சென்னை: சமூக வலைத்தளங்களில் பிரபலமாக இருக்கும் யூடியூபர் டிடிஎஃப் வாசன் பைக் விபத்து ஒன்றில் சிக்கியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. விபத்து குறித்து சிசிடிவி காட்சிகளும் இணையத்தில் வேகமாகப் பரவி வருகிறது.

தமிழ்நாட்டில் இளைஞர்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக இருக்கும் யூடியூபர்களில் ஒருவர் டிடிஎஃப் வாசன். இவர் நடத்திய நிகழ்ச்சிக்கு யாருமே எதிர்பார்க்காத அளவுக்குப் பல ஆயிரம் பேர் திரண்டனர்.
இவர் இந்தளவுக்கு இளைஞர்கள் மத்தியில் டிரெண்டிங்கில் இருப்பவர். அதேநேரம் இவர் தொடர்ச்சியாகப் பல சர்ச்சைகளிலும் சிக்கி வருகிறார். இதற்காக இவர் நீதிமன்ற படிக்கட்டிற்கும் ஏற வேண்டி இருந்தது.
தொடர்ந்து சாலைகளில் அதிவேகமாக பைக் ஓட்டுவது, அபாயகரமான பைக் ஸ்டன்ட்களை செய்வதை இவர் வாடிக்கையாகவே வைத்துள்ளார். இதற்கிடையே இன்று அவர் சாலை விபத்தில் சிக்கியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. காஞ்சிபுரம் அருகே வழக்கம் போல பைக்கில் ஸ்டண்ட் செய்ய முயன்ற போது இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
சுஸுகி ஹயபுசா வகை பைக்கில் பயணம் செய்த நிலையில், மாலை 4 மணியளவில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த பைக் விபத்து குறித்த சிசிடிவி கேமரா காட்சிகள் வெளியாகியுள்ளது. அதில் வீலிங் செய்ய முயன்ற போது அவர் நிலைதடுமாறிய பள்ளத்தில் விழுகிறார்.

இந்த விபத்தில் டிடிஎஃப் வாசனுக்கு படுகாயங்கள் ஏற்பட்டிருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது. அவர் இப்போது அருகே உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்கா அனுமதிக்கப்பட்டுள்ளார்.


