Thursday, June 25, 2026
Home Blog Page 18

கோவை – அவினாசி சாலை மேம்பாலத்திற்கு வீரப்பெரும்பாட்டன் தீரன் சின்னமலை பெயரைச் சூட்டுக!

0

பொது இடங்களுக்கு தேவர், தேவேந்திரர் பெயர்களை வைத்தால் சாதி கலவரம் வரும் வன்னியர், பறையர் பெயரை வைத்தால் சாதி கலவரம் வரும் என்று தவிர்க்கும் தமிழ்நாடு அரசு, நாயுடு என்ற சாதிப்பெயரை வைப்பது என்?” என்று சீமான் கேள்வி எழுப்பியுள்ளளார்.

நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தனது “X” வலைதள பக்கத்தில், “கோவையில் புதிதாக 1791 கோடி ரூபாயில் 10 கி.மீ தூரத்திற்குக் கட்டப்பட்டுள்ள தமிழ்நாட்டின் மிக நீண்ட கோவை – அவினாசி சாலை உயர்மட்ட மேம்பாலத்திற்கு ஜி.டி.நாயுடு பெயரை வைக்க தமிழ்நாடு அரசு முடிவெடுத்திருப்பதாக நேற்று தமிழ்நாடு முதலமைச்சர் அறிவித்திருக்கிறார்.

இந்தியாவில் மேம்பாலம் கட்ட சராசரியாக 1 கி.மீ.க்கு 18 கோடி ரூபாய் செலவிட்டுக்கொண்டிருக்கும் பொழுது அதே 1 கி.மீ.க்கு 170 கோடி ரூபாய் மக்கள் பணத்தில் செலவழித்து கட்டப்பட்டிருக்கும் இப்பாலத்திற்கு இந்த நாட்டின் விடுதலைக்காக வீரத்துடன் போர் புரிந்து இன்னுயிர் ஈந்தபாட்டன் தீரன் சின்னமலை அவர்களின் பெயரை வைத்திருக்கலாமே? அவ்வீரத்திருமகன் கழுத்திறுகி கசிந்து வெளியேறிய கடைசி மூச்சுக்காற்று அந்த மண்ணில் தானே உலாவிக்கொண்டு இருக்கிறது? நாங்கள் சுதந்திரமாக நடமாட வேண்டும் என்பதற்காகத்தானே பாட்டன் தீரன் சின்னமலை உயிர் நீத்தார். அவர் பாதம் பட்ட மண்ணில் கட்டப்பட்ட மேம்பாலத்திற்கு அவருடைய பெயரைச்சூட்டி நாங்கள் நடமாடக்கூடாதா?
விடுதலை போராட்டக்களத்தில் தலையில் தடியால் தாக்கப்பட்டு தன்னுயிர் நீத்த பின்பும் விடுதலைக்கொடியை வீழ்ந்துவிடாமல் காத்த பாட்டன் கொடி காத்த குமரன் அவர்களின் பெயரை வைத்திருக்கலாமே? மாடு கூட இழுக்கத் திணறுகிற செக்கை கோவை கொடுஞ்சிறையில் தாயக விடுதலைக்காக இழுத்து, தன் சொத்தை எல்லாம் இழந்து, இறுதியில் மண்ணெண்ணெய் விற்று மண்ணை விட்டு மறைந்த கப்பலோட்டிய தமிழர் பாட்டன் வ.உ.சிதம்பரனார் அவர்களின் பெயரை வைத்திருக்கலாமே? இந்தி திணிப்பை எதிர்த்து 1938இல் தொடங்கிய முதலாவது மொழிப் போரில் 03.06.1938ஆம் நாள் கைது செய்யப்பட்டு முதலாவது வீரராக சிறைக்களம் புகுந்த மொழிப்போர் மறவர் பல்லடம் பொன்னுசாமி அவர்களின் பெயரை வைத்திருக்கலாமே?உலகெங்கும் மேட்டிலிருந்து பள்ளத்தை நோக்கியே நீர் பாயும் என்ற இயல்புக்கு மாறாக, பள்ளத்திலிருந்தும் மேடான பகுதிக்கும் நீர் செல்லும் பாதையை உருவாக்க முடியும் என்பதைத் தம்முடைய நுண்ணறிவால் உணர்ந்து அறிவியல் வளர்ச்சியுறாத காலத்திலேயே பாம்பு வளைந்து நெளிந்து செல்வது போல் கால்வாய் வெட்டி காவிரியின் துணை ஆறுகளான பவானி ஆற்றையும், நொய்யல் ஆற்றையும் இணைத்து, உலகம் வியக்க கீழிலிருந்து மேலாக நீரைத் திருப்பி, வறண்டு கிடந்த கொங்கு மண்டலத்தைப் பொன் விளையும் பூமியாக, பயிர் செழித்து உயிர் செழிக்கும் தாய்நிலமாக மாற்றிய பெரும்பாட்டன் காலிங்கராயன் அவர்களின் பெயரை வைத்திருக்கலாமே?

கொங்கு நாட்டு மக்களால் அண்ணன்மார் சாமிகளாகப் போற்றி வணங்கப்பெறும் பண்பாட்டு நாயகர்களான பொன்னர் – சங்கர் அவர்களின் பெயரை வைத்திருக்கலாமே? உங்கள் தந்தையே அவர்களின் புகழ் வரலாற்றை பொன்னர் – சங்கர் திரைப்படமாக உருவாக்கினார்கள்தானே? அப்பெயரை வைத்திருக்கலாமே? இவர்களின் பெயரையெல்லாம் விடுத்து ஐயா ஜி.டி.நாயுடு பெயரை வைத்ததன் காரணமென்ன? ஜி.டி.நாயுடுவை இந்தியாவின் எடிசன் என்று எப்படி கூறுகிறீர்கள்? எடிசன் கண்டுபிடிப்புகள் உலகம் முழுவதும் பயன்பாட்டில் உள்ளது. ஜி.டி.நாயுடு கண்டுபிடிப்புகளில் அப்படி எதுவொன்று இன்றளவும் மக்கள் பயன்பாட்டில் உள்ளது? எதற்காக அவர் பெயரை வைத்துள்ளீர்கள்?ஜி.டி. என்பது உயிரெழுத்தா? மெய்யெழுத்தா? ஆங்கிலம் தானே?. எங்கும் தமிழ், எதிலும் தமிழ் என்று முழங்கியவர்கள் ஜி.டி. என்று ஆங்கில முன்னொட்டுக்களில் பெயர் சூட்டுவது ஏன்? இதுதான் தி.மு.க ஆட்சியாளர்கள் தமிழை வளர்க்கும் முறையா?

எதிலும் சாதிப்பெயர்கள் இருக்கக்கூடாது; எல்லாவற்றிலும் சாதியை ஒழித்துவிட்டோம் என்று பேசிய திராவிடத்திருவாளர்கள், பெயரின் பின்னால் சாதிப்பெயரை நீக்கிய திராவிட இயக்கம் என்று நூற்றாண்டு விழா கொண்டாடியவர்கள் ஜி.டி.நாயுடு என்ற சாதிப்பெயரைச் சூட்டுவது ஏன்? திராவிட இயக்கத்தின் பிதாமகர் பெரியாரின் உடனிருந்த உற்ற தோழரின் பெயரிலிருக்கும் சாதியையே ஒழிக்க முடியாதவர்கள் ஊரில் உள்ள சாதியை எப்படி ஒழிப்பீர்கள்? இதுதான் திராவிட இயக்கம் சாதியை ஒழித்த முறையா? சென்னையில் நந்தனம் சாலைக்கு முதலில் தெய்வத்திருமகன் முத்துராமலிங்கத்தேவர் சாலை என பெயர் வைத்துவிட்டு பிறகு அதை முத்துராமலிங்கனார் சாலை என்று மாற்றிய இவ்வரசு பாலத்திற்கு சாதியோடு பெயரை சூட்டுவது ஏன்?பொது இடங்களுக்கு தேவர், தேவேந்திரர் பெயர்களை வைத்தால் சாதி கலவரம் வரும்? வன்னியர், பறையர் பெயரை வைத்தால் சாதி கலவரம் வரும் என்று தவிர்க்கும் தமிழ்நாடு அரசு, நாயுடு என்ற சாதிப்பெயரை வைப்பது எப்படி? நாங்கள் வாண்டையார் என்றால் வரும் சாதி, நாங்கள் படையாட்சி என்றால் சாதி, நீங்கள் நாயுடு என்றால் மட்டும் வராதா? நாயுடு என்பது சாதிப்பெயர் அல்லாமல் பொதுப்பெயரா? தமிழர்கள் நாங்கள் படையாட்சி, கவுண்டர், வாண்டையார், தேவர் என்று பேசினால், உடனடியாக சாதிவெறி என்று கூச்சலிடும் திராவிடத் திருவாளர்கள், ஜி.டி. நாயுடு என்று பெயர் வைப்பதற்கு மட்டும் எந்த எதிர்ப்பும் தெரிவிக்காமல் அமைதி காப்பது ஏன்? இது சாதிவெறி அல்லாமல் சிரங்கு சொறியா? இதுதான் பகுத்தறிவு, முற்போக்கு பெரியார் உரி உரியென உரித்த வெங்காயங்களா? இன்னும் எத்தனை காலத்திற்கு தமிழர்களை இப்படி ஏமாற்றப்போகிறீர்கள்? ஊரில் உள்ள தமிழ் சாதியை எல்லாம் ஒழித்துவிட்டு தங்கள் சாதியை காப்பாற்றுவதுதான் திராவிடத்தின் சாதி ஒழிப்பா?

இன்று ஒரு பக்கம் சாதிப் பெயர்களை நீக்குதல் / மறுபெயரிடுதலுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை ஆணையாக வெளியிட்டுவிட்டு இன்னொரு பக்கம் சாதியோடு பாலத்திற்கு பெயரிடும் இரட்டை நிலைப்பாட்டுக்கு பெயர் தான் திராவிட மாடலா? கடந்த ஜூன் மாதம் தெருக்களுக்கு சாதிப்பெயரை நீக்க அரசாணை வெளியிட்டது திமுக அரசு. ஆதிதிராவிட நல விடுதி என்பதை சமூகநல விடுதி என்று வெறும் கட்டிடத்திற்குப் பெயர் மாற்றியதையே, சமூகநீதி சாதனைபோல் பேசிய திமுக அரசு, ஜி.டி.நாயுடு மேம்பாலம் என்று சாதிப்பெயரைச் சூட்டுவது அயோக்கியத்தனமல்லவா? தமிழர் மண்ணில் தமிழர்க்கென்று எந்த தனித்த அடையாளமும் இருக்கக்கூடாது என்ற தீய எண்ணத்தை தவிர வேறு என்ன நோக்கம் இருக்க முடியும்? இது தமிழ்ப்பேரினத்திற்கு இழைக்கப்பட்டுள்ள மிகப்பெரிய அவமதிப்பாகும்.

ஆகவே, கோவை – அவினாசி சாலை மேம்பாலத்திற்கு ஐயா ஜி.டி.நாயுடு பெயரை வைக்கும் முடிவை கைவிட்டு, தமிழர்களின் தனிப்பெரும் அடையாளங்களாக, கொங்கு மக்களின் பண்பாட்டுப் பெருமைகளாகத் திகழும் பாட்டன்கள் தீரன் சின்னமலை, கொடி காத்த குமரன், செக்கிழுத்த செம்மல் வ.உ.சிதம்பரனார், முதல் மொழிப்போர் வீரர் பல்லடம் பொன்னுசாமி, மாமன்னர் காலிங்கராயன், அண்ணன்மார் சாமிகளான பொன்னர் – சங்கர் ஆகியோரின் பெயர்களில் ஒன்றைச் சூட்ட வேண்டுமென வலியுறுத்துகிறேன்.” என்று அவர் தெரிவித்துள்ளார் .

தவெக நிர்வாகி மதியழகனை 2 நாள் காவலில் எடுத்தது எஸ்ஐடி

0

கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட, கரூர் மேற்கு மாவட்ட தவெக பொதுச் செயலாளர் மதியழகனை 2 நாள் காவலில் எடுத்தது சிறப்புப் புலனாய்வுக் குழு.

கரூர் மாவட்டம் வேலுசாமிபுரத்தில் செப்.27-ம் தேதி நடந்த தவெக பிரச்சாரக் கூட்டத்தில் நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். 100-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இது தொடர்பாக கரூர் நகர போலீஸார் கரூர் மேற்கு மாவட்ட செயலாளர் மதியழகன், பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த், மாநில இணை செயலாளர் நிர்மல் குமார் ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்யபட்டது. தொடர்ந்து மதியழகன் கைது செய்யப்பட்டார்.இந்நிலையில், ஐபிஎஸ் அதிகாரி அஸ்ரா கார்க் தலைமையில் அமைக்கப்பட்ட சிறப்பு புலனாய்வு குழு கரூர் ஜேஎம் 1 நீதிமன்றத்தில் மதியழகனை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரியது. இந்த வழக்கு இன்று நீதிபதி பரத்குமார் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.அப்போது, தவெக தரப்பில் ஏற்கெனவே போலீஸார் விசாரணை நடத்திவிட்டனர். அதனால் மீண்டும் காவலில் எடுத்து விசாரிக்கத் தேவையில்லை எனத் தெரிவிக்கப்பட்டது. மேலும், இந்த எஸ்ஐடி விசாரணையே தேவையில்லை என்று தவெக தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டது.

கோவையின் புதிய அடையாளம்: தமிழகத்தின் மிக நீளமான உயர்மட்ட மேம்பாலம் திறப்பு

0

கோவையின் புதிய அடையாளமாக மாறியுள்ள ஜி.டி.நாயுடு பெயரிடப்பட்டுள்ள தமிழ்நாட்டின் மிக நீளமான உயர்மட்ட மேம்பாலத்தை இன்று மக்கள் பயன்பாட்டுக்கு திறந்து வைக்கப்பட்டுள்ளது. தமிழக முதல்வர் ஸ்டாலின் இன்று இந்த மேம்பாலத்தை திறந்து வைத்தார். இதனால் கோவை நகரில் இருந்து விமான நிலையத்திற்கு செல்ல முன்பு 45 நிமிட பயணம் அமையும். ஆனால் இனி 10 நிமிடங்களாக குறையும் என்பதால் வாகன ஓட்டிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். தமிழகத்தில் அதிகரித்து வரும் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் உள்கட்டமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அந்த வகையில், கோவையில் அவினாசி சாலையில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் விதமாக உயர்மட்ட மேம்பாலம் அமைக்கும் பணிகள் தொடங்கப்பட்டது. கோவையில் அவினாசி சாலையில் கோல்டு வின்ஸ் முதல் உப்பிலிபாளையம் வரை 10.1 கிலோமீட்டர் நீளத்திற்கு இந்த பாலம் கட்டப்பட்டுள்ளது.

நாட்டிலேயே மிக நீளமான மேம்பாலமாக இது அமைந்துள்ளது. தமிழகத்தின் மிக நீளமான சாலை மேம்பாலமாக மதுரை நத்தம் மேம்பாலம் சுமார் 7.3 கிமீ தூரத்திற்கு உள்ள நிலையில், இது அதைவிட பெரியதாக 10.1 கிமீ தூரத்திற்கு அமைக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டிலேயே மிக நீளமான இந்த உயர்மட்ட மேம்பாலத்தை தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று திறந்து வைத்துள்ளார். இந்த பாலத்திற்கு ஜி.டி. நாயுடு பெயர் சூட்டப்பட்டுள்ளது. கோவையின் புதிய அடையாளமாக திகழும் கோவை அவினாசி ரோடு மேம்பாலத்தினை, முதல்வர் ஸ்டாலின் கோல்டு வின்ஸ் பகுதியில் திறந்து வைத்தார்.

இதனைத் தொடர்ந்து காரில் பயணித்தபடி மேம்பாலத்தை முதல்வர் ஸ்டாலின் பார்வையிட்டார். அப்போது அங்கிருந்த மக்களை பார்த்து முதல்வர் ஸ்டாலின் கையசைத்தார். தொடர்ந்து பொதுமக்கள் பயன்பாட்டுக்கு இந்த பாலம் அனுமதிக்கப்பட்டுள்ளது. பாலம் திறப்பு விழாவையொட்டி நேற்று இரவு மேம்பாலம் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு ஜொலித்தது.

4 வழித்தட உயர்மட்ட 8 வழித்தடங்களுடன் இந்த மேம்பாலம் கட்டப்பட்டுள்ளது. இந்த மேம்பாலம் பயன்பாட்டுக்கு வந்ததின் மூலம், நகரில் இருந்து விமான நிலையம் மட்டுமின்றி சேலம், ஈரோடு, திருப்பூர், அவினாசி ஆகிய பகுதிகளுக்கும் இனி விரைவாக செல்ல முடியும். தமிழ்நாட்டில் முதல் முறையாக, பாலத்தின் ஒவ்வொரு பகுதியிலும் மழை நீர் சேகரிப்பு அமைப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. பாதுகாப்பு சுவர்கள், ரோலர் தடுப்பு கருவிகள், உலக தரமான பாதுகாப்பு வசதிகள் மேம்பாலத்தில் செய்யப்பட்டுள்ளன. தற்போது கோவை நகரில் இருந்து விமான நிலையம் செல்ல சுமார் 10 கிமீ தூரத்தை கடக்க குறைந்தது 45 நிமிடங்கள் ஆகிறது. ஆனால் இந்த பாலம் பயன்பாட்டுக்கு வந்ததால், 10 நிமிடங்களில் செல்ல முடியும். விமான நிலையம், கொடிசியா, ஹோப் காலேஜ், நவ இந்தியா, லட்சுமி மில்ஸ், அண்ணா சிலை மற்றும் உப்பிலிபாளையம் ஆகிய சந்திப்புகளில் ஏற்பட்டு வந்த போக்குவரத்து நெரிசல் குறிப்பிடத்தக்க அளவில் குறைந்துள்ளது.
தற்போது பொதுமக்களின் வாகனங்கள் போக்குவரத்துக்கு அனுமதிக்கப்படுகிறது. திறப்பு விழாவையொட்டி மேம்பாலம் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.

கோவையில் நாளை போக்குவரத்து மாற்றம்…

0

தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் கோவை அவினாசி ரோடு புதிய மேம்பாலம் திறப்பு மற்றும் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க நாளை கோவை வர இருப்பதால் மாநகரில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக காவல் துறை தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

நீலாம்பூர் பைபாஸ் வழியாக நகருக்குள் வரும் வாகனங்கள்

(i) பேருந்து மற்றும் கனரக வாகனங்கள்

நீலாம்பூர் ஏர்போர்ட் வழியாக சேலம், ஈரோடு, திருப்பூர் மற்றும் ஆம்னி பேருந்துகள் மற்றும் கனரக வாகனங்கள் நீலாம்பூரிலிருந்து நகருக்குள் வருவதற்கு தடை செய்யப்படுகிறது.

மாறாக நீலாம்பூரிலிருந்து L&T பைபாஸ் வழியாக சிந்தாமணிபுதூர், ஒண்டிப்புதூர், சிங்காநல்லூர், இராமநாதபுரம், சுங்கம் வந்து வலது புறம் திரும்பி KR ரோடு, அவினாசி சாலை, அண்ணா சிலை வழியாக காந்திபுரம் வந்தடையலாம்.

(ii) இலரகு வாகனங்கள்

நீலாம்பூரிலிருந்து ஏர்போர்ட் வழியாக நகருக்குள் வரும் இலரகு வாகனங்கள் தொட்டிபாளையம் பிரிவில் வலது புறம் திரும்பி தொட்டிபாளையம், காளப்பட்டி நால்ரோடு, விளாங்குறிச்சி வழியாக நகருக்குள் வரலாம்.

நகருக்குள் இருந்து ஏர்போர்ட் வழியாக அவினாசி ரோடு செல்லும் வாகனங்கள்

(i) பேருந்துகள் மற்றும் கனரக வாகனங்கள்

காந்திபுரம் பேருந்து நிலையத்திலிருந்து அவினாசி ரோடு, ஏர்போர்ட் வழியாக நகருக்கு வெளியே செல்லும் பேருந்துகள் மற்றும் கனரக வாகனங்கள் லட்சுமி மில்லில் யு டர்ன் செய்து புளியகுளம், இராமநாதபுரம், சிங்காநல்லூர், L&T பைபாஸ் வழியாக வெளியே செல்லலாம்.

காந்திபுரத்திலிருந்து சத்தி சாலை வழியாக கணபதி, வாட்டர் டேங்க், விளாங்குறிச்சி, காளப்பட்டி நால் ரோடு வழியாக L&T பைபாஸ் சென்று அடையலாம்.

(ii) இலரகு வாகனங்கள் மற்றும் நகர பேருந்துகள்

நகருக்குள் இருந்து அவினாசி ரோடு, ஏர்போர்ட் வழியாக செல்லும் இலரகு வாகனங்கள் மற்றும் நகர பேருந்துகள் டைட்டல் பார்க் வரை சென்று யு டர்ன் செய்து காமராஜர் ரோடு, சிங்காநல்லூர் வழியாக செல்ல வேண்டும்.

விளாங்குறிச்சி, தண்ணீர் பந்தல், காந்தி மாநகர், கொடீசியா வழியாக செல்லும் கனரக வாகனங்கள் கொடீசியா வழியாக செல்வதற்கு தடை செய்யப்படுகிறது. அதற்கு மாறாக காளப்பட்டி நால் ரோடு, தென்னம்பாளையம் வழியாக செல்ல அறிவுறுத்தப்படுகிறது. மேலும் தண்ணீர் பந்தலில் இருந்து கொடீசியா வழியாக செல்லும் இலரகு வாகனங்கள் காந்தி மாநகர், பயனீயர் மில் வழியாக அவினாசி ரோட்டை அடைந்து செல்ல வேண்டிய இடங்களுக்கு செல்லலாம்.

(i)உக்கடத்திலிருந்து ஆத்துப்பாலம், சுந்தராபுரம் வழியாக பொள்ளாச்சி செல்லும் பேருந்துகள், கனரக வாகனங்கள் மற்றும் இலகு ரக வாகனங்கள் அனைத்தும் குறிச்சி பிரிவில் இடது புறம் திரும்பி போத்தனூர் கடை வீதி, இரயில் கல்யாண மண்டபம், செட்டிபாளையம் ரோடு வழியாக ஈச்சனாரி அடைந்து சர்வீஸ் சாலை வழியாக செல்லலாம்.

(ii) பொள்ளாச்சி சாலை வழியாக நகருக்குள் வரும் பேருந்துகள், கனரக வாகனங்கள் மற்றும் இலகுரக வாகனங்கள் அனைத்தும் கற்பகம் காலேஜ் சந்திப்பிலிருந்து மேம்பாலத்தின் மேல் வராமல் சர்வீஸ் சாலையில் வந்து ஈச்சனாரி கோயில் முன்பு யு டர்ன் செய்து, செட்டிபாளையம் ரோடு, இரயில் கல்யாண மண்டபம், போத்தனூர், நஞ்சுண்டாபுரம் ரோடு, இராமநாதபுரம் வழியாக நகருக்குள் வரலாம்.

(iii) மதுக்கரை மார்க்கெட்டிலிருந்து வரும் பேருந்துகள் மற்றும் கனரக வாகனங்கள் பிள்ளையார்புரம் செக் போஸ்ட், சுகுனாபுரம் வழியாக கோவைப்புதூர் பிரிவு, குனியமுத்தூர், புட்டு விக்கி வழியாக நகருக்குள் வரலாம்.

(iv) மதுக்கரை மார்க்கெட்டிலிருந்து வரும் இலகுரக வாகனங்கள் மாச்சாம்பாளையம் பிரிவிலிருந்து இடது புறம் திரும்பி ஞானபுரம், பாலக்காடு ரோடு வழியாக செல்ல வேண்டிய இடங்களுக்கு செல்லலாம்.

தமிழகத்தில் மிக நீளமான பாலம் கோவையில் நாளை திறப்பு..

0

கோவை மாவட்டம், அவிநாசி சாலையில் நாளுக்கு நாள் வாகனப் போக்குவரத்து நெரிசல் அதிகமாகி வருகின்றது. இதனால், பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் மிகுந்த அவதி அடைந்து வந்தனர். எனவே, இந்த போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காணும் வகையில், அந்தப் பகுதியில் மேம்பாலம் கட்டப்பட வேண்டும் கோரிக்கை எழுந்து வந்தது. இந்தப் பாலமானது உப்பிலிபாளையம் முதல் கோல்ட் வின்ஸ் வரை சுமார் 10 கிலோ மீட்டர் தொலைவுக்கு கட்டப்பட்டுள்ளது. இந்த பாலம் 4 வழிச் சாலையாக இருக்கும். இந்த பாலமானது தமிழ்நாட்டின் முதல் நீண்ட தொலைவுடைய மேம்பாலம் ஆகும். இந்த மேம்பாலத்தில் விளக்குகள் பொருத்தும் பணி உள்ளிட்டவை முடிக்கப்பட்டுள்ளது. அண்மையில் வாகனங்களை இயக்கி சோதனை ஓட்டம் மேற்கொள்ளப்பட்டது. கோவை அவிநாசி சாலையில் நிலவும் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க, நெடுஞ்சாலைத் துறையின் சார்பில், ரூ.1,791.23 கோடி மதிப்பில், உப்பிலிபாளையம் முதல் கோல்டுவின்ஸ் வரை 10.10 கிலோ மீட்டர் தூரத்துக்கு உயர்மட்டப் பாலம் கட்ட முடிவு செய்யப்பட்டு, கடந்த 2020-ம் ஆண்டு டிசம்பர் மாதம் திட்டப்பணி தொடங்கப்பட்டது. தற்போது பணிகள் முடிக்கப்பட்டு, இந்த மேம்பாலத்தை பொதுமக்கள் பயன்பாட்டுக்காக முதல்வர் ஸ்டாலின் நாளை (அக்.9ம் )தேதி திறந்து வைக்கிறார்.

இந்த மேம்பாலத்தில் உள்ள சிறப்புகள் குறித்து மாநில நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் கூறியது, இந்த பாலத்தின் மொத்த தூரம் 10.10 கிலோ மீட்டர். ஓடுதள அகலம் 17.25 மீட்டர். 304 தூண்கள் அமைக்கப்பட்டுள்ளன. அவிநாசி சாலையில், 4 வழித்தட உயர்மட்டப் பாலம், 6 வழித்தடத்துடன் விரிவுபடுத்தப்பட்ட தரைத்தளச் சாலை என மொத்தம் 10 வழித்தடங்களுடன் 10.10 கிலோ மீட்டர் தூரத்துக்கு, தென்னிந்தியாவிலேயே மிக நீளமான உயர்மட்ட பாலமாக இது உள்ளது.
உப்பிலிபாளையம் – கோல்டுவின்ஸ் வழித்தடத்தில் அண்ணாசிலை, பீளமேடு ஆகிய இடங்களில் ஏறுதளங்களும், ஹோப்காலேஜ், விமான நிலையம் ஆகிய இடங்களில் இறங்குதளமும் அமைக்கப்படுகிறது. கோல்டுவின்ஸ் – உப்பிலிபாளையம் வழித்தடத்தில் விமான நிலையம், ஹோப் காலேஜ் ஆகிய இடங்களில் ஏறுதளங்களும், பீளமேடு, அண்ணாசிலை ஆகிய இடங்களில் இறங்குதளமும் அமைக்கப்படுகிறது.விமான நிலைய ஏறுதளம் 577 மீட்டர், விமான நிலைய இறங்குதளம் 567 மீட்டர், ஹோப்காலேஜ் ஏறுதளம் 483 மீட்டர், இறங்குதளம் 527 மீட்டர், நவ இந்தியா ஏறுதளம் 561 மீட்டர், இறங்குதளம் 551 மீட்டர், அண்ணாசிலை ஏறுதளம் 411 மீட்டர், இறங்குதளம் 391 மீட்டர் தூரம் கொண்டதாகும். இதில் அண்ணாசிலை ஏறுதளம் மட்டும் நீதிமன்ற வழக்கின் காரணமாக நிலுவையில் உள்ளது.அணுகு சாலையாக கோல்டுவின்ஸ் அருகே 183 மீட்டரும், உப்பிலிபாளையம் அருகே 267 மீட்டரும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதில் ஹோப்காலேஜ் சந்திப்பில் ரயில்வே மேம்பாலம் உள்ளது. அதன் மீது 52 மீட்டர் தூர நீளத்து 8 இரும்பு கார்டர் பொருத்தப்பட்டுள்ளது. இது 725 டன் எடை கொண்ட தாகும். தூண்களில் முதலில் கட்டப்பட்டன. இரு தூண்களுக்கு இடையே அமைக்கப்படும் ஓடுதளம் காரிடர், தென்னம் பாளையத்தில் உள்ள தனியிடத்தில் தயாரித்து இங்கு கொண்டு வந்து பொருத்தப்பட்டது.
20-க்கும் மேற்பட்ட இடங்களில் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. வாகனங்கள் செல்லும்போது அதிர்வு மற்றும் சத்தம் கேட்பதை தவிர்க்க, புதிய தொழில் நுட்பங்களுடன் ‘சைனஸ் பிளேட்’ பொருத்தப்பட்டுள்ளது. கோவை நகரில் இருந்து விமான நிலையம் செல்லும் நேரம் 45 நிமிடத்திலிருந்து வெறும் 10 நிமிடமாக குறைகிறது. கோவை நகரிலிருந்து சேலம், ஈரோடு, திருப்பூர், அவிநாசி செல்வதற்கு முன்பு 10 சிக்னல் சந்திப்புகளை கடந்து செல்ல வேண்டியிருந்தது. தற்போது இந்த மேம்பாலம் மூலம் அந்த பயண நேரம் குறைக்கப்பட்டுள்ளது” என்று அவர்கள் கூறினர். இதனிடையே, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், ‘2020-ல் அறிவிக்கப்பட்டு, 2021 மே மாதம் வரையில் 5% பணிகள் மட்டுமே நடைபெற்றிருந்த அவிநாசி சாலை மேம்பாலம், நமது திராவிட மாடல் அரசு பொறுப்பேற்று, ரூ.1,791 கோடி செலவில் 10.10 கி.மீ நீளமுள்ள இந்தப் பாலத்தின் மீதமிருந்த 95% பணிகளையும் விரைந்து முடிக்கப்பட்டுள்ளது என தெரிவித்தார்.

மக்களை சந்திக்க அனுமதி கோரி தவெக தலைவர் விஜய்

0

கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் இல்லங்களுக்கு நேரில் சென்று பாதிக்கப்பட்ட மக்களை சந்திக்க அனுமதி கோரி தவெக தலைவர் விஜய் சார்பில் டிஜிபி அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டுள்ளது.

2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு தமிழகத்தின் அனைத்து கட்சிகளும் பரப்புரைகளில் ஈடுபட்டு வருகின்றன. இந்நிலையில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய்யும் வாரந்தோறும் சனிக்கிழமைகளில் பொதுமக்களை சந்தித்து பரப்புரை மேற்கொள்வதாக அறிவித்தார். அதன்படி, கடந்த செப்டம்பர் 27 ஆம் தேதி கரூர் வேலுச்சாமிபுரத்தில் பரப்புரை மேற்கொண்ட போது அங்கு ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், அன்றிரவே முதலமைச்சர் மு.க ஸ்டாலினும் , திமுக அமைச்சர்களும் கரூருக்கு சென்று பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தனர்.
அவர்களைத் தொடர்ந்து, பிற கட்சிகளை சேர்ந்த அரசியல் தலைவர்களும் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சென்று சந்தித்தனர். இருப்பினும், சம்பவத்தன்று இரவே சென்னைக்கு திரும்பிய தவெக தலைவர் விஜய், அடுத்த சில நாட்களில் கரூருக்கு சென்று பாதிக்கப்பட்டவர்களை சந்திப்பார் என எதிர்பார்க்கப்பட்டது.இருப்பினும், ஓரிரு நாட்களுக்கு பிறகு இந்த சம்பவம் குறித்து வீடியோ ஒன்றை வெளியிட்டார் விஜய். அவர் நேரில் செல்லாதது குறித்தும், அந்த வீடியோவில் பேசிய கருத்துக்களும் சர்ச்சையை கிளப்பிய நிலையில், விஜய்யின் செயலுக்கு பலரும் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இதனிடையே பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை வீடியோ காலில் தொடர்பு கொண்டு நேற்று ஆறுதல் தெரிவித்த விஜய், விரைவில் நேரில் சந்திக்க வருவதாகவும் அவர்களுக்கு உறுதியளித்ததாக சொல்லப்பட்டது. இந்நிலையில், தமிழக வெற்றிக் கழக வழக்கறிஞர் அறிவழகன், தவெக தலைவர் விஜய் கரூருக்கு சென்று, உயிரிழந்தவர்களின் குடும்பங்களை சந்திக்க அனுமதி அளிக்குமாறு டிஜிபி அலுவலகத்தில் இன்று மனு அளித்துள்ளார். அந்த மனுவில், கரூர் மாவட்ட ஆட்சித் தலைவரும், மாவட்ட காவல் கண்காணிப்பாளரும் எந்த தேதியில் அனுமதி கொடுத்தாலும் அன்று தவெக தலைவர் விஜய் கரூருக்கு நேரில் செல்வார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த வழக்கறிஞர் அறிவழகன், “கரூர் விவகாரத்தில் பாதிக்கப்பட்டவர்களை விஜய் நேரில் சந்திக்க அனுமதி கேட்டு டிஜிபி அலுவலகத்தில் மனு அளித்துள்ளோம்” என தெரிவித்தார்.

மனுவிற்கு டிஜிபி அலுவலகத்தில் என்ன பதில் கொடுக்கப்பட்டது? விஜய் எப்போது செல்கிறார்? போன்ற பத்திரிகையாளர்களின் கேள்விகளுக்கு விஜய்யின் வழக்கறிஞர் அறிவழகன் பதிலளிக்க மறுத்து அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.

கோவையில் லஞ்சம் வாங்கிய 3 வனக்காவலர்கள் கையும் களவுமாக சிக்கினர்..!

0

கோவையில் தமிழக- கேரள எல்லை வன சோதனை சாவடிகளில் லஞ்சம் பெற்ற மூன்று வனக்காவலர்களை லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் கையும் களவுமாக பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஆனைகட்டி சாலையில் கேரள எல்லையில் கோவை வனகோட்டம் பெரியநாயக்கன்பாளையம் வனசரகத்திற்கு உட்பட மாங்கரை மற்றும் ஆனைகட்டி ஆகிய இரண்டு பகுதிகளிலும் வன சோதனை சாவடிகள் உள்ளன.

நாள்தோறும் நூற்றுக்கணக்கான வாகனங்கள் இந்த சோதனைச் சாவடியை கடந்து செல்கின்றன. குறிப்பாக இந்த வழியே கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் கோட்டைத்துரை, மன்னார்காடு, அகழி, சோலையூர் ஆகிய இடங்களுக்கும் அதிகபடியான வாகனங்கள் செல்கின்றன.கனரக வாகனங்களிலும் பொருட்கள் எடுத்து செல்லப்படுகின்றன. அப்போது இரண்டு சோதனை சாவடிகளிலும் சோதனை மேற்கொள்ளப்படும்.மதுக்கரை பகுதியைச் சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி என்பவர் கேரள மாநிலத்தில் தோட்டம் வைத்துள்ளார். தோட்டத்திற்கு உரங்களுக்கான கோழி எருவுகளை பல்லடத்தில் இருந்து லாரி மூலம் 27ம் தேதி அனுப்பி வைத்துள்ளார்.அப்போது இரண்டு சோதனை சாவடிகளிலும் லாரி ஓட்டுநரிடம் லஞ்சம் வாங்கியதாக கூறப்படுகிறது. மாங்கரை சோதனை சாவடியில் இருந்த வனக்காப்பாளர் செல்வகுமார் ஆயிரம் ரூபாயில் லஞ்சமும் அதேபோல் ஆனைகட்டி வனசோதனை சாவடியிலும் வனக்காவலர் சுப்ரமணியம் என்பவர் ஆயிரம் ரூபாய் லஞ்சமும் பெற்றுள்ளனர்.

இது குறித்து லாரி ஓட்டுநர் உரிமையாளர் கிருஷ்ணமூர்த்தியிடம் ஆதாரத்துடன் தெரிவித்துள்ளார். தொடர்ந்து கிருஷ்ணமூர்த்தி லஞ்ச ஒழிப்புத்துறை போலிசாரிடம் அந்த ஆதாரத்துடன் புகார் கொடுத்துள்ளார்.அதனைத் தொடர்ந்து இன்று அதிகாலையும் உரங்களுக்கான கோழி எருவுகளை எடுத்து செல்வதாகவும் அப்பொழுதும் சோதனை சாவடிகளில் லஞ்சம் பெறுவார்கள் என்று கிருஷ்ணமூர்த்தி லஞ்ச ஒழிப்பு துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்துள்ளார்.தகவலை அடுத்து லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளை அவரிடம் கொடுத்துவிட்டு இரண்டு சோதனை சாவடிகளிலும் சாதாரண உடையில் இருந்துள்ளனர்.

அப்பொழுது மாங்கரை சோதனைச் சாவடியில் வன காவலர் செல்வகுமார் ரசாயனம் தடவிய ஆயிரம் ரூபாய் நோட்டுகளை லஞ்சமாக பெறும்பொழுது அங்கிருந்த லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் அவரை கையும் களவுமாக பிடித்தனர்.
அதேபோன்று ஆனைகட்டி சோதனை சாவடியிலும் வனகாவலர் சதீஷ்குமார் என்பவர் லஞ்சம் பெறும் பொழுது லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கையும் களவுமாக பிடித்தனர்.அதே சமயம் சுப்பிரமணியம் அங்கு வந்த பொழுது லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் அவரையும் பிடித்தனர்.

இதனை அடுத்து மூவரிடம் தற்பொழுது விசாரணை நடைபெற்று வருகிறது. கோவை மாவட்ட ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு துறை காவல் ஆய்வாளர்கள் பிரபுதாஸ், அறுமுகம் மற்றும் ஏடிஎஸ்பி ராஜேஷ் தலைமையில் 12 பேர் இரண்டு குழுக்களாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

தமிழக மீனவர்கள் மீது நாட்டு வெடிகுண்டு வீசி கொடூரத் தாக்குதல் – சீமான் ஆவேசம்

0

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தனது எக்ஸ் வலைதள பக்கத்தில், “நாகப்பட்டினம் மாவட்டம், கோடியக்கரை அருகே கடந்த 05.10.2025 அன்று நடுக்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த நாகை நம்பியார் நகர் பகுதியைச் சேர்ந்த விக்னேஷ், விமல், சுகுமார், திருமுருகன், முருகன், அருண் உள்ளிட்ட 10 மீனவச்சொந்தங்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் நாட்டு வெடிகுண்டு வீசி கொலைவெறித் தாக்குதல் நடத்தி, அவர்களின் உடைமைகளைப் பறித்துள்ளது பெரும் அதிர்ச்சியளிக்கிறது. தாக்கி பல இலட்சம் மதிப்பிலான வலைகள், விசைப்படகு இயந்திரம், இருப்பிடக் கருவி உள்ளிட்டவற்றை கொள்ளையடித்து சென்றதால் மீனவ மக்கள் செய்வதறியாது பெரும் துன்பத்திற்கு ஆளாகியுள்ளனர். தமிழ்நாட்டு மீனவர்களைக் காக்க எந்த நடவடிக்கையும் எடுக்காத இந்திய ஒன்றிய – தமிழ்நாடு அரசுகளின் தொடர் அலட்சியப்போக்கு வன்மையான கண்டனத்துக்குரியது. இத்தனை காலமும் இலங்கை கடற்படையால் கொடுந்தாக்குதலுக்கு ஆளாக்கப்பட்ட தமிழ் மீனவர்கள் மீது, தற்போது இலங்கை கடற்கொள்ளையர்களும் தாக்குதல் நடத்தத் தொடங்கியிருப்பது தமிழ் மீனவ மக்களுக்கு இன்னுமொரு பேரிடியாக அமைந்துள்ளது. இந்திய நாட்டின் கடற்படை என்னதான் செய்துகொண்டுள்ளது? அடுத்த நாட்டு கடற்படையும், கடற்கொள்ளையர்களும் சொந்த நாட்டு மீனவர்களைத் தாக்குவது இந்திய நாட்டிற்கு அவமானம் இல்லையா? அமெரிக்காவோ, சீனாவோ, ரஷ்யாவோ இப்படி சொந்த நாட்டு மீனவர்களைத் தாக்குவதை வேடிக்கை பார்க்குமா?
கடற்கொள்ளையர்கள் என்றால் அவர்கள் எந்த நாட்டு மீனவர்கள்? இலங்கை கடற்கொள்ளையர்கள் என்றால், தமிழ்நாட்டு மீனவர்களை விரட்டி விரட்டி வேட்டையாடும் இலங்கை கடற்படைக்கு, தன் எல்லைக்குள் உலவும் கடற்கொள்ளையர்களைப் பிடிக்க திறனில்லையா? அல்லது கடற்கொள்ளையர்களாக வந்தவர்களே இலங்கை கடற்படையினர்தானா? இத்தனை குறுகிய கடற்பரப்பில் இலங்கை – இந்தியக் கடற்படைகளைக் கடந்து தமிழக மீனவர்களைத் தாக்கிவிட்டு இலங்கை கடற்கொள்ளையர்கள் எங்கே மாயமாய் மறைந்தார்கள்?இந்தியக் கடற்படையால் இலங்கை கடற்படையிடமிருந்துதான் தமிழ் மீனவர்களைக் காக்க முடியவில்லை? இலங்கை கடற்கொள்ளையர்களிடமிருந்து கூடவா காக்கும் திறன் இந்திய இராணுவத்திற்கு இல்லை? சொந்த நாட்டு மீனவர்களைக் காக்க முடியவில்லை என்றால் இந்த நாட்டிற்கு கடற்படை என்ற ஒன்று எதற்கு? இத்தனைக் கோடிகள் கொட்டி கொள்முதல் செய்யப்பட்ட ஆயுதங்கள்தான் எதற்கு?

பாகிஸ்தானைச் சேர்ந்த பயங்கரவாதிகள் எல்லை தாண்டி இந்திய நாட்டு குடிகள் மீது தாக்குதல் நடத்தியவுடன் பதறி துடித்த பெருமக்கள், இலங்கை கடற்கொள்ளையர்கள் எல்லை தாண்டி தமிழ் மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளதற்கு எந்த பதற்றமும் கொள்ளாமல் அமைதி காப்பது ஏன்? தமிழர்கள் இந்த நாட்டின் குடிகள் இல்லையா? இந்திய அரசுக்கு எந்த நாடு தாக்கியது? தாக்கப்பட்ட மக்கள் யார் என்பதெல்லாம் பார்த்துதான் கோபமும் இரக்கமும் கூட வருமா? என்று அடுக்கடுக்காய் எழும் கேள்விகளுக்கு இந்த நாட்டை ஆளும் ஆட்சியாளர்களிடம் பதிலுண்டா?
சொந்த நாட்டு மக்களைத் தாக்குவதிலிருந்து பேச்சுவார்த்தை நடத்தி காக்க முடியவில்லை என்றால் இலங்கையின் நட்பு இந்தியாவிற்கு எதற்கு? இந்திய நாட்டுக் குடிகளைத் தாக்கும் பாகிஸ்தானிடம் வரும் கோவமும், பகையும், இந்த நாட்டின் ஆட்சியாளர்களுக்கு இலங்கையிடம் வர மறுப்பதேன்?வழக்கம்போல இன்னொரு கடிதம் எழுதுவதைத் தவிர, தமிழ் மீனவர்களைக் காக்க மாநில சுயாட்சி நாயகர் ஐயா ஸ்டாலின் அவர்களிடம் மாற்று திட்டம் ஏதாவது உண்டா? ஐந்துமுறை திமுக தமிழர் நிலத்தை ஆண்ட பிறகும் கச்சத்தீவு மீட்கப்படவும் இல்லை; தமிழ் மீனவர் சிக்கல் தீர்க்கப்படவும் இல்லை. இதைத்தான் திராவிட மாடல் அரசு தமிழ் மீனவர்களைக் காக்கும் முறையா?

ஆகவே, இந்திய ஒன்றியத்தை ஆளும் பாஜக அரசும், தமிழ்நாட்டை ஆளும் திமுக அரசும் தமிழ் மீனவர்களைக் காக்க இனியேனும் ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென வலியுறுத்துகிறேன். அதோடு, பாதிக்கப்பட்ட 10 மீனவச்சொந்தங்களுக்கும் உரிய மருத்துவம், துயர்துடைப்பு உதவிகளைச் செய்துதர வேண்டுமெனவும் கேட்டுக்கொள்கிறேன் என்று அவர் தெரிவித்துள்ளார்.

அண்ணாமலை பெயரை வைத்து பணம் கேட்டு மிரட்டிய கோவை பாஜக நிர்வாகிகள் 3 பேர் கைது!

0

தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை பெயரைச் சொல்லி இளைஞரை பணம் கேட்டு மிரட்டிய சம்பவம் தொடர்பாக, பாஜக கோவை வடக்கு மாவட்ட செயலாளர் சாமிநாதன் உட்பட 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

கோவை மாவட்டம் அன்னூர் அடுத்த குமாரபாளையம் பகுதியைச் சேர்ந்தவர்கள் நாகராஜ் – நாகமணி தம்பதியினர். இவர்களது மூத்த மகன் திருமூர்த்தி கடந்த 2023 ஆம் ஆண்டு சாலை விபத்தில் உயிரிழந்தார். இது தொடர்பான வழக்கு நடைபெற்று, ரூ.50 லட்சம் இழப்பீடு நீதிமன்றம் மூலம் பெறப்பட்டுள்ளது. இந்த வழக்கில், சட்ட உதவி செய்ததற்காக அதே பகுதியைச் சேர்ந்த பா.ஜ.கவை சேர்ந்த கோகுல கண்ணன், சாமிநாதன், ராசுகுட்டி ஆகியோர் ரூ.10 லட்சம் பெற்றுள்ளனர். இந்த நிலையில், இந்த 3 பேரும் மேலும் ரூ.10 லட்சம் வழங்க வேண்டும் என, பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை பெயரை சொல்லி கொலை மிரட்டல் விடுவதாக இறந்த திருமூர்த்தியின் சகோதரர் அருணாச்சலம் வீடியோ ஒன்றை வெளியிட்டார்.

அந்த வீடியோவில், ‘தனது சகோதரன் திருமூர்த்தி உயிரிழந்த நிலையில், இதுதொடர்பான வழக்கிற்கு அதே ஊரை சேர்ந்த பாஜகவை சேர்த்த கோகுல கண்ணன், சாமிநாதன், ராசுகுட்டி ஆகியோர் உதவி செய்தனர். இதற்கு இழப்பீடு வந்தவுடன் ரூ.10 லட்சம் கட்டாயப்படுத்தி வாங்கிக்கொண்டனர். தற்போது மீண்டும் தேர்தல் செலவுக்கு ரூ.10 லட்சம் பணம் வேண்டும் என அண்ணாமலை பெயரை பயன்படுத்தி கொலை மிரட்டல் விடுக்கின்றனர்’ என குற்றம்சாட்டி இருந்தார். இந்த வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலானது.இதுதொடர்பாக அருணாசலத்தின் தந்தை நாகராஜ், அன்னூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதேபோல், ‘எனது பெயரை சொல்லி பணம் வாங்கியதாக வெளியான வீடியோவிற்கும், எனக்கும் எந்த தொடர்பும் இல்லை’ என அண்ணாமலையும் விளக்கம் அளித்திருந்தார். தொடர்ந்து, இதுதொடர்பாக பணம் கேட்டு மிரட்டிய நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி அண்ணாமலை தனது உதவியாளர் மூலம் புகார் மனு அளித்தார்.

இந்நிலையில், நாகராஜ் அளித்த புகாரின் பேரில், அண்ணாமலை பெயரை பயன்படுத்தி ரூ.10 லட்சம் பணம் கேட்டு மிரட்டிய விவகாரத்தில், பாஜக கோவை வடக்கு மாவட்ட செயலாளர் சாமிநாதன், பாஜக உறுப்பினர் கோகுலகண்ணன், அன்னூர் குமாரபாளையத்தைச் சேர்ந்த ராசுகுட்டி ஆகிய 3 பேரை அன்னூர் போலீசார் கைது செய்தனர்.
தொடர்ந்து, 3 பேர் மீதும் கொலை மிரட்டல், பணம் பறித்தல் ஆகிய இருபிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விசாரணையில், கைதான கோகுலகண்ணனிடம் இருந்து பாஜக, திமுக, அதிமுக, மக்கள் நீதி மய்யம், காங்கிரஸ் ஆகிய கட்சிகளின் உறுப்பினர் அட்டை இருப்பது தெரியவந்தது. அவற்றை பறிமுதல் செய்த போலீசார் தொடர்ந்து அவர்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

செந்தில் பாலாஜி அமைச்சராவதை தடுக்கவில்லை

0

செந்தில் பாலாஜி அமைச்சராகக் கூடாது என நாங்கள் சொல்லவில்லை. வேண்டுமானால் நீதிமன்றத்தின் அனுமதியை பெற்று அவர் மீண்டும் அமைச்சராகலாம் என்றும் உச்ச நீதிமன்றம் தெரிவித்திருக்கிறது.

ஜெயலலிதா முதலமைச்சராக பதவி வகித்த 2011 -2015 அதிமுக ஆட்சிக் காலத்தில் செந்தில் பாலாஜி தமிழக போக்குவரத்து துறை அமைச்சராக இருந்தார். அப்போது, போக்குவரத்துக் கழகத்தில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி பலரிடம் பண மோசடி செய்ததாக, அவர் மீது வழக்குத் தொடரப்பட்டது. அந்த வழக்கின் விசாரணையின் போதே, அதிமுகவில் இருந்து விலகி, திமுகவில் இணைந்தார் செந்தில் பாலாஜி. 2021 ஆம் ஆண்டு ஆட்சியமைத்த திமுக, அவரை மின்சாரம், மது விலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சராக நியமித்தது. இதனையடுத்து, பண மோசடி வழக்கின் தொடர்ச்சியாக 2023 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 14 ஆம் தேதி செந்தில் பாலாஜிக்கு தொடர்புடைய இடங்களில் சோதனை நடத்திய அமலாக்கத்துறை, அவரை அன்றிரவே கைது செய்தது. கைதானதை அடுத்து, அவர் தனது அமைச்சர் பதவியை ராஜிநாமா செய்தார். சிறையில் அடைக்கப்பட்ட நிலையில், உச்ச நீதிமன்றத்தை நாடிய செந்தில் பாலாஜிக்கு அதே ஆண்டு செப்டம்பர் மாதம் ஜாமின் வழங்கப்பட்டது. அடுத்த சில நாட்களிலேயே மீண்டும் அமைச்சராக பதவியேற்றார். இதற்கு பல்வேறு தரப்பிலும் எதிர்ப்புகள் எழுந்த நிலையில், ஜாமினை ரத்து செய்யக் கோரி அமலாக்கத்துறை மேல் முறையீடு செய்தது. இந்த மனுவானது உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த போது அமைச்சர் பதவியா? ஜாமினா? இரண்டில் ஒன்றை தேர்வு செய்யுங்கள் என செந்தில் பாலாஜியை நீதிபதிகள் கேட்டனர். இதனையடுத்து மீண்டும் அமைச்சர் பதவியை ராஜிநாமா செய்தார்.இந்நிலையில், இந்த வழக்கின் தீர்ப்பில் உள்ள கடுமையான சில கருத்துகளை நீக்கக் கோரி, செந்தில் பாலாஜி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவானது இன்று (அக் 6) நீதிபதிகள் சூர்யா காந்த் மற்றும் ஜாய்மல்யா பாக்சி அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்த தீர்ப்பை வழங்கிய நீதிபதி ஓகா ஓய்வு பெற்ற பிறகு இந்த மனுவை ஏன் தாக்கல் செய்ய வேண்டும்? என செந்தில் பாலாஜி தரப்பிடம் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். அரசு சார்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தாவும், இதனால் சட்டத்தை தவறாக பயன்படுத்த வாய்ப்பிருப்பதாகவும் எடுத்துரைத்தார்.

இதனையடுத்து செந்தில் பாலாஜி சார்பாக ஆஜரான மூத்த வழக்கறிஞர் கபில் சிபில், அமைச்சர் பதவியில் நீடிக்கக் கூடாது என்பது நீதிபதி வாய்மொழியாகக் கூறியது தான் என்றும், ஜாமின் உத்தரவில் அமைச்சராக தடை எதுவும் விதிக்கப்படவில்லை என்றும் கூறினார். அதற்கு நீதிபதிகள், “செந்தில் பாலாஜி அமைச்சராக இருந்தால் அவருக்கு எதிராக வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளை கலைக்க நேரிடும் என்பதால், அவர் அமைச்சர் பதவியை ராஜிநாமா செய்ததை கருத்தில் கொண்டு தான் ஜாமின் வழங்கப்பட்டது” என்று தெரிவித்தனர். மேலும் அவர் அமைச்சராவதை யாரும் தடுக்கவில்லை என்றும், ஆனால் அமைச்சர் பதவியில் இருந்து கொண்டு சாட்சியங்களை கலைத்தால், ஜாமின் ரத்து செய்யப்படும் என்று தான் தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாக விளக்கினர். மேலும் இந்த வழக்கை ஏன் டெல்லி உயர் நீதிமன்றத்துக்கு மாற்றக்கூடாது என தமிழக அரசுக்கு கேள்வி எழுப்பி, இதற்கு இன்னும் 2 வாரங்களில் பதிலளிக்க கூறிய நீதிபதிகள், செந்தில் பாலாஜியின் மனுவை தள்ளுபடி செய்தனர்.