தமிழ்நாட்டில் ஆவணப்பதிவு நடைமுறைகளை எளிமைப்படுத்தும் வகையில், பொதுமக்கள் தாங்களே நேரடியாக இணையவழியில் ஆவணங்களைப் பதிவு செய்யும் முறையினை பதிவுத்துறை அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்த ஆவணப்பதிவு முறையின் மூலம் சார்பதிவாளர் அலுவலகங்களுக்கு நேரில் செல்லாமலேயே இணையவழியில் பொதுமக்கள் தங்கள் ஆவணங்களைப் பதிவு செய்து கொள்ள முடியும்.ஆவணப்பதிவு முறை
- பதிவுத்துறை இணையதளத்தில் தங்களது உள்நுழைவினைத் தாங்களே உருவாக்கி மேற்படி ஆவணங்களை இணையவழியில் சமர்ப்பிக்கலாம்.
- ஆவணத்தை எழுதிக் கொடுப்பவர்கள், எழுதிப் பெறுபவர்கள் மற்றும் சாட்சிகள் ஆகிய அனைவருக்கும் ஆதார் அட்டை பதிவேற்றம் செய்யப்பட வேண்டும்.
- ஆதார் ஆணையத்தின் மூலம் கைரேகை அல்லது கருவிழிப் படலம் வழி ஆதார் சரிபார்க்கப்பட வேண்டும். தொழில்நுட்பத் தேவைகள்
இணைய இணைப்பு, UIDAI அங்கீகரிக்கப்பட்ட எல்1 விரல் ரேகை இயந்திரம், கருவிழிப்படலம் ஸ்கேன் செய்யும் கருவி, புகைப்படம் எடுக்க நீலநிறத் திரை (புகைப்படம் எடுப்பவரின் பின்புறத்தில் வைத்திருக்க வேண்டும்), புகைப்படக் கருவி (Webcam) ஆகிய தொழில்நுட்ப உபகரணங்கள் தேவைப்படும்.
முக்கிய அம்சங்கள்
வருகையில்லா ஆவணப்பதிவின் மூலம் இணைய வழியில் சமர்ப்பிக்கப்பட்ட ஆவணங்களை சார்பதிவாளர்கள் 24 மணி நேரத்திற்குள் பதிவு செய்தோ அல்லது திருத்தத்திற்காக திருப்பி அனுப்பியோ அல்லது நிராகரித்தோ நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இந்த முறையில் சமர்ப்பிக்கப்படும் ஆவணங்கள், சார் பதிவாளர்களால் தற்போதுள்ள நடைமுறையில் உள்ளபடி சரிபார்க்கப்பட்டு, சட்ட விதிகளுக்குட்பட்டு பதிவு செய்யப்படும்.
திருத்தத்திற்காக திருப்பி அனுப்பப்படும் ஆவணங்களைத் திருப்பி அனுப்பப்பட்ட நாளிலிருந்து 30 நாட்களுக்குள் தேவையான திருத்தங்களுடன் மீண்டும் சமர்ப்பிக்கலாம்.
பதிவு செய்யப்பட்ட ஆவணங்களில் சார்பதிவாளர் டிஜிட்டல் கையொப்பமிட்டு, ஆவணப் பதிவிற்காக உருவாக்கப்பட்ட பயனர் உள்நுழைவுக்கு அனுப்பி வைக்கப்படும்.
பின்னர், பதிவு செய்யப்பட்ட செய்யப்பட்ட ஆவணத்தை 60 நாட்களுக்குள் தேவையான எண்ணிக்கையில் பதிவிறக்கம் செய்துகொள்ளும் வகையில் மென்பொருள் வசதி செய்யப்பட்டுள்ளது.
60 நாட்கள் முடிந்த பின்னர், பொதுமக்கள் நடைமுறையில் உள்ள முறையின்படி சான்றிட்ட நகலுக்கு (Certified Copy) விண்ணப்பித்து பதிவு செய்யப்பட்ட ஆவணத்தைப் பெறலாம்.
ஆவணத்தின் ஒவ்வொரு பக்கத்திலும் QR குறியீடு இடம் பெறும். அதில் ஆவண எண், ஆவணத்தின் தன்மை மற்றும் பதிவு செய்யப்பட்ட தேதி ஆகிய விவரங்கள் இடம்பெறும்.
பதிவு அலுவலர் ஆவணத்தில் டிஜிட்டல் கையொப்பமிடுவார். காகித ஆவணத்தில் ஏதேனும் மாற்றம் செய்யப்பட்டிருந்தால் டிஜிட்டல் கையொப்பமிடப்பட்ட ஆவணத்துடன் ஒப்பிட்டு சரிபார்க்கலாம்.
டிஜிட்டல் ஆவணம் மாற்றம் செய்யப்பட்டால், டிஜிட்டல் கையொப்ப சரிபார்ப்பில் “X” குறியீடு தோன்றுவதன் மூலம் மாற்றம் செய்யப்பட்டிருப்பதை அறியலாம் என பதிவுத்துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நிகழ்ச்சியில், வணிகவரி மற்றும் பதிவுத் துறை அமைச்சர் த. லோகேஷ் தமிழ்செல்வன், வணிகவரி, பதிவுத்துறை மற்றும் அறநிலையங்கள் துறை செயலாளர் ஜெ.குமரகுருபரன், பதிவுத்துறைத் தலைவர் ஜி.கே.அருண் சுந்தர் தயாளன் ஆகியோர் கலந்து கொண்டனர்


