தவெக-வுக்கு தாவிய மூத்த தலைவர்கள் – உடைகிறதா அதிமுகவின் கோட்டை..?
2026 சட்டப் பேரவை தேர்தலில், எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக 47 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றது. இதனால், அக் கட்சியின் மூத்த நிர்வாகிகள் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமை மீது கடும் அதிருப்தியில் இருந்தனர்.
மேலும், எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம், விஜயபாஸ்கர், நத்தம் விஸ்வநாதன் உள்ளிட்ட மூத்த தலைவர்கள் போர்க்கொடி உயர்த்தினர். மே 13-ந் தேதி சட்டப் பேரவையில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில், இந்த அணியைச் சேர்ந்த 25 பேர் எடப்பாடி பழனிசாமியின் உத்தரவையும் மீறி, தவெக அரசுக்கு ஆதரவாக வாக்களித்தனர். மேலும் மரகதம் குமரவேல் (மதுராந்தகம்), ஜெயக்குமார் (பெருந்துறை), சத்யபாமா (தாராபுரம்) மற்றும் இசக்கி சுப்பையை (அம்பாசமுத்திரம்) ஆகிய 4 பேரும் தங்களது சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜிநாமா செய்து விட்டு, தவெகவில் இணைந்தனர். தொடர்ந்து, முன்னாள் அமைச்சர்களான உடுமலை ராதாகிருஷ்ணன், கடம்பூர் ராஜூ, எம்.சி. சம்பத் ஆகிய மூவரும் தவெகவில் இணைந்தனர்.சட்டப் பேரவையில் கட்சி தாவல் தடைச் சட்டத்தை எடப்பாடி பழனிசாமி கையிலெடுக்க, எதிர்ப்பு அணியினர் அவருடன் சமாதானமாகினர். ஆனால், சி.வி.சண்முகம் மற்றும் சி.விஜயபாஸ்கர் ஆகியோர் மட்டும் எடப்பாடி பழனிசாமியுடன் சமாதானமாக செல்லவில்லை. இந்த நிலையில், சி.விஜயபாஸ்கர் ஜூன் 16-ந் தேதி தனது எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்தார். மேலும், எடப்பாடி அணிக்கு சென்றாலும், மீண்டும் கட்சிப் பதவி கிடைக்காததால் சிலர் கடும் அதிருப்தியில் இருந்தனர். இதன் வெளிப்பாடாக எம்.ஆர்.விஜயபாஸ்கர் கரூர் தொகுதி எம்எல்ஏ பதவியை ஜூன் 29- ந்தேதி ராஜிநாமா செய்தார்.
சி.விஜயபாஸ்கர் மற்றும் எம்.ஆர். விஜயபாஸ்கர் ஆகிய இருவரும் தவெகவில் இணைய உள்ளதாக தகவல் வெளியான நிலையில், நேற்று அவர்களே அதை அதிகாரப்பூர்வமாக அறிவித்தனர்.அந்த அறிவிப்பு வெளியான சில மணி நேரத்திலேயே திருப்பூரை சேர்ந்த முன்னாள் அமைச்சர் எம்.எஸ்.எம். ஆனந்தன், திருச்சியை சேர்ந்த முன்னாள் அமைச்சர் எஸ். வளர்மதி ஆகியோரும் அதிமுகவில் இருந்து விலகுவதாக அறிவித்தனர்.இந்நிலையில், சென்னை மாமல்லபுரத்தை அடுத்து பூஞ்சேரியில் உள்ள தனியார் விடுதியில் அதிமுகவினர் தவெகவில் இணையும் விழா இன்று (ஜூலை 2) பிரமாண்டமாக நடைபெற்றது.
களம் மாறிய முன்னாள் அமைச்சர்கள், எம்எல்ஏக்கள்
தவெக பொதுச் செயலாளரும், அமைச்சருமான என்.ஆனந்த் முன்னிலையில் அதிமுக முன்னாள் அமைச்சர்களான சி.விஜயபாஸ்கர், எம்.ஆர்.விஜயபாஸ்கர், எம்.எஸ்.எம். ஆனந்தன், எஸ். வளர்மதி ஆகிய 4 பேரும், தங்களது ஆயிரக்கணக்கான ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்களுடன் தவெகவில் இணைந்தனர்.
மேலும், முன்னாள் எம்எல்ஏக்களான ஈ.எம். மான்ராஜ் (ஸ்ரீவில்லிபுத்தூர்), எம். ராம்குமார் (கும்பகோணம்), எம்.எஸ்.ஆர். ராஜவர்மன் (திருச்சுழி), சதன் பிரபாகர் (பரமக்குடி), திருஞானசம்பந்தம் (பேராவூரணி), சுந்தரராஜன் (சங்ககிரி), ராமச்சந்திரன் (சிவகங்கை) ஆகியோரும் தங்களது ஆதரவாளர்களுடன் தவெகவில் இணைந்தனர்.இதே போல் வைரமுத்து (புதுக்கோட்டை மாவட்ட செயலாளர்), இளமை தமிழ்செல்வன் (பெரம்பலூர் மாவட்ட செயலாளர்), சேகர் (ஒரத்தநாடு செயலாளர்) மற்றும் சீனிவாசன் (திருச்சி முன்னாள் துணை மேயர்) உள்ளிட்டோரும் தங்களது ஆதரவாளர்களோடு தவெகவில் இணைந்தனர்.
மேலும், கடந்த நாடாளுமன்ற தேர்தல் மற்றும் சட்டமன்றத் தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட்ட, கட்சியின் பல்வேறு அணிகளின் நிர்வாகிகள் 35 பேரும், புதுக்கோட்டை மாவட்ட அதிமுகவின் பல்வேறு ஒன்றிய செயலாளர்கள் 11 பேரும் தங்களது ஆதரவாளர்களுடன் தவெகவில் இணைந்தனர்.தவெகவில் இணைந்தவர்கள் கொள்கைத் தலைவர்களுக்கு மரியாதை செலுத்தி, பின்னர் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். இந்த நிகழ்வின் போது, அமைச்சர்கள் செங்கோட்டையன், ஆதவ் அர்ஜுனா, அருண் ராஜ் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.
துரோகம் செய்தது யார்?
அதிமுக தொண்டர்களை அதிர செய்துள்ள இந்த நிகழ்வில் தவெக செயற்குழுத் தலைவரும் அமைச்சருமான செங்கோட்டையன் பேசியபோது, “தவெக தலைவரும், நமது நீண்டகால முதலமைச்சராக இருக்கப் போகும் விஜய்யுடன் கைகோர்க்க அனைவரும் இன்று இங்கு வந்துள்ளனர். பலர் துரோகம் பற்றிப் பேசுகிறார்கள். ஆனால், மக்களின் தீர்ப்புக்குத் துரோகம் இழைத்துவிட்டு திமுகவுடன் கைகோர்க்கத் திட்டமிட்டது அதிமுகதான். அதனால்தான் சட்டமன்ற உறுப்பினர்கள் தங்கள் பதவியை ராஜினாமா செய்துவிட்டு எங்களுடன் இணைகிறார்கள். உண்மையில் யார் துரோகம் இழைக்கிறார்கள் என்று நீங்களே சொல்லுங்கள்” என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், “இந்தியத் துணைக்கண்டமே நமது முதலமைச்சரின் செயல்பாடுகளை உற்றுநோக்கிக் கொண்டிருக்கிறது. எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதாவுக்குப் பிறகு, இப்போது நான் புரட்சித் தளபதி முதலமைச்சர் விஜய்யுடன் பயணிக்கிறேன். அதிமுகவின் துரோகத்தை முறியடிக்கவே அதிமுக தலைவர்கள் இன்று எங்களுடன் இணைந்துள்ளனர். தவெக தலைமை அனைவரையும் வரவேற்கிறது,” என்றார்.
மேலும், “அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி மூத்த பெண்களை வைத்து மகளிர் அணி கூட்டத்தை நடத்தினார். ஆனால் தவெகவில் நாங்கள் ஏராளமான இளைஞர்களைக் காண்கிறோம். எடப்பாடி பழனிசாமி ஒரு நிறுவனத்தை நடத்த முயற்சிக்கிறார்; அவர் ஒரு கார்ப்பரேட் நிறுவனத்தை நடத்திக்கொண்டிருக்கிறார,” என்று செங்கோட்டையன் விமர்சித்தார்.
அதிமுக என்ற கட்சியே இல்லை
அதிமுக முன்னாள் நிர்வாகி உடுமலை ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் கூறியபோது, ” அதிமுகவை திமுகவுடன் இணைந்து செயல்பட பொதுச் செயலாளர் முயற்சி செய்தார். அதன் விளைவு தான் இது. அதிமுக என்கிற கட்சியே கிடையாது. எல்லோரும் தமிழக வெற்றிக் கழகத்தில் வந்து சேர்ந்துவிட்டார்கள். இன்னும் கொஞ்சம் பேர் இருக்கிறார்கள். அவர்களும் வந்துவிடார்கள் அம்மாவுடன் (ஜெயலலிதா) அதிமுக என்பது முடிந்துவிட்டது” என்றார்.
இன்று முதல் நான் தவெக
அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கூறியபோது,”தமிழ்நாடு ஒரு போதை மாநிலமாக மாறிக் கொண்டிருந்த வேளையில், தமிழ்நாட்டைக் காப்பாற்ற ஒரு நல்ல தலைவன் கிடைத்திட மாட்டாரா? என்ற ஏக்கத்தில் மக்கள் இருந்தனர்.
அந்தக் காலகட்டத்தில் தான் தமிழ்நாட்டை மீட்டெடுக்கவும், போதைப்பொருள் மற்றும் லஞ்ச லாவண்யத்தை ஒழிக்கவும் மக்களின் பெரும் ஆதரவோடு விஜய் அவர்கள் வெற்றி பெற்றார். அவரது வழியில் நல்லாட்சி நடத்திட இன்று முதல் நான் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்து செயல்படத் தொடங்கியுள்ளே” என்றார்.
எங்கள் கோரிக்கைக்கு இபிஎஸ் செவிசாய்க்கவில்லை
தவெகவில் இணைந்தது குறித்து, அதிமுக முன்னாள் அமைச்சர் மற்றும் எம்எல்ஏவுமான டாக்டர் சி. விஜயபாஸ்கர் கூறுகையில், “தவெகவுடன் கூட்டணி அமைக்க வேண்டும் என்று தேர்தலுக்கு முன் நாங்கள் வற்புறுத்தினோம். ஆனால், அதற்கு எங்கள் தலைவர் (இபிஎஸ்) செவிசாய்க்கவில்லை. தேர்தலில் தனிப்பெரும் கட்சியாக தவெக உருவெடுத்த பின்பு அக்கட்சியுடன் கூட்டணி அமைக்க வேண்டும் என்று, 30-க்கும் மேற்பட்ட அதிமுக எம்எல்ஏக்கள் வலியுறுத்தினோம். அதற்கு இபிஎஸ் செவிசாய்க்கவில்லை.
ஆனால் திரைக்குப் பின்னால் அவர்கள் திமுகவுடன் கூட்டணி அமைத்து ஆட்சி அமைக்க முயன்றனர். இது அதிமுக நிறுவனரான எம்ஜிஆரின் கொள்கைகளுக்கு எதிரானது. எனவே, நாங்கள் எங்களது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்துவிட்டு கட்சியிலிருந்தும் வெளியேறிவிட்டோம். இப்போது நாங்கள் தவெகவில் இணைகிறோம். இதில் எந்த குதிரை பேரமும் இல்லை” என்றார்.
பொதுக்குழு உறுப்பினர்களின் பலம்
அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மற்றும் எம்.எல்.ஏ-க்கள் தவிர அக்கட்சியின் நூற்றுக்கும் மேற்பட்ட முக்கிய பொதுக்குழு உறுப்பினர்களும் தங்களது பதவிகளைத் துறந்துவிட்டு இன்று தவெகவில் இணைந்துள்ளனர். பிரம்மாண்டமான இந்த அரசியல் நகர்வு, தமிழக அரசியலில் தவெகவை ஒரு தவிர்க்க முடியாத சக்தியாக மாற்றும் என்பதற்கான அறிகுறியாகவே பார்க்க வேண்டியுள்ளது என்று அரசியல் வல்லுநர்கள் கருதுகின்றனர்.



