2 கோடி ரூபாய் கேட்டு தொழிலதிபர் கடத்தல்,ஆள் மாறிப்போனதால் எஸ்கேப்..!
கோவையில் 2 கோடி ரூபாய் பணம் கேட்டு காங்கிரஸ் கட்சியின் ஓ பி சி அணி மாவட்ட தலைவரும் தொழிலதிபருமான காட்டூர் தனசேகரன் என்பவர் காரில் கடத்தப்பட்டு கடும் தாக்குதலுக்கு உள்ளாக்கி காட்டுப் பகுதியில் இறக்கி விடப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது…….
கோவை, சிங்காநல்லூர் அடுத்த எஸ்.ஐ.எச்.எஸ் காலனி பகுதியை சேர்ந்தவர் தனசேகரன். காந்திபுரம் அடுத்த காட்டூர் பகுதியில் பழைய கார் விற்பனை மையம் ஒன்றை நடத்தி வரும் இவர் காங்கிரஸ் கட்சியின் ஓ.பி.சி பிரிவு மாவட்ட தலைவராகவும் பதவி வகித்து வருகிறார். இந்த நிலையில் எஸ.ஐ.எச்.எஸ் காலனி பகுதியில் புதிதாக வீடு ஒன்றை அவர் கட்டி வரும் நிலையில் இன்று காலை வீட்டின் முன்பாக நிறுத்தப்பட்டு இருந்த தனது ஃபார்ச்சூனர் காரை கழுவிக் கொண்டு இருந்த போது அங்கு எர்டிகா காரில் வந்த டிப் டாப் உடை அணிந்த ஐந்து பேர் காரைக்கழுவி கொண்டு இருந்த தனசேகரனிடம் உனது பெயர் தனசேகரனா என கேட்டு உள்ளனர். அதற்கு தனசேகரன் ஆமாம் என்று கூறவே உடனடியாக தாங்கள் வைத்து இருந்த கை விலங்கு ஒன்றை வைத்து தனசேகரனின் கையை பூட்ட முயற்சித்து உள்ளனர். அதற்கு தனசேகரன் நான் என்ன அக்யூஸ்டா என கேட்டு கையை உதறி அங்கு இருந்து நகர முற்பட்ட பொழுது ஐந்து பேரும் சேர்த்து தனசேகரனை மடக்கி பிடித்து தாங்கள் வந்த காரில் கீழே தள்ளி கடுமையாக தாக்கி உடனடியாக காரை அங்கு இருந்து கிளப்பி தனசேகரனை கடத்தி உள்ளனர். அப்போது தனசேகரன் கூக்குறலிடவே அவரது வாயில் துணியை வைத்து அடைத்து முகம் வயிறு இடுப்பு பகுதி என சரமாரியாக தாக்கியப்படியே கோவை பாலக்காடு புறவழிச் சாலையில் காரை இயக்கி உள்ளனர். இதற்கு இடையே காரில் வந்த ஒருவர் 2 கோடி ரூபாய் கொடுத்தால் உன்னை விட்டு விடுவோம் என கூறவே தன்னிடம் அவ்வளவு பணம் இல்லை என்று தனசேகரன் கூறியுள்ளார். மீண்டும் தனசேகரனை தாக்கிய அவர்கள் அவரது முகத்தை தங்கள் செல்போனில் படம் பிடித்து யாரோ ஒருவருக்கு அனுப்பியதாக கூறப்படுகிறது. அதனைக் கண்ட எதிர்முனையில் இருந்த நபர் இவர் இல்லை ஆள் மாறிவிட்டது என்று கூறவே தனசேகரனை ஆட்கள் இல்லாத ஒரு காட்டுப் பகுதியில் கீழே தள்ளிவிட்டு காரில் வந்தவர்கள் அங்கிருந்து தப்பி உள்ளனர். இதைத் தொடர்ந்து தாக்குதலுக்கு உள்ளான தனசேகரன் அங்கு இருந்து நடந்து வந்து பாலக்காடு சாலை வழியே வந்த ஒருவரிடம் நடந்த சம்பவங்களை கூறி உதவி கேட்டு உள்ளார். அந்த நபர் கோவை சிங்காநல்லூர் காவல் நிலையத்தில் கொண்டு வந்து தனசேகரனை இறக்கி விட்ட நிலையில் சிங்காநல்லூர் காவல் நிலைய போலீசார் சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து தனசேகரனின் வீடு மற்றும் திருச்சி சாலை பாலக்காடு சாலை உள்ளிட்ட பகுதிகளில் இருந்த சி.சி.டி.வி காட்சிகளை கைப்பற்றி விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் தாக்குதலுக்கு உள்ளான தனசேகரன் முதுலுதவி சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் காந்திபுரம் அடுத்த காட்டூர் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் தற்போது சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் குறித்து பேசிய தனசேகரன் தன்னை கடத்தி அவர்கள் யார் என்ற விபரம் தற்போது வரை தெரியவில்லை என்றும் தொழில் போட்டி காரணமாக கடத்தினார்களா என்பது குறித்து கூட தனக்கு அறியவில்லை என்றும் காரில் வந்த நபர்கள் ரௌடிகள் போல காணப்பட்டதாகவும் காரின் பின் பகுதியில் நம்பர் பிளேட் கூட இல்லை என்றும் தெரிவித்துள்ளார்.மேலும் தன்னை கடத்தியவர்கள் தன்னிடம் இருந்த சுமார் ஒன்றரை லட்சம் ரூபாய் மதிப்பிலான எஸ் 23 அல்ட்ரா செல்போன், ஃபார்ச்சூனர் கார் சாவி மற்றும் புதிய வீட்டின் சாவி ஆகியவற்றை பறித்து சென்றதாகவும் தனது செல்போனில் இருந்தே தனது வங்கி கணக்கில் இருந்து பணத்தை தங்கள் கணக்கிற்கு பரிமாற முயற்சித்ததாகவும் கூறியுள்ளார். இந்த சம்பவம் கோவையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது


