கருத்துச் சுதந்திரம் என்ற பெயரில் யார் வேண்டுமானாலும் பேசலாம் என்றாலும், பாதிக்கப்பட்ட பெண்ணை நம் வீட்டுப் பிள்ளையாகக் கருதிப் பார்த்தால் இதுபோன்ற எதிர்மறையான எண்ணங்கள் வராது என கோவை மாநகரக் காவல் ஆணையர் கண்ணன் தெரிவித்தார்.
கோவை மாணவி கூட்டுப் பாலியல் வழக்கில் மூவருக்கு சாகும் வரை சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ள நிலையில், இதுகுறித்து கோவை மாநகரக் காவல் ஆணையர் கண்ணன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது பேசிய அவர் கோவை பீளமேடு சர்வதேச விமான நிலையத்தின் பின்புறம் நடைபெற்ற கல்லூரி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கில் 24 மணி நேரத்துக்குள் குற்றவாளிகள் கைது செய்யப்பட்டனர். அறிவியல் பூர்வமான ஆதாரங்கள் மற்றும் மாதிரி முடிவுகள் மிகத் துல்லியமாகத் திரட்டப்பட்டன. நீதித்துறையின் ஒத்துழைப்போடு விசாரணை விரைவாக முடிக்கப்பட்டுள்ளதால், குற்றவாளிகள் தங்கள் வாழ்நாள் முழுவதும் சிறையிலிருந்து வெளியே வர முடியாத அளவிற்கு வலுவான சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன என்றார்.
மேலும், பாதிக்கப்பட்ட பெண் குறித்து சமூக வலைதளங்களில் எழும் விமர்சனங்கள் தொடர்பாகப் பேசிய அவர் கருத்துச் சுதந்திரம் என்ற பெயரில் யார் வேண்டுமானாலும் பேசலாம் என்றாலும், பாதிக்கப்பட்ட பெண்ணை நம் வீட்டுப் பிள்ளையாகக் கருதிப் பார்த்தால் இதுபோன்ற எதிர்மறையான எண்ணங்கள் வராது, குற்றச் செயல்கள் என்பது ஒரு அசாதாரண மனநிலை. பாதிக்கப்பட்ட பெண் எதற்கும் கவலைப்படத் தேவையில்லை என்றார்.


