திருத்தணி ரயில் நிலையம் அருகே 4 சிறுவர்கள் வடமாநில இளைஞரின் கழுத்தில் கத்தியை வைத்து ரீல்ஸ் எடுத்துள்ளனர். அதனை தட்டிக்கேட்டதால் சிறுவர்கள் நான்கு பேரும் சேர்ந்து அந்த இளைஞரை கத்தியால் சரமாரியாக வெட்டினர். மேலும், அந்த கொடூர நிகழ்வை வீடியோவாக எடுத்து ரீல்ஸ் ஆகவும் பதிவிட்டுள்ளனர். இந்த சம்பவம் தமிழ்நாட்டில் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், கொடூர தாக்குதலுக்கு ஆளான வடமாநில இளைஞரின் தற்போதைய நிலை என்ன? குற்றச்செயலில் ஈடுபட்டவர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன என்பதை குறித்து வடக்கு மண்டல ஐஜி அஸ்ரா கார்க் விவரித்துள்ளார். இதுகுறித்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், வடமாநில இளைஞரை கத்தியால் வெட்டிய 4 சிறுவர்களில் 3 பேர் செங்கல்பட்டு சிறுவர் சீர்திருத்தப் பள்ளியில் அடைக்கப்பட்டுள்ளனர். மற்றொரு மாற்றுத்திறனாளி (வாய் பேச முடியாத, காது கேளாத) சிறுவன் பெற்றோருடன் அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். என தெரிவித்தார்.
தொடர்ந்து விவரித்த அவர், “எதிர்பாராத விதமாக இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது. ஒடிசாவை சேர்ந்த 20 வயதுடைய இளைஞர் ரயில் மூலம் தமிழ்நாடு வந்துள்ளார். கடந்த இரண்டு மாதமாக அவர் இங்கு சுற்றி வந்து உள்ளார். இந்த நிலையில், அந்த இளைஞர் சென்னையில் இருந்து ரயில் மூலம் திருத்தணிக்கு சென்றுகொண்டிருந்தார். அதே ரயிலில் அரக்கோணத்தைச் சேர்ந்த இரண்டு சிறுவர்கள், திருத்தணியை சேர்ந்த இரண்டு சிறுவர்களும் பயணித்துள்ளனர். அப்போது ரயிலில் அமர்ந்திருந்த வடமாநில இளைஞரை சிறுவர்கள் நான்கு பேரும் சேர்ந்து திடீரென தாக்கியுள்ளனர். மேலும், திருத்தணி ரயில் நிலையம் வந்ததும் அவரை கீழே இறக்கி பட்டாக்கத்தியால் வெட்டி உள்ளனர். அதனை வீடியோவாக பதிவு செய்தும் சமூக வலைதளத்தில் பதிவிட்டு உள்ளனர்,” என்று கூறினார்.
முதற்கட்ட விசாரணையில், “ஒடிசாவை சேர்ந்த இளைஞர் வேலைக்காக சென்னை வரவில்லை. அவர் தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களுக்கு ரயிலில் பயணம் செய்துகொண்டிருந்தவர் என தெரிய வந்துள்ளது. இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட இளைஞரை போலீசார் திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். அங்கு முதற்கட்ட சிகிச்சை அளிக்கப்பட்டு பின்னர் மேல்சிகிச்சைக்காக சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் அனுமதித்தனர்.அவருக்கு எத்தனை வெட்டு காயங்கள் என்று தெரியவில்லை, ஆனால் அதிக அளவில் காயங்கள் ஏற்பட்டுள்ளன. பாதிக்கப்பட்டவர் அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் உடனடியாக கொலை முயற்சி (BNS 109) பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுத்துள்ளனர். இதையடுத்து 5 தனிப்படைகள் அமைத்து குற்றத்தில் ஈடுபட்ட நான்கு சிறுவர்களை சம்பவம் நடந்த 28ஆம் தேதியே பிடித்துள்ளனர். இதையடுத்து மாவட்ட நீதிபதி முன் அவர்களை ஆஜர்படுத்தி மூன்று சிறுவர்களை செங்கல்பட்டு சிறுவர் சீர்த்திருத்த பள்ளிக்கு அனுப்பினர். அதில் ஒரு சிறுவரை மட்டும் பெற்றோரிடம் ஒப்படைத்துள்ளனர்.
மேலும், பாதிக்கப்பட்டவர் வடமாநிலத்தைச் சேர்ந்தவர் என்ற காரணத்தால் தாக்கப்படவில்லை. அதற்கான ஆதாரம் எதுவும் இல்லை. புகார் கொடுத்தவர் கூறிய தகவலின்படி, ”ஏன் எங்களை முறைத்துப் பார்த்தாய்” என கேட்டு சிறுவர்கள் தன்னை தாக்கியதாக தெரிவித்துள்ளார். சிறுவர்கள் நான்கு பேரும் போதைப்பொருள் பயன்படுத்தியிருந்தார்களா என்றும் விசாரணை நடைபெற்று வருகிறது. இப்போது வரை அவர்கள் போதைப்பொருள் பயன்படுத்தியதற்கான எந்த ஆதாரமும் கிடைக்கவில்லை. அவர்கள் வைத்திருந்த இரண்டு பட்டாக்கத்திகளும் வீட்டிலிருந்து கொண்டு வந்ததாகவும், அவர்களுக்கும் மற்றொரு கும்பலுக்கும் முன்விரோதம் இருந்ததால், கத்தியுடன் சுற்றி திரிந்ததாக தெரிவித்தனர். கைதான சிறுவர்கள் மீது எந்த வழக்குகளும் இல்லை, அவர்களிடமிருந்து இரண்டு பட்டாக்கத்தி, இரண்டு செல்ஃபோன்களை பறிமுதல் செய்துள்ளோம். பாதிக்கப்பட்ட இளைஞர் சிகிச்சைக்குப்பின் அவரது வீட்டுக்கு செல்வதாக கூறிவிட்டு மருத்துவமனையில் இருந்து சென்றுள்ளார்” என்று தெரிவித்தார்.
மேலும், ” திருவள்ளூர் மாவட்டத்தில் இந்த ஆண்டில் 500 கிராம் மெத்தபெட்டமைன், 500 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. 100 எம்டிஎம்ஏ போதை மாத்திரைகள், 60,000 போதை மாத்திரைகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இதுதொடர்பான வழக்குகளில் மகாராஷ்டிரா, குஜராத், டெல்லி, ஹரியானா ஆகிய மாநிலங்களுக்கு சென்று தொடர்புடையவர்களை கைது செய்துள்ளோம். கடந்த ஆறு மாதத்தில் ஆந்திரா மற்றும் ஒடிசா சென்று 8 வழக்குகளில் சுமார் 1,000 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்து தொடர்புடையவர்களை கைது செய்துள்ளோம்.
செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய தொழிற்சாலைகள் நிறைந்த மாவட்டங்களில் பல்லாயிரக்கணக்கான வடமாநில நபர்கள் தங்கி பணிபுரிந்து வருகிறார்கள். இதுபோன்று வேறு எந்த சம்பவமும் நடைபெறவில்லை. சின்ன சின்ன சம்பவங்கள் நடைபெறும்போது போலீசார் உரிய நடவடிக்கை மேற்கொண்டு கைது நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளோம்.
சிலர் சமூக விரோத செயல்களை செய்து இணையதளங்களில் ரீல்ஸ் பதிவேற்றி வருகின்றனர். அதை நாங்கள் தொடர்ந்து கண்காணித்து வருகிறோம். அதுபோன்ற ரீல்ஸ்கள் வெளியிட்ட நபர்கள் மீது வழக்குகள் பதிவு செய்துள்ளோம். மேலும் எதிர்காலம் கருதி பள்ளி, கல்லூரி மாணவர்களின் பெற்றோரை அழைத்து அறிவுரைகளையும் வழங்கி வருகிறோம் என்று ஐஜி அஸ்ரா கார்க் கூறினார்.


