பாரதிய ஜனதா கட்சியின் 16-வது தேசிய தலைவராக கடந்த ஜனவரி மாதத்தில் நிதின் நவீன் பொறுப்பேற்றார். அவர் பொறுப்பேற்றதிலிருந்தே கட்சியின் நிர்வாகிகளை மாற்றும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வந்தன. இந்நிலையில், தற்போது தேசிய துணைத் தலைவர்கள், பொதுச் செயலாளர்கள் உள்ளிட்ட முக்கிய பொறுப்புகளுக்கான புதிய பட்டியலை அவர் வெளியிட்டுள்ளார். அதன்படி, பாஜகவின் தேசிய மகளிர் அணி தலைவர் பொறுப்பிலிருந்து (மகிளா மோர்ஷா) தமிழ்நாட்டைச் சேர்ந்த வானதி சீனிவாசன் விடுவிக்கப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக சத்தீஸ்கர் மாநிலத்தைச் சேர்ந்த ரூப் குமாரி சௌத்ரி நியமனம் செய்யப்பட்டுள்ளார். தவிர, தமிழ்நாட்டைச் சேர்ந்த எம்.வெங்கடேசனுக்கு பாஜகவின் தேசிய செயலாளர் பதவி வழங்கப்பட்டுள்ளது. ஏற்கனவே பொதுச் செயலாளராக (அமைப்பு) பதவி வகித்து வந்த பி.எல் சந்தோஷும், பொருளாளராக பதவி வகித்து வந்த பியூஷ் கோயலும் அதே பதவியில் தொடர்வார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
புதிய பட்டியலின்படி, ராஜஸ்தான் முன்னாள் முதலமைச்சர் வசுந்தரா ராஜே சிந்தியா, தீரத் சிங், ராம் மாதவ், பைஜ்யந்த் ஜெய் பாண்டா, புரந்தேஸ்வரி, ரேகா வர்மா, வரஷாபென் நரேந்திரபாய் தோஷி, பார்தி பிரவீன் பவார், மன்பிரீத் சிங் பாதல், லால் சிங் ஆர்யா, நாகராஜா, தாரிக் மன்சூர் மற்றும் மதுசந்திரகர் ஆகிய 13 தேசிய துணைத் தலைவர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். அதேபோல், ஸ்மிருதி இரானி, வினோத் தாவ்டே, சுனில் பன்சால், பிப்லப் குமார் தேப், சதீஷ் பூனியா, கஜேந்திர பாட்டீல், ஹரிஷ் திவேதி மற்றும் சஞ்சய் பாட்டியா ஆகியோர் பொதுச் செயலாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
தகவல் தொழில்நுட்ப பிரிவு தலைவராக பதவி வகித்துவந்த அமித் மால்வியா நீக்கப்பட்டு, அவருக்கு பதிலாக சத்தீஸ்கர் பாஜக தலைவர் தீபக் மஸ்கி நியமிக்கப்பட்டுள்ளார். இவருக்கு சமூக ஊடக தலைவர் என்ற கூடுதல் பொறுப்பும் வழங்கப்பட்டுள்ளது. தீப மஸ்கி சத்தீஸ்கர் மாநிலத்தைச் சேர்ந்தவர். இவர் முன்னதாக பாஜக மாநில செய்தி தொடர்பாளராக பணியாற்றி இருக்கிறார். பாரதிய ஜனதா கட்சியை வழிநடத்தும் மூத்த தலைவர்கள் கொண்ட மார்க் தர்ஷக் மண்டலில் பிரதமர் நரேந்திர மோடி, எல்.கே அத்வானி, முரளி மனோகர் ஜோஷி மற்றும் ராஜ்நாத் சிங் ஆகியோர் தொடர்ந்து வருகின்றனர். இது தவிர, பிரதமர் மோடி தலைமை தாங்குகிற நாடாளுமன்ற வாரியம் ஒன்றும் செயல்பட்டு வருகிறது.
இதில், நிதின் நபின், ராஜ்நாத் சிங், அமித் ஷா, ஜே.பி. நட்டா, பி.எஸ். எடியூரப்பா, சர்பானந்த சோனோவால், கே. லட்சுமண், இக்பால் சிங் லால்புரா, சுதா யாதவ், சத்யநாராயண் ஜாதியா மற்றும் பி.எல். சந்தோஷ் ஆகிய 12 பாஜக உறுப்பினர்கள் உள்ளனர்.


