தமிழக சட்டப் பேரவைத் தேர்தலுக்கான பிரச்சாரத்தை அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, சென்னை மயிலாப்பூரில் இருந்து இன்று (மார்ச்) தொடங்கினார்.
தமிழகத்தில் ஏப்ரல் 23 ஆம் தேதி சட்டப் பேரவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அதிமுக தலைமையிலான பாஜக கூட்டணி, வேகமாக தொகுதிப் பங்கீட்டை முடிவு செய்து, தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கி விட்டது.
அதன்படி, அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில் வழிபாடு செய்து, பின்னர் மந்தைவெளியில் தேர்தல் பிரச்சார கூட்டத்தில் பேசினார். அப்போது அவர், “வரும் சட்டப் பேரவைத் தேர்தலில், அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 210 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியமைக்கும். ஏற்கெனவே 193 தொகுதிகளில் நான் மக்களை சந்தித்து விட்டேன். தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பிறகு முதன்முதலாக மேற்கொள்ளும் பிரசாரம் இது.
அதிமுக, கூட்டணிக் கட்சிகளுடன் விரைவாக தொகுதிகள் ஒதுக்கீட்டை முடித்து, முதற்கட்டமாக 23 வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது. எஞ்சிய தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியல் விரைவில் வெளியாகும். ஆனால், திமுக, கூட்டணி அமைப்பதற்கே நீண்ட நாட்கள் போராடியது. திமுக கூட்டணியில் அனைத்து கட்சிகளும் மிகுந்த அழுத்தத்தில் உள்ளன” என்றார்.
திமுக தனது கூட்டணி கட்சிகளுக்கு கடந்த 2021 சட்டப் பேரவைத் தேர்தலை விட குறைவான தொகுதிகளையே வழங்கியுள்ளது என்றும், விடுதலை சிறுத்தைகள் கட்சி எவ்வளவோ போராடி 8 இடங்களை மட்டுமே பெற்றது என்றும் அவர் விமர்சனம் செய்தார்.அங்கீகாரம் இல்லாத கட்சிகளுக்கு அதிக தொகுதிகள், அங்கீகரிக்கப்பட்ட விசிகவுக்கு குறைந்த தொகுதிகளை திமுக ஒதுக்கியுள்ளது என்றும், திமுகவை நம்பியவர்கள் நடுத் தெருவில் நிற்பார்கள் என்பதை இனியாவது உணர்ந்து கொள்ள வேண்டும் என்றும் அவர் கூறினார். ஆனால், அதிமுக கூட்டணியில், கூட்டணி கட்சிகளுக்கு உரிய மரியாதை தரப்படுகிறது என்றும் அவர் தெரிவித்தார்.
கடந்த 5 ஆண்டுகால திமுக ஆட்சியில் மக்களுக்கு பயன் இல்லை எனவும், குடும்ப ஆட்சி, ஊழல், வரி உயர்வு ஆகியவை மட்டுமே நடந்துள்ளதாகவும் அவர் குற்றம்சாட்டினார். மின் கட்டணம், சொத்து வரி, அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வு ஆகியவற்றால் மக்களுக்கு பொருளாதார சுமையை திமுக அரசு ஏற்றி விட்டதாகவும் அவர் தெரிவித்தார்.
அதிமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட மழைநீர் வடிகால் திட்டத்தை திமுக முழுமையாக நிறைவேற்றவில்லை என்றும் விமர்சித்த எடப்பாடி பழனிசாமி, சென்னை மெட்ரோ ரயில் திட்டத்திற்கான அனுமதி அதிமுக ஆட்சியில் பெறப்பட்டது என கூறினார்.
தமிழகத்தில் சட்டம் – ஒழுங்கு நிலைமை சரியில்லை. போதைப்பொருள் புழக்கம், கொலை, பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்துள்ளன என்றும் அவர் குற்றம்சாட்டினார்.திமுக ஆட்சி “கலெக்ஷன், கமிஷன், கரப்ஷன்” என்ற முறையில் செயல்படுகிறது. அதிமுக ஆட்சியில் கரோனா காலத்திலும் சிறப்பாக செயல்பட்டு மக்களுக்கு உதவி செய்தது. இலவச உணவு, ரேஷன் வழங்கப்பட்டதாகவும் கூறினார்.
அதிமுக ஆட்சிக்கு வந்தால் குடும்பத் தலைவிக்கு மாதம் ரூ.2000 வழங்கப்படும், பேருந்தில் ஆண்களுக்கும் இலவச பயணம், 3 சிலிண்டர் இலவசம், இளைஞர்களுக்கு மாதாந்திர உதவி உள்ளிட்ட பல நலத்திட்ட உதவிகள் வழங்கப்படும் என்றும் எடப்பாடி பழனிசாமி வாக்குறுதி அளித்தார்.


