கைக் குழுக் கூட்டம் நடத்தினோம்.

‘மக்கள் தொகையைக் கட்டுப்படுத்துங்கள்; அளவாகக் குழந்தைகளைப் பெற்றுக் கொள்ளுங்கள், குடும்பக் கட்டுப்பாட்டைக் கடைபிடியுங்கள்’ என ஒன்றிய அரசு சொன்னதையெல்லாம் நாங்கள் கேட்டோம். சொன்னதை ஒழுங்காகச் செய்ததற்காகவே எங்களுக்குத் தண்டனை தருவீர்களா?

‘தென்மாநிலங்கள் பாதிப்படையாது’ என நாடாளுமன்றத்தில் வைத்துப் பிரதமர் நரேந்திர மோடி உத்தரவாதம் தரவேண்டுமென்று கேட்டதற்கு பதில் இல்லை. இதற்காக பல்வேறு கட்சி எம்.பிக்கள் பிரதமரை நேரில் சந்தித்து முறையிட நேரம் கேட்டோம். அதுவும் கிடைக்கவில்லை. இப்படி நாங்கள் சொன்ன எதையும் காதில் வாங்காமல், பிற கட்சிகள், மாநிலங்களுடன் ஆலோசனை நடத்தாமல், அவர்கள் இஷ்டத்துக்கு செய்யப் பார்க்கிறார்கள்.இப்படி அவசர அவசரமாக ‘Delimitation’ செய்ய நினைப்பது, பாஜக அரசின் அப்பட்டமான ஜனநாயக விரோதச் செயல். மாநில உரிமைகளை படுகொலை செய்யும் இந்த செயல் குறித்தும், சட்டத்திருத்தம் என்ன என்பது பற்றியும் இதுவரை எந்த விளக்கத்தையும் கொடுக்கவில்லை. இப்படி மறைத்து செய்தாலே அதில் ஏதோ பெரிய ஆபத்து இருக்கிறது என்ற சந்தேகம் வலுவடைகிறது. குறிப்பாக, தென்மாநில மக்கள் பெரும் அச்சத்தில் இருக்கிறார்கள்.

நான் ஒன்றிய பாஜக அரசுக்கும், பிரதமர் மோடிக்கும், இந்த நேரத்தில் முக்கியமாக ஒன்று சொல்லிக் கொள்கிறேன்.

நடக்கவிருக்கும் நாடாளுமன்ற கூட்டத்தொடரில், எங்கள் எம்.பி.க்கள் கலந்து கொள்வார்கள். தமிழ்நாட்டை பாதிப்பது போன்றோ, வடமாநிலங்களுக்கு அரசியல் வலிமையை மேலும் வாரி வழங்குவது போன்றோ, ஏதாவது நடந்தால், நாங்கள் சும்மா இருக்கமாட்டோம். தமிழ்நாடே ஸ்தம்பிக்கும். தமிழ்நாடு தனது எதிர்ப்பைக் கடுமையாகக் காட்டும். ஒவ்வொரு குடும்பமும் தெருவில் வந்து உட்காருவோம். தமிழ்நாடு முதலமைச்சராக இருக்கும் என்னுடைய தலைமையிலேயே மிகப்பெரிய போராட்டம் நடத்துவோம்.

தேர்தல் மீதுதான் கவனம் இருக்கும். நாம் டெல்லியில் அமைதியாக தமிழ்நாட்டின் தொகுதி மறுவரையறை செய்துவிடலாம் என்று மட்டும் நினைக்காதீர்கள். ஏனென்றால் இதை சொல்கிற நான் தமிழ்நாடு முதலமைச்சர் மட்டுமல்ல; திராவிட முன்னேற்றக் கழகம் என்னும் பேரியக்கத்தின் தலைவரும் கூட. நீங்கள் இதுவரை பார்க்காத தமிழ்நாட்டைப் பார்க்க வேண்டியிருக்கும். 50-கள், 60-களில் பார்த்த பழைய திமுகவை இந்தியா மீண்டும் பார்க்க வேண்டியிருக்கும்.இதை மிரட்டலாக நினைக்காதீர்கள். நாங்கள் உங்களை எச்சரிக்கிறேன். நீங்கள் இதை மிரட்டல் என்று நினைத்தாலும் எங்களுக்கு கவலையில்லை. தேர்தல், ஆட்சி அதிகாரம் எல்லாம் எங்களுக்கு இரண்டாம்பட்சம் தான். நாங்கள் சுயமரியாதைக்காரர்கள். எங்களுக்குக் கொள்கைளும், மாநில உரிமையும் தான் முக்கியம்.

தமிழ்நாட்டுக்குத் தவறிழைத்துவிட்டு, வழக்கம்போல் சும்மா கடந்துசெல்ல நினைத்தால், நடப்பதே வேறு. சட்ட மேதை அண்ணல் அம்பேத்கரின் பிறந்தநாளில், அவர் மேல் ஆணையாகச் சொல்கிறேன். தமிழ்நாடு பாதிக்கப்பட்டால், இந்தியாவையே திரும்பிப் பார்க்க வைத்துவிடுவோம். பிரதமர் மோடிக்கு தமிழ்நாட்டிலிருந்து விடுக்கப்படும் இறுதி எச்சரிக்கை இது.

தமிழ்நாடு போராடும்! தமிழ்நாடு வெல்லும்!” என்று ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

விசில் ஊதிக்கொண்டு சைக்கிளில் ரவுண்ட் அடித்த விஜய்.. தடுப்புகளை உடைத்துக்கொண்டு வந்த தொண்டர்கள் ..!

0

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் பிரசாரம் சூடு பிடித்துள்ளது. திமுக, அதிமுக, தவெக, நாம் தமிழர் கட்சி என 4 முனைப் போட்டி நிலவி வரும் நிலையில் அரசியல் கட்சி தலைவர்கள் தமிழகம் முழுவதும் தீவிர பிரசாரம் மேற்கொண்டு வருகிறார்கள். அந்த வகையில், முதல் முறையாக தேர்தல் களம் காணும் தவெக தலைவர் விஜய்யும் தனது கட்சி வேட்பாளர்களை ஆதரித்து தமிழகம் முழுவதும் ஒவ்வொரு மாவட்டமாக சென்று பிரசாரம் செய்து வருகிறார்.கன்னியாகுமரி மாவட்டத்தில் போட்டியிடும் த.வெ.க. வேட்பாளர்களை ஆதரித்து விஜய் இன்று பிற்பகல் பிரசாரம் செய்தார். இதற்காக விஜய் இன்று காலை 10.20 மணிக்கு சென்னை நீலாங்கரையில் உள்ள தனது இல்லத்தில் இருந்து காரில் புறப்பட்டார். காலை 11 மணியளவில் அவர் சென்னை விமான நிலையத்தை சென்றடைந்தார். பின்னர் அவர் அங்கிருந்து விமானம் மூலம் தூத்துக்குடி சென்றார். பகல் 12.30 மணியளவில் விஜய் தூத்துக்குடி விமான நிலையத்தில் இருந்து வெளியே வந்தார்.அங்கு அவரை பார்ப்பதற்காக ஏராளமான தொண்டர்கள் நின்று கொண்டிருந்தனர். அவர்களை பார்த்து விஜய் கையசைத்தார். அதன்பிறகு அங்கு நிறுத்தப்பட்டு இருந்த வேனில் ஏறி விஜய் சாலை மார்க்கமாக கன்னியாகுமரி சென்றார். தூத்துக்குடி விமான நிலையத்தில் இருந்து விஜய் வேனில் சென்ற போது வழி நெடுக ஏராளமான ஆண்களும் பெண்களும் திரண்டு நின்று உற்சாக கோஷம் எழுப்பி அவரை பார்த்து கையசைத்தனர். பதிலுக்கு விஜய்யும் வேனுக்குள் இருந்தபடியே அவர்களை பார்த்து கையசைத்தார்.

சைக்கிளில் ரவுண்டு அடித்த விஜய் கன்னியாகுமரி மகாதானபுரம் ரவுண்டானாவில், தமிழக வெற்றி கழக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் ஏராளமானோர் திரண்டு விஜய்க்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். மகாதானபுரம் ரவுண்டானா பகுதிக்கு வந்த விஜய், திடீரென சைக்கிளில் இறங்கி ரவுண்டானாவை சுற்றி சுற்றி வந்தார். விசில் அடித்துக்கொண்டே சைக்கிளில் சுற்றி விஜய் வாக்கு சேகரித்தார். அப்போது விஜய்யை பார்ப்பதற்காக தடுப்புகளை உடைத்துக்கொண்டு தவெக தொண்டர்கள் வந்ததால் பரபரப்பு உண்டானது.இதனால் விஜய்யை பார்க்க முண்டியடித்துக் கொண்டு அவரது ரசிகர்களை கட்டுப்படுத்த முடியாமல் விஜய்யின் பவுன்சர்கள் கடும் பாடுபட்டனர். ரவுண்டானாவில் இருந்து கன்னியாகுமரி ஜீரோ பாயிண்ட் வரை விஜய் ரோடுஷோவாக புறப்பட்டுள்ளார். விஜய்யின் வருகையால் கன்னியாகுமரியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்தை சந்தித்தனர்.

வாக்குறுதி அளித்த விஜய்
தொடர்ந்து குமரியில் பேசிய விஜய், “இடைத்தரகர்கள் இல்லாமல் அரசின் நலத்திட்டங்கள் மக்களுக்கு கொண்டு செல்லப்படும் என்றும், மாநிலத்தின் வளர்ச்சிக்கான யோசனைகளை நம் ஆட்சி அமைந்தால் பொதுமக்களும் முன் வைக்க முடியும் என்றும் கூறினார். மேலும் 10 ஆயிரம் அதிகாரப்பூர்வ கையெழுத்துடன் மனு அளிக்கப்பட்டால் அரசு பதில் அளிப்பது கட்டாயம் ஆக்கப்படும் எனவும், 5 லட்சம் பேர் கொடுத்தால் சட்டசபையில் ஒரு நாள் நேரம் ஒதுக்கி அது பற்றி விவாதிக்கப்படும் என்றும் விஜய் கூறினார்.

அதிமுகவும், திமுகவும் இரண்டும் ஒரே கட்சிகள் தான்- சீமான்…

0

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி சட்டமன்ற தொகுதியில் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கோமதியை ஆதரித்து நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆண்டிபட்டி பகுதியில் இன்று தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டார். பிரச்சாரத்தில் பேசிய அவர், “ஆண்டிபட்டி தொகுதியில் பல பிரச்சனைகள் உள்ளன. மேய்ச்சல் நிலங்களில் ஆடு, மாடு மேய்ச்சலுக்கு அனைத்து செல்ல வனத்துறை தடுக்கிறது; மேய்ச்சல் நிலம் எல்லாம் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது.
ஆண்டிபட்டி தொகுதியில் அதிமுக, திமுகவில் ஒரே வீட்டில் உள்ள அண்ணன் தம்பி வேட்பாளராக போட்டியிடுகிறார்கள், கடந்த தேர்தலில் தம்பி உதவி செய்து அண்ணன் வெற்றிபெறுவது, இந்த தேர்தலில் அண்ணன் உதவி செய்து தம்பி வெற்றி பெறுவது என தொடர்ந்து நடைபெறுகிறது. இது என்ன மாதிரியான அரசியல் என்று தெரியவில்லை. வாக்குக்கு காசு கொடுப்பதால் ஜனநாயகம் செத்து பணநாயகம் வென்றுள்ளது. பணநாயகத்தை வீழ்த்தி மாண்புமிகு ஜனநாயகத்தை உருவாக்க வேண்டும்.கடலில் தனது அப்பாவின் பேனாவை வைப்பேன் என ஸ்டாலின் சொன்னபோது, அதை தடுத்து நிறுத்தியது இந்த சீமான் மட்டுமே. மக்களுக்கு பிரச்சனை தந்தவர்கள் ஒரு பக்கம். பிரச்சனையை தீர்ப்பவர்கள் நாங்கள் ஒரு பக்கம், எங்கள் இருவருக்கும் இடையே தான் போட்டி. நான் ஏசி பஸ் தருகிறேன். அதில் காசு கொடுத்து போங்கள், இலவசங்களை நோக்கி சென்று உங்கள் தன்மானங்களை இழக்காதீர்கள். நிலம், வளம் சார்ந்த தொழிற்சாலைகளை தொடங்குவேன், நாட்டு கோழி வளர்ப்பேன், ஆடு, கோழி வளர்ப்பேன். அதில் இருந்து ஆண்டிபட்டி தொகுதி மக்களுக்கு வேலைவாய்ப்பு கொடுப்பேன். நான் உங்களை ஏமாற்ற வேண்டும் என்று நினைத்து இருந்தால் அவர்கள் 10 ஆயிரம் ரூபாய் கொடுக்கும் போது நான் 20 ஆயிரம் கொடுப்பேன் என சொல்லி இருக்க மாட்டேனா? வீட்டிற்கு ஹெலிகாப்டர், 1 கிலோ தங்கம் தருவேன் என சொல்ல முடியாதா? எத்தனை காலத்திற்கு இரட்டை இலைக்கும், உதயசூரியனுக்கும் ஓட்டு போடுவீர்கள். இரண்டு கட்சிகளும் மீண்டும் வந்தால் டாஸ்மாக் மூடப்படுமா, கொலை கொள்ளை நடக்காமல் இருக்குமா?மலைகளை சுரண்டும் இந்த குவாரி உரிமையாளர்களை ஒரு நாள் மரத்தில் கட்டி வைத்து பச்சை மரத்தால் வெளுத்து எடுப்பேன். கனிம வளங்களை கணக்கு இல்லாமல் வெட்டி எடுத்துக்கொள்ள அனுமதி கொடுத்தது திமுகவும், அதிமுகவும் தான். பொதுமக்கள் வாக்கு செலுத்தும் போது சிந்தித்து வாக்கு செலுத்துங்கள். அதிமுகவும், திமுகவும் இரண்டும் ஒரே கட்சிகள் தான். அதிமுகவில் இருந்து எத்தனை அமைச்சர்கள் திமுகவில் சென்றுள்ளார்கள்? இந்த தொகுதியில் கூட ஒரே வீட்டில் உள்ள அண்ணன், தம்பி இரண்டும் கட்சிகளிலும் வேட்பாளராக போட்டியிடுகிறார்கள். இரட்டை இலைக்கும், உதயசூரியனுக்கு வாக்களித்து அவர்கள் வென்றார்கள், எம்எல்ஏ ஆனார்கள், அமைச்சர்கள் ஆனார்கள், ஆனால் நீங்கள் தோற்று போனீர்கள், எனவே இந்த முறை எங்களுக்கு வாக்களித்து நீங்கள் வெல்லுங்கள்” என்றார்.

‘பூத் சிலிப்’ விநியோகிக்கும் பணி தொடக்கம்…

0

தமிழக அரசின் பதவிக்காலம் மே மாதம் நிறைவடையவுள்ளதை அடுத்து, தமிழக சட்டமன்ற பொதுத் தேர்தல் ஒரே கட்டமாக வரும் 23ஆம் தேதி நடைபெற உள்ளது. மே 4 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என்றும் இந்தியத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் மார்ச் 30 ஆம் தேதி முதல் ஏப்ரல் 6 ஆம் தேதி வரை தங்களது வேட்புமனுக்களை தாக்கல் செய்தனர். வேட்பு மனுக்கள் பரிசீலனை மற்றும் வாபஸை அடுத்து, ஏப்ரல் 9-ம் தேதி இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியானது. அதன்படி, தமிழ்நாடு முழுவதும் 4,023 வேட்பாளர்கள் தேர்தல் களத்தில் உள்ளனர்.

இந்த நிலையில், தமிழ்நாடு முழுவதும் பூத் சிலிப் விநியோகம் செய்யும் பணி இன்று (ஏப்ரல் 12) முதல் தொடங்கியுள்ளது. சென்னையைப் பொறுத்தவரை, 16 சட்டமன்றத் தொகுதிகளில் உள்ள 28,93,505 வாக்காளர்களுக்கு இன்று முதல் ஏப்.18 ஆம் தேதி வரை வாக்காளர் தகவல் சீட்டு, அந்தந்த பகுதியில் உள்ள வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் (BLO) மூலமாக விநியோகம் செய்யப்படவுள்ளது.

வாக்காளர்களுக்கு கொடுக்கப்படும் பூத் சிலிப்பிற்கு ஒப்புதலான அவர்களின் கையெழுத்து அல்லது கைரேகை பெறப்பட்டு வருகிறது. வாக்காளர்களின் வசதியை அதிகரிக்கும் நோக்கில், வாக்காளர் தகவல் சீட்டு வடிவமைப்பில் மாற்றம் செய்யப்பட்டு, வாக்காளரின் வரிசை எண், பகுதி எண் ஆகியவை சீட்டின் மேல் வலது மூலையில் பெரிய எழுத்துருவில் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளன.வாக்காளர்கள் தங்கள் வாக்குச்சாவடியை எளிதில் அடையாளம் காணும் வகையிலும், வாக்குப்பதிவு அலுவலர்கள் வாக்காளர் பெயரை வாக்காளர் பட்டியலில் விரைவாக கண்டறியவும் வகையிலும் இந்த மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இத்துடன் இதில் கியூ-ஆர் குறியீடும் இடம்பெற்றுள்ளது.

வரும் 17ஆம் தேதிக்கு முன்பாக, அனைத்து வாக்காளர்களுக்கும் பூத் சிலிப்பை விநியோகித்து முடிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஆனால், இந்த பூத் சிலிப்பை வாக்களிப்பதற்கான அடையாள ஆவணமாக பயன்படுத்த முடியாது. பதிலாக, வாக்காளர் அடையாள அட்டை, ஆதார் உள்ளிட்ட தேர்தல் ஆணையம் குறிப்பிட்டுள்ள 12 ஆவணங்களை மட்டுமே பயன்படுத்த முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இந்திய தேர்தல் ஆணையம் மக்கள் பிரதிநிதித்துவ சட்டம், 1951ன் பிரிவு 135-8-ன் படி, தேர்தல் நடைபெறும் நாளில் வாக்காளர்களாக பதிவு செய்துள்ள அனைத்து பணியாளர்களுக்கும் ஊதியத்துடன் கூடிய விடுமுறை வழங்கப்பட வேண்டும் என சென்னை மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் உத்தரவிட்டுள்ளார்.மேலும், வாக்குப்பதிவு சதவீதத்தை அதிகரிப்பதற்கான விழிப்புணர்வு நடவடிக்கையும் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. அதுமட்டுமின்றி, புதிய வாக்காளர்களுக்கு புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டையும் வழங்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் மீண்டும் அதிமுக ஆட்சி- வேட்பு மனு தாக்களின் போது எடப்பாடி பழனிசாமி நம்பிக்கை..

0

அதிமுக பொதுச் செயலாளரும், தமிழ்நாடு சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி கே.பழனிசாமி, சேலம் மாவட்டம், எடப்பாடி சட்டமன்ற தொகுதியில் உள்ள வட்டாட்சியர் அலுவலகத்தில், தேர்தல் நடத்தும் அதிகாரியிடம் இன்று தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், “2026 சட்டமன்றத் தேர்தலில் அதிமுக மற்றும் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. தமிழகத்தில் மொத்தமுள்ள 234 தொகுதிகளில் 210 தொகுதிகளில் எங்கள் கூட்டணி நிச்சயம் வெற்றிப் பெறும். அதிமுக பெரும்பான்மையான இடங்களில் வென்று ஆட்சி அமைக்கும்” என்று நம்பிக்கை தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர், எடப்பாடி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் பல்வேறு திட்டங்களை நிறைவேற்றி இருக்கிறோம். தமிழ்நாட்டின் முன்மாதிரி தொகுதியாக எடப்பாடியை மீண்டும் மாற்றிடும் வகையில் பணிகளை மேற்கொள்வோம் என்றார்.மேட்டூர் உபரி நீரை 100 ஏரிகளில் நிரப்பும் திட்டத்தை திமுக அரசு அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக புறக்கணித்து வருகிறது என்று குற்றம்சாட்டிய ஈபிஎஸ், அதிமுக ஆட்சி அமைந்ததும் அந்தத் திட்டம் முழுமையாக நிறைவேற்றப்படும் என்று சூளுரைத்தார். மேலும் தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து தொகுதிகளிலும் அதிமுக ஆட்சி காலத்தில் செயல்படுத்தப்பட்ட திட்டங்களை மீண்டும் செயல்படுத்துவோம் என்றும் உறுதியளித்தார். ஆ ராசா ஆடியோ இணையதளங்களில் வெளியானது. அதைத்தான் நான் கிருஷ்ணகிரி கூட்டத்தில் பேசினேன் என்று கூறிய எடப்பாடி பழனிசாமி, அதில் கூறப்பட்டுள்ள விஷயங்கள் குறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்காமல் திமுக தலைமை என் மீது பாய்வதால் என்ன பலன்? என்றும் கேள்வி எழுப்பினார். திமுக ஊழல் பட்டியலை ஆளுநரிடம் வழங்கி உள்ளோம் என்று கூறிய பழனிசாமி, திமுக அமைச்சர்கள் ஊழல் குறித்து அமலாக்கத் துறையே சட்டம் – ஒழுங்கு டிஜிபி வசம் மூன்று முறை அறிக்கை அளித்துள்ளது. ஆனால் அந்த அறிக்கையின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்யப்படவில்லை. அதனால் தான் நீதிமன்றம் சென்றோம். நீதிமன்றம் உத்தரவிட்ட பின்பும் சம்பந்தப்பட்ட அமைச்சர்கள் மீது வழக்குப்பதிவு செய்வதில் காலதாமதம் ஆகிறது. அதிமுக ஆட்சி அமைந்ததும் இந்த விவகாரத்தில் சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தார்.
அதிமுக தமிழ்நாட்டின் பிரதான எதிர்க்கட்சி; மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்ற கட்சி; மீண்டும் ஆட்சிக்கு வர வேண்டும் என்று மக்கள் விரும்பும் கட்சி. அதனால் மீண்டும் அதிமுக ஆட்சி அமையும் என்று எடப்பாடி பழனிசாமி நம்பிக்கை தெரிவித்தார்.

முன்னதாக எடப்பாடி பகுதியில் அதிமுக தேர்தல் பணிமனையை அவர் திறந்து வைத்தார்.

கோவை வடக்கு தொகுதியில் ராஜஸ்தான் முதல்வர், அண்ணாமலை முன்னிலையில்  வானதி சீனிவாசன் வேட்பு மனுத் தாக்கல் !!!

0

தேசிய ஜனநாயக கூட்டணியின் கட்சியினர் – மேளதாளங்கள் முழங்க, ஆதரவாளர்கள் படைசூழ வேட்பு மனு தாக்கல் செய்தார் வானதி சீனிவாசன் !!!

கோவை வடக்கு சட்டமன்றத் தொகுதியில் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் சார்பில் போட்டியிடும் பா.ஜ.க வேட்பாளரும், தேசிய மகளிர் அணித் தலைவியுமான வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ., இன்று தனது வேட்பு மனுவை அதிகாரப் பூர்வமாகத் தாக்கல் செய்தார்.

இந்த நிகழ்வு, பா.ஜ.க மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளின் பலத்தை வெளிப்படுத்தும் ஒரு பிரம்மாண்ட நிகழ்வாக அமைந்தது.

இந்தத் தேர்தலில் பா.ஜ.க-வின் ராஜஸ்தான் மாநில முதலமைச்சர் பஜன் லால் சர்மா சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார். தமிழக பா.ஜ.க வின் முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை இந்த நிகழ்வில் பங்கேற்றது தொண்டர்கள் மத்தியில் பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியது.

வேட்புமனுத் தாக்கலுக்கு முன்னதாக, வடவள்ளி லாலி ரோடு அருகே தொடங்கிய இந்த பிரம்மாண்ட ஊர்வலம், வேளாண் பல்கலைக் கழகப் பகுதியைத் தாண்டிக் கோலாகலமாக மேளதாளங்கள் முழங்க, ஆயிரக்கணக்கான தொண்டர்கள் திரண்டு வந்து வானதி சீனிவாசனுக்குத் தங்களது ஆதரவை வெளிப்படுத்தினர்.

பின்னர் தடாகம் சாலையில் அமைந்து உள்ள வேளாண் பொறியியல் துறை அலுவலகத்தில், தேர்தல் நடத்தும் அலுவலர் வாணி லட்சுமி ஜெகதாம்பாளிடம் வானதி சீனிவாசன் தனது வேட்பு மனுவைச் சமர்ப்பித்தார்.

இந்த நிகழ்வில் அ.தி.மு.க சார்பில் வடவள்ளி சந்திரசேகர் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி தலைவர்கள், நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் உள்ளிட்ட கூட்டணிக் கட்சித் தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள் திரளாகக் கலந்து கொண்டு, கூட்டணியின் ஒற்றுமையை உணர்த்தினர்.