தமிழ்நாட்டில் விரைவில் காலியாகும் 6 மாநிலங்களவை இடங்களுக்கான தேர்தல், மார்ச் 16ஆம் தேதி நடைபெறவுள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
மாநிலங்களவையில் தமிழகத்திற்கு மொத்தம் 18 இடங்கள் உள்ளன. இவை சுழற்சி முறையில் இரண்டரை ஆண்டுகளுக்கு ஒருமுறை 6 மாநிலங்களவை இடங்களுக்கு தேர்தல் நடைபெறும். அந்த வகையில், தமிழகத்தை சேர்ந்த மாநிலங்களவை உறுப்பினர்களான திருச்சி சிவா, என்.ஆர்.இளங்கோ, அந்தியூர் செல்வராஜ், என்.வி.என். கனிமொழி சோமு, தம்பிதுரை, ஜி.கே. வாசன் உள்ளிட்ட ஆறு பேரின் பதவிக்காலம் ஏப்ரல் மாதத்தோடு நிறைவடைகிறது.
இந்நிலையில், காலியாகும் இடங்களுக்கான தேர்தலை தேர்தல் ஆணையம் தற்போது வெளியிட்டுள்ளது. அதன்படி வரும் மார்ச் 16ஆம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளது. வேட்புமனு தாக்கல் பிப்ரவரி 26ஆம் தேதி தொடங்கி மார்ச் 5ஆம் தேதி நிறைவடைகிறது. போட்டி இருந்தால் மார்ச் மாதம் 16ஆம் தேதி காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை தேர்தல் நடைபெறும். தொடர்ந்து மாலை 5 மணிக்கு வாக்கு எண்ணிக்கை நடைபெறும்.
இந்த தேர்தலில் சட்டமன்ற உறுப்பினர்கள் மட்டுமே வாக்களிக்க முடியும். தற்போது 6 மாநிலங்களவை இடங்களுக்கு தேர்தல் நடைபெறுவதால், 34 எம்எல்ஏக்கள் வாக்களித்தால் ஒரு எம்.பி.யை தேர்ந்தெடுக்க இயலும். அத்தகைய சூழ்நிலையில், திமுக சார்பாக 4 பேரும், அதிமுக சார்பாக 2 பேரும் மீண்டும் தேர்ந்தெடுக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.


